/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/verma.jpg)
எவரிடமும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு எல்லாராலும் இருக்க முடிவதில்லை. சிலருக்கு ஏமாற்றமே வாழ்க்கை என்றாகிவிடுகிறது.
ஒருவரின் வாழ்க்கையில் தொடர்ந்து ஏமாறும் சூழ்நிலைகள் உண்டாவதற்குக் காரணம் அவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதியின் பலம் குறைவாக இருப்பதுதான். இன்னொரு காரணம்- லக்னாதிபதி அஸ்தமனமாக இருப்பது. லக்னாதிபதி அஸ்தமனமாக அல்லது நீசமாக இருந்தால், அந்த மனிதர் பிறருக்கு நன்மைகள் செய்தாலும், யாரும் அவருக்கு நன்மைகள் செய்யமாட்டார்கள். அவரிடம் நன்றியில்லாமல் நடந்துகொள்வார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் விரய ஸ்தானாதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தால், அத்துடன் லக்னாதிபதியும் இருந்தால், அந்த மனிதருக்கு யாரும் நன்மைகளே செய்யமாட்டார்கள். அவரால் பயன்பெற்றவர்கள்கூட, அவரைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
3-க்கு அதிபதி 2-ல் இருந்து, அவருடன் செவ்வாயும் இருந்தால் அல்லது 3-க்கு அதிபதி கிரகமாக செவ்வாய் இருந்து, அது 2-ல் இருந்தால், அந்த ஜாதகரை அவருடைய குடும்பத்தில் இருப்பவர்களே ஏமாற்றுவார்கள். 4-க்கு அதிபதி விரய ஸ்தானத்தில் அல்லது நீசமாக அல்லது 8-ல் இருந்தால், அவர் பலராலும் ஏமாற்றப்படுவார்.
ஒருவர் ஜாதகத்தில் 4-ல் சூரியன் பலவீனமாக இருந்தால், ஜாதகரை குடும்பத்தில் இருப்பவர்களும் நண்பர்களும் ஏமாற்றுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் ராகுவும் சுக்கிரனும் 3-ல் இருந்தால், அவர் சகோதரர்களால் ஏமாற்றப்படுவார். பலரும் நம்பிக்கை மோசம் செய்வார்கள்.
ஒரு ஜாதகத்தில் 3-ல் கேது இருந்து, அந்த கேதுவை சனி பார்த்தால், அந்த ஜாதகர் சகோதரர்களால் ஏமாற்றப்படுவார். அவருக்கு ஏதாவது சொத்து இருந்தால் அதைக் கைப்பற்ற அவர்கள் முயல்வார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், சுக்கிரன், ராகு இருந்தால் அவரை நண்பர்களே ஏமாற்றுவார்கள். ஒரு ஜாதகத்தில் சந்திரன் பலவீனமாக சுயவீட்டிலிருந்தால், அது தேய்பிறைச் சந்திரனாக இருந்தால் அந்த ஜாதகர் பலருக்கு நன்மைகள் செய்திருந்தாலும் அவருக்கு யாரும் சிறிதுகூட நன்மை செய்யமாட்டார்கள். நன்றி கெட்டவர்களாக இருப்பார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vishnu.jpg)
ஜாதகத்தில் சந்திரனிலிருந்து 8-ல் சனி இருந்தால் அந்த சந்திரனும் பலவீனமாக இருந்தால் அவரை பலரும் பணவிஷயத்தில் ஏமாற்றுவார்கள். ஜாதகத்தில் 9-ல் ராகு, லக்னத்தில் சூரியன், 6-ல் சனி இருந்தால், அவர் வாழ்க்கையின் முற்பகுதியில் நிறைய ஏமாற்றங்களைச் சந்திப்பார். பலருக்கு அடிமையாக இருந்து நன்மைகளைச் செய்வார். ஆனால் அவருக்கு யாரும் நன்மை செய்யமாட்டார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் புதன் அஸ்தமனமாக இருந்து அதே ஜாதகத்தில் 10-ல் குரு பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பார். பலருக்கும் நிறைய நன்மைகளைச் செய்வார். ஆனால், அவருக்கு யாரும் எந்த நன்மையும் செய்யமாட்டார். கூச்ச சுபாவத்தால், அவரும் யாரிடமும் எதுவும் கேட்கமாட்டார்.
ஒருவர் வாழும் வீட்டின் வடகிழக்குப் பகுதி துண்டிக்கப்பட்டிருந்தால், அவர் கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பார். யாருடனும் தைரியமாகப் பழகமாட்டார். அவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலவீனமாக இருக்கும். ஒருவர் வாழும் வீட்டிற்கு வடகிழக்கு வாசல் இருந்து, தென்கிழக்கில் நீர்த்தொட்டி இருந்தாலும், அல்லது சமையல் மேடைக்குக்கீழே நீர்பிடித்து வைத்திருந்தாலும் அவர் பல விஷயங்களிலும் ஏமாற்றத்தைச் சந்திப்பார்.
ஒரு வீட்டின் தென்மேற்கு திசை காலியாக இருந்து அந்த இடத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு இருந்தாலும், தென்மேற்கு தாழ்ந்திருந்தாலும் அங்கு வாழ்பவர் பலராலும் ஏமாற்றப்படுவார். வீட்டின் மத்தியப் பகுதியில் படுப்பவர்கள் பலருக்கும் நன்மைகளைச் செய்வார்கள். ஆனால் அவரை நண்பர்களும் சகோதரர்களும் ஏமாற்றுவார்கள்.
ஒரு வீட்டின் வடமேற்கு திசையில் படுக்கையறை இருந்து, வடமேற்கு சுவரையொட்டி கட்டில் இருந்தால், அதில் மேற்கு திசையில் ஒருவர் தலை வைத்துப்படுத்தால், அவர் பலராலும் ஏமாற்றப்படுவார்.
பரிகாரங்கள்
தினமும் சூரிய பகவானுக்கு செப்புப் பாத்திரத்தில் நீரெடுத்து வார்க்க வேண்டும். நீரை விடும்போது "ஓம் ப்ரம்ம ஸ்வரூபேன சூர்ய நாராயணாய நமஹ' என்ற மந்திரத்தைக் கூறவேண்டும்.
தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கவேண்டும்.
கருப்புநிற ஆடையைத் தவிர்ப்பது நல்லது.
தெற்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
ஆஞ்சனேயரை நான்கு முறை சுற்றிவந்து வணங்குதல் நன்று.
வெள்ளிக்கிழமை மாலையில் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று, துர்க்கையை வழிபடவேண்டும்.
தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணியலாம்.
வீட்டின் தென்கிழக்கில் நீர்பிடித்து வைக்கக்கூடாது.
செல்: 98401 11534
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/vishnu.jpg)