காலபுருஷனும் சப்தரிஷிகளும்

டைமுறையில் மேஷமே காலபுருஷனின் முதலாவது வீடாகவும், அஸ்வினி முதல் நட்சத்திரமாகவும் கணக்கிடப்படுகிறது. ஆனால் கந்தர்வ நாடியின் கருத்துப்படி, 28-ஆவது சதுர்யுகத் தொகுப்பில், கலியுகம், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் மீன ராசியில் தொடங்குகிறது. (06 பாகை, 56 கலை).

Advertisment

guruஇரும்பு யுகமாகிய கலியுகம் சனியின் நட்சத்திரத்தில் தொடங்குகிறது. பூமியின் அச்சு 23 பாகை, 44 கலை அளவிற்கு சாய்ந்து, அதே பாகையில் சப்தரிஷி மண்டலத்தை நோக்கியுள்ளது என்பதே விஞ்ஞான உண்மை. எல்லா வருடத்திலும் இரவும் பகலும் சமமாக உள்ள நாள், சூரியன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போதும், கன்னி ராசியில் உத்திர நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போதும் மட்டுமே நிகழும். உத்திரட்டாதியின் வடமொழிச் சொல்லான "உத்தர பத்ர பாத' என்பதன் பொருள்- "அருள் நிறைந்த இரண்டாம் பாதம்' என்பதே. யுகாதி (யுகம் + ஆதி) மீன ராசியில் நிகழும் சூரிய, சந்திர சேர்க்கையில் கொண்டாடப்படுவதாலும், மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில்தான் கலியுகம் தொடங்கியது என்ற உண்மை புலனாகிறது. பொதுவாக, ஜோதிடம் பார்ப்பது என்பதே "மீன, மேஷம் பார்ப்பது' என்ற சொல்லால் அறியப்படுவதால், ஜோதிட ரகசியம் அறிந்தவர்கள் மீனத்தை முதல் ராசியாகக் கணக்கிட்ட முறை புலனாகிறது. "உத்திர மீன கோணம்' என்ற சொல்லால் ஜோதிட நூல்களில் வடதிசை குறிக்கப்படுவதும் இங்கு நோக்கத்தக்கது.

சூரியனும் மற்ற எல்லா கிரகங்களும் சப்தரிஷிகளிடமிருந்தே சக்தியைப் பெறுகிறார்கள். இந்த கருத்து ரிக்வேதம் மற்றும் வராஹமிகிரரின் "பிரஹத்சம்ஹிதா', ரிஷி யாஸ்கரின் "நிருக்தா', காளிதாசரின் "குமார சம்பவம்' மற்றும் ரிஷி சகலரின் "பிரம்ம சித்தாந்தம்' போன்றவற்றில் காணப்படுகிறது. காலமாற்றங்களை ஏற்படுத்தும் சப்தரிஷி மண்டலத்தின் பின்னோக்கிய நகர்வுகளை, காலபுருஷனின் ராசி சக்கரத்துடன் இணைத்துப் பார்க்காத ஜோதிடம், நாள்காட்டி இல்லாமல் கடிகாரத்தை மட்டும் வைத்து முகூர்த்தம் குறிப்பதுபோலாகும். அதனால்தான் பழைய ஜோதிட நூல்களில் சொல்லப்பட்ட பலன்கள் நடைமுறையில் ஒத்துவராமல் போயின. அன்று இருந்த சப்தரிஷி மண்டலத்தின் நிலையை, காலபுருஷனின் ராசி சக்கரத்துடன் ஒப்பிட்டுச் சொல்லப்பட்ட பலன்கள், இப்போது பழைய பாடத் திட்டங்களாகிவிட்டன.

கந்தர்வ நாடியில் லக்னம் மற்றும் எல்லா கிரகங்களின் நிலைகளும் சப்தரிஷி மண்டலத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு, "கடபயாதி சங்க்யா' என்ற வடமொழி கணித சூத்திரமுறையில் அமைந்துள்ளன. கடினமான கணிதங்களை எளிமைப்படுத்தி, தற்போது நடைமுறையிலுள்ள ஜோதிட அடிப்படையில் விளக்கப்படுகிறது.

Advertisment

மீன லக்னம் (06 பாகை, 56 கலை, உத்திரட்டாதி இரண்டாம் பாதம்)""முப்பத்து முக்கோடி தேவரும் கைதொழும் ஈசனே, "விஷ்கம்பம்' என்ற தாண்டவத்தின் லயமாக அமைந்து, சனியின் ஆட்சிக்கு உட்பட்ட உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதம் லக்னமாக, புதன் ஆங்கீசத்தில் அமைய, அதில் அசுரகுருவும் (சுக்கிரன்), மங்களனும் (செவ்வாய்) சேர்ந்திருக்க, உத்திரட்டாதி மூன்றாம் பாதத்தில் மாலவனும் (புதன்), பரிதியும் (சூரியன்) கூட, புனர்பூசம் மூன்றாம் பாதத்தில் மதியும் (சந்திரன்), பூச நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிரகஸ்பதியும் (குரு), உத்திர நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் மந்தனும் (சனி) இருக்கப் பிறந்தவனின் கர்மப்பலன் பற்றி விளக்க வேண்டுகிறேன்'' என்று பார்வதிதேவி கேட்டாள்.

அதற்கு சிவபெருமான் ""தேவி! இந்த ஜாதகன் முந்தைய பிறவியில் அந்தணகுலத்தில் பிறந்து, அளவிலா பக்தியுடன் தான, தருமங்களைச் செய்து வாழ்ந்துவந்தான். ஆனாலும் நெடுநாள் பழகிய நண்பனுக்கு பஞ்சமா பாதகத்தைச் செய்ததால், இறந்தபின் நரகம் சென்றான். இப்பிறவியில் செல்வம் செழிக்கும் வைசிய குலத்தில் மேலான சரீர வாகுடன், கைகளில் சந்திர மேட்டில் கொடியும், சுக்கிர மேட்டில் பத்மரேகையும் இருக்கப் பிறந்தான். குணவதியான மனைவியுடன் மாலிருஞ்சோலைப் பதியில் வாழ்ந்துவரும் வேளையில் ஒரு பெண்குழந்தை பிறந்து அற்ப ஆயுளில் மரித்தது. சஞ்சித கர்மாவின் நற்கதியால் பொன்னும் பொருளும் பெற்றாலும் நண்பனுக்கு செய்த துரோகத்தால் இவனுக்கு புத்ரபாக்கியம் இல்லாமல் அவதியுறுகிறான். இதற்குப் பரிகாரமாக வெள்ளியால் பிரதிமை செய்து அதை தானமாகத் தரவேண்டும். பட்சிகளுக்கு அரசனாகிய கருடனுக்குப் பூஜை செய்து, அதன்பின் தான் வாழும் ஊரிலுள்ள கேணி, குளங்களைத் தூய்மைப்படுத்தி, ஊர்க்கோடியில் வேம்பினை வளர்த்தால், புத்திர சாபம் நீங்கி நெடுநாள் வாழ்வான். முடவன் (சனி) மூன்றாம் முறையாக உத்திரம் ஏற, ஐப்பசித் திங்கள் ஆறாம் நாள் இறைப்பு நோயால் இப்பிறவியை முடிப்பான்'' என்றார்.

(வளரும்)

செல்: 63819 58636