திருமணமாகி சில மாதங்களில் கருத்தரித்து விடும் பெண்களும், பல ஆண்டுகள் கடந்தும் குழந்தைப்பேறு கிடைக்காமல் வருந்தும் பெண்களும் இந்த உலகத்தில் உள்ளனர். குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்களைக் கண்டு கேலிபேசுவோரும், அவமரியாதை செய்பவரும் பலருண்டு.
"ஒரு குடும்பத்தில் சேர்த்துவைத்த புண்ணியங் களே பிள்ளைகளாகப் பிறக்கும்' என்ற சொல்மொழி உண்டு. தாய்மையென்பது ஒரு பெண்ணுக்கு இறைவனால் அருளப்பட்ட மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். அனைவரது வாழ்விலும் துன்பங்கள் வரலாம். ஆனால் புத்திரசோகம் என்பது ஒரு பெண்வாழ்வில் நிரந்தரமாகத் தங்கிவிட்டால் அதன் வலியை அனுபவிப்பது மிகக் கடினமானது.
தொண்டர்தம் பெருமையை பெரிய புராணம் என்னும் பெயரில் இந்த உலகுக்கு வழங்கிய தெய்வ சேக்கிழார் அவதரித்த புனித மண்ணில் (சென்னை அருகேயுள்ள குன்றத் தூர்), கந்தனுக்குத் தாயானவள் தனியாக அமர்ந்து அருள்பாலிக்கிறாள். அவளது பத்மபீடத்தின் கீழே ஒரு பாலகணபதி மலர்களுக்குள் மறைந்து புத்திரலாபம் தரும் ரகசியம் பலருக்கும் தெரியாது.
கருவறை கணபதி சிறப்பு
ஒரு பெண்ணின் கருவறையில் குழந்தை உண்டானபிறகு, அந்த சிசு வெளிவரும் முன்பு சுற்றிக்கொண்டே இருக்கும். அதைப் போலவே அம்பிகையின் கருவறையில் மிகச்சிறிய மூர்த்தியாக, தேவியின் பீட மருகே சுற்றிவருகிறார் கருவறை கணபதி. சித்திரை மாதத்தில் அம்பிகையின் வலப்புற மூலையில் அமர்ந்திருப்பவர் ஒவ்வொரு மாதமும் நகர்ந்து, பங்குனி மாதத்தில் இடது மூலைக்குச் சென்றுவிடுவார் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் தடைப்படும் பெண்களும், அடிக்கடி கருச்சிதைவுக்கு ஆட்படும் பெண்களும் உரிய காலத்தை யறிந்து இந்த விசேட கணேசரை விதி முறைப்படி வணங்கிவந்தால் அவர்களது கருப்பையில் குழந்தை மலரும். புத்திரதோஷ முள்ள தம்பதியர் கருவறை கணபதியை வணங்கி தோஷங்கள் நீங்கப் பெறலாம்.
"மூர்த்தி சிறியது; கீர்த்தி பெரியது' என்னும் வாக்கிற்கிணங்க அவர் குள்ள வடிவில் அமர்ந் திருக்கிறார். ஆனாலும் தாய்மை அடைய வேண்டி வரும் பெண்களுக்கு மிகவும் சக்தி வாய்ந்தவராக முன்னின்று அருள்புரிகிறார்.
"ஓம் ஸ்ரீம் கரஸ்த கதளீசூத பனசேஷு கபித்தகம்
பாலசூர்ய ப்ரபம் வந்தே கர்ப்பக்கிருஹ வாசினம்.'
"சேயே, பாலவிநாயகரே. எந்நாளும் கருவறையில் சுற்றிவந்து மகிழும் சிவ மைந்தனே. எங்களது வெற்றிக்கனியாம் மகவைத் தந்தருள்வாய் கணநாதா' என்று இவரைத் துதிப்பதால் எப்பேற்பட்ட கடுமையான புத்திரதோஷ பாதிப்புகள் இருந்தாலும் விலகும்; குழந்தை பாக்கியம் கிட்டுமென்பது பலன் பெற்றோரின் நம்பிக்கை கருத்து.
அமிர்த நீரே அருட்பிரசாதமாக...
"கருவறை கணபதிப் பெருமானை வழி பட்டால் குழந்தைப்பேறு உண்டாகுமா' என்று கேட்போருக்கு, அவர் குறித்த பழமொழி யைப் படித்தால் நம்பிக்கை உண்டாகும். அதுவே "மிளகத்தனை பிள்ளையாருக்கு கடுகத்தனை பிரார்த்தனை' என்னும் உலகறிந்த மொழி. இத்தலத்தில் ஒரு அன்னாசிப்பழம் அளவுக்கே இந்த கணபதி வீற்றிருந்து மகப்பேறு தடையை நீக்கியருள்கிறார்.
