வீடுகளில் வில்வ மரத்தை வளர்த்தால் மகாலட்சுமி நிரந்தரமாகத் தங்குவாள் என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. அதனால் இந்த மரத்தை வளர்க்கிறார்கள். ஆனால் முறைப்படி பூஜை செய்வதில்லை.
நெல்லி மரத்தில் விஷ்ணு இருக்க, அவருடன் மகாலட்சுமி தங்குவதால் வீட்டில் வளர்த்தனர். அதேபோல அத்தி மரமும் ஆலயங்களில் வளர்க்கப்பட்டு, அதனில் தெய்வச்சிலைகள் செய்து, வழிபாட்டுக் கென்று சக்தி ஊட்டப்பட்டு சந்நிதியில் வைக்கப் பட்டன. காலக்கிரமத்தில் அவை பராமரிக்கப் படாமல் ஐம்பொன் திருமேனிகள் வார்க்கப் பட்டு உற்சவங்களுக்கும், மூலஸ்தானத்தில் பச்சைக்கல், பவழக்கல், சூரிய காந்தம், சந்திர காந்தம் ஆகிய உயர்வகை கருங்கற்களாலான சிலை வடிவங்களும் பிரதிஷ்டானம் செய்யப் பட்டன.
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் வைபவம் நடைபெற்ற காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பது பிறவிப்பயன் என்றுதான் சொல்ல வேண்டும். அங்கே பெருமாள் ஆகம சாஸ் திரப்படி பிரதிட்டை செய்யப்பட்டதால் அதிகமான ஈர்ப்பு சக்தியை உடையதாக அமைந்தது.
அத்தகைய அத்திமரத்தாலான சக்தி வாய்ந்த மகாலட்சுமி சென்னை அருகேயுள்ள குன்றத்தூரில் அருள்புரிகிறாள்.
பிரதிமா லட்சணப்படி அத்தி விருட்ச மகாலட்சுமி
நம் நாட்டை அரசர்கள் ஆட்சிசெய்த காலத்திலிருந்தே கோவில் கோபுரங்களையும், சிலைகளையும் வடிக்க விதிகள் பின்பற்றப் பட்டன. கோபுரத்தின் பக்கங்களில் தேவதைகள், மகரிஷிகள், பக்தர்கள், பூதகணங்கள் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டன. பிரதிமா லட்சண விதிப்படி ஒரு சிலையின் உடல், முக அமைப்புக்கு தசதாலங்கள் என்னும் 10 தாலங்களைப் பின்பற்றவேண்டும். உபதேவதை- 9, மனிதர்கள்-8, அசுர கணங்களுக்கு-7 தாலங்கள் வைத்துக் காட்சிப்படுத்துவது விதி. பொதுவாக துவார பாலகர்களுக்கும் பூதகணங்களுக்கும் உக்ர திருஷ்டியும், மூலஸ்தான தெய்வங்களுக்கு ஸௌம்ய திருஷ்டியும் அமைத் திடல் வேண்டும் என்பது ஒரு ரகசிய விதி.
ஆகம சாஸ்திர நுணுக்கங்களோடு பிரதிமா லட்சணங்களைப் பயன்படுத்தி செதுக்கப்பட்ட தேவியே இந்த சக்தியூட்டப்பட்ட அத்தி விருட்சத்தாலான மகாலட்சுமி தேவி. இவளது முகத்திலும் அங்கங்களிலும் யோகம் தரும் இழைகளில் ஷோடசம் என்னும் பதினாறு வகை லட்சுமிகளும் வாசம் செய்கின்றனர்.
அஷ்ட லட்சுமி கோபுர மகிமை
அத்தி மரத்தால் செய்யப்பட்ட மகா லட்சுமி தேவியின் அழகுத் திருவடிவம் மூலஸ்தானக் கருவறையில் ஒன்றரை அடி உயரத்தில் பாலரூபியாய் பிரதிட்டாபனம் செய்யப்பட்டிருக்க, சுற்றிலும் எண்வகை லட்சுமி தேவிகள் நின்ற கோலத்தில் அருளாட்சி செய்வதோடு, கோஷ்ட தெய்வங்களாகவும் காட்சியளிக்கின்றனர்.
அத்தி விருட்ச மகாலட்சுமி அருட்காட்சி!
