முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என முச்சங்கங்கள் போற்றி வளர்த்த பண்டைய தமிழ்மொழியானது, திராவிட நாகரிகத்தின் பண்பாட்டுக்கு ஒரு சிறந்த அடையாளச் சின்னமாக விளங்குகிறது. திராவிடர்களை இணைக்கும் ஒரு கருவி தமிழ்மொழியாகும். ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி; பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, கலிங்கத்துப்பரணி, ஆற்றுப்படைகள், திருமந்திரம், கம்பராமாயணம், பெரியபுராணம், திருவாசகம், நாலாயிர திவ்விய பிரபந்தம் மற்றும் 18 சித்தர்கள் வழங்கிய அட்டமா சித்திகளின் சூட்சுமங்கள், ஏராளமான வைத்தியத்திரட்டு, திருவருட்பா போன்ற எண்ணற்ற தமிழ் நூல்கள் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுச் சிறப்புடையவையாகும்.

Advertisment

தொல்காப்பியர், கபிலர், பரணர், நக்கீரர் சமயப்பெரியவர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், கம்பர், சேக்கிழார் போன்ற எண்ணற்றோர் தமிழ்மொழி சிறந்துவிளங்க வழிவகுத்தனர்.

கடையெழு வள்ளல்களான பாரி, ஓரி, நள்ளி, ஆய், காரி, பேகன், அதியமான் போன்றவர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர்.

பண்டைக்காலத்திலேயே பருவவயதைத் துறந்து தெய்வஅருளால் மெய்யறிவுபெற்ற தெய்வத் திருமங்கை ஔவையார் இயற்றிய ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், விநாயகர் அகவல் போன்றவற்றின் சிறப்பு பலரும் அறிந்ததே. இரு அடிகள் கொண்ட குறட்பாக்களிலேயே ஒட்டுமொத்த நன்னெறிகள் சொன்ன திருவள்ளுவரின் தமிழ்த்தொண்டு உலகறிந்தது. சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் காலத்திலும், திராவிடர்கள்மீது அன்னியரான முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள் மற்றும் மங்கோலியர்கள் போன்றோர் படையெடுத்த காலத்திலும் தமிழரின் மானம் காத்த மன்னர்கள் பலர். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு ஆகிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களில், தென்னகத்தை உறைவிடமாகக் கொண்டு வீரத்தமிழ் வளர்த்த இனமே திராவிடப் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் தமிழர் இனமாகும்.

Advertisment

dravidan

திராவிட பாரம்பரியத்தில் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம்

திராவிட முன்னேற்றக் கழகத் (தி.மு.க.) துவக்க நாளான 17-9-1949-ன்படி குரு தசை 11 வருடம், 0 மாதம், 0 நாட்கள். நடப்பு தசை புக்தி- சுக்கிர தசையில் சனி புக்தி 18-7-2016 முதல் 19-9-2019 வரை.

20-ஆம் நூற்றாண்டில் பல்வேறு மாற்றங்களைக்கண்ட தமிழ்பேசும் திராவிட இனம் பல தமிழ் மூதறிஞர்கள், புரட்சிக் கவிஞர்களைக் கண்டெடுத்தது. திராவிட இனத்தின் அடையாளத்தை மேலோங்கச் செய்ய, நம் இந்தியத் திருநாடு விடுதலையடைந்தபின், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சி, திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில், பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் ராபின்சன் பூங்காவில், அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற வாசகத்துடன் தமிழ் பேசும் திராவிட இன மக்களுக்காகத் துவக்கப்பட்ட கட்சியாகும். துவக்க நாளான 17-9-1949, திராவிட இன தமிழ் மக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 6-3-1967 முதல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார் அண்ணா. பின்னர் 3-2-1969-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைந்தார்.

Advertisment

தி.மு.க. துவங்கப்பட்ட ஜோதிடக்கணக்குப்படி, பத்தாம் வீட்டு அதிபதி குரு தசை பத்து வருடம் மீதம் இருப்பு கழித்து, 1959-ஆம் ஆண்டு சனி தசை தொடங்கியது. மீண்டும் பத்து ஆண்டு கழித்து சனி மகாதசையில் பகை கிரகமான சூரிய புக்தியின் விளைவாக பேரறிஞர் அண்ணா புற்றுநோயால் மரணமடைந்தார். பின்னர் இடைக்கால முதலமைச்சராக நெடுஞ்செழியன் (10-2-1969 - 4-1-1971) சிறிதுகாலம் ஆட்சிசெய்தார். ஒரு ஸ்தாபனத்திற்கு அல்லது இயக்கத்திற்கு சிக்கல் தோன்றும் தருணம் அப்போது இருந்தது. சனி 6-ஆம் வீட்டில் ருண ரோக ஸ்தானத்தில் அமர்ந்து, சூரியனுடைய பகை வீட்டில் அமைந்ததால், தலைமை மாற்றத்தைக் காட்டுவதாக தி.மு.க. துவக்க நாளின் அடிப்படையில் இது கணிக்கப்பட்டது. இத்தகைய தருணத்தில் திராவிடக் கொள்கைகளுக்கு சிக்கல் தோன்றவில்லை; தலைமை மாற்றத்தால் சிக்கல் தீர்ந்து, மீண்டும் திராவிடக்கொள்கை தழைத்தது.

