பலவிதமான யோகங்களின் ஒட்டுமொத்தக் குவியலான ஒரு ஜாதகத்தைக் கொண்டிருந்த கலைஞர் அவர்கள் அமரத்துவம் பெற்றுவிட்டார்.
கலைஞர் நல்லவிதமாக இயங்கிக்கொண்டிருந்தபோதே அவருடைய ஜாதகத்தை இரண்டுமுறை விவரித்து எழுதியிருந்தேன்.
வேதஜோதிடம் உணரப்பட்ட சுமார் 2000 வருட காலத்திற்குமுன், நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் ஒரு பேரரசனின் ஜாதகம் எவ்வாறு இருக்கவேண்டுமென்று சொல்லி−ய அனைத்து விதிகளையும் நம் காலத்தில் முழுமையாகக் கொண்டிருந்த பூரண "மகாராஜ யோக' ஜாதகம் கலைஞருடையது.
ஜோதிடத்தை மறுப்பவர்களுக்கும், இதனை ஒரு மூடநம்பிக்கை என்று சொல்பவர்களுக்கும் கலைஞரின் ஜாதகமே ஒரு தெளிவான பதிலாக அமையும்.
ஒருவகையில் இதுவொரு கடுமையான முரண்பாடுதான். ஜோதிடத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் நம்பாத ஒரு மாபெரும் பகுத்தறிவாளரின் ஜாதகத்தையே, அந்தக் கலையை மெய்ப்பிப்பதற்கு சொல்வதைப் போன்ற நகைப்பிற்கு உட்பட்ட முரண். வேறெதுவும் இல்லை. ஆனால் உலகின் அனைத்துமே முரண்களின் மேல்தானே அமர்ந்திருக்கின்றன!
இந்தியாவிலும், உலக அளவிலும் வேறு எவருமே இல்லாத வகையில் மிக நீண்ட காலம் அதிகாரத்திலும் ஆளுமைத் திறனோடும் இருந்து, குறிப்பாக, தன்னுடைய இறுதிக்காலம்வரை அரசியலி−ல் ஓய்வுபெறாமல், தான் பங்கெடுத்த எந்தத் தேர்தலி−லும் தோல்வியும் பெறாமல், மறையும் நாள்வரை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து, பதவியில் இல்லாவிட்டாலும் கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் முதல்வராகவே இருந்தவர் கலைஞர்.
அவரது ஜாதகத்தைப் பல்வேறு ஜோதிடர்கள் பல நிலைகளில் ஆய்வுசெய்து வெளியிட்டிருக்கிறார்கள். நானும் சில வருடங்களுக்கு முன்பு என்னுடைய பாணியில் கலைஞரின் யோக அமைப்புகளை விளக்கி எழுதியிருந்தேன். அது அவரது பார்வைக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
கலைஞரை ஒரு மகா தலைவர் என்ற நிலைக்கு உயர்த்தியது அவருடைய ஜாதகத்தில் இருந்த "சிவராஜ யோகம்' என்னும் அமைப்பு மட்டுமே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
சிவராஜ யோகம் என்பது சூரியனை குரு நேருக்குநேர் நின்று வலி−மையுடன் பார்ப்பதால் அமையும் யோகம் என்று வேத ஜோதிடம் குறிப்பிடுகிறது.
நம்முடைய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் நூற்றுக்கணக்கான அதிர்ஷ்டம் தரும் யோக அமைப்புகளைக் குறிப்பிட்டிருந்தாலும், அவற்றில் சிலவற்றை மட்டும்தான் மிகவும் அரிதாக 'ராஜயோகம்' என்கின்ற அடைமொழியில் சொல்கிறார்கள். அதிலும் மிகவும் தனிப்பட்டு சொல்லத்தக்கது இந்த சிவராஜ யோகமாகும். இது ஒருவரை உயர்நிலைத் தலைவனாக்கும் சிறந்த அமைப்பாகும்.
இந்த யோகம் கலைஞருக்கு பூரணமாக அமைந்திருந்தது.
ஜோதிடத்தில் சூரியன் தலைமைக் கிரகமாக குறிப்பிடப்படுகிறார். வலுப்பெற்ற சூரியனைக் கொண்ட அமைப்பில் பிறந்தவர்கள், ஜாதகத்தின் மற்ற நிலைகளுக்கு ஏற்றபடி பத்துப்பேருக்கு தலைவராகவோ, பத்தாயிரம் அல்லது பல கோடி நபர்களுக்குத் தலைவராகவோ இருப்பார்கள் என்பது ஜோதிட விதி.
ஜோதிடத்தில் குரு கிரகம் மிகச்சிறந்த நன்மைகளையும் அதிர்ஷ்டங்களையும் தரக்கூடிய கோளாகக் குறிப்பிடப்படுகிறது. இயற்கையிலேயே நற்பலன்களைத் தரக்கூடிய குரு, தலைமை தாங்க வைக்கும் முதல்நிலை கிரகமான சூரியனைத் தனது மேம்பட்ட சுபப் பார்வையால் நேருக்கு நேர் பார்க்கும் நிலை அமையும்போது, ஒருவருக்கு பிறவியிலேயே அதிகாரம் செய்யக்கூடிய அமைப்பு வந்துவிடுகிறது. இதனையே ஜோதிட ஞானிகள் "ராஜயோகம்' என்று சொன்னார்கள்.
விஞ்ஞானரீதியில் இதைப் பார்த்தாலும் சூரியன் இல்லாமல் நாம் இல்லை.
அனைத்திற்கும் மூல முதல்வன் சூரியன் தான். நம்முடைய சூரிய மண்டலத்தின் நாயகனும் அவன்தான். அவனைச் சுற்றியே அனைத்தும் இயங்குகின்றன; உயிர் வாழ்கின்றன.
