வாழ்நாளில் ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய நோய் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளக்கூடிய இடமாக ஆறாமிடம் இருக்கிறது. அன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள், ஜோதிட மும் கற்றுக்கொண்டனர். ஏனென்றால் ஒருவரின் ஜாதத்தின்மூலம் அவருக்கு எந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும்- எந்த வருடத்தில் நோய் ஏற்படும்- எப்போது நோய் தீரும்- மருந்து கொடுத்தாலும் பூரணகுணம் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கி றதா என்பதையறிந்து மருந்துகொடுக்க ஜாதகம் உறுதுணையாக இருந்துள்ளது. மேலும் வாழ்க்கையில் யார் யார் எதிரியாக வருவார்- எதிரியால் என்னென்ன பாதிப்பு எப்போதெல்லாம் வருமென்பதை அறிந்துநடந்தனர். ஒருவருக்கு எந்தவகையில், யாரால், எப்போது கடன் வரும் என்பதை ஆறாமிடத்தை அறிந்தால் தெரிந்துவிடும். காரணமில்லாமல் சிலரை வெறுப்பது, விரோதமாக நடத்தல், தேவையின்றி விவாதம் செய்து சிறைசெல்லுதல், மன உளைச்சலால் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சித்தல், நாம் நேசிக்கும் பொருள் திருடுபோதல் போன்றவை எந்தெந்த காலகட்டத்தில் நடைபெறுமென்பதை ஆறாமிடத்தின்மூலம் அறியலாம்.
ஆறாமிடம்
ஆறாமிடத்தில் முழு பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது மற்றும் தேய்பிறைச் சந்திரன், புதன்கூட நன்மைகளையே செய்யும். அதாவது ஜாதகர் செய்யும் செயல் தவறாக இருந்தாலும் அகப்பட்டுக்கொள்ளாமல் தப்பித்து விடுவார். முழு சுப கிரகங்களான குரு, சுக்கிரன் ஆறாமிடத்தில் இருந்தால் நன்மை தராது. அனைத்து சுகங்களும் ஜாதகருக்கு இருந்தாலும்,கிடைத்தாலும் அனுபவிக்க முடியாத சூழலே உண்டாகும். முதலிலில் ஆறா மிடத்தில் நின்ற கிரகங்களின் பலன்களைத் தெரிந்துகொள்வோம்.
சூரியன்
பாவ கிரக மான சூரியன் ஆறாமிடத்தில் நின்றால் எதையும் சந்திக்கும் ஆற்றல், தைரியம் உண்டாகும். ஸ்தானம் பலம்பெறுவதால் எதிரிகளை வெல்லும் அதிர்ஷ்ட யோகமுண்டு. சூரியன் தந்தையைக் குறிக்கும் கிரகமென்பதால், ஆறாமிடத்தில் இருந்தால் தந்தைக்கு பாதிப்பு, தந்தையால் பாதிப்பு, தந்தைவழி சொந்தங் களால் தொல்லை, இழப்பு, பிரச்சினை உண்டாகும். பங்காளி, எதிரி, தந்தை கடனால் பாதிப்படைவார். தந்தையால் கடன்பட நேரும். நோய் ஸ்தானமான ஆறில் நிற்கும் சூரியனால் ஜாதகருக்கு உஷ்ணம் சம்மந்தமான நோய், தலைப்பகுதியில் பாதிப்பு, பித்தம் தலைக்கேறி தொல்லை தரும். தந்தைக்கு வந்த நோய் ஜாதகருக்கும் வரும். எதிலும் முதன்மை பெறக்கூடிய யோகமும், தலைமைப் பண்பால் தலைவனா கும் யோகமும் ஏற்படும். கோட்சாரத்தில், பிறந்த ஜாதகத்தில் சனி ஆறில் இருக்கும் சூரியனைப் பார்க்கும் காலம் வாகன விபத்தால் எலும்பு முறிவு, இரும்பு, கால்சியம் சத்து குறைபாடு ஏற்படும். குரு பார்வை இருந்தால் உடல்நிலை முன்னேற்றம், அரசாங்க நன்மையைத் தரும்.
