இதுவரை ஜோதிட உலகிற்கு அறிமுகமாகாத புதிய தொடர்!
64
லால்குடி கோபாலகிருஷ்ணன்
ஒரு ஜாதகத்தின் பலனை அறியும்போது கூட்டு கிரகங்களின் இணைவையும், அது இணையும் பாவங் களையும் அறிய வேண்டியது அவசியம். லக்ன பாவத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் இணையும் போது, ஜாதகரை தர்ம குணமும் செல்வாக்கும் மிகுந் தவராக்கும். இதே அமைப்பு ஒன்பதாம் பாவத்தில் அமையும்போது, ஜாதகர் திருடனாகவும் பல உபாதைகள் உடையவராகவும் இருப்பார். ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்து பாலைப் பாழாக்குவதுபோல, சில கிரகங்களின் சேர்க்கை, பாவத்தின் பலன்களைக் கெடுக்கும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று. ""கங்காதரரே! உலகிலுள்ள எல்லா பொருட்களுக்கும் அதன் பயன்பாடே பிரதானமானது. அவ்வாறிருக் கையில், சிருஷ்டியில் அவற்றுக்கு அழகு தரும் வண்ணமும் வடிவமும் கொடுக்கப்பட்டது ஏனோ?'' என அன்னை கனகாம்பிகை திருநெல்வாயல் எனும் திருத்தலத்தில் உறையும் அருள்மிகு உச்சிநாதேசுவரரைப் பணிந்துகேட்டாள்.
நாகநாதர் உரைத்தது- ""பொருட்கள் ஒன்றை மற்றொன்று ஈர்ப்பதாலும், கவர்ந்து கொள்வதாலுமே பிரபஞ்சம் இயங்குகிறது. மரங்களை அழகுபடுத்தும் மலர்கள், தங்களை இதழ்களால் அலங்கரித்துக்கொள்கின்றன. அவை, கண்களால் வருடும் மனிதர்களின் மனதிற்கு இதமளிக்கிறது என்றாலும், காரணம் அதுவல்ல. வண்டுகளை ஈர்க்கும் அழகின் வெளிப்பாடே அதன் பயன்பாடு. வண்டுகளை ஈர்க்காத மலர்கள் சந்ததியில்லாது போகும். அழகே ஈர்ப்பின் ஆதாரம்; சிருஷ்டியின் மதமும் அதுவே.''
""விசுவநாதரே! "குஞ்சிதம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய ஹஸ்த நட்சத் திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும், சதயம் நான்காம் பாதத்தில் சந்திரனும், பூரட்டாதி நான்காம் பாதத்தில் செவ் வாயும், அஸ்வினி இரண்டாம் பாதத்தில் சனியும், மிருகசிரீடம் இரண்டாம் பாதத்தில் புதனும், புனர் பூசம் முதல் பாதத்தில் சூரியனும், பூசம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும், உத்திரம் முதல் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப்பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று திருவேட்களம் எனும் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீ பசுபதீஸ்வரரை அன்னை சத்குணாம்பாள் வினவினாள்.
வழித்துணைநாதர் உரைத்தது- ""திகம்பரியே! இந்த ஜாதகன் முற்பிறவி யில் மணிவண்ணன் எனும் பெயருடன், பேரூர் என்ற ஊரில் வாழ்ந்துவந்தான். இளம்வயதில் முன்கோபமும் முரட்டுத்தனமும்கொண்டு மிருகம்போல் வாழ்ந்துவந்தான். அதே ஊரில் தருமன் என்பவன் வயது முதிர்ந்த அநாதைகளுக்கு உணவும் உறைவிடமும் தந்து அவர்களைப் பராமரித்து வந்தான். மணிவண்ணனுக்கும் தருமனுக்கும் நிலத் தகராறால் விரோதம் உண்டானது. ஒருநாள் தகராறு முற்றியதால், மணிவண்ணன், தருமனின் உயிரை முடித்து தருமத்தையே கொன்றான். சிறைசென்று மீண்டவன் நோயின் பிடியில் சிக்குண்டான். காலத்தின் அலை, அவன் வாழ்க்கைக் கோலத்தை அழித்தது. நரகம் அழைத்தது. எமதூதர் களால் கடுமையான வெப்பம் மிகுந்த பாலைவனத்தின் சுடுமணலில் இழுத்துச் செல்லப்பட்டு, "அந்த கூபம்' எனும் நரகத்தில் அடைக்கப்பட்டான். செய்த பாவத்தின் மிகுதியால் பூவுலகம் புகுந்தான். மானூர் எனும் ஊரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தான்.