பல்லவர் காலத்துக் கட்டடக்கலை அம்சத்தை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ள அஷ்டலட்சுமி கோபுரத்தை பௌர்ணமி யன்று தரிசிப்பது, மகாமேரு வடிவைக் கண்குளிரக் கண்டு வணங்கியதற்குச் சமம்.
தேவியை வழிபடுபவன் கல்வி, செல்வம், அழகு, ஆயுள், வீரம் ஆகியவற்றை நிரம்பப் பெற்று விடுவான் என்று ஆதிசங்கர பகவத்பாதர் தனது சௌந்தர்ய லஹரியின் 99-ஆவது சுலோகத்தில் சொல்லி, அந்த தேவியை வழிபடு வதற்கு பூர்வபுண்ணியம் வேண்டும் என்றும் கூறுகிறார்.
"ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா
விதி ஹரி ஸபத்நோ விஹரதே
ரதே: பாதி வ்ரத்யம் சிதிலயதி
ரம்யேண வபுஷா'
என்ற பொன் வரிகளால் இதை அறியலாம். உரிய நேரத்தில் வழிபடுவதால் பக்தர்களுக்கு காரிய வெற்றி, செல்வப்பேறு ஆகியவை கிட்டும். முழு நிலவு நாளில் மட்டும் ஸ்ரீஅத்தி மகாலட்சுமி தேவியின் ஆனந்த தரிசனம் கிடைக்கப்பெறுகிறது. காலை 8.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை (பகல் 12.00-5.00 மணி தவிர) வழிபடுபவர்களுக்கு போக பாக்கியங்கள் உண்டாகும் என்பது சில பக்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
மகாலட்சுமியின் சிந்தாமணி துதி
சித்திகள் பலவும் அருளிடும் அத்தி விருட்ச மகாலட்சுமி தேவியை செல்வமலி குன்றத்தூரில் சென்று தரிசிப்பவருக்கு செல்வங்கள் குவியத் தொடங்கும் என்பது இதன் வழிபாட்டுத் தந்திரம் கூறும் செய்தி. ஆறு பௌர்ணமி நாள் சென்று மூன்று நெய் தீபங்கள் ஏற்றி "ஸ்ரீகுபேரவாசல்' என்ற மகாலட்சுமி தேவியின் அபூர்வமான சிந்தாமணி மந்திரத் தமிழ்க்கோவையை சூல மண்டபத்தில் அமர்ந்து படித்துப் பிரார்த்திக்க, கடன் நிவாரணமாகி செல்வப்பேறு கிடைத்து காரிய சித்திகளும் ஏற்படும். ஸ்ரீஐஸ்வர்ய லக்ஷ்மி துதி, குபேரவாசல் துதி, ஸ்ரீமகாலக்ஷ்மி சிந்தாமணி மந்திரம் தமிழ்ச்செய்யுள் வழிபாட்டு சுலோகம் 41 பாடல்களைக் கொண்டது. ஓலைச்சுவடித் தொகுப்பில் எழுதப்பட்டு கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேழையையும் தரிசித்து வருவதால் ஞானத்தைக் கொடுக்கும்.
அத்துடன் வலம்புரிச்சங்கும், ஸ்வர்ண தீபங்கள் மூன்றும் அருகில் இருக்கக் காணலாம்.
பிருந்தாவனத்தில் எழுந்தருளல்
அத்தி விருட்ச மகாலட்சுமி தேவியை அனைத்து பக்தர்களும் பௌர்ணமியன்று ஒரு நாள் மட்டுமே தரிசிக்கமுடியும். மற்ற நாட்களில் அருகிலுள்ள அஷ்டலட்சுமி நகரில், ஆலய வில்வமர பிருந்தாவனத்தில் எழுந்தருளச் செய்து தைலக் காப்பிட்டு வைக்கப்பட்டிருக்கும். ஏன் அவ்வாறு வைக்கப்படுகிறது என்பதற்கு சாஸ்திர விதி உள்ளது.
