திதி என்பது சூரிய சந்திரர்களுக்கு உள்ள இடைவெளியை அல்லது தூரத்தைக் கொண்டு கணக்கிடப்படுவதாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையிலுள்ள ஒவ்வொரு பன்னிரண்டு பாகையும் ஒரு திதியைக் குறிக்கும். இவ்வாறாக சூரியனும் பன்னிரண்டுவிதமாக புராணங்களில் போற்றப்படுகிறார். இவர்களை துவாதச ஆதித்தியர்கள் என்று நாம் அழைக்கிறோம்.

இந்த பன்னிரண்டு சூரியர்களும் மாதத்திற்கு அல்லது ராசிக்கு ஒருவராக பொறுப்பேற்பார்கள்.

muh

அதேபோல் சந்திரன் பதினைந்து கலைகளைக் கொண்டவராக இருப்பார். இந்த பதினைந்து சந்திர கலைகளும் பன்னிரண்டு சூரிய கலைகளும் சேர்ந்து பெருகி நூற்றெண்பது விதங்களாகப் பரிணமிப்பர். இந்த 180 பரிணாமங்களுமே ஒவ்வொரு தேவதையாக ஆவிர்பவிக்கும். இவ்வாறாக சூரியன் பரமேஸ்வரனாகவும், சந்திரன் பராசக்தியாகவும் இருந்து மற்ற தேவதைகளை உண்டாக்குகின்றனர். இந்த 180 தேவதைகளே சாக்த சம்பிரதாயத்தில் வழிபாடு செய்யப்படும் தேவதைகளாக இருக்கின்றனர். இவ்வாறாக இருக்கும் முறையில் திதி நித்யாதேவிகள் என்று கூறப் படும். சந்திரனின் கலைகளே பிரதானமாக வணங்கபடுகிறார்கள். அவர்களுள் வளர்பிறை ஏகாதசியை நீலபதாகா என்ற தேவியும், தேய்பிறை ஏகாதசியை பேருண்டா என்ற தேவியும் ஆள்கின்றனர்.

இவர்களை ஏகாதசியில் விஷ்ணுவின் அம்சமான அந்த மாதத்திற்கு ஏற்ற ஆதித்ய ரூபத்தையும், திதி நித்யாதேவியையும் சரணடைந்து, தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற வெற்றிதரும் பொழுதைத் தேர்ந்தெடுத்து ஏகாதசி விரதமிருந்து வழிபடுபவர்கள் நிச்சயம் வெற்றிபெறுவார்கள்.

கர்மேந்திரியம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று. ஆக, பதினோரு இந்திரியங்களும் இறைவனிடம் ஈடுபட்டிருப்பதுவே ஏகாதசி விரதம்.

"சுத்தம் பாகீரதி ஜலம்

சுத்தம் விஷ்ணு பதத்தியானம்

சுத்தம் ஏகாதசி விரதம்.'

கங்கையின் நீர் புனிதம். அதைவிட புனிதம் விஷ்ணுவின் திருவடி தியானம்.

அதனினும் புனிதம் ஏகாதசி விரதம். இதை கிருஷ்ண பரமாத்மா பாண்டவ தூதனாக ஹஸ்தினாபுரம் சென்றபோது கூறுகிறார்.

இதுவே ஏகாதசியின் மகிமை என்னவென்று உணர்த்துகிறது. இப்பேற்பட்ட ஏகாதசி விரதம் ஒரு மனிதனை ஜாதகத்தில் வரும் துன்பத்திலிருந்து பெரிதும் காக்கிறது.

இனி நாம் ஏப்ரல் மாதம் வரும் பாபமோசினி ஏகாதசி மற்றும் காமதா ஏகாதசி ஆகிய இரண்டையும் பார்ப்போம்.

