புதிய சமுதாயத் தொடக்கத்தை உருவாக்கும் இரு மனங்களின் இணை வெனும் திருமணம், மனித வாழ்வின் மகத்தான அத்தியாயம் என்றால் மிகை யாகாது. அத்தகைய திருமணம், பலருக்கு எட்டாக்கனியாக இருப்பதற்கு செவ்வாய் தோஷமே தடையாக இருப்பதாக மக்களிடையே நம்பப்படுகிறது. செவ்வாய் தோஷமென்றால் என்ன? அதன் வலிமை எத்தகையது? உண்மையாகத் திருமணத் தடைக்கு செவ்வாய் தோஷம் காரணமாக இருக்கிறதா என்பது போன்ற பல கேள்விகளுக்கு இந்தக் கட்டுரையின்மூலம் விடையறியலாம்.
தோஷம் என்றால் குற்றம் அல்லது குறை என்று பொருள். நவகிரகங்களுள் ஒருவரான செவ்வாய், உடலின் ரத்த அணுக்கள், ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர். ரத்த அணுக்களின் மூலக்கூறுகளை நிர்ண யித்துப் பிரிக்கக்கூடிய சக்தியுடையவர். அதுமட்டுமல்ல; ஒருவரின் ரத்தத்தைக் கொண்டு ஆண், பெண் என பாலினத்தையும் தீர்மானிக்கலாம். ஆண் ஜாதகத்தில் செவ்வா யைக் கொண்டு ஆண்மை வலிமையை யும், பெண் ஜாதகத்தில் மாதவிடாய் சுழற்சி, கருப்பையின் செயல்பாடு மற்றும் மாங்கல்ய பாக்கியம் போன்றவற்றையும் அறியலாம். மேலும், ஒருவரின் வீடு, வாகன யோகம் பற்றியும் செவ் வாயின் நிலைகொண்டே அறியமுடியும்.
மங்களகாரகனான செவ்வாய் இயற்கை பாவ கிரகம். விவேகமற்ற வேகம், ஆத்திரம், துணிச்சல், படபடப்பு, அஞ்சாமை, சந்தேகம், கொலை, பொய், வஞ்சனை, விபத்து, கண்டம், வெட்டுக்காயம் போன்ற எதிர்மறை உணர்வுகளைத் தூண்டுபவர்.
தான் விரும்பிய ஒன்றை அடைய மற்ற அனைத்தையும் அழிக்கும் குணமுள்ள கிரகம் என்பதால், திருமணம் தொடர் பான பாவகங்களான 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் அமர்வது தோஷ மென்று கருதப்படுகிறது.
ஜனனகால ஜாதகத்தில் ஜென்ம லக்னம், ராசி மற்றும் சுக்கிரன் நிற்கும் இடத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், அது செவ்வாய் தோஷமாகக் கருதப்படும். இதில் சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 2, 4, 7, 8, 12-ல் இருப்பது தோஷம் என்று சொல்லப்பட்டாலும், சுக்கி ரனுக்கும் செவ்வாய்க்கும் சம்பந்த மிருந்தால்தான் இல்லற வாழ்க்கை இனிதாக இருக்கும் என்பதால், சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து செவ்வாய் தோஷம் கணக்கிடுவது தவிர்க்கப்படுகிறது.
அதாவது குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாமிடம், கற்பு எனும் ஒழுக்கத்தைக் குறிக்கும் நான்காமிடம், வாழ்க்கைத் துணை, களத்திர ஒற்றுமையைச் சொல்லும் ஏழாமிடம், கணவனின் ஆயுளைக் குறிக்கும் எட்டாமிடம், இல்லற இன்பத்தைக் கூறும் பன்னிரண்டாமிடம் ஆகிய பாவங்களில் செவ்வாய் அமர்ந்தால், அந்த இடங்கள் நல்ல பலனைத் தராது என்பதால் தோஷமாகக் கருதப்படுகிறது.
