இதுவரை ஜோதிட உலகிற்கு
அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒருவர் ஜாதகத்தில் இரு கிரகங்களின் இணைவு அல்லது தொடர்பினால் விளையும் பலன்களைக் குறிப்பதே யோகம். ஜோதிடத் தில் பலநூறு யோகங்கள் சொல்லப் பட்டாலும் கஜகேசரி யோகமே முதன்மையானது. சந்திரனுக்கு குரு கேந்திரம் எனும் 4, 7, 10-ஆம் வீட்டில் இருந்தால் இந்த யோகம் உண்டாகும். இந்த அமைப்பைப்பெற்ற ஜாதகர் சிங்கம்போல எல்லாரையும் வெல்வார். சந்திரனும் குருவும் லக்னத்திற்கு பாதகம், மறைவு, பகைபெறாமலும், நீசமடையாமலும் இருந்தால் மட்டுமே இந்த யோகத்தின் பலனையடையலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""வேதநாதரே! பூவுல கிலுள்ள யோகிகள் ஈரேழு உலகையும் சுற்றிவரும் சூட்சுமத்தையும், அகிலத்தையே கட்டுப்படுத்தும் ஆற்றலின் ரகசியத்தையும் தாங்கள் விளக்கியருளவேண்டுகிறேன்'' என அன்னை ஆனந்தவல்லிபரசுராமேஸ்வரரை குடிமல்லம் (ஆந்திரா) எனும் திருத்தலத்தில் பணிந்து கேட்டாள்.
சோமநாதர் உரைத்தது- ""அண்டத்திலுள்ளதே பிண்டத்திலுமுள்ளது. யோகியர் தம் உடலுக்குள் முச்சுடரையும், முக்கோண நாடி மூன்றையும் (சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்கள்), சகல ஜீவராசிகளையும் உணர்கிறார்கள். குண்டலியின் ஆறு ஆதாரங்களின் ஏழுநிலைகளை மேலேழு லோகங்களாகவும், கீழேழு லோகங்களாகவும் அறிந்து சஞ்சரிக்கிறார்கள். ஒரு ஜீவனின் காரியத்தால் படைக்கப்படும் வேறொரு ஜீவன் மற்றொரு ஜீவனைப் பிறப்பிக்கிறது. காரணமும் காரியமும் வெவ்வேறாக இல்லாததால், தன்னைப்படைத்த பிரபஞ்சமும், தானும் ஒன்றுதான் என்னும் அத்வைதத்தில் சங்கமிக்கிறார்கள். பிரபஞ்சம் தன்னைக் கட்டுப்படுத்தமுடியுமென்றால், தானும் அந்தப் பிரபஞ்சத்தைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதே முக்தர்களின் முடிவு. சித்த புருஷர்கள் தேடிப் பெற்ற ஞானத்தால் கோடி வித்தையாடுவர்.''
""சம்பகேசுவரரே! அவாஹித்தம் எனும் தாண்டவத்தின் லயமாகிய சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் புதனும் சூரியனும் சேர்ந்திருக்க, அஸ்வினி முதல் பாதத்தில் சுக்கிரனும், மகம் முதல் பாதத்தில் சனியும், விசாகம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், மூலம் முதல் பாதத்தில் சந்திரனும், உத்திராடம் இரண்டாம் பாதத்தில் குருவும் அமரும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என ஓசூர் திருத்தலத் தில் அருள்புரியும் சந்திரசூடேஸ் வரரை அன்னை மரகதாம்பாள் வேண்டிப்பணிந்தாள்.
வாலீசுவரர் உரைத்தது- ""மனோன்மணியே! இந்த ஜாதகன் கனிகிரி எனும் ஊரில் வேதியர் குடியில் பிறந்து சாம்பன் என்ற பெயர் பெற்றான். திருமணத் திற்குப்பின் உரிய காலத்தில் புத்திரபாக்கியம் பெற்றான். அவன் தவமிருந்து பெற்ற மகள் இளம்வயதில் நோயுற்றாள். பேசும் தெய்வமாயிருந்தவள் பேசாமடந்தையானாள்.
சாம்பன் செய்வதறியாது நிலைகுலைந்து போனான். பிணம் தின்னும் ஒரு வனவாசி காபாலிகனின் வழிகாட்டுதலால், ஒரு குரும்பாட்டைப் பலிகொடுத்துப் பரிகாரம் தேடவிழைந்தான். குருடனை வழிகேட்ட மற்றொரு குருடனைப் போல் வழிமாறிப்போனான். கள் உண்டவன் மதிமயக்கத்தால் குதிரை என்றெண்ணி கழுதைமேல் சவாரிபோனதாகத் தன் புத்திர பாசத்தால் பாவம் சுமந்தான். ஆட்டின் மரண ஓலத்து மொழியைத் தர்மதேவதையறிந் தாள். சாம்பன் முதுமையில் நோயுற்றான். பாவம்செய்த உயிர் பிரிந்ததால் உடல் குளிர்ந்தது. கும்பிபாகம் எனும் நரகத்தில் நெடுங்காலம் துயறுற்றபின், கர்மவினைத் தீர்க்க மண்ணுலகில் பிறந்தான்.
இப்பிறவியில் புத்திரபாக் கியமின்றி மனம்வெதும்பி துன்புறுகிறான்.
எல்லா உயிர்களும் பிரம்மத்தின் படைப்புகளே.
தன்னுடைய ஒரு பிள்ளையை மற்றொரு பிள்ளைக் கொல்வதைக்கண்டு எந்தத் தாயும் மகிழ்ந்திருக்கமாட்டாள். ஜீவகாருண்யத்தை விட சிறந்த வேள்வியோ, தவமோ எங்கும் எப்போதுமில்லை. மனிதர், தம்மில் உறையும் விலங்கு குணங்களை அழியச்செய்வதே பலிகொடுப்பது என்பதையறியாது, உயிர்வதை செய்ததால் அல்லலுறுகிறான். *பத்ம புராணத் தில் கூறப்படுவதுபோல், சாத்திரத்தில் இல்லாத முறையில் பூஜைசெய்வது பெரும் துன்பத்தையே விளைவிக்கும். ஆனி மாதத்து நிறைமதி நாளில் கோபத்ம பூஜை செய்தபின்,
கபில பசுவைக் கன்றுக்குட்டியுடன் தானமாகத் தந்தால் தோஷம் விலகும்.
*மிருகங்களைப் பலியிட்டுச் செய்யும் பூஜைகள் பயனற்றதாகப் போவதோடு மட்டுமல்லாது, சாபத்தையும் சேர்க்கும்.
(பத்ம புராணம் 9-ஆம் அத்தியாயம்)
(வளரும்)
செல்: 63819 58636