பொதுவாக, திரிகோணத் தொடர்புகளை நான்குவிதமாகப் பிரிக்கலாம். உறவைக் குறிக்கும் லக்னத் திரிகோணம் (1, 5, 9), வருமானத்தைக் குறிக்கும் அர்த்தத் திரிகோணம் (2, 6, 10), அன்பை விளக்கும் காமத் திரிகோணம் (3, 7, 11), அழிவைத் தரும் நாசத் திரிகோணம் (4, 8, 12). ஒவ்வொரு திரிகோணத்திலும் ஒரு வீடு மட்டுமே உபய ராசிகளில் அமையும். அவ்வாறு அமையும் பாவமே, அந்த ஜாதகரின் விதியை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் பெறும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கூற்று.
""வேத நாயகரே! பிராணனையே ஆன்மா என்றும், மரணத்தையே வாழ்வின் எல்லையென்றும் எண்ணி மாயையில் மாய்ந்திடுவோர் உணருமாறு, உண்மையைத் தாங்கள் விண்டுரைக்க வேண்டுகிறேன்'' என அன்னை அகிலாண்டேசுவரி நாகப்பட்டிணம் திருத்தலத் தில் உறையும் அருள்மிகு நாக நாதரைப் பணிந்துகேட்டாள்.
ஐயாறப்பர் உரைத்தது- ""பதினாறு பகுதிகளையுடைய ஆன்மாவே பிராணனைப் படைத்தது.
பிராணனிலிலிருந்து புத்தி, பஞ்சபூதங்கள், புலன்கள், மனம், தாது ஆகியவை தோன்றின. தாதுவிலிலிருந்து ஆற்றல், தவம், மந்திரங்கள், கிரியைகள், உலகங்கள் தோன்றின. நதிகள் கடலில் கலந்ததும், அவற்றின் நாமரூபங்கள் அழிந்துவிடுகின்றன. மனிதன், தன் நாமரூபம் அழிவதையே மரணமென்று எண்ணுகிறான். குருவருளால் கலைகளை திலக பந்தனத்தில் ஒடுக்கி, வாழும்போதே தன் நாம ரூபத்தைத் தானே மறக்கவல்லானே மரணமில்லா பெருவாழ்வையடைவான்.''
""தேவநாதேஸ்வரரே! "ஸூசிவித்தம்' எனும் தாண்டவத்தின் லயமாகிய மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் லக்னமும், அவிட்டம் முதல் பாதத்தில் சந்திரனும், சதயம் இரண்டாம் பாதத்தில் சுக்கிரனும் சூரியனும் சேர்ந் திருக்க, ரேவதி நான்காம் பாதத்தில் புதனும், அபபரணி இரண்டாம் பாதத்தில் குருவும், ரோகிணி நான்காம் பாதத்தில் செவ்வாயும், ஆயில்யம் நான்காம் பாதத்தில் சனியும் அமரும் அமைப்பைப்பெற்ற இந்த ஜாதகரின் கர்மப் பலனைத் தாங்கள் விளக்க வேண்டும்'' என்று அரண்மனை சிறுவயல் எனும் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீ மும்முடீஸ்வரரை அன்னை கருணா கடாட்சிவேண்டிப் பணிந்தாள்.
