இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
ஒரு காரியத்திற்கு முதற்காரணம், துணைக்காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் இன்றிய மையாதவை. குடமாகிய காரியத்திற்கு மண் முதற்காரணம்; தண்டசக்கரம் துணைக்காரணம்; குயவன் நிமித்த காரணம். அதேபோல, ஒரு ஜாதகருக்கு நடைபெறும் தசாபுக்தியின் பலன்கள்- தசாநாதன், புக்திநாதன், அந்தரநாதர் களின் கூட்டு முயற்சியே. ஒரு தசையில் பலன்கள் நடக்கத் துவங்கும்பொழுது அந்த தசாநாதனுக்கு, புக்தி, அந்தர நாதர்கள் நட்பாக உள்ளனரா? பகையாக உள்ளனரா? உச்சம், நீசம், மறைவு பெற்றுள்ளனரா? சூன்யம் பெற்றுள்ள னரா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப பலன்களைக் காணவேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""விஸ்வநாதரே! சூரிய, சந்திரரால் விளையும் திதி, யோக, கரணங்களுக்கும், யோக சாதகனுக்குமுள்ள ஒத்திசைவைத் தாங்கள் கூறியருள வேண்டுகிறேன்'' என அன்னை பாலசாமுண்டிகா, அமராவதி எனும் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீஅமரலிங்கேஸ்வரரைப் பணிந்துகேட்டாள்.
யோகீஸ்வரர் உரைத்தது- ""ஆன்மாவை சூரியனாகவும், மனதை சந்திரனாகவும் யோகிகள் உணர்கி றார்கள். பதினாறாவது கலையை அடை யும்போது சந்திரன் பூரணமாவதுபோல, மனம், ஆன்மாவின் உள்ளொளி யைப்பெற்று முழுமையடைவதே "ஷோடச கலாபூர்ணம்' எனும் யோக சித்தி, யோக சங்கமத்தில் அண்டமும் பிண்டமும் இரும்பில் நெருப்பு பரவிய தாய் ஒன்றையொன்று சூழ்ந் திருக்கும். அதுவே அசைவறு நிலையில், இசைவுறு அலை களின் ஒத்திசைவு. மனம் ஆன்மாவில் ஒடுங்குதலே மறைமதி. ஆன்மாவால் ஒளிர் தலே நிறைமதி. ஐந்து பட்சி திறனறிந்து அந்தரத்தில் சுழுமுனைப் பற்றுவான் யோகி.''
""எழுத்தறிநாதரே! "தண்டபாதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய பூராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் லக்னமும், அவிட்டம் நான்காம் பாதத்தில் சந்திரனும், மகம் நான்காம் பாதத்தில் செவ்வாயும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் குருவும், ஸ்வாதி இரண்டாம் பாதத் தில் சுக்கிரனும், ஸ்வாதி நான்காம் பாதத்தில் புதனும், அனுஷம் இரண்டாம் பாதத்தில் சனியும் சூரியனும் சேர்ந்து அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருப்பதி திருத்தலத்தில் அருள்புரியும் கபிலேஸ்வரரை அன்னை காமாட்சி வேண்டிப் பணிந்தாள்.
தியாகேசர் உரைத்தது- ""வல்லபியே! இந்த ஜாதகன் காவிரிப் பூம்பட்டினம் எனும் நகரில், வான் பொய்ப்பினும் தான் பொய்யா காவிரியின் கரையில், ஒரு செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தான். "ராகுலன்' என்ற பெயர் பெற்றான். செல்வத்தை ஈட்டுவதிலேயே கவனம் செலுத்திய அவனது பெற்றோர், தங்கள் செல்வனுக்கு ஒழுக்கத்தை போதிக்க மறந்தனர். பழுத்த மரத்தை நாடும் வவ்வால்களாக, செல்வத்தைக் கவர்ந்துசெல்ல தீயோர் கூட்டம் அவனைச் சூழ்ந்தது. பொறாமை, பேராசை, காமம், கடுஞ்சொல் எனும் நான்கு அரக்கர்களும் அழையா விருந்தாளிகளாக அவன் உளம் புகுந்தனர். இளமையின் இசையில் காமம் களிக்கூத்தாடியது. செல்வமும் செல்வாக்கும் துணைநின்றதால், பத்தினிப் பெண்டிரின் கற்புக்குக் களங்கம் செய்தான். "உரை சால் பத்தினிக்குத் தீங்கிழைத் தால், ஊழ்வினை உருத்து வந்தூட்டும்' என்பதையறிய மறந்தான். கற்பெனும் தீயை காமத்தீயால் அணைத்தான். வாழ்க்கை காமத்தில் கரைந்துபோனது. முடிவில் நோயின் நட்பில் மரணத்தை மணந்தான். ஆஹிரியில் (ராகம்) ஒப்பாரி ஒலிக்க, உறுமி உறுமியது. சேகண்டி சிணுங்கியது. ஆவி போனபின் உடலும் தீயில் வெந்து ஆவியானது.