சந்திரன்
தேய்பிறைச் சந்திரனால் கற்பனை செய்தது போன்ற தீய வாழ்க்கை கிடைக்கும். சந்திரன் ஜாதகத்தில் கெட்டவனாக இருந்து ஆறில் நின்று தசை நடந்தால், ராஜயோகப் பலனைத் தரும். குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகப் பார்வை பிறர்போற்ற வாழ வழிவகுக்கும். சொகுசான வாழ்க்கை, வெளிநாட்டு வாழ்க்கை, வெளிநாட்டுத் தொடர்பு, கடல்கடந்து, கடலோரப் பகுதிகளில் சென்றுவாழ நன்மை தரும். ஆறில் சந்திரன் இருப்பது தாயாருக்கு பாதிப்பு, தாயாரால் பாதிப்பு, தாய்வழி உறவுகளால் தொல்லை, மனநோய், தோல்நோய், விஷத்தால் தற்கொலை முயற்சி, சைனஸ், ஆஸ்துமா, நீர் சம்பந்தப்பட்ட நோய், ஆபத்து, நீரிழிவு நோயை உண்டாக்கும். சுபகிரக வலுப்பெற்றால் தீமையான பலன் குறையும். சனி, சந்திரனைப் பார்க்கும் காலம் பைத்தியக்கார நிலையைத் தரும். சிந்தித்து செயல்படவேண்டும். பாவகிரகப் பார்வையானது ஆசைகாட்டி மோசத்தையே செய்யும். கடன்வாங்கி செய்தால், கடனைக் கட்டமுடியாத சூழ்நிலை வரும். கோட்சாரமும் கெட்டநிலையில் இருந்தால் ராஜதண்டனை அடைவர். தகுதிக்கு மீறிய செயல்களில் ஈடுபடும்போது கவனம் தேவை.
செவ்வாய்
ஆறாமிடத்தில் செவ்வாய் தைரியம், தன்னம்பிக்கை, பிடிவாதம்கொண்டு நினைத் ததை சாதிக்கவைக்கும். பிறர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்துகொள்வர். எளிதில் உணர்ச்சிவசப் படக் கூடியவர். சகோதர் களால் பாதிப்பு, சகோதரர் களுக்கு பாதிப்பு தரக்கூடியவர். இவரால் நண்பர்களுக்கு, நண்பர்களால் இவர்களுக்குத் தொல்லை, பங்காளிகளால் தீமை உண்டாகும். சூரியன், செவ்வாய் இணைவு மருத்துவராக உருவாக்கும். அல்லது மருத்துவம் சார்ந்த துறைகளில் பணிசெய்வர். சூரியன், செவ்வாய் சேர்க்கைபெண்களுக்கு மாங்கல்யத்தை பாதிக்கும். ஆறில் உள்ள சூரியன் ரத்தப் புற்றுநோய், ரத்த கொதிப்பு, நுரையீரல் பாதிப்பு, இதயக் கோளாறு, விபத்தால் வெட்டுக்காயம், அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, எலும்பு மஜ்ஜைகளில் பாதிப்பு ஏற்படுத்தும். செவ்வாய் தன்னுடைய தசா காலங்களில்கூட ராஜயோகப் பலன்களைக் குறைந்த அளவே தரும். பாவகிரகங்கள் பலம்பெற்று, பாவகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் திடீர் யோகத்தைத் தந்து புகழ்பெற்றவராக்கிவிடும்.