மங்கள வாரமென்னும் செவ்வாய்க்கிழமை, ஸ்திர வாரமென்னும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை, சதுர்த்தி திதி வரும் நாட்களில் மட்டும் கருவறை கணபதியை கண்டு தரிசித்து, இரண்டு தேங்காய்கள் சமர்ப்பித்து, மூவகை பழங்களைப் படைத்து, "புத்ர லாப பூஜை' செய்துகொண்டு, அவருக்கு அபிஷேகம் செய்த புனிதமான அமிர்தநீரை அருள் நிறைந்த பிரசாதமாக தம்பதிகள் (கணவன்- மனைவி இருவரும்) பெற்று அருந்தி, "எங்களுக்கு விரைவில் கருவறையில் வந்து அருள்வாய்' என்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தல் வேண்டும். அத்துடன் இவரது திருமேனிக்கு அபிஷேகம் செய்து நிவேதனமும் செய்யப்பட்ட தேன் பிரசாதமாக வழங்கப்படுவதை, மூலிகை சக்திநிறைந்த அமிர்தநீருடன் பெற்றுச் சென்று, அவரவர் இல்லத்தில் குலதெய்வ- கிருஹ தெய்வங்களை வணங்கி உண்ணவேண்டும்.
தொந்திச் சந்தனம் முந்தித் தரும்...
ஒவ்வொரு தலங்களிலும் தனக்குப் பிடித்த பொருளை ஏற்று, அதையே பக்தர் களுக்கு சக்திதரும் பிரசாதமாக அருள்பவர் கணபதி. பக்தர்களின் விக்னங்களை (குறைபாடுகளை) களையும்பொருட்டு- முக்கியமாக வாரிசுத் தடையை நீக்கும் பொருட்டு அவர் தொந்தியில் நிறைய சந்தனத்தை இட்டுக்கொண்டு சுற்றுகிறார் என்பது இவருக்குச் சொல்லப்படும் வழிபாட்டு ரகசியம். அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் வாக்குப்படி, "முப்பழம் நுகரும் மூஷிக வாகனர்' என்ற வகையில் மூன்று பழங்களைப் படைக்கவேண்டும்.
"குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்து திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி'
என்னும் வாக்கிற்கிணங்க, இத்தலத்தில் குழந்தைப்பேறு அருளும்- புத்திரலாபம் தரும்- குருபகவானைபோல விளங்கும் இவர் தாயின் திருவடியின்கீழ் அடியார்க்கு திருவருளைத் தந்தருள்கிறார்.
"பெண்களுக்கு மன வருத்தம் வேண்டாம்; இனி மகிழ்ச்சியான செய்தியே' என்று சொல்லுமளவு, குளிர்ச்சி தரும் சந்தனத்தைத் தொந்தியில் பூசியபடி அமர்ந்துள்ளார். இத்தலத்திற்கு காலடி வைத்து, இந்த விசேட கருவறை கணபதியை வணங்கி, அவர் தொந்தியில் பூசியுள்ள சந்தனத்தைப் பெற்றுத் தங்கள் வயிற்றில் பூசிக்கொண்டு, திலகமாகவும் இட்டுக்கொள்ள புத்திர லாபம் கிடைப்பது உறுதியே. திருமஞ்சனம் என்னும் அபிஷேகப் பொருட்களால் விநாயகருக்கு புனித நீராட்டல் செய்யும்போது, சுகந்தாம்பூ என்னும் பெயருடன் வாசனை சந்தனம் பூசப்படுவது கவனிக்கத்தக்கது. மேலும் இவரை கந்தம் என்னும் சந்தனத்தால் வழிபடுவோரின் கனவுகள் பலிதமாகும். கந்த கணபதியாக வழிபடுவதும் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. குழந்தைப்பேறு கிடைத்தாலும் சில பெண்களுக்கு கருச்சிதைவு என்னும் விபரீதம் நடந்துவிடுகிறது. அவ்வாறு கருவில் குழந்தை தங்காமல் போகும் அவலநிலை அடிக்கடி ஏற்பட்டாலும், இவரது அமிர்தநீரைப் பெற்று அருந்துவதால், ஆனந் தம் தரும் பிள்ளையின் வருகை உறுதியாகிவிடும்.
கருவறை கணபதியை வழிபடச் செல்லும் பக்தர்களுக்கு, அம்பா ளின் பத்ம பீடத்தின் முன் அவரது திருவடி வத்தை அபிஷேக பீடத்தில் வைத்து அபிஷேகம் செய்து, குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூஜை செய்யப் பட்டு, 12 மாதங்களின் கணக்குப்படி கருவறை யில் எந்த இடத்தில் அமர்வாரோ அங்கு வைக்கப்படுவது இன்று வரை மிகச்சரியாக செய்யப்பட்டு வருகிறது.
