மேஷம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 12, 20, 21, 29, 30. பாதக நாட்கள்: 9, 10, 16, 22, 23.
அஸ்வினி: கவலை, பயம், மனச் சோர்வு இல்லாத மாதமாக அமையும். மக்கள் செல்வத்தால் பேரானந்தம் அடையலாம். இரண்டாவது வாரம் பணமுதலீடுகள் வேண்டாம். வீடு, கட்டடம் புனரமைப்புக்காக செல வினம் வரும். கருப்பு, நீல வண்ணத்தைத் தவிர்த்தல் நன்று. சுக்கிரனும் புதனும் சீரியல் நடிகர்- நடிகைகட்கு வாய்ப்புகளை வரவைப்பர். பூர்வீக சொத்தை விற்கலாம். முறைப்படி வாங்கலாம். தடை ஏற்பட்டால் பைர வருக்கு சாம்பிராணி தைல அபிஷேகம் செய்யலாம். கதம்ப சாத நிவேதனமும் நன்று. பாலாரிஷ்ட தோஷ நிவர்த்திக்கு கீழாநெல்லி இலை மாலை கட்டி பைரவருக்கு சாற்றி வழிபடலாம்.
பரணி: 16, 17 தேதிகளில் எதிர்பாரா டென்ஷன், ஆரோக்கியக்குறைகள் வரும். 18, 19, 20 தேதிகளில் நிம்மதி பெறலாம். விரோதிகளையும் சமாளித்து விடலாம். தெற்கு திசை தலைவாசல் வீட்டில் குடியிருப்போர் வீட்டின் பின்புறம் காலியிடத்தில் ஒரு சிறு மண்குடுவையில் தேனை நிரப்பி பூமியில் புதைத்துவிடுவதால் செவ்வா யின் கெடுதலைப் போக்கலாம். அரசு வேலை பார்ப்போர் பிறருக்கு சிபாரிசு செய்வது கூடாது. கணவனை இழந்த - மணமுறிவு ஏற்பட்ட சகோதரி இருந்தால், அவருக்கு உதவிபுரிந்தால் நல்லவை நடக்கும். உங்கள் பகைவரின் நண்பருடைய உதவி மனம் மகிழ்ச் செய்யும். தேர்வில் வெற்றிபெற மஞ்சள் கரிசலாங் கண்ணி மாலை கட்டி பைரவருக்கு சாற்றி வழிபடல் நன்று.
கிருத்திகை 1-ஆம் பாதம்: உங்கள் மனசாட்சி தரும் கட்டளை இம்மாதம் பேருதவியாக இருக்கும். தாய்க்கு மூத்த மகன் எனின், வெள்ளியிலான செயின் அல்லது மூன்று உலோக மோதிரம் அணிதல் நன்று. மாத இறுதி வாரத்தில் கலந்துகொள்ளும் குடும்ப வைபோகங்களில் புகழ்பெறலாம். கலைஞர்கள் வெளிமாநிலம், வெளிநாடு சென்று தம் புகழை நிலைநாட்டலாம். வியாழ னன்று மூன்று லட்டு வாங்கி குருவின் பாதத்தில் வைத்து வணங்கினால் தடைகளை நீக்குவார். பேரன்- பேத்திகளால் சுபச்செய்திகள் ஆனந் தத்தைத் தரும். மின்துறையில் பணிபுரிவோர் தகுந்த பாதுகாப்புடன் செயல்படவேண்டும். கோமேதக மோதிரம் அணிதல் நன்று.
ரிஷபம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 12, 20, 21, 29, 30, 31. பாதக நாட்கள்: 9, 10, 16, 22, 23.
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: மாதத்தின் முதல் இரண்டு நாட்கள் செயல்களில் கவனம் வேண்டும். 4, 5 தேதிகளைக் கடந்துவிட்டால் சுலப நன்மைகள் பெறலாம். மொத்த வியாபாரம் செய்வோருக்கு குதூகலமான மாதம். மாணவ- மாணவி களுக்கு வெற்றியின் பாதை தெளிவாகத் தெரிய வரும். பரம்பரைத் தொழில் செய்வோருக்கு நல்லவை நடக்கும். நீண்டநாள் நோய்வாய்ப் பட்டவர்களை சீர்செய்ய இயலும். மாட்டுப்பண்ணை வைத்திருப்போருக்கு தீவனம் வாங்க உதவுவது நல்ல பரிகாரம். ஞாயிற்றுக்கிழமை உச்சிவேளையில் கோதுமை அல்வாவை சிறுவர்களுக்கு கொடுத்தல் நன்று. ஞாயிறன்று ஒருபொழுது உபவாசமும் போதுமானது.