அதேபோல, செவ்வாய் ஏழில் இருந்தால்- தனது கொடிய எட்டாம் பார்வையால் இரண்டாமிடத்தைப் பார்ப்பார். நான்கில் இருந்தால்- நான்காம் பார்வையாக ஏழாமிடத்தையும், பன்னி ரண்டில் இருந்தால்- எட்டாம் பார்வையாக ஏழாமிடத்தையும், எட்டில் இருக்கும்போது நேரிடையாக குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தையும், இரண்டில் இருந்தால் எட்டாமிடத்தை யும் பார்த்துக் கெடுப்பார் என்பதாலும் இது தோஷம் எனச் சொல்லப்பட்டது.
எந்த தோஷமாக இருந்தாலும் பெண் ஜாதகத்திற்கே பார்க்க வேண்டும். பெண் என்பவள் புனிதமானவள். குடும்ப உறுப் பினர்களை அனுசரித்துச் செல்லும் நற்பண்பு மிக அவசியம். ஒரு குடும்பத்தை நல்வழிப்படுத்தும் கடமை, மனப்பக்குவம் வேண்டும்.
அதேபோல, பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் ஒரே ஒருமுறை மட்டுமே ஏறவேண்டுமென்பதே நமது பராம்பரியம். ஒருமுறை மட்டும் அமையும் திருமண வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பதால், முன்னோர்கள் பெண்ணின் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் கொடுத் தார்கள். அதுவே தற்காலத்தில் ஆணுக்கும் பார்க்கப்படுகிறது. பெண் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகம் செவ்வாய் என்றால், ஆண் ஜாதகத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரனாகும்.
ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் பாதிக்கப்பட்டால் மனைவிக்கு பாதிப்பு ஏற்படும் அல்லது திருமண வாழ்வு மனசங்கடத்தைத் தரும்விதமாக இருக்கும். ஆணின் ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்படைந்தால் சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு இருக்கும்.
மனைவிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதால், செவ்வாய் தோஷத்தை கவனமுடன் ஆய்வு செய்வது நல்லது. திருமணம் தொடர்பான பாவகங்களில் செவ்வாய் நின்ற பலனைக் காணலாம்.
ஒன்றாம் பாவகம்
ஒரு மனிதனுடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் லக்ன வலிமையே பிரதானம் என்பதால், லக்னத்தில் செவ்வாய் அமர்ந்தாலும் தோஷம் தருவார். லக்னத்தில் செவ்வாய் இருந்தால், உடலில் காயங்கள், தழும்புகள் இருக்கும். முரட்டுத்தனமான தோற்றம், சிவந்த கண், ஆக்ரோஷமான உருவ அமைப்பு, கோப உணர்வு உடையவர்களாக இருப்பார்கள். நான்காம் பார்வையால் நான்காமிடமான சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் சபல எண்ணம் மிகுதியாக இருக்கும். ஏழாம் பார்வையால் களத்திர ஸ்தானத் தைப் பார்ப்பதால், முரட்டு சுபாவத்தால் வாழ்க்கைத்துணையை அடிமைப்படுத்தி இன்பம் காண்பார்கள். 8-ஆமிடம் என்பது ஆயுள், மாங்கல்ய ஸ்தானம். எட்டாமிடத்தைப் பார்ப்பதால் பெண்ணுக்கு லக்னத்தில் செவ்வாய் இருப்பது சிறப்பான பலனல்ல.
ஆணின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய் இருப்பதால், மனைவியை அதிகாரத்துடன் அடிமைப்படுத்தி மரியாதைக்குறைவாக நடத்துவார் என்பதால் கருத்து வேறுபாடு மிகும்.
எனவே, லக்னத்தில் செவ்வாய் இருப்பது சிறப்பான பலனல்ல. லக்னத்தில் செவ்வாய் இருப்பவரை ஏழில் செவ்வாய் இருப்பவரால் மட்டுமே கட்டுப்படுத்தமுடியும்.
