திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, நட்சத்திரப் பொருத்தத்தை மட்டுமே கணக்கிலெடுத்துக்கொள்வதே தற்போது வழக்கத்திலுள்ளது. பெண்ணின் திரிம்சாம்சப் பலனை அறிந்தபின் நட்சத்திரப் பொருத் தத்தைப் பார்க்க வேண்டுமென்பதே ஜோதிட மூலநூல்களின் கருத்து. ஸ்த்ரீ ஜாதகத்தில் லக்னம் அமையும் திரிம்சாம்சமே, அந்தப் பெண்ணின் குணநலனைச் சுட்டிக்காட்டும். திரிம்சாம்சத்தில் ஒவ்வொரு ராசியின் 30 பாகைகளும் சூரியன், சந்திரனைத் தவிர்த்து மற்ற ஐந்து கிரகங்களுக்கும் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. ஒற்றை ராசியின் முதல் ஐந்து பாகைகளைச் செவ்வாய்க்கும், அடுத்த ஐந்து பாகைகளை சனிக்கும், அடுத்த எட்டு பாகைகளை வியாழனுக்கும், அடுத்த ஏழு பாகைகளை புதனுக்கும், எஞ்சியுள்ள ஐந்து

பாகைகளை சுக்கிரனுக்குமாகப் பகிர்ந்து கொடுத்துள்ளார்கள். இரட்டை ராசியில் இது தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. உதாரணத் திற்கு, மேஷ, விருச்சிக லக்னத்தில், செவ்வாய் திரிம்சாம்சத்தில் பிறக்கும் பெண்ணுக்கு நல்லொழுக்கம் குறைவாகவே அமையும். தனுசு, மீன லக்னத்தில், செவ்வாய் திரிம்சாம்சத்தில் பிறக்கும்பெண் நல்ல குணவதியாக, குலப்பெருமை காப்பாள்.

dd

ஸ்த்ரீ ஜாதகத்தில் லக்ன திரிம்சாம்சப் பலன்களைக் காண்பதே முதன்மையானது என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று. ""சதுர்வேதியே! கலியுகத்தில் மனிதரின் பூரண ஆயுட்காலம் நூறாண்டு என்று விதிக்கப்பட்டபோதிலும், தவ யோகிகள் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வதன் சூட்சுமத்தை ஆதியோகியாகிய தாங்களே விளக்கியருள வேண்டுகிறேன்'' என அன்னை அருந்தவநாயகி கீழ்பழுவூர் எனும் திருத் தலத்தில் உறையும் அருள் மிகு வடமூலநாதரைப் பணிந்துகேட்டாள்.

Advertisment

செஞ்சடையப்பர் உரைத்தது- ""புலனடக்கத்தைக் கூறும் பிரத்தியாகாரத்தின்படி மூலபந்தம், வஜ்ராசனம் முதலிய சாதனைகளால் குதத்தையும், குறியையும் கூட்டிப் பிராணனை எழுப்புதலே முதல் நிலை. தினைப்புனத்தில் பறவைகளைக் கவண்கல் எறிந்து துரத்தி ஆயலோட்டுகையில் பறந்தோடும் புள்ளினமாய், கள்ளப் புலன் ஐந்தும் மனதினின்று விலகும். கழுமுனை மார்க்கமாய் பிரம்மரந்திரம் நோக்கிச் செல்லும் பிராணனுடன் மனம் லயித்து, வெட்டவெளியை நோக்கினால் பேரானந்தம் நிலைக்கும். அந்த சாதகனுக்கே மரணமில்லாப் பெருவாழ்வு வாய்க்கும்.''

""அம்பலவாணரே! "டோலபாதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஸ்வாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், பூரட்டாதி இரண்டாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, உத்திரட்டாதி முதல் பாதத்தில் புதனும் சனியும் சேர்ந்திருக்க, ரோகிணி நான்காம் பாதத்தில் செவ்வாயும், மிருகசீரிடம் முதல் பாதத்தில் குருவும், சித்திரை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சந்திரனும் அமர்ந்திருக்கும் அமைப்பைப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்கவேண்டும்'' என்று திருவை காவூர் எனும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீவில்வவனநாதரை அன்னை வளைக்கை நாயகி வேண்டிப் பணிந்தாள்.

