"காலமகள் கண்திறப்பாள் சின்னய்யா; நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னய்யா? நாலுபக்கம் வாசல் உண்டு சின்னய்யா; அதில் நமக்கும் ஒரு வழி இல்லையா என்னய்யா?' என்னும் பாடல், தின வருவாய், வார வருவாய், மாத வருவாய், வருட வருவாய் என போராட்ட வாழ்வின் வெளிப்பாடுதான் கண்ணதாசனின் தத்துவ வரிகள். சாஸ்திர ரீதியாக இதன் விடையை ஆய்வு செய்வோம். ஜாதகத்தில் பன்னிரண்டாம் இடத்தை விரய ஸ்தானம், மறைவிட ஸ்தானம் என ஜோதிடம் கூறினாலும், பன்னிரண்டாம் இடத்தில் சுபகிரகங்களாகிய சந்திரன், புதன், சுக்கிரன், குரு அமைந்திருந்தால், பணக்கஷ்டம் தொடர்ந்திருந்தாலும் அவை யாவும் சீரடையும் வாய்ப்புகள் வந்துவிடும்.
பலர் வங்கியில் பணத்தை மொத்தமாக நிரப்பிவிட்டு, காசோலையாகவும், ஏடிஎம் என்ற வகையிலும் பலன் பெறுகின்றனர். சாஸ்திரங்கள் பொய்ப்பதில்லை.
உதாரணமாக, வடஇந்திய நடிகர் அமீர்கான் ஜாதகத்தில் 12-ல் புதன். பாபா ராம்தேவ் ஜாதகத்தில் 12-ல் புதன். முலாயம் சிங் யாதவுக்கு 12-ல் குரு. ராஜ்நாத் சிங் ஜாதகத்திலும் 12-ல் குரு. இன்றைய மட்டைப்பந்து வீரர் ரோகித் சர்மாவுக்கு 12-ல் குரு, சுக்கிரன். கூடவே ராகு இருப்பதால் கிரகநாதர்கள், ராசி நாதர்கள் குறையாத செல்வத்திற்கு வழிசெய்வார்கள்.
பன்னிரண்டாம் இடத்தில் அசுபகிரகங்கள் இருந்தால் போராட்டத்தின் முடிவு வெற்றியைத் தரும். அசுபகிரகப் பார்வை இருந்தாலும் அவ்வாறே.
உதாரணமாக, அனில் அம்பானிக்கு 12-ல் கேது.
அரவிந் கெஜ்ரிவாலுக்கு 12-ல் ராகு. அகிலேஷ் யாதவுக்கு 12-ல் செவ்வாய். ஆர்.எஸ்.எஸ். மோகன் பகவத்துக்கு 12-ல் ராகு. நரேந்திரமோடிக்கு 12-ல் ராகு. லோக்சபா ஸ்பீக்கர் சுமித்ரா மகாஜனுக்கு 12-ல் சூரியன். ரஜினிகாந்துக்கும் 12-ல் ராகு. உங்கள் ஜாதகத்தையும் பாருங்கள்.
● இதுபோலவே பதினோராம் இடத்தில் அசுப கிரகங்கள் அமைந்தால் அன்றாட வாழ்க்கையில் குறையாத செல்வமுடையவராக விளங்குவர். ஆனால் சரலக்னத்தில் தோன்றியவர்களுக்கு சனி அல்லது சூரியன் பதினோராம் இடத்தில் இல்லாதிருக்க வேண்டும்.
● இரண்டாமிடத்து அதிபதி 12-ல் மறைந்தால் செல்வம் தழைக்காது என்று சில சித்தாந்தங்கள் வர்ணிக்கின்றன. ஆனால் இரண்டாமிடத்து அதிபதி சுபராக பன்னிரண்டாமிடத்தில் அமைவாராயின் செல்வம் மேலும் மேலும் தழைக்கும். ஆனால் மற்றொரு கிரகச் சேர்க்கையோ பார்வையோ இருந்தால் நேர்மாறான பலன் அன்றாட வாழ்க்கையில் தோன்றும்.
● ஆறு, எட்டாமிடங்களுக்கு அதிபதியானவர்கள் தனித்து 12-ல் மறைந்தாலும் செல்வம் மிகும்.
● தனிமையான செவ்வாய் 12-ஆம் இடத்தில் அமைந்தாலும் அன்றாட வாழ்க்கை நிம்மதி தரும். நிலம், வீடு முதலிய பூர்வீக ஸ்திர சொத்துகளால் வருமானம் கிடைக்கும். தேங்காய், மாங்காய், காய், கனிகளாலும் செழிப்புடன் வாழலாம். இருப்பினும் பிற கிரக ஒத்துழைப்பும் மிக மிக அவசியம்.
● மாதா அமிர்தானந்தமயி 27-5-1953-ல் கேரள மாநிலம், கொல்லத்தில் காலை 9.09 மணிக்குப் பிறந்தவர். மிதுன லக்னம். 12-ல் சூரியன், புதன், செவ்வாய். இத்துடன் குரு. நான்கு கிரகநாதர்கள் ரிஷபத்தில் உள்ளனர். எட்டில் ராகு. 11-ல் சுக்கிரன். இதனால் இவர் தம் 13-ஆவது வயது முதலே புகழைத் தனதாக்கிக்கொண்டவர்.