dravidanjagatham

கலைஞர் கருணாநிதி

(1969 முதல் 2011 வரை)

பின்னர் கலைஞர் கருணாநிதி ஆட்சி பீடத்தைப் பிடித்தார். 10-2-1969 முதல் 4-1-1971 வரை; 15-3-1971 முதல் 31-1-1976 வரை; 27-1-1989 முதல் 30-1-1991 வரை; 13-5-1996 முதல் 13-5-2001 வரை; 13-5-2006 முதல் 15-5-2011 வரை என இடையிடையே தி.மு.க. ஆட்சி நடத்தி வந்தது. தற்சமயம் முதுமை காரணமான கலைஞர் ஓய்வு பெற்றுள்ளார். ஆயினும் தி.மு.க. கட்சியின் அடிப்படை திராவிடக் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

தி.மு.க.வின் தோற்ற நாள் ஜோதிடக் கணிப்பின்மூலம் 2021-ஆம் ஆண்டு சூரிய தசை முடியும்வரை ஆட்சியமைக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஏனெனில் 19-9-2015 முதல் 6-ஆம் வீட்டில் சிம்ம ராசியாதிபதியான சூரிய தசை நடைபெறுவதும், 6-ஆம் வீட்டில் சனி பகை கிரகமாக அமர்ந்துள்ளதும், மேலும் 7-ல் அமைந்துள்ள ஆத்மகாரகனான சூரியன் கேதுவுடன்கூடி வலுவிழந்து காணப்படுவதுமே தி.மு.க. ஆட்சி அமைவதற்குத் தாமதம் ஏற்பட முக்கிய காரணமாகும். தி.மு.க. தலைமை மாற்றத்திற்கும் இத்தகைய சிக்கலான கோட்சார கிரகங்களே காரணமாகும்.

விம்சோத்தாரி தசை ரீதியாக தி.மு.க. ஆட்சி, பதவி இறக்கம் மற்றும் ஆட்சி மாற்றம் போன்றவை:

தி.மு.க. துவங்கிய நாள் 17-9-1949.

மீதம் குரு தசை 10 வருடங்கள் 19-9-1959 வரை.

அதன்பின் சனி தசை 19 வருடங்கள் 19-9-1978 வரை. பின்னர் புதன் தசை 17 வருடங்கள்- 19-9-1995 வரை. அடுத்து சுக்கிர தசை 20 வருடங்கள்- 19-9-2015 வரை. பின்னர் சூரிய தசை 6 வருடங்கள் 19-9-2021 வரை.

திராவிட பாரம்பரியத்தில் தோன்றிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்

எம்.ஜி.ஆர். அவர்கள் 1977 முதல் 1987 வரையிலும்; பின்னர் ஜெயலலிதா 1991-1996, 2001-2006, 2011-2016 வரையிலும் தமிழக முதல்வராக ஆட்சிபுரிந்தனர். (வழக்கின் காரணமாக, ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் ஓ.பி.எஸ். இருமுறை இடைக்கால முதல்வராக இருந்தார்.) 2016 முதல் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியது. 2016 டிசம்பரில் ஜெயலலிதா எதிர்பாரா மரணத்தைத் தழுவினாலும் தற்போதுவரை அக்கட்சியின் ஆட்சி பல்வேறு இன்னல்களுக்கிடையே நீடிக்கிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்க நாள்: 17-10-1972. மீதம் இருப்பு செவ்வாய் தசை 6 வருடம், 8 மாதம், 11 நாட்கள். நடப்பு தசை புக்தி- சனி தசை, புதன் புக்தி 3-7-2016 முதல் 13-3-2019 வரை.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது சனி தசை, சந்திர புக்தியிலிருந்து மீண்டும் செவ்வாய் புக்திக்காலத்தில் பெரும் கருத்துவேறுபாடு காரணமாக எம்.ஜி.ஆர்.