ருத்ராபதி உரைத்தது- ""ஆரணங்கே! இந்த ஜாதகன் முற்பிறவியில் பார்த்திபன் எனும் பெயருடன், வேங்கியூர் என்ற ஊரில் வாழ்ந்து வந்தான். அவன் இளம்வயது முதலே தீயோர் நட்பால் மிருகங்களையும் பட்சிகளையும் கொன்று குவித்தான். ஒரு நாள், மிதுனத்திலிருந்த (சிற்றின்பத்தில்) முயல்களைக் கொன்றுவிட்டான். ஒரு வேடுவன்கூட கலவியிலிருக்கும் மிருகங்களை வேட்டையாடுவதில்லை. அந்த முயல்களின் மரண வேதனை அவன் பாவக்கணக்கைக் கூட்டியது. வாழ்வின் விளிம்பில் மூப்பும் நோயும் அவனைப் பற்றிக்கொண்டன. மரணம் அவனை வேட்டையாடியது. மரித்தவன் ஆவிகளின் உலகத்தை அடைந்தான். வன்னி மரத்தில் பலகாலம் தலைகீழாய்த் தொங்கித் துன்புற்றபின் எமனுலகம் சென்றான். நெடுங்காலம் "பிராணரோதம்' எனும் நரகத்தின் இன்னல்களை அனுபவித்தபின் அந்த ஜீவன், முன்வினைப் பயனால் பெண்ணின் உடலைப் பெற்று பூவுலகம் வந்தது. பூங்கோதை என்று பெயரிடப்பட்டு அழகின் இலக்கணமாய் வளர்ந்தாள். உரிய வயதில் பூப்பெய்தாமல், பேரிளம் பெண்ணாய் முதுமையுற்றாள்.

Advertisment

அவள் அழகும் இளமையும் காட்டில் காய்ந்த நிலவானது. மணம்முடித்து இல்லாள் ஆகவேண்டியவள் இல்வாழ்க்கையே இல்லாள் ஆனாள். அவள் வாழ்க்கைப் பூக்காமல் காய்க்காமல் உதிர்ந்துபோனது. ஈருடல் ஓருயிராய் சிற்றின்பத்திலிருந்த உயிர்களைக் கொன்றதால், * பாண்டுபோல் இல்வாழ்வின் சுகம் இல்லாமல்போனது. இந்த பாவத்திற்கு அடுத்த பிறவியிலேயே விமோசனம் உண்டு.

* பாண்டு- அம்பாலிகாவின் மகன். கலவியிலிருந்த கலைமானைக் கொன்றதால், கிண்டமா முனிவரின் சாபப்படி இல்லற சுகத்தை இழந்தான்.

(வளரும்)

செல்: 63819 58636

____________

நாடி ரகசியம்

1. ஸ்வாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரியனும் குருவும் சேர்ந்திருந்தால் கல்வி, செல்வம், செல்வாக்கு மிகுந்து நிறைகுடமாய் வாழ்வான்.

2. ஸ்வாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும், அவிட்டம் முதல் பாதத்தில் செவ்வாயும் அமைந்தால் ஜாதகருக்கு அதிகாரமான பதவியும் புகழும் உண்டாகும்.

3. ஸ்வாதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் புதனும், சதய நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தில் சனியும் அமையும் ஜாதகர், தீரா நோயால் செல்வத்தை இழப்பார்.

கேள்வி: பிதுர் சாபத்தினால் ஏற்படும் விளைவுகளை "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்க முடியுமா?

பதில்: பிதுர் சாபம் என்பது, மறைந்த முன்னோர்களுக்கு நீத்தார் கடன் எனும் பிதுர் பூஜை, தர்ப்பணங்கள் செய்யாதவர்களுக்கு ஏற்படும் தோஷம். இதை ஒருவர் ஜாதகத்தின் ஒன்பதாம் பாவம், சந்திரன், சனியின் நிலையைக்கொண்டு அறியலாம். சந்திரன் (அரிசி), சனி (எள்) என்பதைத் தொடர்புப்டுத்திப் பார்த்தாலே பிதுர் காரியங்களுக்கு சனியும் சந்திரனுமே காரணகர்த்தாக்கள் என்பது விளங்கும். அயன புண்ணியகாலம் (ஆடி அமாவாசை, தை அமாவாசை) என்பது ஆத்மகாரகனாகிய சூரியன், சந்திரனின் ஆட்சி வீடாகிய கடகத்திலும், சனியின் ஆட்சி வீடாகிய மகரத்திலும் சஞ்சரிக்கும்போது நிகழ்வது. பொதுவாக புனர்பூ தோஷம் எனப்படும் சந்திரன், சனி பரிவர்த்தனை, பார்வைத் தொடர்பால் ஏற்படும் குறைபாடுகள் பிதுர் சாபத்தினால் ஏற்படுபவையே. திருமணத்தடை, இல்வாழ்வில் இன்பமில்லாத நிலை, எல்லா முயற்சிகளிலும் தோல்வியடைவது போன்ற தீய பலன்கள், பிதுர்சாபத்தால் ஏற்படுபவையே. தெய்வ அருளையும், ராஜயோகங்களையும் தடுக்கும் ஆற்றல் பிதுர் சாபத்திற்கு உண்டு என்பதே "கந்தர்வ நாடி'டியின் கருத்து.