ரோஹிணி: சரியான வழிமுறைகளோடு எதையும் தொடங்கவேண்டும். 16, 17 தேதிகளில் சுப நிகழ்ச்சிகளில் கருத்து வேறுபாடுகள் கவலை யைத் தரும். அரசு அதிகாரிகள், வங்கிப் பணியாளர்களுக்கு வீட்டுக்கவலை பணியில் கவனத்தை சிதறவைக்கும். 23 தேதிக்குமேல் நல்லவை தொடரும். 8-ல் கேது சிறுநீர் சார்ந்த நோய்களை அனுபவிக்க வைப்பார். மரம் வெட்டுவோர், மரம் ஏறுவோர், ஆயுதம் பிரயோகிப்போர் கவனமுடன் செயல்படல் நன்று. குடும்பத்தின்மேல் முழுகவனம் வேண்டும். போலி மருத்துவர்கள் சிக்கலில் மாட்டும் நிலைவரும்.
மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்: உங்கள் பிரார்த்தனைகள் சரியான பாதையைப் நோக்கி செயல்படும். கடைசிவாரம் சுயகௌரவம் மேலோங்கும். 26, 27 தேதிகள் தேவைக்கேற்ப வெற்றியைத் தேடித்தரும். 28, 29 தேதிகளில் கவலை தரும் செய்தியைக் கேட்க நேரலாம். பர்சில் ஒரு சிறு வெள்ளி உருண்டையை வைத்துக்கொள்வது நன்று. நாய் வளர்ப்போர், வீட்டு மேல்தளத்திலிருந்து நாய் ஊளையிட்டால் அபசகுனம். சனிக் கிழமை உப்பு கலந்த நீருடன் சிறிது நல்லெண் ணெய் கலந்து வாசலில் தெளிப்பது நன்று. உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் ஏற்படும்.
மிதுனம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 24, 25, 26. பாதக நாட்கள்: 1, 14, 20, 21, 27, 28.
மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்: "நமக்கு நல்லவையே நடக்காதா' என்ற மனக்குறை அகலும் மாதம். ராசியிலேயே ராகு இருந் தாலும் பிற கிரகநாதர்கள் வலுவூட்டுவார்கள். முதல் வாரமே பொருளாதாரம் சீராகவும் திருப்திகரமாகவும் காணப்படும். கணவன்- மனைவியரிடையே பல நன்மைகள் பெறலாம். 24 அல்லது 28 வயதென்றால் திருமண முயற்சியைத் தவிர்த்தல் நன்று. பெற்ற தாய் நோய்வாய்ப்பட்டிருந்தால் ஆலமரத்து வேருக்கு தண்ணீர் பாய்ச்சுவது நல்லது. இம்மாதம் வெளியூர் செல்லவேண்டிய நிர்பந்தம் இருந்தால் பெற்ற தாயின் காலைத்தொட்டு வணங்கிச்செல்ல வேண்டும். மாமியாரிடமிருந்து வரவேண்டிய சொத்துகள் வந்துவிடும்.
திருவாதிரை: இம்மாதம் நீங்கள் தன் போக்கில் செயல்பட கிரகநாதர்கள் அனுமதிப்பார்கள். இரண்டாவது வாரம் தொட்டதெல்லாம் துலங்கும். இருப்பினும் முன்பின் தெரியாத எவரையும் நம்பவேண்டாம். 14, 15 தேதிகளில் ஆன்மிக ஈடுபாடு மனநிறைவு தரும். விஷஜந்துகள் நிறைந்த இடங்களில் இரவு நேரம் உலவக்கூடாது. கன்னி, தனுசு, மீன ராசியில் பிறந்தோருடன் கூட்டு வியாபாரம் செய்துவந்திருந்தால் அதிக லாபத்தை எதிர்பார்க்கலாம். வயது 24, 27 எனில் சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்ட, மனை வாங்க முயல்வது கூடாது. கௌரியை வணங்குதல் நல்ல பரிகாரம்.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: உங்களை மட்டும் குறை கூறவேண்டும்; வேறு யாரையும் வேண்டாம். 24, 25 தேதிகளில் குடும்பத்தாரோடு ஒட்டி உறவாடி பல சாதனைகள் புரியலாம். உயர்ரக பரிசுகளும் கிடைக்கும். ராகு- கேது இருக்கை சீராக இல்லாததால், சர்க்கரை நோய் பாதித்திருப்போர் நகங்களை வெட்டியெடுப்பது கூடாது. மின்சார உபகரணங்களை மாமனார் மற்றும் பிறரிடம் இனாமாகப் பெறுதலைத் தவிர்க்கலாம். எல்லா முயற்சிகளிலும் தடை ஏற்பட்டால் 800 கிராம் கோதுமை, 800 கிராம் இனிப்பை சிவப்புத்துணியில் முடிந்து, கிழக்கு நோக்கி நின்று திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடுவது நன்று. சித்திரகுப்தர் அல்லது பிரம்மாவை வணங்கலாம்.
கடகம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 18, 19, 27, 28. பாதக நாட்கள்: 2, 3, 16, 22, 23, 29, 30, 31.