தி.மு.க.விலிருந்து 1972-ஆம் ஆண்டு விலகி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் (அ.தி.மு.க.) என்ற அரசியல் கட்சியை மேலும் ஒரு திராவிடக் கட்சியாக அறிவித்து 19-10-1972 அன்று துவக்கி, அண்ணாவின் உயிர்மூச்சுக் குறிக்கோள்களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தையும், திராவிட சித்தாந்தத்தின் கொள்கையையும் அடிப்படையாகப் பின்பற்றி, எம்.ஜி.ஆர். 1977-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி 1987-ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தார். பின்னர் 24-12-1987-ல் எம்.ஜி.ஆர். காலமானார். இத்தகைய தருணத்திலும் திராவிடக்கொள்கைகளுக்கு சிக்கல் தோன்றவில்லை. தக்க தருணத்தில் தலைமை மாற்றத்தால் சிக்கல் தவிர்க்கப்பட்டு புதிய தலைமையில் திராவிடக் கொள்கை திறம்படக் காக்கப்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியை ஜெயலலிதா தக்க தருணங்களில் தக்கவைத்தார். 5-12-2016 அன்று காலமானார். ஜெயலலிதா ஆட்சிசெய்த காலங்களில், கட்சி தொடக்க நாள் ஜோதிடக் கணக்குப்படி, லக்னத்திலிருந்து ராகு மற்றும் குரு 9-ஆம் வீட்டிலிருந்து தக்கபலம் சேர்க்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு ரிஷபத்தில் உள்ள சனியினால் பலம்பெற்று ஆட்சியமைத்தார். தற்சமயம் குரு பார்வை லக்னத்தின்மீது ஏற்படுவதாலும், சனி ரிஷபத்தில் அமர்ந்து பலம் ஏற்படுவதாலும் அ.தி.மு.க. ஆட்சி தக்கவைக்கப்படுகிறது. வருகின்ற காலங்களில் மக்களை வழிநடத்திச் செல்ல இணக்கமான தலைமை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும் சனி தசையில் சூரிய புக்தி வரும் வரை (2022) அ.இ.அ.தி.மு.க. ஆட்சியைத் தக்கவைக்க வாய்ப்புள்ளது.

விம்சோத்தாரி தசைரீதியாக அ.தி.மு.க. ஆட்சி, பதவி இறக்கம் மற்றும் ஆட்சி மாற்றம் போன்றவை,அ.தி.மு.க. துவங்கிய நாள்: 17-10-1972.

மீதம் செவ்வாய் தசை 14 நாள், 8 மாதம், 6 வருடங்கள்- 19-9-1978 வரை. பின்னர் ராகு தசை 18 வருடங்கள்- 19-9-1996 வரை. அடுத்து குரு தசை 16 வருடங்கள்- 19-9-2012 வரை. தற்போது சனி தசை 19 வருடங்கள்- 19-9-2031 வரை.

தமிழர் இனமான திராவிடர் இனத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சிகளும் மாறிமாறி இன்றுவரை ஆண்டுவந்தன. சமீப காலங்களில் இவ்விரு திராவிடக் கட்சிகளின் தலைமை மாற்றியமைக்கப்பட்டு பின்னடைவுகளைச் சந்தித்து வருகின்றன.

எந்த ஒரு இயக்கமும் மந்த கிரகமான சனியின் சுழற்சியான (மேஷம்முதல் மீனம்வரை) 30 வருட காலகட்டத்தில் உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து, தன்னை சுயபரிசோதனை செய்துகொண்டு மீண்டும் தன் நிலையை நிகழ்காலத்திற்கேற்ப சமன்செய்து சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஜோதிடக் கண்ணோட்டத்தில் 30 ஆண்டுகள் என்பது, மனித வாழ்வில் ஒரு தலைமுறை என்பது ஒரு சிறிய கணக்காகும்.

இத்தகைய நிலையில், மந்த கிரகமான சனியின் சுழற்சியின்மூலம் சில அரசியல் இயக்கங்களின் கடந்தகால நிலையைக் கூர்ந்து கவனிக்கையில்:

1. விடுதலைப்புலிகள் அரசியல் இயக்கம் 1975-ஆம் அண்டு தோன்றி உருவெடுத்து மிக வேகமாக வளர்ந்த நிலையில், 2005-ல் முதல் 30 ஆண்டுகள் முடிந்த குறுகிய காலகட்டத்தில், சூழ்ச்சிமுறையில் இவ்வியக்கம் வீழ்த்தப்பட்டது.

2. மேற்கு வங்கத்தில் முதல் 30 ஆண்டுக்கும்மேல் இடைவிடாது ஆட்சி செய்த கம்யூனிஸ்டு கட்சிகள் 2-ஆவது 30 ஆண்டுகளில் 60 ஆண்டுகளைக் கடக்கும்முன் தன் வலுவையிழந்து, மீண்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மேற்கு வங்கத்தில் போராடிக்கொண்டிருக்கிறது.

3. நூற்றாண்டுகளைக் கடந்த அகில இந்திய காங்கிரஸ் பேரியக்கம் 4-ஆவது 30 ஆண்டுகளைக் கடந்து (100 ஆண்டுகளுக்குமேல்) இந்திய அளவில் 2014 லோக்சபை தேர்தல் மற்றும் 19 மாநிலங்களில் தேர்தலில் பின்னடைவு பெற்றுள்ளது. மீண்டும் தொடர்ந்து போராடிக் கொண்டிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க ஆகிய திராவிடக்கட்சிகள் 3-ஆவது 90-ஆவது ஆண்டுகளை நெருங்கும் வேளையில், இதுவரை மாறிமாறி வெற்றிவாகை சூடிவரும் இந்த இயக்கங்கள் தனிமனிதன் மற்றும் மாற்றுக் கட்சிகளால் சமீப காலங்களில் அரசியல்ரீதியாக பல பின்னடைவுகளைச் சந்திக்கின்றன. இனிவரும் காலங்களில் திராவிடக் கொள்கைகளுக்கு தமிழ்நாட்டில் மேலும் பின்னடைவு உண்டாகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

செல்: 98401 96422