புதன்
ஆறாமிடத்து புதன், மதியூகத்தால், வரும் இடர்களை அசாதரணமாக சந்தித்து வெற்றிகொள்ள உதவும். இரட்டை மனநிலை கொண்ட புதன் அதிகம் நன்மைகளையும், குறைவான தீமைகளையே கொடுக்கும். பாவகிரகத் தொடர்பு, பார்வைகள் நேர்மையற்ற முறையில், அரசுக்கு மறைமுகமான வகையில், முறையற்ற வகையில் பொருளாதாரத்தைப் பெற்றுத் தரும். கொடுக்கல்- வாங்கல் தொழில் சிறக்கும். எதிரிகளை எளிதில் வசீகரித்து நினைத்ததை சாதிப்பர். பதவி, புகழ், அந்தஸ்து பெறுவர். சுபகிரகப் பார்வை, சேர்க்கை ஆரம்பத்தில் நன்மை தந்தாலும், பின்பு தோல்விகளையும், நஷ்டத்தையுமே வழங்கும். நுட்பமான விஷயங்களை ஆராய்ச்சி செய்தல், புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தரக்கூடிய அறிஞர். மாமன்வழி உறவுகளால் பாதிப்பு, மாமனாரால் தொல்லை அனுபவிப்பர். வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், வாயு தொந்தரவு, குடல் பிரச்சினை, மூலம், பௌத்திரம், கிட்னி கல் போன்ற குடல்சார்ந்த வியாதிகளே தொந்தரவாக அமையும். பாவகிரகப் பார்வை வலுத்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும். தோல்வியாதி உண்டாகும்.
குரு
ஆறாமிடத்தில் குரு எந்த விதத்திலும் நன்மை தராது. குரு முழு சுபர். நேர்மை, நன்மை தரக்கூடியவர். ஜாதகத்தில் குரு கெட்டுவிட்டால் மந்தபுத்தி, பொறுமை, சோம்பேறியாய் இருப்பது, குற்றத்தைப் பொறுத்துக்கொள்வதால் கோழையாக்கப்படுவர். கல்வியில் தடை, இடமாற்றம் ஏற்படும். பட்டயக் கல்வி பெறுவர். பல கல்வி, கலைகள் பெறும் யோகம் ஏற்படும். அடிக்கடி மனதை மாற்றிக்கொள்ளும் குழப்பவாதி. குரு தன் வீட்டைப் பார்த்தல், சுபத்தன்மை பெறுதல், சுபகிரகப் பார்வை, சேர்க்கை பெறுதல் நன்மையைத் தரும். கழுத்து வலிலி போன்ற நோய்களால் அவதிப்படுவர். எதிரியால் இம்சை, கடன் வாங்குதல், கொடுத்தலால் தொல்லை இருக்கும். குரு உச்சபலம் பெற்றால் கெட்டவர்கள் யாரென்று சீக்கிரமே உணர்ந்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்பர். பங்காளிகள், நண்பர்கள் தவறான வழியையே காட்ட நினைப்பர். குரு கடைசி நேரத்திலாவது காப்பாற்றி நன்மையைத் தந்துவிடுவார். குரு கெட்டால் மூளை பாதிப்பு, அடிக்கடி ஜலதோஷம், கவனக் குறைவாக இருந்தால்சர்க்கரை வியாதி உண்டாகி, உடல்நலக் குறைவு காரணமாக சோம்பல் ஏற்படும்.
சுக்கிரன்
ஆறாமிடத்திலுள்ள சுக்கிரன் ஆடம்பரம், சந்தோஷம், சுகத்தைத் தரவிடாமல் தடுப்பார். கண்ணுக்கெதிரே அனைத்தும் இருந்தும் அனுபவிக்க விடாது. அனைத்து சுகங்களையும் இழக்கநேரும். முற்றும்துறந்த முனிவர்போல் பேசுவர். ஆனால் பொறாமை குணம் கொண்டவர். தான் வாழாததை யாரும் வாழக்கூடாதென தடுத்து நிறுத்துவார். நெருங்கிப் பழகாமல் தூரத்திலேயே இவருடைய நட்பை வைத்துக்கொண்டால் பழக இனிமையானவர். சொகுசாக வேலை செய்யும் சோம்பேறி. என்றும் இளமை யாக நினைத்துக்கொள்பவர். ஊர்சுற்றி. பிறர் பணத்தில் வாழவிரும்பும் கருமி. பாவகிரகப் பார்வை பெற்றால் குணக்கேடு கொண்டிருப்பார். நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார். பெண்களால் ஆண்களுக்கு தொல்லையும் நோயும் ஏற்படும். பால்வினை நோய், பிறப்புறுப்பில் நோய், சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படும். உஷ்ண வியாதியால் அவதிப்படுவர். சனி, சுக்கிரன் இணைவு நீரிழிவு நோயை உண்டாக்கி தொல்லைதரும். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் வீடு, மனை, வாகனத்தால் பாதிப்பு, இழப்பு ஏற்படும். கடன் தொல்லை, பணப் பற்றாக்குறை இருந்துகொண்டே இருக்கும்.
