இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்
ஜாதகத்தில் தோஷம் என்பது குறைபாடு என்றே பொருள்படும். உடலில் சத்துக்குறைபாடால் நோய் உண்டாவது போல், ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகத்தின் அனுக்கிரகத்தில் குறையுண்டானால் ஜாதருக்கு வாழ்வில் சில துன்பங்கள் நேரிடுகின்றன. குறைபாடுடைய இருவரை ஒன்றுசேர்த்தால் குறைபாடு நீங்கிவிடும் என்பது அறிவுடைமையாகாது. அதேபோல், செவ்வாய் தோஷம் உள்ள ஆண், பெண் ஜாதகங்களை சேர்ப்பதால் செவ்வாய் தோஷம் நீங்கிவிடும் என்றெண்ணுவது நகைப்புக்குரியதேயாகும். எந்த தோஷமாயிருந்தாலும் அந்த தோஷத்திற்கு பரிகாரம் தேடி சரிசெய்துகொள்வதே நன்மைதரும் என்பதே ‘கந்தர்வ நாடி’யின் கூற்று.
“ருத்ராபதியே கலியுகத்தில் காம்ய கர்மப்பலன்களுக்காகச் செய்யப்படும் தேவ யக்ஞங்கள் பயன்தராமல்போவதன் காரணத் தைத் தாங்களே விளக்கியருள வேண்டுகிறேன் என அன்னை பிரம்ம வித்யாம்பிகை ஸ்வேதரண்யேஸ்வரரை திருவெண்காடு (நாகை) எனும் திருத்தலத்தில் பணிந்து கேட்டாள்.
சந்திரமௌளீஸ்வரர் உரைத்தது,“எழுதா மறையாகிய வேதமே, சுடர்மிகுசுருதி நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து ராகமும் உண்டாவதுபோல், பிரும்மத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்மிருதியும் வேதாந்தமும் உருவானது.
மந்திரத்தில் சப்தமே பிரதானம். தேவதைகளை விசேஷமாகப் பிரீதி செய்விக்கும் சாம வேதம், சாம கானம் என்ற இசை வடிவிலானதே. காம்ய கர்மப்பலன்களுக்காகச் செய்யப்படும் தேவயக்ஞத்தில் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க, ஒலிக்குறி ஒழுங்கோடு ஒலிக்கப்படாத மந்திரங்கள் பயனற்றவையாகும். சுருதி பேதமும், கிரகப்பேதமும் அறியோதாரால் பண்ணிசை பாழாவதுபோல், இயமும், நியமமும் கடைப் பிடிக்காதோர் செய்வதால் எழும் வேள்வி மிகு புகை கருத்தரிக்காத வெண்மேகமாய் மாறும்.’’
“ஆடவல்லானே, விஷ்ணுக்ராந்தம் எனும் தாண்டவத்தின் லயமாகிய பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், ஆயில்யம் நான்காம் பாதத்தில் சனியும், உத்திரம் இரண்டாம் பாதத்தில் குருவும், சித்திரை இரண் டாம் பாதத்தில் சுக்கிரனும், சித்திரை மூன்றாம் பாதத்தில் சூரியனும், அனுஷம் நான்காம் பாதத்தில் சந்திரனும் செவ்வாயும் சேர்க்கைப் பெற்று, கேட்டை நான்காம் பாதத்தில் புதனும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்’’ என அன்னப்பன்பேட்டை (நாகை) எனும் திருத்தலத்தில் அருள்புரியும் சுந்தரேஸ்வரரை அன்னை அழகம்மை வேண்டிப்பணிந்தாள்.
சப்தரிஷீஸ்வரர் உரைத்தது “மாதங்கியே! இந்த ஜாதகன் வையாபுரி என்ற ஊரில் ஒரு அந்தணக் குடும்பத்தில் பிறந்து, சோமநாதன் என்று பெயரிடப்பட்டான். வேதம் கற்று பண்டிதனானான். சோமநாதன் வாழ்ந்த ஊரில் சங்கமித்ரன் என்ற செல்வந்தன் வாழ்ந்துவந்தான். ஊரைக் கொள்ளையிட்டு, தன் வீட்டு உலையிலிட்டான். தன்னை எதிர்த்தோரை நாசம் செய்தான். தன் செயல்களுக்குத் தடையாயிருந்த அந்த ஊரின் காவல் தேவதையை அபிச்சார ஹோமத்தால் கட்டுப்படுத்த எண்ணி, சோமநாதனை அணுகினான். பொருளாசையால் அறநெறி வழுவிய அபிச்சார ஹோமத்தைச் செய்வதற்கு சோமநாதன் ஒப்புக்கொண்டு ஒரு தேய்பிறை அஷ்டமியில் ,கருங்காலி, கசப்பு எண்ணை எருக்கு எட்டிமரத்து சமித்தினால் ஹோமம்செய்து, ஊர்க்காவல் தேவதையைச் செயலிழக்கச்செய்தான். ஒரு கார்காலத்தில் அவன்மீது பாய்ந்த இடி வஜ்ராயுதம்போல் அவன் உடலை இரு கூறுகளாக்கியது. அவனுடைய எரிந்த உடலை உறவினர் மறுமுறை எரித்தார்கள். பிரேத சரீரம் பெற்று பலகாலம் பாழ் உலகில் துன்புற்றபின், சூசிமுகம் என்ற நரகத்தில் வீழ்ந்தான். நரக வேதனை முடிந்தபின், ஊணுடல் தாங்கி, பூவுலகம் புகுந்து புகலூர் எனும் ஊரில் புகலடைந்தான். இளம்வயதில் ஒரு நாள் அவன் வாழ்ந்த ஊரின் புறத்தேயிருந்த ஆலமரத்தில் பல காலமாய் வாழ்ந்துவந்த பிரம்ம ராட்சத னிடம் அசுர சந்தியில் அகப்பட்டான். தன்னிலை மறந்து தவிக்கிறான். முற்பிறவியில் செல்வத் திற்கு ஆசைப்பட்டு *முறைதவறிய ஹோமத்தைச் செய்ததால் அவதியுறுகிறான். இந்த பாவத்திற்கு பரிகாரமில்லை.’’
