இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
65
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தின் கிரக மற்றும் பாவ அமைப் பைக்கொண்டு, அந்த ஜாதகர் ஆன்மிக சாதனையில் வெற்றிபெறுவாரா என்பதைக் கண்டறிய முடியும். ஆன்மிகத்தில் சக்தி நிலைகள் ஏழு. இந்த ஏழு நிலை களும் ஏழு அறிவாகும். தாவரம், நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர், தேவர் என்ற ஏழு பரிணாம வளர்ச்சியில், ஆக்ஞா என்ற ஆறாவது நிலையில், ஆறறி வுடன் உள்ளதே மனிதப்பிறவி. மனிதர்கள் யோகப் பயிற்சியால், ஆக்ஞா சக்கரம் வரை செல்ல முடியு மென்றாலும், பலரால் அந்த நிலையை எட்டமுடி வதில்லை. அதற்குக் காரணம், சக்தி நிலையில் முடக்கம் (Block) ஏற்படுவதே யாகும். மூலாதாரத்தினை சனியின் அமைப்பாலும், ஸ்வாதிஷ்டானத்தை குருவாலும், மணிப்பூரகத்தை செவ்வா யாலும், அனாஹதத்தை சுக்கிரனாலும், விசுக்தியை புதனாலும், ஆக்ஞேயத்தை சந்திரனாலும், சஹஸ்ராத்தை சூரியனின் நிலை கொண்டும் அறியலாம். கிரக நிலைகளால் ஏற்படும் சக்தி ஓட்டப் பாதையின் தடைகளைக் கண்டறிந்து நீக்கினால் மட்டுமே கைவல்யம் கைகூடும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று. ""சிவலோகநாதரே! ஞானயோகத் திலும் பக்தியோகத்திலும் முக்தி கிடைப்பதுபோல, கர்மயோகத்தாலும் மேலான நிலையை அடைய முடியுமா? கர்மயோகியின் கல்யாண குணங்களை விளக்க வேண்டுகிறேன்'' என அன்னை நிமலகுஜாம்பிகை திருக்கடையூர் திருத் தலத்தில் உறையும் அருள்மிகு பிரம்மபுரீசுவரரைப் பணிந்து கேட்டாள்.
நீலகண்டர் உரைத்தது- ""கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம், பக்தி யோகம் ஆகிய நான்கு நதிகளும் முக்தியெனும் கடலில் கலப்பவையே. கர்மயோகம் செய்வதால் சித்தசுத்தி (மனத்தூய்மை) உண்டாகும். குடக்கூத்து (கரகாட்டம்) ஆடுபவன் தன் சிரத்தில் சுமந்த குடம் விழாமல் சிரத்தையுடன் ஆடுவதைப்போல, கர்மயோகி பிரும்மத்தை வழுவாமல் நினைவிலிருத்தி, உலகின் இசைக்கேற்ப ஆடுகிறான். சரீரம் நானில்லை; அதன் சுகமும், துக்கமும் எனக்கில்லை என்று ஆத்மாவிலேயே "ஸ்தித பிரக்ஞனாக' இருப்பவனே கர்மயோகி.''
""நாதபிரும்மமே! "சக்ரமண்டலம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் லக்னமும், ஸ்வாதி இரண்டாம் பாதத்தில் செவ்வாயும், சதயம் நான்காம் பாதத்தில் சந்திரனும், அஸ்வினி நான்காம் பாதத்தில் சனியும், மிருகசீரிடம் நான்காம் பாதத்தில் குருவும், புனர்பூசம் நான்காம் பாதத்தில் சூரியனும், பூரம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், உத்திரம் முதல் பாதத் தில் புதனும் அமையப் பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று ஓமாம்புலியூர் திருத் தலத்தில் அருள்புரியும் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரரை அன்னை பூங்கொடிநாயகி வினவினாள்.
சத்திபுரீசுவரர் உரைத்தது- ""இமயவதியே! இந்த ஜாதகி முற்பிறவியில் வைதேகி எனும் பெயருடன், சித்ரகூடம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தாள். தீயோர் சேர்க்கையால், பொறாமை யும் புறங்கூறுதலும் அவளது இணை பிரியாத தோழிகளாயின. பொய்யான அவதூறு களால் பலரின் மணவாழ்வைக் கெடுத்தாள். சூழ்ச்சியால் பலரையும் வீழ்த்தினாள். ஊரும் உறவும் அவளைத் தனிமைப்படுத்தின. நோயுடன் வாழ்ந்தாள். ஒரு நாள், அவள் கருநாவினை வெளித்தள்ளி உயிர் பிரிந்தது. கோர ரூபத்தையுடைய கால தூதர்களால் பல காததூரம் இழுத்துச் செல்லப்பட்டு, வைவஸ்வத பட்டினம் எனும் எமபுரியை அடைந்தாள்.