புனர்பூசம் 4-ஆம் பாதம்: ஆக்கப்பூர்வமாக பலவற்றைச் செய்து ஆனந்தக் கடலில் நீந்தலாம். அரசியல் வாதிகளுக்கும் பொதுநலத் தொண்டர் களுக்கும் நல்ல மாதம். 7-ஆம் தேதி கவனமாகச் செயல்படவேண்டும். வாழையடி வாழையாக மருத்துவத் தொழில்புரி வோருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். பதுக்கல்காரர்களை இம்மாதம் கிரக நாதர்கள் காட்டிக்கொடுப்பார்கள். யோனிப் பொருத்தமில்லாது திருமணம் செய்தோருக்கும், சூழ்நிலை கருத்தரிக்க உதவும். கருவில் குழந்தைபோல் இருப்பது முந்திரிப்பருப்பு. அதை மாலை கட்டி அல்லது ஒருபிடியை பைரவர் பாதத்தில் வைத்து வழிபட, நாட்பட்ட புத்திரதோஷம் விலகும். தேய்பிறை அஷ்டமி, அமாவாசை யில் பைரவருக்கு பஞ்ச தீபமேற்றி வணங்க லாம்.
பூசம்: நம்பிக்கையுடையவர்களிடமிருந்து பல நன்மைகளைப் பெறலாம். அலுவலகப் பணியாளர்கள் உயரதிகாரிகளிடம் பாராட்டுப் பெறலாம். புத்திசாலித்தனம் பணவரவைப் பெற்றுத்தரும். மாணவர்கள் சுலப நன்மைகள் பெறலாம். அரசு விவகாரங் களில் உட்பட்டோர் இம்மாதம் ஜோதிடரீதி யாக நிவாரணம்பெற முயற்சிப்பது வீணாக முடியும். டிரேட் யூனியன் தலைவர்கள் எனில், சுமுகமாகப் பேசி வேண்டியதைப் பெறலாம். துணி வியாபாரிகளுக்கு சிறந்த மாதம். தொடர் தோல்வியைச் சந்தித்தால் முதிர்ந்த வேப்பமர வேருக்கு அருகே சிறு பள்ளம் தோண்டி அதனுள் ஒரு வெள்ளி உலோகத் துண்டைப் புதைத்து தண்ணீர் தெளிக்கவும். தடைகள் அகலும். ஆயில்யம்: பிறரிடம் என்ன சொல் கிறீர்கள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். 26, 28 தேதிகளில் வார்த்தைகளால் மனவருத்தம் வரும். வாகனம் ஓட்டுபவர்கள் கவனமுடன் செயல்படல்வேண்டும். பிறர் உதவிகள் கணிசமாக நாடிவரும். கொடுத்த கடன்களை வசூல் செய்ய உகந்த மாதம். கணவன்- மனைவியரிடையே போராடும் சூழ்நிலை இருந்துவந்தால், ஏழு தேங்காயும், ஏழு எலுமிச்சகனியும் விநாயகப் பெருமானுக்கு காணிக்கையாக்கி உடைத்துவருதல் நன்று. குப்பைமேனி இலையை மாலையாக்கி பைரவருக்கு சாற்றி வழிபடலாம். தொழில் விருத்திக்கு ஆரஞ்சுப்பழம் உகந்தது. இதயம், கிட்னி நோய்க்கு கொய்யாப்பழம் நன்று.
சிம்மம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 12, 20, 21, 29, 30, 31. பாதக நாட்கள்: 5, 6, 18, 19, 24, 25, 26.
மகம்: இம்மாதம் விசித்திரமான எண்ணங்கள் தோன்றினாலும் அவை நல்ல பாராட்டைப் பெற்றுத்தரும். எந்த தொழில் செய்தாலும் பாராட்டைப் பெறலாம். 7-ஆம் தேதிவரை புது முயற்சிகள்வேண்டாம். இரண்டாம் வாரமும் சந்திரன் இடையூறு தருவார். வெள்ளை நிற சாக்பீஸ் நான்கு (கரும்பலகையில் எழுதுவது) வாங்கி வெள்ளைத்துணியில் முடிந்து திருஷ்டிசுற்றி ஓடும் நீரில் போடுவது மிக நல்லது. சுமை தூக்குவோர், கடின உழைப்பு செய்வோர், தெரு சுத்தம் செய்வோரைப் பகைப்பது கூடாது. வீட்டின் மேற்கு பாகம் ஜன்னல்கள் இருந்தால் இம்மாதம் இரவில் மூடிவைக்க வேண்டும். தீய ஆவிகள் வரும் தன்மை குறைவாகும்.