இரண்டாம் பாவகம்
இரண்டாம் பாவகம் எனும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால், குடும் பத்தில் சண்டை, சச்சரவுகளும், அமைதியின் மையும், தேள் கொட்டியது போன்ற வாய் வார்த் தைகளும் இருக்கும். வாக்கில் கடுமையும், அதனால் விரும்பத்தகாத சம்பவங்களும் ஏற்படும். பேச்சில் அதிகாரம், பயமுறுத்தும் தோரணை இருக்கும். எதிரிகளை வீழ்த்தும் பேச்சு, அடங்காத தன்னையும் இருக்கும். இரண்டாம் பாவகத்திலுள்ள செவ்வாய், தன் நான்காம் பார்வையால் ஐந்தாமிடத்தைப் பார்ப்பதால் அரசு உத்தியோகம், அதிகாரப் பதவிகள், புகழ் தேடிவரும். ஜாதகர் பெண்ணாக இருத்தால், கணவர் அதிகாரம் மிக்கவராக இருப்பார். ஏழாம் பார்வையால் இரண்டா மிடத்தைப் பார்ப்பதால், பேச்சின்மூலம் வம்பு, வழக்கைத் தேடிக்கொண்டுவருவார்கள்.
8-ஆம் பார்வையால் 9-ஆமிடத்தைப் பார்ப் பதால், பூர்வீக சொத்து தொடர்பான வம்பு, வழக்குகள் அலைக்கழிக்கும்.
நான்காம் பாவகம்
நான்காம் பாவகம் எனும் சுக ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்தால், அதிக நிலபுலன்கள், அசையா சொத்துகள் நிரம்பப் பெற்றவராக இருப்பார். இல்லற வாழ்வில் நாட்டம் மிகுதியாக இருக்கும். பல மலர்களை நுகரும் வண்டாக இருப்பார்கள். அதனால் குடும்பத்தில் சச்சரவு ஏற்படும். மேலும், நான்காம் பார்வையால் ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைப் பார்ப் பதால், தன் வசதிவாய்ப்பால் வாழ்க்கைத் துணையை அடிமைப்படுத்துவார்கள். ஏழாம் பார்வையால் பத்தாமிடத்தைப் பார்ப்பதால் அரசு உத்தியோகம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., போன்ற பதவிகள் தேடிவரும். எட்டாம் பார்வையால் பதினொன்றாமிடத்தைப் பார்ப்பதால், கிளி போன்ற மனைவி இருந்தாலும் குரங்கு போன்ற இரண்டாம் துணை இருக்கும். பகலில் ஒரு குடும்பம், இரவில் ஒரு குடும்பம் என்ற நிலையில் வாழ்நாள் அவஸ்தை இருக்கும்.
ஏழாம் பாவகம்
களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாமிடத்தில் செவ்வாய் நின்றால், வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்ள மாட்டார். கோபம், எதிர்பார்ப்புகள் அதிகம் மிகுந்தவர் என்பதால் கருத்து வேறுபாடு இருக்கும். தனது நான்காம் பார்வையால் பத்தாமிடத்தைப் பார்ப் பதால், பதவி கர்வத்தில் தம்பதிகள், தாம் குடும்ப உறுப்பினர்கள் என்பதை மறந்து வீட்டிலும் அதிகாரிகளாகவே வாழ்வார்கள். ஏழாம் பார்வையால் லக்னத்தைப் பார்ப்பதால், தம்பதிகள் தவறை மறந்து மன்னிக்கும் தன்மை யற்றவர்கள். எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்கும் மனப்பக்குவம் இருக்காது. விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லாமல், விவேகமற்ற வேகத்தால் பிரச்சினை பெரிதானபிறகு வருந்துவார்கள். எட்டாம் பார்வையால் இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால், தன் காரியத்தை சாதிக்க குடும்ப உறுப்பினர்கள்மேல் எந்தப் பழியும் சுமத்த அஞ்சாதவர்களாக இருப்பார்கள். பழிவாங்கும் குணமும் இருக்கும்.
எட்டாம் பாவகம்
எட்டாம் பாவகம் என்பது ஆண்களுக்கு ஆயுள் ஸ்தானம். பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமாகும். தம்பதிகளுக்கு எட்டாமிடத்தில் செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ ஆணின் ஆயுளுக்கோ பெண்களின் சுமங்கலித்தன் மைக்கோ பங்கம் ஏற்படலாம். லக்னம் வலிமை யற்றவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மிகுதியாக இருப்பதுடன், சிறிய பிரச்சினைக் குக்கூட கட்டப்பஞ்சாயத்து, நீதிமன்ற வழக்கு என அலையும் மனோபாவம் உருவாகும்.