வாலிபப் பருவத்தில் தன் நெஞ்சுக்கினியவளை மணந்தான். நெடுநாள் கழித்து, புத்திரபாக் கியம் பெற்றான். வாழ்க்கையில் வசந்தம் புகுந்த தாக எண்ணினான். பெற்ற மகனைக் கண்ணின் இமைபோல் காத்து வந்தான். ஒருநாள், அவன் மகன் திருவிழாக் கூட்டத்தில் காணாமல் போனான். கருமேகத்தில் தோன்றும் மின்னல்போல, அவன் வாழ்க்கையில் சந்தோஷத்தின் ஒளி தோன்றி மறைந்தது. தலையில் இடிவிழுந்ததுபோல் கலங்கினான்.
முற்பிறவியில், தர்மத்தின் காவலனைக் கொன்று, அவன் பராமரித்து வந்த முதியோரை மீண்டும் அநாதைகளாக்கியதால் வந்த சாபத் தால், *தசரதன்போல் புத்திரசோகம் பெற்றான்.
இதற்குப் பரிகாரமே இல்லை.''
*தசரதன் பெற்ற சாபம்- சிரவணன் என்ற இளைஞனைத் தவறுதலாகக் கொன்று, அவன் பெற்றோரை அநாதைகளாக்கியதால், தசரதன் தன் மகன் இராமனைப் பிரிந்து, புத்திர சோகத்திற்கு ஆளானார்.
(வளரும்)
செல்: 63819 58636
__________
நாடி ரகசியம்
1. ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சந்திரனும், ரேவதி இரண்டாம் பாதத்தில் லக்னமும் அமையும் ஜாதக அமைப்பைப்பெற்ற பெண் மகாலட்சுமியின் அருளால் அரசிபோல் வாழ்வாள்.
2. ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் லக்னமும் புதனும் அமைந்து, குரு, சூரியன், செவ்வாய் மூவரும் ரேவதி முன்றாம் பாதத்தில் அமையும் ஜாதகர் உலகப்புகழ் பெறுவார்.
3. ஹஸ்த நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சனியும், பூரட்டாதி முதல் பாதத்தில் குருவும் அமையும் ஜாதக அமைப்பைப் பெற்றவர் நிரந்தர நோயாளி.
கேள்வி: சில ஜாதகங்களில் இராஜயோகங்கள் காணப்பட்டாலும், அந்த யோகங்களுடைய பயனைப் பெறாமல் ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடுவது ஏன்? "கந்தர்வ நாடி'யின் மூலம் விளக்கமுடியுமா?
பதில்: கிரகச் சேர்க்கைகளும், பாவ இணைவுகளுமே (வர்ந்ங்) யோகங்களாகக் கருதப்படும். ஒரே நாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரேவிதமான யோகங்கள் அமைய வாய்ப்புண்டு. ஆனாலும் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரேவிதமான வாழ்க்கை அமைவதில்லை. ஒரு ஜாதகர் செல்வந்தராகிறார். மற்றவர் வறுமையில் வாடுகிறார். உதாரணத்திற்கு, பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றாகிய "ஹம்ச யோகம்' குரு பகவான் ஆட்சி வீடுகளிலும், உச்ச வீட்டிலும் அமரும்போது உருவாகும். மிதுன ராசிக்கு பாதக னாகவும், மாரகனாகவும் குரு அமைவதால், மிதுன ராசியில் லக்னம் அமையப்பெற்ற ஜாதகருக்கு ஹம்ச யோகத்தின் பலன் வாய்க்காமல் போகும். ஒரு யோகத்தைப் பரிசீலிக்கும்போது, அந்த யோகத்தைத் தரும் யோகக்காரகன், லக்னத்திற்கு சாதகனா பாதகனா என்பதை அறிந்தே, அந்த யோகத்தின் பலனைக் கூறவேண்டுமென்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.