பூரம்: இம்மாதம் உணர்வுடன் கலந்த எண்ணங்கள் கவலையை உருவாக்கும். குறிப்பாக நெருங்கிய சொந்தங்கள் காரணமாவர். 18, 19, 20 தேதிகளில் வரும் செய்திகள் சுமுகநிலை அடையச் செய்யும். பிரவுன் நிற கேக் எட்டு வாங்கி விலங்கினங் களுக்கு ஊட்டினால் ஐந்தாமிட கிரகநாதர்கள் சாந்தியடைவார்கள். நீங்கள் பைரவருக்கு ரோஜா, மல்லிகை மாலைகள் உபயோகிக்ககூடாது. அசையா சொத்து சார்ந்த பத்திரப்பதிவு இருந்தால் ஏமாற்றமடைய நேரிடலாம். சூரியனை கிழக்கு நோக்கி வணங்கிச்செல்லல் நன்று. அரசு சார்ந்த கோரிக்கை மனுக்களும் பலன் தராது. செம்பவள மோதிரம் அணிவது நல்லது.
உத்திரம் 1-ஆம் பாதம்: வெற்றி குறித்த யோசனைகள் வேகமாகும்; நிதானமுடன் செயல்படல் நன்று. வழக்குகள் இருந்தால், தீர்ப்பினால் அதிக மாற்றங்கள் தெரியவரும். 28, 29 தேதிகளில் உங்களுடைய மகத்துவம் பிறருக்குத் தெரியவரும். ஐந்து ஞாயிற்றுக் கிழமை ஒரு பொழுது உப்பு கலவா உணவுண்ணல் வேண்டும். சிற்றின்பத் தாக்கம் மிகையாகும். அவமானம், கௌரவம் பாதிக்கும் சூழ்நிலை வரும்.சுட்டுவிரலின் கடைசிப் பிரிவில் கருமை நிறப் புள்ளி தோன்றினால், பாலியல் தொல்லை என்ற வலையில் சிக்க நேரிடும். வெள்ளிக்கிழ மைகளில் தொடர்ந்து சுக்கிரனை வணங்கவும்.
கன்னி
ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 14, 22, 23. பாதக நாட்கள்: 1, 7, 8, 20, 21, 27, 28.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: உங்கள் விருப்பங்கள் யாவும் சுலபத்தில் நிறைவேறும். முதல் வாரம் 6, 7 தேதிவரை சுமார் நிலை. பிறரைக் குற்றம் கூறுவதைத் தவிர்க்கவேண்டும். இரண்டாவது வாரம்முதல் மகிழ்ச்சியானவை தெரியவரும். இம்மாதம் ஆண் குழந்தை பிறந்தால் காலில் ஆனைமுடிக் காப்பு அணிவித்தல் நல்லது. சுயவேலைமூலம் அதிகம் சம்பாதிக்கலாம். ஆடம்பரச் செலவினங்கள் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். வடதிசை நோக்கிய தலைவாசல் வீட்டில் குடியிருப்போர், புதன்கிழமை துளசி மாலை யைத் தொங்கச் செய்தல் நல்லது. உடன்பிறந் தோரிடம் உதவிபெறலாம்.
ஹஸ்தம்: இம்மாதம் கடுமையாக உழைக்கநேரிடும். 16-ஆம் தேதிக்குமேல் சுலபமானவை மகிழ்வைத் தரும். சனிக்கிழமை மூன்று சிவப்பு முள்ளங்கியைத் தலையணை அடியில் வைத்து, மறுநாள் நீரில் போடல் நல்லது. கோவில் யானையிடம் வியாழனன்று ஆசிர்வாதம் பெறுதல் நல்லது. மாணவர்கள் 21, 22 தேதிகளில் சாதனை படைக்கலாம். 23 தேதிக்குமேல் பெண்களுக்கு வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கும் சக்தி மிகும். வாஸ்து தோஷம் நீங்க வலம் புரிச்சங்கில் நல்லெண்ணெய், விளக்கெண் ணெய், தேங்காய் எண்ணெய் தீப மேற்றலாம்.
சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்: இல்லாளோடு ஒரு அற்புதமான உண்மை யைப் பகிர்ந்துகொள்ள சுக்கிரன் தூண்டு வார். பின்னாளில் அது சிக்கலை உருவாக்கும். 24, 25 தேதிகளில் இவை நடக்கும். குடும் பத்தில் ஆண் சந்ததிகள் இருந்தால் அதிக உதவி செய்வார்கள். மேற்கு திசை தலை வாசல் இருந்தால் இம்மாதம் சுபநிகழ்ச் சிகள் வேகமாகக் கைகூடும். செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் புது முயற் சிகள் வெற்றி தரும். மிதுன ராசி வாழ்க்கைத்துணை எனில், இம்மாதம் இருவரும் இணைந்தே ஆலயம் செய்வது நல்லது. வயது 12, 21, 30, 39, 48 எனில், புதன்கிழமை புதனை வணங் கினால் எண்ணியவை நிறைவேறும்.
துலாம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 24, 25, 26. பாதக நாட்கள்: 2, 3, 9, 10, 22, 23, 29, 30, 31.