அத்துடன், நான்காம் பார்வையால் பதினொன் றாம் இடத்தைப் பார்ப்பதால், தம்பதிகள் மன ஆறுதலுக்காக புதிய நட்பைத் தேடுவார்கள். கூடா நட்பு கேடில் முடியும். ஏழாம் பார்வை யால் இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத் தைப் பார்ப்பதால், பிரச்சினையில் உழன்று மனவெறுப்படைந்து, சந்நியாச எண்ணம் மிகுந்து, குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவாழ்வார்கள். எட்டாம் பார்வையால் மூன்றாமிடம் எனும் தைரிய, வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், பெண்களுக்கு விரக்தி, டென்ஷன், இடம் மாறும் குணம் இருக்கும். ஆண்களுக்கு இயலாமை, மன பாதிப்பு ஏற்படும்.
பன்னிரண்டாம் பாவகம்
பன்னிரண்டாம் பாவகம் எனும் அயன, சயன, விரய ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால், இல்வாழ்வில் நாட்டமின்மை உள்ளவராக இருப்பார். தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வு, சோகம், தனிமையுணர்வு நிரம்பியிருக்கும். நான்காம் பார்வையால் மூன்றாமிடமான தைரிய, வீரிய ஸ்தானத்தைப் பார்ப்பதால், பிரச் சினைகளை எதிர்கொள்ளும் மனப்பான்மை இல்லாத கோழைகளாக இருப்பார்கள். ஆண்களுக்கு இல்லற இன்பத்தைக் குறைப் பார். இல்லற இன்பத்திற்குத் தகுதியில்லாத வராக்குவார். ஏழாம் பார்வையாக ஆறாமிடம் எனும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தைப் பார்ப் பதால், ஆரோக்கியக் குறைபாடு, பொருள் இழப்பு மிகுதியாக இருக்கும். எட்டாம் பார்வை யால் ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தைப் பார்ப்பதால் துறவு மனப்பான்மை மேலோங்கும்.
குடும்பத்தைவிட்டுப் பிரிந்துவாழும் நிலையே அதிகமாக இருக்கும். வெளிநாட்டில் வாழ்பவர் களாக இருப்பார்கள் அல்லது சிறையிலும் வாழ்க்கையைக் கழிக்க நேரலாம்.
செவ்வாய் எவ்வளவு அசுபத்தன்மையான வேலையை நடத்துகிறார் என்பதைப் படித்த வுடன் செவ்வாயைப் பற்றிய பயவுணர்வு அதிகமாகக்கூடும். அதனால்தான் தற்காலத்தில் ஆணின் ஜாதகத்திலுமுள்ள தோஷத்திற்கு முக்கி யத்துவம் கொடுத்து திருமணம் நடத்த வேண்டிய நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டு விட்டது. மேலேகூறிய அனைத்தும் செவ்வாய் தோஷம் தொடர்பான பொதுவான பலன்கள்.
1, 2, 4, 7, 8, 12 ஆகிய பாவங்களில் நிற்கும் செவ்வாயின் நிலை என்ன? அவர் லக்னரீதியான சுபரா அல்லது பாவியா? சுபப் பலன் தருவாரா அல்லது அசுபப் பலன் தருவாரா? செவ்வாயுடன் இணைந்த கிரகம், பார்த்த கிரகம், நட்சத்திர சாரத்திற்கேற்பவும் பலன்கள் மாறுபடும். செவ்வாய் தசை எப்பொழுது வருகிறது என்பது போன்ற பல்வேறு காரணிகளை சரிபார்த்தே செவ்வாய் தோஷப் பலனைத் தீர்மானிக்கவேண்டும் என்பதால், செவ்வாய் நின்ற நிலைக்கு முக்கியத்துவம் தரவேண்டியதில்லை.