பாபமோசினி ஏகாதசி

பாபமோசினி ஏகாதசி, ஏப்ரல் 7, 2021, பங்குனி மாதம் தேய்பிறையில் வரும். இந்த ஏகாதசியின் மகத்துவம் கீழ்வருமாறு:

தேவலோகத்தில் குபேரனுக்கு சொந்தமான ஒரு நந்தவனத்தில் மேதாவி என்ற முனிவர் சிவனைக் குறித்துத் தவம் செய்துவந்தார்.

அவரை மஞ்சுகோஷா என்ற அப்சர கன்னிகை அடையவேண்டி, காமதேவன் உதவியுடன் அவரின் தவத்திற்கு இடையூறு செய்தாள், இதனால் தவவாழ்வு தாழ்ந்துபோன யோகி , விழிப்படைந்தவராய் மஞ்சுகோஷாவிற்கு பைசாசமாகப் போகுமாறு சாபமிட்டார். மேலும் அவர் தன் தவவாழ்வில் ஏற்பட்ட ஒழுக்க சீர்கேட்டிற்கும், மஞ்சுகோஷா தான் செய்த தவறுக்கும் பாபமோசினி ஏகாதசியில் விரதமிருந்து மீண்டுவந்தனர்.

ஜாதகத்தில் குரு, சனி அல்லது குரு, ராகு சேர்ந்து பத்தாம் பாவத்தில் அமையும் ஒருவருக்கு அல்லது பத்தாம் பாவாதிபதி இந்த சேர்க்கையில் சேர ஒழுக்கக் கேட்டால் அவமானம் ஏற்படும்.

இதேபோல் ஆரூடத்தில் பத்தாம் பாவத்தின் பாதசாரம் மேற்கூறிய அமைப்பில் இருந்தால் கர்மத்தால் அவமானமென்று கொள்ளவேண்டும்.

இவர்கள் பாபமோசினி ஏகாதசியில் விரதமிருந்தால் தோஷம் விலகும்.

காமதா ஏகாதசி

காமதா ஏகாதசி என்பது ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி, 2021-ஆம் வருடம் வருகின்றது. சித்திரை மாத வளர்பிறையில் வருவதே காமதா ஏகாதசி ஆகும். புண்டரிகன் என்ற மன்னனின் சபையில் லலித் மற்றும் லலிதா என்ற கந்தர்வ தம்பதியர் பாடல் பாடி பணிபுரிந்துவந்தனர். ஒருநாள் லலித் ஏதோ ஒரு ஞாபகத்தில் பாடலைத் தவறாக பாட, அதைக்கண்ட ஒரு நாக கணம் தவறை அரசனிடம் சுட்டிகாட்டிவிட்டது. அதனால் கோபம்கொண்ட அரசன் லலித்தை பூதமாகும்படி சபித்துவிட்டான். இதனால் காடுகளில் பூதமாகத் திரிந்த லலித்தின்பின் சென்ற லலிதா, விந்திய மலையில் ஸ்ரீங்கி முனிவரைக் கண்டு தம் நிலைகூறி சாபவிமோச்சனம் அருளுமாறு கேட்டாள். அதற்கு முனிவர் லலிதையை காமதா ஏகாதசியின் மகிமை கூறி விரதமிருக்குமாறு பணித்தார். லலிதையும் முறை தவறாமல் விரதமிருந்து தன் கணவனின் ராஜ தண்டனையைப் போக்கி பூத உரு மாற்றி சுயஉருவம் வருமாறு செய்தாள்.

ஜாதகத்தில் சனி சிம்மத்தில் அமர, அதுவே ஆறாம் பாவமாக அமைய, ஜாதகருக்கு ராஜதண்டனை கிடைக்கும்.

அதேபோல் ஆரூடத்தில் சூரியன் பாதசாரம், மகரம், கும்ப வீடுகளில் சர்ப்ப கிரகங்கள் பாதத்தில் அமைந்தாலும் ராஜதண்டனையால் ஜாதகர் அவதிபடுவார் என்று கொள்ளவேண்டும்.

இந்த அமைப்பிலுள்ளவர்கள் காமதா ஏகாதசி விரதமிருந்து வழிபட தோஷம் விலகும்.