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: சோர்ந்துபோன உங்களுக்கு உற்சாகம் தரும் மாதம். 5-ஆம் தேதிவரை காரியவெற்றி. அதன்பின் நீங்கள் விரும்பும் ஒருவர் முகம் சுழிப்பார். ஆனால் பாதிப்பு வராது. உடல் அசதி போன்ற சிறு தடைகள் இருக்கும். குடும்பத்தில் நடக்கும் நல்ல நிகழ்வுகளால் மனம் மகிழும். கூட்டுக்குடும்பத்தில் இருப்போர் இம்மாதம் தனிக்குடித்தனம் போதல் வேண்டாம். குழந்தையில்லாதோர் கூட்டுக்குடும்பத்தில் இணைந்தால் சந்தான பாக்கியத் தடை போகும். கண் மருத்துவர் களுக்கு யோகமான மாதம். கேதுவும் சனியும் இணைந்திருப்பதால் நாய்களுக்கு பிஸ்கட் போன்றவை தருதல் நன்று.
சுவாதி: உங்களைவிட அதிகமாகத் தெரிந்துவைத்திருப்போரிடம் ஆலோச னைகள் கேட்பது வெற்றிக்குப் பாதை யமைக்கும். இரண்டாவது வாரம் வங்கி இருப்பு அதிகமாகும். 12, 13 தேதிகளில் பழைய எதிரிகள் உங்களை சீண்டிப்பார்ப்பார்கள். மூத்தோர் ஆதரவு ஆறுதல் தரும். நாவடக்கம் மிக முக்கியம்- பண விவகாரங்களில்! செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிக்கொண்டு வெளியூர் போக நேர்ந்தால் வாசலின் தெற்கில் ஒரு வேப்பிலைக் கொத்தை தொங்கச்செய்து செல்வது நன்று. தலைவாசலுக்கு நேராக வேப்பமரம் நின்றால் அப்படி செய்யத் தேவையில்லை.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: தரகர்கள், டிஸ்டிரிபியூட்டர்கள், விளம்பர ஸ்தாபனம் வைத்திருப்போர், பழைய பொருட்களை வாங்கி மெருகூட்டி விற்பனை செய்வோருக்கு லாபம் தரும் மாதம். மாணவர்கள் சாதனைகள் புரிவர். விளையாட்டுப் போட்டிகளிலும் வெல்லலாம். மனைவி ஆரோக்கியமில்லாமல் நெடுநாள் இருந்தால், தென்கிழக்கில் சமையல் கூடம் அமையாதிருந்தால், அங்கு பூமியில் பாதம் படாதவாறு சாக்ஸ் அணிந்து நடப்பது நன்று. அல்லது வெள்ளை சந்தனக்கட்டையைக் கல்லில் உரைத்து வெள்ளிக்கிழமைகளில் நெற்றியில் திலகமிடல் போதுமானது. ஆறு வெள்ளிக்கிழமை கடைப்பிடித்தால் நோய் அகல வழிபிறக்கும்.
விருச்சிகம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 18, 19, 27, 28. பாதக நாட்கள்: 5, 6, 12, 24, 25, 26.
விசாகம் 4-ஆம் பாதம்: அன்பெனும் பாசத்தைப் போர்த்திக்கொள்ள வேண்டிய மாதம். செவ்வாய் நிம்மதிக்குத் துணைவருவார். இம்மாதம் கடல் பயணங்களை ஒத்திவைப்பது மிக நல்லது. 10, 11 தேதிக்குமேல் பிசியாகி விடுவீர்கள். இம்மாதம் ஆண்குழந்தை பிறந்தால், பிறந்த நாள் கொண்டாடும்போது கோதுமை அல்வா பிறருக்குக் கொடுப்பது சிறந்தது. சந்திரனின் இருக்கை சரியில்லை. உங்கள் ரகசிய முயற்சிகளைப் பிறரிடம் கூறுவது கூடாது. முயல் வளப்போர் அதனைத் துன்புறுத்தினால் கெடுதல் உண்டாகும். பொதுநல சேவையென்று இம்மாதம் தண்ணீர்ப் பந்தல் அமைப்பதைத் தவிர்க்கவேண்டும். இரவில் பால் சாப்பிடுவதும் இம்மாதம் கூடாது. சனியின் கெடுதலைப் போக்கலாம்.
அனுஷம்: பல பிரச்சினைகளுக்கு விடைகாண கிரகநாதர்கள் துணைநிற் பார்கள். 16, 17 தேதிகளுக்குமேல் நல்ல வற்றை எதிர்பார்க்கலாம். மாணவர் களுக்கும், பிற தேர்வு எழுதுவோருக்கும் வெற்றி சுலபமாகும். நல்லகாலம் பிறக்கும். வீட்டில் வடகிழக்கு அல்லாத திசையில் கிணறு அமைந்திருந்தால், கொஞ்சம் நவதானியம் வாங்கி வெள்ளைத்துணியில் முடித்து கிணற்றில் போடவும். உற்றார்- உறவினர் நடத்தும் ஸ்தாபனங்களுக்கு கைமாற்றாகப் பணம் கொடுத்தால், அது பகையை வளர்க்கும். இம்மாதம் ஆன்மிகப் பயணம் போக நல்ல வழிபிறக்கும். பார்வையில்லாதோருக்கு உதவுதல் பன்மடங்கு நலனைப் பெற்றுத்தரும்.