செவ்வாய் 90 விழுக்காடு ஜாதகத்தினருக்கு நன்மையே செய்வார். பத்து விழுக்காடு ஜாதகத்தினரே செவ்வாய் தோஷத்தால் பாதிப்பை சந்திப்பர். தோஷத்தை ஏற்படுத்தும் பாவகங்களில் செவ்வாய் இருந்தாலும் சில விதிவிலக்குகளும் உண்டு.
செவ்வாய் தோஷ விதிவிலக்குகள்
மேஷம், விருச்சிகத்தில் ஆட்சிபலம் பெற்ற செவ்வாய் பாதிப்பை ஏற்படுத்தாது.
உச்சம் பெற்ற செவ்வாய் மிதுனம், கும்ப லக்னத்திற்கு மட்டும் தோஷமாகும்.
கடகம் செவ்வாயின் நீச வீடு. நீசபெற்ற செவ்வாய்க்கு வலிமை குறைவதால் தோஷ மில்லை. நீசம் பங்கமானால் தோஷமாகும்.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள், ராசியில் பிறந்தவர் களுக்கு லக்னரீதியான சுபகிரகம் என்பதால் செவ்வாய் தோஷம் பாதிப்பை ஏற்படுத்தாது.
செவ்வாய் லக்ன சுபரின் சாரம் பெற்றால் தோஷமாகாது.
செவ்வாய்க்கு குருவின் சம்பந்தம், பார்வையிருந்தால் பாதிப்பிருக்காது.
சனி, ராகு- கேதுக்களுடன் செவ்வாய் இணையும்போது தோஷ வீரியம் சற்றுக் குறையும். ஆனால் இக்கிரகங்களுடன் செல்வாய் இணைந்து நின்ற பாவகத்தின் தன்மை செயலிழக்கும்.
அஸ்தமன செவ்வாய்க்கு வலிமையில்லை என்பதால் தோஷமில்லை.
செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் தோஷமில்லை.
மேலேகூறிய அனைத்துநிலைகளிலும் செவ்வாய் தோஷம் விலக்குப் பெற்றாலும், அனுபவத்தில் செவ்வாய் தோஷம் 90 விழுக்காடு நற்பலன்களையே வழங்குகிறது. என் அனுபவத் தில், செவ்வாய் நல்ல யோகம்தரும் நிலையில் 3, 6, 8, 12-ல் மறையாமலிருந்தால் மட்டுமே, ஒரு ஆணால் உற்சாகமாக அனைத்து செயல்களிலும் ஈடுபடமுடியும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம், பொன், பொருள் சேர்க்கை, அரசுவழி ஆதாயம் கிடைக்கும். கால்நடை அபிவிருத்தி, விவசாயத்தில் மேன்மை உண்டாகும்.
ஆண் ஜாதகத்தில் செவ்வாய் மறைவு பெற்றால் சொத்துசுகம் இருக்காது. இருந் தாலும் பயனற்றுப்போகும். உறவுகள் பகையாகும். பெண் ஜாதகத்தில் செவ்வாய் சுப ஸ்தானத்தில் வலிமையுடன் இருந்தால், புகுந்த வீட்டில் தனக்கென்று ஒரு தனி ராஜாங்கம் அமைத்து, குடும்ப உறுப்பினர் களை தன்வசப்படுத்தி, முடிசூடா ராணியாக வாழ்நாள் முழுவதும் திகழ்கிறார்கள். வலிமையற்ற செவ்வாய், பெண்கள் பலருக்குத் திருமணத்தை நடத்துவதில் சிரமத்தைத் தருகிறது. திருமணம் நடந்தபிறகு, திருமணமே செய்யாமல் வாழ்வைக் கழித்திருக்கலாமே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று, சமுதாயத்தில் கணவரை கௌரவப்படுத்த முயன்று மனநோயை வரவழைத்த பெண்களே அதிகம். கணவனைப் பாம்பென்று தாண்டவும் முடியாமல், பழுதென்று நினைத்து மிதிக்கவும் முடியாமல் வாழவைக்கிறது.
மூன்றுநிலைகளில் மட்டுமே செவ்வாய் கடுமையான பாதிப்பைத் தருகிறது.