● இரண்டாமிடத்தில் பாதகாதிபத்தியம் பெறாத சுபகிரகங்கள் அமைந்தால் அன்றாட வாழ்க்கையில் தாராளமாக செலவு புரியவும், ஆடம்பர வசதியுடன் வாழ்ந்திடவும் செல்வம் சேரும் என்கிறது ஜோதிடம். அதுமட்டுமல்ல; சர லக்னங்களுக்கு பதினோராமிடத்ததிபதியும், ஸ்திர லக்னங்களுக்கு ஒன்பதுக்குடையவரும், உபய லக்னத்திற்கு ஏழாமிடத்ததிபதியும் பாதகாதிபதிகளாவார்கள். இவர்கள் நீசமடைந்தோ பன்னிரண்டு, ஆறு, எட்டாமிடங்களில் நின்றாலோ வற்றாத செல்வயோகம் ஏற்படும்.
● சில கிரகங்கள் மறைந்தும் மறைவிடத்தில் நின்றும் அன்றி நீசம், அஸ்தமனம் ஆகிய சுப பலம் இழந்தும் யோகங்கள் அமைந்துவிடும். இதுவும் உண்மை. தனாதிபதி (2-ஆமிடத்தவர்), கர்மாதிபதி (பத்தாமிடத்தவர்), பாக்கியாதிபதி (9-ஆமிடத்தவர்), சுகாதிபதி (4-ஆமிடத்தவர்) ஆகிய நால்வரும் ஒருவருடைய ஜாதகத்தில் அஸ்தமனமடைந்தால் ராஜயோகம் உண்டு என்கிறார் புலிப்பாணியார். அதேபோன்று சூரியன் நின்ற ராசிக்கு பின் ராசியில் புதனும் அங்காரகனும் நின்றால் சிறப்பான யோகம் உண்டு.
● பத்தாமதிபதி துர்ஸ்தானம் ஏறி, சனி 10-ல் அமர்ந்து அவருடன் நீசமடைந்த கிரகம்கூடியிருப்பின் ஜாதகர் செய்தொழில் அற்று கடன் தொல்லையால் கஷ்டப்பட நேரிடும்; உஷார்.
● லக்னாதிபதி பத்தாமிடம் ஏறி, கர்மாதிபதி உச்சனாகி திரிகோணம் ஏறினால் வாழ்க்கை முழுவதும் சுகஜீவியாக வாழலாம்.
● சுகாதிபதி, கர்மாதிபதி, பஞ்சமாதிபதி ஆகிய மூவரும் ஒரே ராசியில் கூடி லக்னாதிபர் பார்வை பெற்ற ஜாதகர் பெரிய ஜமீன் என்ற பட்டத்துடன் நீடூழி வாழலாம்.
பணக்கஷ்டம் தொடராதிருக்க சில டிப்ஸ்
● 10-ல் சந்திரனுடன் கேது இருந்தால் விநாயகரை செந்தாமரை மலரால் பூஜிப்பது நன்று.
● வீட்டு மொட்டை மாடியில் வட்ட வடிவ வாட்டர் டாங்க் கூடாது.
இருந்தால் மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யவேண்டும்.
● ஞாயிறன்று வெறும் உப்பை வாயில் போட்டு சுவைப்பது கூடாது.
● 21 நாட்கள், தூய வெண்ணிற ஆடை அணிவதால் சுக்கிரன் அருளால் லாபம் பெறலாம்.
● வெள்ளிக்கிழமைகளில் திருமணமானோர், இல்லாள் சொல்வதை செவிமடுப்பது நன்று. வீண் விவாதம் தவிர்த்தல் நன்று.
நிலபுலன்களால் குறையாத செல்வம்?
● 4-ஆமிடத்து அதிபதியும் 10-ஆமிடத்து அதிபதியும் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை செய்துகொண்டாலும், அத்துடன் செவ்வாய் வலுவுடன் அமைந்தாலும் அசையா சொத்தை வாடகைக்குத் தந்தே பணத்தைப் பெறலாம்.
● பத்துக்குடையோனும் 4-ஆமிடத்தோனும் நட்பு கிரகங்களாகி வலுவுடன் நின்றால் பணம் படைத்த பண்ணையாராகத் திகழலாம்.
● 4-ஆமிடமும் 4-க்குடையோனும் செவ்வாயுடன் இணைந்து- சுபகிரகங்கள் தொடர்புகொண்டால், ஜாதகர் நிலங்களைத் தேடித்தேடி அலைந்து செல்வந்தராகிவிடுவார். இவர்கள் ஜாதகத்தில் 8-ல் சனி இருந்தால் ரப்பர் எஸ்டேட், கொக்கோ எஸ்டேட் போன்றவை பலன் தரும். நிலம் பதிவு செய்யும் காலங்களில் புலால், மது தவிர்ப்பது நல்லது.
செல்: 93801 73464