கேட்டை: குடும்பத்தில் ஒரு தீர்வுகாண பலர் உங்களை நாடிவருவார்கள். 24, 25 தேதிகள் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கும். விருந்தினர் வருகை அதிகமாகும். அரசியல் பிரமுகர்களுக்கு நல்ல மாதம். ஸ்வீட் ஸ்டால் வைத்திருப்போர் வடகிழக்கு பாகத்தில் அடுப்பிருந்தால் கவனமாக செயல்படல் நன்று. வீட்டிற்கு எதிரே அரச மரம் வளர்ந்திருந்தால் அதன் வேரில் நீரூற்றுவது நல்லது. மிதுனத்தில் ராகு இருப்பதால், எட்டு பாதாம் பருப்பை பழுப்புநிறத் துணியில் முடிந்து பெருமாள் கோவில் உண்டியலில் சேர்த்து மனக் குறைகளை முறையிட்டு வந்து, எல்லா காரியங்களும் நிறைவேறியபின், ஒரு ரூபாய் நாணயங்கள் 9-ஐ அதே உண்டியலில் போடுவது நன்று. கவலைகள் மறையும்.
தனுசு
ராசிக்கு சிறந்த நாட்கள்: 2, 3, 12, 20, 21, 29, 30. பாதக நாட்கள்: 1, 7, 8, 14, 27, 28.
மூலம்: பல கேள்விகளுக்கு ஒரே இரவில் விடை கிடைக்கும் மாதமிது. பலர் உங்களை நேசிக்கும்விதமாக கிரகநாதர்கள் செயல்படுவார்கள். 6, 7-ஆம் தேதிகளில் புதுமைகளை எதிர்பார்க்கலாம். இரண்டாவது வாரம் செலவினங்கள் மிகும். பெண் எழுத்தாளர்களுக்கு புதனும் சந்திரனும் புகழுடன் பணத்தையும் தருவார்கள். அரசியல் பேச்சாளர்களுக்கு தடுமாற்றம் ஏற்பட்டு, நகைப்புக்கு இடம் தரும். நெடுந்தூரப் பயணத்தை இம்மாதம் தவிர்ப்பது நன்று. முடியாதெனில், கருப்பு, நீலநிற ஆடையைத் தவிர்க்க வேண்டும். சொந்த சம்பாத்தியத்தில் பணமுதலீடுசெய்து வீடுகட்ட முயல்வது தடைகளை உருவாக்கும். சனி பகவானை இம்மாதம் தொடர்ந்து வணங்கல் நன்று.
பூராடம்: உங்கள் குழந்தைப்பருவ நிகழ்வுகள் நினைவில் வட்டமிடும். குடும்பத்தில் நடக்கும் பல நிகழ்ச்சிகள் உற்சாகமூட்டும். 18, 19, 20 தேதிகளில் தேவையற்ற சொற்களை வெளிப்படுத்தல் கூடாது; பெரிய பின்னடைவைத் தரும். மனைவியின் ஜாதகத்தில் கேது மேஷம், ரிஷபத்தில் இருந்தால், அவர் பெயரில் கடன் வாங்குவது கூடாது. ஆண் குழந்தை மருத்துவமனையில் பிறந்தால், வீட்டிற்கு வந்ததும், தலைவாசலில் மூன்று இஞ்ச் இரும்பு ஆணியைப் பதித்தல் நன்று. மாதர்களுக்கு மாதவிடாய் நாட்பட்ட கெடுதலைத் தந்தால் சிறிது பாதாம் பருப்பையும், ஒரு தேங்காயையும் திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடுவது நல்லது.
உத்திராடம்: உங்களது விடாமுயற்சி இம்மாதம் நல்ல வழிகாட்டியாக அமையும். உத்தியோகம் பார்ப்போருக்கு வெளியூர்ப் பயணம் 24, 25 தேதிகளில் நெருக்கடியைத் தரும். குழந்தைகளின் முன்னேற்றம் சார்ந்த கவலை ஏற்படும். பொதுவில் இளமையில் திருமணம் புரிவது அதிக நற்பலனைத் தராது. எனினும் 35 வயதைக் கடந்ததும் உயர்வான வாழ்க்கை வந்துவிடும். புதுவை மணக்குள விநாயகர், திருவண்ணாமலை ஆநிரை கணபதி ஆகியோரை வணங்கலாம். வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம், நரம்பு சார்ந்த தொல்லைகள் இம்மாதம் வேதனை தரலாம். ஐந்து முக ருத்திராட்சத்தை நீரில் ஊறவைத்துப் பருகலாம். நோயின் வேகம் தணியும்.