தண்டனை பெற்றாள். அவள் நாக்கு அறுக்கப்பட்டு, "அவீசி' என்ற நரகத்தில் அடைக்கப்பட்டாள். நெடுநாள் துன்புற்றபின், புண்ணியத்தைத் தேடி கர்ம பூமியான பூவுலகம் சென்றாள். ஒரு செல்வச்செழிப்பான குடும்பத்தில் ஒரே பெண் வாரிசாகப் பிறந்தாள். குழலின் இசை யாய் குரலோசை பெற்றாள். பருவமெய்தி, மணவாழ்வில் நுழையத் தயாரானாள். தர்மத்தின் தண்டனையால் நோயுற்றாள்.
கனியாத கனி காற்றினால் விழுந்து வெம் பியதுபோல, நோயால் பேச்சை இழந்தாள். மகர யாழ் மௌனமானது. முற்பிறவியில், * மந்தரைபோல் பிறர் குடியைக் கெடுத்ததால், மனம் வெதும்பி துன்புறுகிறாள். வறுமையால் முதிர்கன்னிகளாகிய எழுவருக்குத் திருமணம் செய்துவைத்தபின், சப்தகன்னி பூஜையும் செய்தால், துன்பம் நீங்கும்.
* மந்தரை (கூனி)- கைகேயியைத் தூண்டிவிட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க சூழ்ச்சி செய்தவள்.
(வளரும்)
செல்: 63819 58636
__________
நாடி ரகசியம்
1. ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் குருவும், உத்திரட்டாதி இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றவர் ஆடை, அணிகலன் வியாபாரத்தில் வெற்றிபெறுவார்.
2. ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் குருவும், ரேவதி முதல் பாதத்தில் லக்னமும் அமையும் ஜாதகர் செல்வமும் சுகமும் பெறுவார்.
3. ஹஸ்த நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்க, பூரம் முதல் பாதத்தில் சனியும் உள்ள ஜாதக அமைப்பைப் பெற்றவர் நரம்புத் தளர்ச்சி நோயால் அவதியுறுவார்.
கேள்வி: ஒருவர் முற்பிறவியில் செய்த ஒரே பாவத்திற்கு, நரகத்திலும் அடுத்த பிறவியிலுமாக இருமுறை தண்டிக்கப்படுவதன் காரணத்தையும், மரணத்திற்குப் பின் உயிருக்கு ஏற்படும் சுக- துக்கங்களையும் "கந்தர்வ நாடி'யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: ஒருவர் முற்பிறவியில் செய்த குற்றங்கள், மனதால் செய்த பாவம், உடலால் செய்த பாவம் என்று வகைப்படுத்தப்படும். மனதால் செய்த பாவத்திற்கான தண்டனையை நரகத்திலும், உடலால் செய்த பாவத்திற்கான தண்டனையைப் பூவுலகிலும் அனுபவிப்பார். உடலானது பஞ்சபூதங்களில் பிருத்வியின் கூறுகளால் உருவாக்கப்படுவதால், பிருத்வியின் வடிவமாகிய பூமியோடு சம்பந்தப்பட்டது. உயிர் காயத்தோடு (உடல்) தொடர்பையறுத்து ஆகாயத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதால், மேலுலகில் அதற்கான பலனைப் பெறுகிறது. ஒருவர் இறக்கும் தறுவாயில், அவர் இப்பிறவியில் செய்த பாவ- புண்ணியங்கள் பன்னிரண்டு சிரவணர்களால் நினைவுபடுத்தப்படுகிறது. ஜனன ஜாதகம்போல ஒருவர் இறந்த நேரம், வாரம், திதி, யோகம், கரணம், நட்சத்திரம் கொண்டு "மரண ஜாதகம்' கணிக்கப்பட்டால், இறந்தபின் பன்னிரண்டு மாதங்கள் அந்த உயிர் செல்லும் பாதை மற்றும் அது அனுபவிக்கும் சுக- துக்கங்களையும், மறுபிறப்பையும் அறியலாம் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.