ஜோதிடத்திலும் சூரியன் வலுப்பெற்று பிறப்பவர்களைச் சுற்றியே அனைத்தும் இயங்கும். அரை நூற்றாண்டு காலத்திற்கும்மேல் இந்திய அரசியல் கலைஞரைச் சுற்றியே இயங்கியதற்கு அவருடைய ஜாதகத்தில் சூரியன் இருந்த நிலையே காரணம்.
உலகின் மேலான இந்து மதம், சூரியனைத் தான் சிவன் என்ற பெயரில் அனைத்திற்கும் மூலவனாக வணங்குகிறது. கதிரவன் ஒருவருடைய ஜாதகத்தில் வலுவாக இருக்கும் நிலையில், அந்த ஜாதகரே ஆதவனைப் போன்று ஜொ−லிப்பார் என்பதைத்தான் வேதஜோதிடம், சூரியன் சுபத்துவமாகி இந்த யோகம் உள்ளவன் சிவனைப் போன்று முதல்வனாக இருப்பான் என்ற அர்த்தத்தில் "சிவ' ராஜயோகம் என்று சொன்னது.
கலைஞரின் ஜாதகத்தில் சூரியனும் சந்திரனும் இணைந்து, உச்சம் பெற்ற நண்பன் செவ்வாயின் வீட்டில் வலுப்பெற்று அமர்ந்த குருவின் நேர் பார்வையைப் பெறுகிறார்கள். இதில் இன்னொரு ராஜ கிரகமான அவரது லக்னாதிபதி சந்திரன் உச்சத்தினை அடுத்த மூலத்திரிகோண வலுவில், வளர்பிறை நிலையில் இருப்பது வெகுசிறப்பான அமைப்பாகும்.
தலைமை தாங்க வைக்கும் சூரியன், திக்பலம் எனப்படும் பத்தாமிடத்திற்கு அருகில் இருக்கப் பிறந்தவர்கள், அரசுப் பணியிலும் அரசிய−லும் சாதிக்கும் நிலையை அடைவார்கள்.
கலைஞரின் ஜாதகத்தில் சூரியன் பதினொன்றாமிடத்தில், சந்திரனோடு இணைந்து குருவின் பார்வையைப் பெற்றிருப்பார். இதில் சந்திரன், அவருக்கு அனைத்து மேன்மைகளையும் அளிக்கும் லக்னாதிபதியாகி உச்சத்திற்கு அருகிலிருந்த ஒரே அமைப்புதான், அவரை உலகம் முழுவதுமுள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் தலைவராக நிலைநிறுத்தியது. அரசியலி−ல் கடைசிவரை தோல்வியடையாமல், தன்னுடைய அந்திம நாள்வரை சட்டமன்ற உறுப்பினராக அவரை இருக்க வைத்ததும் இந்த அமைப்புதான்.
கலைஞரின் ஜாதகத்தை விளக்கும்போது ஒருமுறை, "நட்பு கிரகங்கள் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் இருக்கின்ற அமைப்பில் நான் பார்த்த ஒரே ஜாதகம் இதுதான்' என்று குறிப்பிட்டிருந்தேன்.
ஆயிரக்கணக்கான ஜாதகங்களைப் பார்த்திருக்கும் நான், இப்போது குறிப்பிடும் இந்த மேலான அமைப்பினை கலைஞர் அவர்களின் ஜாதகத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.
இது ஒன்றே அவர் கோடிக்கணக்கான மக்களின் மகத்தான தலைவர் என்பதை நிரூபிக்கும் ஒரு ஜோதிட அமைப்பாகும்.
ஜோதிட சாஸ்திரத்தில் குரு, சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகியோர் ஒத்த கருத்துள்ள நண்பர்களாகவும்; சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் இவர்களுக்கு எதிர்த்தரப்பில் உள்ள ஒற்றுமையான நண்பர்களாகவும் குறிப்பிடப்படுகிறார்கள். இவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்நிலையில் உள்ளவர்களோடு இணைவதும், பார்த்துக்கொள்வதும் இருவரையுமே பலவீனமாக்கும் என்பது விதி.
வானில் எப்போதாவது மிக அரிதாக, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அனைத்து கிரகங்களும், நண்பர்களோடு நண்பர்கள் சேர்ந்த, பார்க்கும் நிலையில் அமையும். அதுபோன்ற ஒரு உன்னத நொடியில் பிறந்தவர் கலைஞர்.
அவரது ஜாதகத்தில் மேலே சொன்ன அமைப்பான குரு, செவ்வாய், சூரியன், சந்திரன் ஆகியோர் தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் அமர்ந்து ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருப்பார்கள். சுக்கிரன், சனி, புதன் ஆகியோர் இதேபோன்று தங்களுக்குள் கேந்திர, கோணங்களில் அமர்ந்திருப்பார்கள்.
இதன்மூலம் எந்தவொரு கிரகமும் பலவீனமடையாமல், ஒன்பது கிரகங்களும் சுயத் தன்மையோடு அமைந்த நொடியில் பிறந்து, மிகப்பெரிய சாதனைகளைச் செய்த ஒரு பேரரசன் கலைஞர் அவர்கள்.
அவரைப்போன்ற அபூர்வமான ஜாதகத்தைக்கொண்ட இன்னொரு மகா தலைமையாளன் பிறப்பதற்கு இன்னும் சில நூற்றாண்டுகள் ஆகலாம். அதுவரை கலைஞர் ஒருவரே இதுபோன்ற மகத்தான யோகங்களைக் கொண்ட ஜாதகராக இருப்பார்.
வாழ்க நீ எம்மான்...!
செல்: 8681 99 8888