மகரம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 14, 22, 23. பாதக நாட்கள்: 2, 3, 9, 10, 16, 29, 30, 31.
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: ஆற்றல்கள் பல இருந்தும் சந்தர்ப்பம் கிட்டாமல் அலைந்த உங்களுக்கு தெளிவான பதில் கிடைக்கப்பெறும். பெற்ற தாயின் உடல்நலம் பாதிக்கும் வாய்ப்புள்ளது. 8, 9 தேதிக்குமேல் சுமூக நிலை தெரியவரும். சந்தான பாக்கியம் தடைப்பட்டிருந்தவர்கள் தத்துப்பிள்ளை எடுக்க விரும்பினால் ஆசை நிறைவேறும். தத்துப்பிள்ளை எடுத்தோருக்கு உதவினால் அதுவே குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்தும். இரும்பு சார்ந்த தொழிற்சாலை வைத்திருப்போருக்கு வியாபாரப் பெருக்கம் ஏற்படும். தொழிற்கூட பூஜையறையில் மஞ்சள்நிறப் பூக்களை அதிகம் இருக்கச்செய்வது நல்ல வாஸ்துப் பரிகாரம். 23 வயதைக் கடந்தவர்களுக்கு இனி யோககாலம்.
திருவோணம்: மனதிலுள்ள ஆசைகள், யோசனைகளை நிறைவேற்ற தகுந்த சூழ்நிலை உருவாகும். அரசு உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு 12, 13 தேதிகள் நல்ல செய்திகளைப் பெற்றுத்தரும். இம்மாதம் குழந்தைகளை அதிகம் கண்டிப்பது கூடாது. பைல்ஸ், பிஸ்டுலா போன்றவை மலச்சிக்கலை உருவாக்கி வேதனையுறச் செய்யும். ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்துவோர், பழைய வாகனம் வாங்கி புதிதாக மெருகேற்றி விற்போருக்கு வியாபார விருத்தி ஏற்படும். வசதி படைத்தோர் பொதுநலம் கருதி தெருக்களில் "கை பம்ப்' போடுவோருக்கு உதவுதல் நன்று. மாணிக்க மோதிரம் ஓப்பன் செட்டிங்கில் அணிதல் நற்பலன் தரும்.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: தவறான நம்பிக்கை இம்மாதம் சோத னைக்கு உட்படுத்தும். பிறருக்கு யோசனைகள் கூறுவது கூடாது; கெட்ட பெயர் நாடி வரும். குடும்பக் குழப்பத்தை 26, 27 தேதிகளில் சீராக்கி நல்ல பெயர் எடுப்பீர்கள். ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்துவோர், மண்ணெண்ணெய் விற்போர் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்; திருட்டுபோகும் சூழ்நிலை உள்ளது. மதுப்பிரியர்கள் இரண்டாவது வாரம் தவிர்ப்பது நன்று. சரஸ்வதியை நீலநிறப் பூவால் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக அர்ச்சனை செய்து வணங்கினால் ராகு மிக நல்லதைச் செய்வார். நண்டுவளை மண் உருண்டையை மேற்குச் சுவரில் வைத்துக்கொண்டால் திருஷ்டி வீட்டைவிட்டு அகலும்.
கும்பம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 16, 24, 25, 26. பாதக நாட்கள்: 5, 6, 12, 18, 19.
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: விவகாரங்களைத் தடுப்பதற்கான மாதம். மிக மோசமான சூழ்நிலையும் அமைதியைத் தரும். நிதிநிலை தன்னிறை வைத்தரும். வீட்டுத் தேவைக்கான யாவும் வாங்கும்விதமாக செழிப்பு தெரியவரும். மாணவர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். பணநெருக்கடிகள் இருந்தால் வெள்ளி டம்ளரில் பால், நீர் அருந்துதல் நல்லது. கொஞ்சம் மரக்கரியும், ஒரு தேங்காயும் வீட்டின் வடகிழக்கு பாகத்தில் வைத்து, அடுத்த நாள் அதனை நீர்நிலையில் போடுவது நன்று. கருப்பு, வெள்ளை நிறம் கலந்த நான்குகால் பிராணிக்கு உணவூட்டல் நன்று.
சதயம்: மற்றவர்களின் நோக்கத்தையறிந்து அதற்கேற்ப நடந்து சாதனை படைக்கலாம். வழக்கறிஞர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், கிராமத் தலைவர்கள் "எல்லோ சபையர்' அல்லது புஷ்பராகம் ஓப்பன் செட் மோதிரம் அணியலாம். தங்கநகை விற்போருக்கு லாபகர மான மாதம். வியாபாரத்தில் தொய்வு நிலை தெரியவந்தால், ஒரு சிறு மண்குடுவையில் தேனை நிரப்பி, அதில் மூன்று வெள்ளி உலோக உருண்டையைப் போட்டு கடையின் தலைவாசலில் தொங்கச்செய்து, ஒரு மாதத்திற் குப்பின் அதனை இரவில் வீதியில் வீசிவிட லாம். திருஷ்டி போய்விடும். வியாபாரத்தைப் பெருக்கலாம். சூரிய வணக்கம் சிறப்பைத் தரும்.
பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: மனவேதனையும், தன்னம்பிக்கையும் கலந்து ஒரு புது உணர்வைப் பெற்றுத்தரும். ஒரு பயணம் நெருக்கடியைத் தரும். குடும்ப குதூகலம் 28, 29 தேதிகளில் உயர்வைப் பெற்றுத்தரும். (மே மாதம் 11 தேதிக்குமேல் 29 செப்டம்பர்வரை சனி பகவான் தடைகளைத் தருவார். அந்த காலத்தில் "டர்குவிஸ்' ராசிக்கல் மோதிரம் அணிவது நல்ல பரிகாரம்.) வீட்டை இடித்துப் புனரமைப்பு செய்வதும் கூடாது. வீட்டின் தென்மேற்கில், சிறு விநாயகரை வைத்து வணங்குவது போது மானது. சனிக்கிழமைகளில் பைரவரை வழிபடு வதன்மூலம் அஷ்டமச்சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டமச்சனி விலகி நல்லவை நடக்கும். பூமியைத் தாங்கும் எட்டு நாகங்கள் மாலையாக இருப்பதால், இவரை வழிபடுவதன்மூலம் சகல தோஷமும் விலகும்.
மீனம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 9, 10, 18, 19, 27, 28. பாதக நாட்கள்: 7, 8, 14, 21.
பூரட்டாதி 4-ஆம் பாதம்: "என்ன நடந்தது? முகத்தை உம்மென்று வைத்துக்கொள்கிறீர்களே?' என குடும்பமே உங்களைக் கேட்கும் மாதம். பிறருக்காக நீங்கள் உதவிக்கரம் நீட்டுவது அவர்களுக்குத் தெரியாததே காரணம். இம்மாதம் இயந்திரம்போல் வாழ்க்கையை நடத்திச் செல்வதை மாற்றினால் சூரியன் பேராதரவு தருவார். சுக்கிரன் மீனத்தில் இருக்கிறார். இதுவும் பின்னடைவு. ஞாயிறன்று சூரிய ஹோரையில் நீர் அருந்துவதைத் தவிர்க்கவும். காலை 6.00 முதல் 7.00 மணி வரை; உச்சி வேளை 1.00 முதல் 2.00 மணிவரை சூரியகாந்திச் செடிவிதையை வாங்கி ஈரமான பூமியில் விதைக்கலாம். 10, 11, 12, 13 ஆகிய தேதிகளில் செந் தாமரைப் பூவால் விநாயகரைப் பூஜித்தல் நல்லது.
உத்திரட்டாதி: உங்கள் எண்ணங்கள் விதியோடு ஒரே நேர்க்கோட்டில் உலாவரும் மாதம். மனைவி பணிபுரிபவர் எனில், அவர்கள் பதவி உயர்வு உங்களுக்கு மனநிம்மதி யைத் தரும். உங்கள் உடல்வலிமைக்குத் தகுந்த வேலையைச் செய்தல்வேண்டும். பணவிவகாரங்களில் உணர்வுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். 23, 24 தேதிகளில் கவலைகள் அதிகரிக்கும். மாடிப்படிகளுக்கு அடியில் பூஜையறை அல்லது தெய்வப் படங்கள் இருந்தால் பொருளாதார நெருக்கடிகள் வரும். தனுசில் கேது இருப் பதால்- 48 வயதுக்குமேல் சொந்த சம்பாத் தியத்தில் வீடு கட்டியிருந்தால், கடன் சுமை கவலை தரும். விஷ்ணு ஆலய உண்டியலில் ஐந்து புதன்கிழமை ஐந்து ரூபாயாவது காணிக்கை செலுத்தவேண்டும்.
ரேவதி: நீங்கள் விதைத்த விதை யாவும் வளர்ந்து பலன் தரும் மாதம். கடைசி வாரம் எவரிடமும் ரகசியங்களைக் கூறல் கூடாது. சூரியனும் சுக்கிரனும் போதிய ஆதரவுதர இயலாத நிலை. ஆஸ்துமா நோயுடையோருக்கு மருந்து வாங்க உதவுதல் மிக நன்று. இம்மாதம் நெடுநாள் பயணம் போக நேர்ந்தால், போகும்முன் பன்னீரால் முகத்தை அலம்பிச்சென்றால் தடைகளிலிருந்து நிவர்த்தி பெறலாம். சந்திரனும் சனியும் சீராக செயல்படாததால் இம்மாதம் கண்புரை நீக்கும் (காட்டிராக்ட்) ரண சிகிச்சை தவிர்த்தல் நன்று. கோதுமையும், இனிப்பும் ஞாயிற்றுக்கிழமை உச்சிவேளையில் தானம் செய்வது நன்று.
செல்: 93801 73464