உயிர் எமனுலகம் சென்றது. "தாமிஸ்ரம்' எனும் நரகத்தில் துயருற்றபின், பூவுலகம் நோக்கிப் புதுப்பயணம் தொடங்கினான். அனந்தபுரி என்ற ஊரில் ஒரு விஸ்வகர்மா குடும்பத்தில் பிறந்தான். இளமையில் ஏற்பட்ட நோயால் அவன் கண்களை இழந்தான். பகலும் இரவானது; வாழ்க்கை பாழானது. * இராவணன்போல, கற்புடைய மங்கையை வன்புணர்வு செய்து, அதனால் வந்த வினைப்பயனால் அல்லலுறுகிறான்.
இதற்குப் பரிகாரமே இல்லை என்றுணர் வாயாக.''
*இராவணன்- புஞ்ஜிதஸ்கலா என்பவளை அவளது சம்மதமின்றி வன்புணர முயற்சித்தபோது பிரம்மாவால் சபிக்கப்பட்டான். -இராமாயணம்
(வளரும்)
செல்: 63819 58636
____________
நாடி ரகசியம்
1. பூராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் புதனும் குருவும் சேர்ந்தமையும் ஜாதகர் அரசு அதிகாரியாகி, செல்வமும் செல்வாக்கும் பெறுவார்.
2. பூராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் செவ்வாயும் சனியும் சேர்ந்து அமையப்பெற்ற ஜாதகருக்கு கல்வியில் தடையுண்டாகும்.
3. பூராட நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சந்திரனும், புனர்பூசம் இரண்டாம் பாதத்தில் சனியும் இருந்தால், ஜாதகரின் பால்யப் பருவத்தில் பூதப்பிரேதத்தால் பாதிப்புகள் உண்டாகும்.
கேள்வி: ஒரு ஜாதகரின் கர்மப்பலனை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: முன்வினையின் பதிவே ஜனன ஜாதகமாக அமைகிறது. உண்ணுதலும், ஒவ்வாத உணவைப் புறந்தள்ளுதலும் அவரவருக்கு மட்டுமே விதிக்கப்பட்டது. செல்வந்தராயினும், இந்த செயல்களுக்கு வேறொருவரைப் பணியமர்த்திக்கொள்ள முடியாது. அதுபோல, அவரவர் கர்மாவை அவரவரே சுமக்கக் கடமைப்பட்டவர்கள். ஒரு ஜாதகத்தில் 2, 6, 10-ஆம் பாவங்களைக்கொண்டு சஞ்சித, பிராரப்த, ஆகாமிய கர்மாக்களை அறியலாம். அர்த்த திரிகோணங்களாகிய 2, 6, 10-ஆம் பாவங்கள் ஒருவரின் வருவாய், தொழில், அதிகாரம் போன்ற கர்மாவின் விளைவுகளை விளக்கும். கிரகங்களில் செவ்வாயே கர்மப்பலனைச் சுட்டிக்காட்டுவார். காலபுருஷனின் முதல் வீடாகிய மேஷ ராசிக்கு 2, 6, 10 வீடுகளில் செவ்வாயின் நட்சத்திரம் அமைந்திருப்பதையும், 10-ஆம் வீடாகிய மகரத்தில் கர்மஸ்தானம் உச்சமடைவதையும் காணலாம். செவ்வாய் அமரும் ராசி, நட்சத்திர அதிபதிகளும், செவ்வாயின் நட்சத்திரத்தில் அமரும் கிரகங்களும், அமையும் பாவங்களும் கர்மப்பலனை நடத்தித்தரும் வல்லமை பெற்றவை என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.