*முறைதவறிய ஹோமத்தை அதிக சம்பாவனைக்காக (பணத்திற்காக) செய்யும் ரித்விக்கு (வேதியன்) பிரம்ம ராட்சதனாக மாறி மன நிம்மதியை இழந்து திரியவேண்டிய நிலை வரும்.
-கைசிகப் புராணம்.
(வளரும்)
___________
நாடி ரகசியம்
1. பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சனியும் லக்னமும் சேர்ந்திருந்து சுபர் பார்வையும் பெற்றால், ஜாதகருக்கு மன்மதனைப்போன்ற அழகும், குபேர சம்பத்தும் கிடைக்கும்.
2. பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சூரியனும் சந்திரனும் கூடியிருக்க, லக்னம் திருவோணம் இரண்டாம் பாதத்தில் அமைந்தால் பாலாரிஷ்ட தோஷம் உண்டாகும். 3. பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் புதனும் லக்னமும் சேர்ந்திருந்து சுபர் பார்வை பெறாதி ருந்தால் லிங்கப் புற்றுநோயால் அவதியுறுவான்.
கேள்வி: முகூர்த்த நேரங்களை சரியாகக்கண்டறிந்து, வாழ்வில் வெற்றி பெறுவதற்கான முறையை ‘கந்தர்வ நாடி’யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: முகூர்த்தமென்பது ஜோதிடத்தில் இரண்டு நாழிகைகள் (48 நிமிடங்கள்) கொண்ட ஒரு கால அளவேயேயாகும்.60 நாழிகைகள் கொண்ட ஒரு நாள் என்பது 30 முகூர்த்தங்களாகப் பிரிக்கப் படுகிறது. ரிக்வேதம், ஸ்ரீமத் பாகவதம், தைத்ரீய பிராஹ்மனம், சதபாத பிராஹ்மனம், கர்க சம்ஹிதை ஆகியவற்றுள் முகூர்த்தங்களின் சிறப்புகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. பின்னிரவில் வரும் ஜீவ-அம்ருத முகூர்த்தமும், அதிகாலையில் வரும் பிரம்ம முகூர்த்தமும், நண்பகலில் வரும் அபிஜித் முகூர்த்த மும், சூரிய அஸ்தமனத்தில் வரும் கோதுளி முகூர்த்தமும் சிறப்பு வாய்ந்தவை. ஜாதகத்தில் எந்த கிரகம் தோஷமுடையதாக உள்ளதோ, அந்த கிரகம் ஆளும் கிழமையில், அபிஜித் முகூர்த்தத்தில் பரிகாரங்கள் அல்லது வழிபாடு செய்தால் கிரக தோஷங்கள் நீங்கும். ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசையில், அபிஜித் முகூர்த்த வழிபாடு செய்தால் அனைத்து தீவினைகளும் அகலும். ஜோதிடம் அறிந்தவர்களின் வழிகாட்டுதலின்படி, சரியான முகூர்த்தத்தில் கிரக தோஷப் பரிகாரங்களைச் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும். அவ்வாறின்றி, நாட்காட்டிகளில் சுபமுகூர்த்தம் என்று குறிப்பிடப்பட்டதை மட்டுமே கருத்திற்கொண்டு செய்யப்படும் சுபகாரியங்கள் சிலநேரம் விபரீத விளைவுகளைத் தரலாம். திருமணம், காதுகுத்துதல், உபநயனம், சாந்தி முகூர்த்தம், பூமிபூஜை போன்ற எல்லா சுபகாரியங்களுக்கும் ஒரேவிதமான முகூர்த்த நேரத்தைத் தேர்வுசெய்ய முடியாது. ஜாதகரின் லக்னம் மற்றும் கிரகநிலைகளைக் கணக்கில்கொண்டு குறிக்கப்படும் முகூர்த்த காலமே வெற்றியைத் தரும் என்பதே ‘கந்தர்வ நாடியின் கருத்து.