ருத்ரவாலீஸ்வரர் உரைத்தது- ""சியாமளையே! இந்த ஜாதகி கீரனூர் என்ற ஊரில் ஊர்வசி என்ற பெயரில் வாழ்ந்துவந்தாள். பூவில் மறைந்திருக்கும் பூநாகம்போல, வெளியே அழகும் மனதில் அகங்காரமும் குடிகொண்டிருந்தன. உரிய பருவத்தில் மணவாழ்க்கையை ஏற்றாள். குடும்பம் அல்லிலி ராஜ்ஜியமானது. பெரும் நிலச்சுவான்தாரராக இருந்த கணவன் அழகுக்கு அடிமையானான். புத்திரபாக்கியம் பெற்றாள். ஆனாலும் அடங்கா காமத்தால் ஊர்வசி, ஊர்வேசியானாள். தாருகா வனத்து மங்கையர்கள் அழகின் செருக் கினால் அவமானமுற்றதுபோல ஊராரின் பழிச்சொல்லைச் சுமந்தாள். தான் செய்யும் அடாத செயலைக் கண்டித்த துணைவனை, மகனின் துணையுடன் கொன்றாள். வாலிபத்தின் ஒளி மங்கியது. முதுமையின் இருள் கவ்வியது. ஒய்யாரியின் உடல் ஓட்டை சடலமானது. ஈமக்கிரியைக்கு உடல் ஊர்கோலம் போனது. மயானத்தில் மகன் நீர்க்கோலம் வார்த்தான். பாவச்சுமையுடன் அவள் உயிர் நரகம் சென்றது. "பரிபாதனம்' எனும் நரகத்தில், முள்படுக்கை வாசத்தில் பலகாலம் துன்புற்றபின், புலன்களால் செய்த பாவத்தைத் தீர்க்க பூவுலகம் புகுந்தாள். மருதூர் என்ற ஊரில் மோகனவல்லி என்ற பெயரில் வாழ்ந்தாள். பெயருக்கேற்றாற் போல, அழகுக்கு அர்த்தமானாள். இளமையில் ஒரு நாள், எதிர்பாராமல் பெருந்தீயில் சிக்கினாள். உயிர் பிழைத்தாள். உருவம் உருக்குலைந்தது. முற்பிறவியில் கற்பெனும் பெருந்தீயைக் காக்க மறந்ததால் இந்த கதி நேர்ந்தது. * உலூபி போல், தன் மகனைக்கொண்டு கணவரைக் கொன்றதால் அவதியுறுகிறாள். கொழுநன் (கணவன்) தொழாததால் வந்த முன்வினைப் பாவம் பசுந்தொழுவத்தைத் தொழுவ தால் நீங்கும். மீண்டும் புதுப்பொலிவு பெறுவாள்.
* உலூபி- தன் மகன் முறையிலான பப்ருவாகனனை தன் கணவன் அர்ஜுனனுக்கு எதிராகப் போரிடத் தூண்டினாள்.
-மகாபாரதம்.
(வளரும்)
செல்: 63819 58636
___________
நாடி ரகசியம்
1. மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சந்திரனும், திருவாதிரை மூன்றாம் பாதத்தில் செவ்வாய், சூரியன், சனியும் சேர்ந்தமையும் ஜாதகர், நியாய சபையில் நீதிமானாகப் புகழ்பெறுவார்.
2. மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் செவ்வாயும், ரோகிணி முதல் பாதத்தில் குருவும் அமையப்பெற்ற ஜாதகர், வாழ்க்கையில் பெரும் போராட்டத்திற்குப்பிறகே வெற்றிபெறுவார்.
3. மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் சுக்கிரன் தனித்திருந்து, கேட்டை நான்காம் பாதத்தில் புதனும் அமைந்தால், ஜாதகருக்கு திருமணத்தினால் துன்பமும் அபவாதமும் உண்டாகும்.
கேள்வி: நட்சத்திரம், ராசிப் பொருத்தங்களைப் பார்த்து செய்யப்படும் திருமண வாழ்க்கையிலும் பிரிவு ஏற்படுவதன் காரணத்தை "கந்தர்வ நாடி' யின்மூலம் விளக்கமுடியுமா?
பதில்: திருமணப் பொருத்த விஷயத்தில் நான்கு இடங்களுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. 7-ஆமிடம் (களத்திரஸ்தானம்), 8-ஆமிடம் (ஆயுள் ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானம்), 5-ஆமிடம் (புத்திரஸ்தானம்), 2-ஆமிடம், (குடும்பஸ்தானம்). பொதுவாக 12-ஆம் பாவம் பரிசீலிலிக்கப்படுவதில்லை. சயன சுகம் தரும் 12-ஆமிடமே மணமக்களின் அன்யோன்யத் தையும், தாம்பத்திய சுகத்தையும் சுட்டிக்காட்டும். தம்பதிகளின் 12-ஆம் பாவத்தின் அதிபதிகள் நட்பான அமைப்பில் அமர்ந்தால் மட்டுமே பரஸ்பர தேக சுகத்தை அடைவார்கள். தாம்பத்திய சுகத்திற்கு மனமே காரணமாவதால், ஆண் ஜாதகத்தில் ராசிக்கு 12-ஆம் வீட்டு அதிபதியும், பெண் ஜாதகத்தில் ராசிக்கு 12-ஆம் வீட்டு அதிபதியும் ஒருவருக்கொருவர் கேந்திர ஸ்தானங்களில் அமைந்தால் மட்டுமே சுகம் உண்டாகும். சந்திரனுக்கு 12-ஆமிடமே உறக்கத்தையும் திருமண சுகத்தையும் குறிக்கும். அது சரியாக அமையாவிடில், இரவுப்பொழுது இரவல் பொழுதாகும். உறக்கமின்றி இமைகள் சுமைகளாகும் என்பதே "கந்தர்வ நாடி'யின் கருத்து.