வில்வமரக் காட்டில்தான் லட்சுமிதேவி அவதாரம் செய்தாள் என்றும், இம்மரத்திற்கு லட்சுமிவாசம் என்றும், வில்வம் பழத்திற்கு "ஸ்ரீபலம்' என்றும் பெயர் நிலைப்பதாக ஆகம ஏடுகளில் செய்தி உள்ளது. மேலும் சகஸ்ரநாமத்தில் (வில்வ நிலையாயை நம:) வில்வத்தில் நிலைபெற்றிருப்பவள் என்று போற்றப்படு கிறது. வெள்ளிக்கிழமை, பௌர்ணமி தினங்களில் வில்வத்தால் லட்சுமி தேவியை அர்ச்சிப்பவர்கள் சகல செல்வங்களையும் பெறுவார்கள் என்றும் சதக நூல்களில் கூறப்பட்டுள்ளது.
அத்தித் திருமகளின் அருட்பார்வை பெற...
அத்தி மகாலக்ஷ்மியை வழிபட விசேட மான சிந்தாமணி மந்திரத் தமிழ்க் கோவை 41 அனுவாகத் துதிகளைக் கொண்டுள்ளது. அதிலிருந்து சில துதிகள் இங்கே...
பொன்மகள் கடைக்கண் பார்வை
புன்னகை புலர்ந்து கண்டால்
நன்மைகள் யாவும் தேடி
நயம்படக் கதவைத் தட்டும்
மண்பரிதப் போற்றும் செல்வம்
மழையெனப் பொழியும் வாழ்த்தும்
அன்னையே அலர்மேல் தேவி
அடியேனைக் கண் பாரம்மா!
தேவியே கமலவல்லி
செந்திரு மாலின் கண்ணே
நாவினால் நின்னை யன்றி
நயத்தகு நயத்தைக் காணேன்
காவியம் காணாச் செய்யுள்
கற்பகத் திருவே நின்றன்
ஓவியம் நெஞ்சில் வைத்தே
ஓதுவேன் கடைக்கண் பாராய்
நாரணன் தவத்தின் தேவி
ஞாலத்துப் பெண்கள் போற்றும்
பூரணி பூவில் வாழும்
புன்னகை அரசி எல்லாக்
காரணக் காரியங்கள்
கணக்கிடல் யாரே இந்தத்
தாரணி தன்னில் வாழத்
தனயனைக் கடைக்கண் பாராய்
தாமரை நினது பீடம்
தரிசனம் திருமால் மார்பு
ஏமமே இதழின் வாசம்
இளநகை புரிந்தால் அந்தச்
சேமமே எனக்குப் போதும்
தேவியே அருள்வாயம்மா
சாமரம் வீசிப் போற்றிச்
சரிதத்தைப் பாடி வைப்பேன்.
கார்முகில் வண்ணம் இல்லாள்
கமலத்தின் அரசி போற்றி
சீர்மிகு ஈசன் தங்காய்
சிவந்தமா பாதம் போற்றி
நீர்கடல் வாசம் தன்னில்
நிறைந்த நின் அமுதம் போற்றி
பார்தனில் செல்வம் காக்கும்
பரந்தாமன் திருவே போற்றி.
குன்றை மாநகரந் தன்னுள்
குவலயத்தோர் அறியா வண்ணம்
தென்றலும் தவழும் காட்டில்
எண்வகைத் திருவாய் நின்றாய்
குமரனும் மலைமேல் நிற்கக்
குவிகிற செல்வந்தன்னை
குமரிபோல் அமர்ந்த தாயே
கொடுத்திடப் பாடி நின்றோம்.
எங்கே அத்தித் திருமகளின் திருத்தலம்?
"தருமமிகு சென்னை' என்று திருவருட் பிரகாச வள்ளலாரால் போற்றப்பட்ட சென்னையின் தென்பாகத்தில், காஞ்சி மாவட்ட எல்லைக்குள் இந்த வித்தியாச மான அஷ்டலக்ஷ்மி கோபுரம் அமைந்துள்ளது. குன்றத்தூர் முருகன் கோவில் அருகில், திருவூரகப் பெருமாள் ராஜகோபுரம் அருகில் பிரிந்து செல்லும் திருநீர்மலை சாலையில் இந்த அஷ்டலக்ஷ்மி கோபுரம், அம்பிகை காத்யாயனி கோவில் வளாகத்தினுள் அமைந்துள்ளது. ஆனந்தமய மான வாழ்வைப் பெறவும், கடன்கள் தீர்ந்து செல்வப்பேறு பெறவும், வாழ்வில் சித்திகள் பல அடையவும் அத்தி விருட்ச மகாலட்சுமியை தரிசித்து அம்பிகையின் அருள்பெறலாம்.
செல்: 91765 39026