மாதங்களும் பழங்கள் படைக்கும் முறையும் தற்போதைய காலகட்டத்தில் மருத்துவத் துறை பல உபகரணங்கள், மருந்துகளைக் கண்டறிந்து வழங்கினாலும், இயற்கையான மூலிகைகள், பழங்களை உண்பதனாலேயே பக்கவிளைவுகளற்ற குழந்தை பாக்கியம் கிட்டிவிடுகிறது. இதைக் கருத்தில்கொண்டே விநாயகப் பெருமானுக்கு பழங்களைப் படைத்தும், அபிஷேக காலத்தில் திரவிய பொடிகளோடு கலந்த பஞ்சாமிர்தத்தை அருட்பிரசாதமாகப் படைத்தும் அவற்றை பக்தர்களுக்கு வழங்கி உண்ணச் செய்தார்கள் நமது ஆன்றோர் பெருமக்கள்.
"சித்திரையில் மாங்கனியாம்; செம்முத்தாய் வைகாசிக்கு மாதுளையாம்; ஆனியில் தேன்சுவை கொய்யாவாம்; ஆடியில் சுவை கூட்ட பேரிச்சை; ஆவணியில் தோஷம் நீக்கும் நாகக்கனி; புரட்டாசியில் புலன்களுக்குத் தெம்பூட்டும் திராட்சைக் கனி; ஐப்பசியில் செங்கனியாம்; கார்த்திகையில் சீரணிக்கும் நாரங்கம் (ஆரஞ்சு); மார்கழியில் திறன் கொடுக்கும் அண்ணாசி; தையிலொரு செவ்விள நாரங்கமும் இளநீரும்; மாசியில் உணர்வூட்டும் அத்திக் கனியொடு தேன் உண்டாம்; பகலவன் அருகில்வரும் நாளதனில் பலாக்கனி படைத்திடவே பால கனைத் தந்தருள்வான் கருவறை கணேசமூர்த்தி.' இதில் ஐப்பசிக்கு செங்கனி என்பது ஆப்பிள் பழத்தைக் குறிக்கிறது.
காலத்தைக் கணக்கிட்டு பாலகனைப் பெறுவீர்
பஞ்சாங்க விதிகளைப் பழமை என்றும்; மூத்தோரை "மூலையில் சும்மா இரு' என்றும் ஒதுக்கி வைத்திருப்பதால்தான் பலரும் பிள்ளைவரம் கிட்டாமல், கையில் கோடிகளில் பணம் இருந்தும் வாரிசு பிறக்காமல் வாடுகிறார்கள். நாகரிக உலகில் புகுந்து, "செல்' என்னும் அலைபேசியில் பேசிக்கொண்டு செல்லாத மனிதர்களாக அலைகிறார்கள். இங்கே ஒரு ஜோதிடச் செய்யுள் தரப்படுகிறது. கவனித்துப்பாருங்கள்.
'காலற்ற உடலற்ற தலையற்ற நாட்களில்
கோலக் குய மடவார்தமைக் கூடின் மலடாவார்
மாலுக்கொரு மனை மாளிகை கோலினது பாழாம்
ஞாலத்தவர் வழிபோகினும் நலமெய்திடாரே.'
அதாவது கார்த்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்கள் வரும் காலற்ற நாட்களிலும்; மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய உடலற்ற நாட்களிலும்; புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய தலையற்ற நாட்களிலும் கணவன்- மனைவி சேர்ந்திருந்தால் புத்திரப்பேறு ஏற்படாமல் இருப்பார்கள் என்பது பொருள். எனவே காலத்தை மதித்து நடக்கவேண்டியது அவசியம்.
குழந்தை பாக்கியத்தைத் தடைசெய்யும் கிரக அமைப்புகள்
ஆண்- பெண் இருபாலரின் ஜாதக கிரக அமைப்புகளின்படி 12 வகையான புத்திர தோஷங்கள் ஏற்படுகின்றன. பதினாறு வகையான பேறுகளுள் புத்திரப்பேறு என்பது முக்கியமானது. இதை அனைத்து குடும்பங்களும் அடைய விரும்பிய அபிராமிபட்டர் தனது அபிராமி அந்தாதி யில், "தவறாத சந்தானமும்' என்று, அந்தப் பேறுமட்டும் தவறிப் போய்விடக்கூடாது என பாடினார். இது கிடைத்தால் "அன்பு அகலாத மனைவியும்' என்று குறிப்பிட்டு, "கன்றாத வளமையும் குன்றாத இளமையும்' என்று அடுத்தடுத்து நாம் அடையவேண்டிய பேறுகளைக் கூறுகிறார். அதற்கும் நமது ஜாதக கிரக நிலைகளுக்கும் தொடர்புண்டு.