1. செவ்வாய் வக்ரம் பெற்ற பெண்கள், மனநிறைவான மணவாழ்வு அமையவில்லை என்றே கூறுகிறார்கள்.
பழனி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட, வாழ்வின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகி, மனநிறைவான மண வாழ்க்கை கிட்டும்.
2. மேஷம், சிம்மம், தனுசில் செவ்வாய் கேது சாரம் பெற்று நின்றால் அல்லது செவ்வாய், கேதுவுடன் இணைந்து எங்கு நின்றாலும் 27 வயதிற்குமேல்தான் திருமணம் நடக்கிறது. திருமணமானபிறகு ஏன் திருமணம் நடந்ததென்று வருந்தும் வகையில்தான் வாழ்க்கை இருக்கும். கணவனைக் கடும் பகையாளியாக்கி நீதிமன்றப் படியேறிய பெண்களே அதிகம். வெகுசில பெண்கள் குடும்பம், குழந்தைகள், மானம், மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள். இன்னும் சில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடின்றி, தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும்பகுதி பிரிந்தே வாழ்கிறார்கள்.
செவ்வாய்க்கிழமை விரதமிருந்து வீரபத்திரரை வழிபட தோஷம் நிவர்த்தியாகும்.
3. பாவகர்த்தரி தோஷம்.
காரக கிரகத்திற்கு இருபுறமும் அசுப கிரகம் நின்றால் காரக கிரகத்தின் இயக்கத்தை மட்டுப்படுத்தும். உதாரணமாக செவ்வாய்க்கு ஒருபுறம் கேது, மறுபுறம் சனி இருந்தால், செவ்வாயின் இயங்கும் தன்மை சனி மற்றும் கேதுவால் தடைப்படுத்தப்படும்.
அதுபோல செவ்வாய், சனி, கேது ஒரு ராசியில் சேர்ந்திருந்தாலும்; செவ்வாயும் சனியும் சேர்ந்து, முன் ராசியில் கேது இருந்தாலும் மேற்சொன்ன பலனையே தரும். ராசிக்கட்டத்தில் எந்த வீட்டில் இந்த அமைப்பிருந்தாலும் இது பொருந்தும். முதிர்கன்னியானபிறகு திருமணம் அல்லது திருமணமே நடக்காத பெண்கள் ஜாதகத்தில் இது போன்ற அமைப்பைக் காணலாம்.
உண்மையில், செவ்வாய் தோஷம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. பல திருமணத் தரகர்கள் பத்து ரூபாய் திருமணப் பொருத்தம் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு மக்களைப் படுத்தும் பாடு அளப்பரியது. தவறான செவ்வாய் தோஷக் கணிப்பால் பலரின் வாழ்க்கை கேள்வியாகவே இருக்கிறது. ஒரு ஜாதகத்தை நவகிரகங்களுமே இயக்கும். செவ்வாய் தசை, புக்தி, அந்தரக் காலங்களில் பாதிப்பு அதிகமாகவும், மற்ற காலங்களில் மிதமாகவும் இருக்கும். எனவே செவ்வாய் தோஷம் கண்டு அஞ்சத் தேவையில்லை.
பரிகாரம்
செவ்வாய்க்கிழமை சிவப்பு நிற ஆடை யணிந்து விரதமிருந்து, மலைமீதுள்ள முருகனை வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
சென்னை அருகிலுள்ள சிறுவாபுரி முருகனை வழிபடவேண்டும்.
செவ்வாய்க்கிழமை சிவப்புத் துவரை தானம் செய்ய வேண்டும்.
தினமும் கந்தர் சஷ்டிக் கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல்வேண்டும்.
செவ்வாய் தசைக்காலங்களில் சிரமம் மிகுதியாக இருந்தால், இரத்த தானம் செய்யவேண்டும்.
பூமி, உடன்பிறந்தவர்கள்மூலம் எழும் பிரச்சினை தீர சிவப்பு நிறப் பசு தானம் செய்யலாம்.
கும்பகோணம் அருகே வைத்தீஸ்வரன் கோவில் சென்று வழிபாடு செய்யவேண்டும்.
செல்: 98652 20406