இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
101
லால்குடி கோபாலகிருஷ்ணன்
தசாபுக்திப் பலன்களைக்காணும்போது பொதுவான வரைமுறைகளைக் கருத்தில்கொள்ளாமல், அந்தந்த நட்சத்திரத்திற்கான பலனைக் கண்டறிதலே துல்லியமானதாகும். கொம்புத்தேன், மலைத்தேன், புற்றுத்தேன் என தேன் இருக்குமிடத்தைப் பொருத்து மாறுபடு வதைப்போல, நட்சத்திரம் அமையும் வீட்டிற்கும், தசாநாதனின் ஆட்சி வீட்டிற்கு மான தொடர்பு மாறுபடுகிறது. உதாரணத் திற்கு ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய மூன்றும் சந்திரனின் நட்சத்திரங்கள். மூன்று நட்சத்திரக்காரர்களுக்கும் சனி தசை ஒரேவிதமான பலனைத் தராது. ரோகிணி அமையும் ரிஷப ராசிக்கு சனி ஒன்பது மற்றும் பத்தாம் வீட்டு அதிபதி. ஹஸ்தம் அமையும். கன்னி ராசிக்கு சனி ஐந்து மற்றும் ஆறாம் வீட்டு அதிபதி. திருவோணம் அமையும் மகர ராசிக்கு சனி ஒன்று மற்றும் இரண்டாம் வீட்டு அதிபதி. அவ்வாறிருக்க பலன்கள் மாறுபடும். இதுதவிர, பூசத்து சனிக்கும், அனுஷத்து சனிக்கும், உத்திரட்டாதியின் அதிபதியாகிய சனிக்கும் (சாஸ்திர உபயத்தால்) சில குண வேறுபாடுகள் உள்ளன.
ஜென்ம நட்சத்திரத்திற்கும், தசாநாதனுக்குமுள்ள தொடர் பைக்கொண்டே பலன்களை அறியவேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""திருமூலநாதரே! அஷ்டாங்க யோகத்தின் நிறைவில் நாதமும் பிந்துவும் கலந்திடும் பேரானந்த நிலையைத் தாங்களே விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை அழகம்மை, அழகாபுத்தூர் எனும் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீபடிக்காசு நாதரைப் பணிந்து கேட்டாள்.
பாசுபதேஸ்வரர் உரைத்தது- ""மனித தேகத்தில் பூர்வமாகிய தலையே அண்டம்; உத்தர பாகமாகிய மற்றவை பிண்டம்.
அண்டத்தில் பிண்டமே மகாமேரு எனும் புருவமத்தி. அண்டத்தில் அண்டம் பிரமரந் திரம். பூர்வத்தில் பிந்துவும் உத்தரத்தில் நாதமுமிருக்கின்றன. பிந்து ஆன்மா. நாதம் பரமான்மா. ஆன்மா தனித்தேயிருக்கும்.
ஜீவன் மனம்முதலான அந்தக்கரணக் கூட்டத்தின் மத்தியிலிருக்கும். எப்போதும் புருவமத்தியின் கண்ணே கரணத்தைச் செலுத்திவிட்டத்தைப் பூட்ட, வீசும் அமுதக்காற்றால் நாதம் பிந்துவை யடையும். நாதத்தோடு பிந்து சேர்ந்தால், ஒளியோடு ஒலி கூடி உள்ளொளி பிறக்கும். பிந்து உருகி நாதமும் மேல் ஒளியைக் காணும்.''
""வசிட்டேஸ்வரரே! "ஸ்கலிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய திருவோண நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், அஸ்வினி நான்காம் பாதத்தில் செவ்வாயும், கார்த்திகை மூன்றாம் பாதத்தில் சந்திரனும், திருவாதிரை இரண்டாம் பாதத்தில் குருவும், மகம் முதல் பாதத்தில் புதனும், மகம் நான்காம் பாதத்தில் சூரியனும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருப்பாசூர் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீ வாசீஸ்வரரை அன்னை மோகனாம்பாள் வேண்டிப்பணிந்தாள்.
உமாபதி உரைத்தது- ""வண்டார்க் குழலியே! இந்த ஜாதகன் வேங்கியூர் எனும் ஊரில், ஒரு பெரு நிலக்கிழார் குடும் பத்தில் பிறந்து, சம்பந்தன் என்று பெயர் பெற்றான். தன் பெற் றோரின் காலத்திற்குப்பிறகு, மூதாதையரின் நிலங்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றான். தன்னுடைய நிலத்தில் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்த உழைப்பாளர்கள் வாடாதிருக்க, வாழ்வாதாரம் தர மறுத்தான். வாழையடி வாழையாய் அவன் குடும்பத்திற்கு ஊழியம் செய்தோர், சரியான ஊதியம் பெறாமல் துன்புற்றனர். வறண்ட நிலத்தில் கருகிய வாழையாய் வளமிழந்தனர். நியாயத்தராசு நிலைகுலைந்தது. தர்மதேவதையின் துலாக்கோல் சம்பந்தன் செய்த பாவத்தை அளந்து நின்றது. தொழுநோய் அவனைத் தொழுதேற்றது. ஓட்டைத் துருத்தியாய், உடையும் புழுக்கூடாய் வாழ்ந்த அவனுடல் மாய்ந்தது. உயிர்மெய்யாய் இருந்த அவன் தலையெழுத்தில், மெய்யும் பொய்யானபின், உயிரில்லா மெய்யும் தனித்து இயங்காது நின்றது. எமனுலகில் அவன் செய்த பாவங்களுக்காக கும்பிபாகம் எனும் நரகத்தில் பலகாலம் துன்புற்றபின் பூவுலகில் வீழ்ந்தான். இளமையில் "இராஜ பிளவை' எனும் நோயில் சிக்குண்டு அவதியுறுகிறான்.
* விதுர நீதியின் வழி நடந்திருந்தால்,அவனுக்கு இந்த கதி நேர்ந்திருக்காது. இதற்குப் பரிகாரமும் இல்லை.''
* விதுர நீதி- ஒரே உறுதியான புத்தியால் நன்மை, தீமை ஆகிய இரண்டையும் ஆராய்ந்து, சாம, தான, பேத, தண்டம் எனும் நான்கினால் நட்பு, பகை, நடுநிலை ஆகிய மூன்றையும் வசமாக்கி, புலன்கள் ஐந்தையும் வென்று, சரணடைந்தோரைக் காத்தல், பகை வெல்லுதல், நீதி காத்தல், அறிவுரை கேட்டல், தீயவரை தண்டித்தல், பண்டிதரைப் போற்றுதல் என்ற ராஜநீதியில் விதிக்கப்பட்ட ஆறு உபாயங்களைக் கைக்கொண்டு, காமம், சூது, வேட்டை, குடி, கடுஞ்சொல், குரூரம், பொறாமை ஆகிய ஏழு குற்றங்களையும் கைவிட்டால் சுகம் பெறலாம். -மகாபாரதம்
(வளரும்)
செல்: 63819 58636