சர்ப்ப சாபங்களால் ஏற்படுவது, பித்ரு சாபம், மாத்ரு சாபம், சகோதர சாபம், அந்தணர் சாபம், பத்தினிகள் சாபம், குருவின் சாபம், உறவினர் சாபம், மந்திர தோஷ சாபம், பிரேத தோஷம், சாதுக்கள் சாபம், குலதெய்வ சாப தோஷங்களால் புத்திர தோஷம் உண்டாகும்.
ஜாதகத்தில் பொதுவாக 1, 5, 7, 9, 12-ஆம் பாவங்களிலுள்ள கிரகங்களை வைத்தே புத்திர லாபத்தை தீர்மானிக்கவேண்டும்.
5-ஆமதிபதி, 7-ஆமதிபதி கேந்திர கோணங்களில் பலமுடன் இருக்க, 6-ஆமதிபதி இவர்களோடு இணைந்தாலும் பார்த்தாலும் புத்திர தோஷம் ஏற்படும்.
பாக்கியாதிபதி விரயமாகி, பூர்வபுண்ணியாதிபதி ரோகமாகி நின்று, குரு அஸ்தமனம் அடைந்தால் புத்திர தோஷம் உண்டாகும்.
7-ஆமிடத்தில் சனி, 8-ல் செவ்வாய், 5-ல் ராகு அமர்ந்து, செவ்வாய்க்கு 7-ஆமிடத்தில் குரு நிற்பது; 5-ஆமிடத்தோன் 8-ல் நிற்க, 7-ஆமிடத்தவன் 5-ல் நிற்க, குரு பலமிழந்துவிட்டால் புத்திர தோஷம் ஏற்படும்.
புத்திரகாரகன் குரு, ராகு- கேது சாரம் பெறும்போதும், லக்னத்திற்கு 6, 8, 12-ல் மறையும்போதும், சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடையும்போதும் புத்திர தோஷம் ஏற்படும்.
5-ஆமிடத்தின் அதிபதி ஐந்தில் இருந்தும், 6, 8, 12-ல் மறைவுக்கு ஆளாவதும், குரு வக்ரம்பெற்று, லக்ன பாதகாதிபதி சூரியனது சாரம்பெற்று கேதுவோடு இணைந்தாலும் புத்திரதோஷமென்று "பலதீபிகை' விவரிக்கிறது.
கணவன்- மனைவியின் ஜாதகங்களை, புத்திர தோஷத்திற்கான பரிகாரங்கள் காண்பதற்கான கிரக ஸ்புடம் என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடும்போது கவனமாகக் கணிக்கவேண்டும். உதாரணங்கள் 180 வரை சொல்லப்படுகின்றன. பூர்வபராசாரியம் எனும் ஜோதிட செய்யுள், வியாழன் தனது தனுசு, மீன வீடுகளிலோ, எட்டாம் பாவத்திலோ நின்றாலும் மக்கட்பேறு குறைவாக இருக்கும். செவ்வாய் சனியுடன்கூடி 8-ஆம் வீட்டில் நின்றாலும் மக்களைப் பெற்று பின்னர் அவற்றை இழந்துவிடும் தோஷத்திற்கு ஆளாவர் என்று கூறுகிறது.
வீட்டில் கன்னிப் பெண்கள் திருமணமாகாமல் அதிக வயதாகிக் காத்திருந்தாலும் கன்யாதோஷ சாபம் ஏற்பட்டு புத்திர லாபம் தடைப்படக்கூடும். ஊரிலுள்ள அரச மரத்தையோ ஆலமரத்தையோ, வன்னி, வில்வ விருட்சங்களையோ வெட்டி சாய்த்து, அவ்விடத்தின்மீது பெண் பூப்படைந்து எட்டு வருட காலத்திற்குள் நடந்துசென்றிருந்தால், விருட்ச சாபத்தால் குழந்தைப்பேறு தடைப்படும்.
எனவே, கருவில் குழந்தை மலர்ந்திட நேரமறிந்து பரிகாரம் தேடவேண்டும். குறிப்பாக இங்கு சொல்லப்பட்ட மரங்களின்கீழ் கணபதி பல வடிவங்களில் அமர்ந்திருக்கிறார். அவரை முறையோடு வணங்கி பரிகாரபூஜை செய்து மக்கட்செல்வம் பெறுவீராக.
செல்: 95511 84326