சனி
அசுபரான சனி ஆறில் நிற்பது நன்மை யையே தரும். பூரண ஆயுள் உண்டு. உள்ளூர சின்னச்சின்ன வியாதிகள் அவ்வப்போது தொல்லை தரும். எதிரிகளை துவம்சம் செய்யும் ஆற்றல், யாரும் செய்யத் தயங்குவதை துணிச்சலுடன் செய்துமுடிக்கும் வல்லமை மிக்கவர். எங்கும் எதிலும் முதன்மையாக இருக்கவே விரும்புவார். மந்தபுத்தி பெரிய இடைஞ்சலாக இருக்கும். சமூகசேவை செய்யும் நிலை உருவாகும். எல்லாவற்றிலும் நியாயம் தேடுவார். சிறுவயதிலேயே பொருளாதாரத் தேடல் தொடங்கிவிடும். கடுமையான உழைப்பாளி. பிறருக்கு உதவும் சிந்தனை உண்டு. நரம்பு சம்பந்தப்பட்ட வியாதி ஏற்படும். விஷத்தால் கண்டமுண்டு. ஏழரைச்சனிக் காலத்தில் விபத்து, கை, கால்களில் அடிபடுதல், எலும்பு முறிவு, கண்டம் ஏற்படும். சுபகிரகப் பார்வை, சேர்க்கை இருந்தால் மக்களால் போற்றப் படும் யோகம் பெறுவார். எதிலும் போராடி வெற்றிபெறும் சூழலே நடக்கும். கஷ்டத்தை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். போராளி. மீண்டும் மீண்டும் வெற்றிபெறக் கூடியவர்.
ராகு
ஆறாமிட ராகு எதிரிகளை ஏமாற்றி வேலைவாங்கும் ஆற்றலைத் தரும். எதிரிகளால் நன்மைகள் உண்டு. ஏளனமாகப் பேசுபவர்கள் முன்னால் வாழ்ந்துகாட்டி வெற்றிபெறுவர். சோதனைகளைக் கண்டு கொள்ளாதபடி நன்மைக்கான வாய்ப்பு வரும். ராகு பலமானால் எதிரி அஞ்சுவர். அப்பாவின் அப்பாவுக்கு வந்த வியாதி வரும். ஏழரைச்சனியும், ராகு தசையும் ஏற்பட்டால் வலது கை, கால்களில் எலும்புமுறிவு ஏற்படும். நாகத்தால் விஷம் ஏறும் நிலையோ, மருந்தால் தீங்கு, அவசரப்பட்டு தற்கொலை செய்யும் எண்ணத்தையோ தரும். எதிர்பாலிலினத்தவரால் நோய், நொடிகள் உருவாகும். ஏமாற்றம், தோல்வி கிடைப்பது போல், "ராகுபோல் கொடுப்பாரில்லை' என்பதற்கிணங்க திடீர் பணம், பெயர், புகழ் கிடைத்து ராஜவாழ்க்கையை சிலர் பெறுவர்.
கேது
ஆறாமிடக் கேது வயிறு சம்பந்தமான நோயைக் கொடுக்கும். அதாவது குடல் அலர்ஜி, ஜீரணக் கோளாறு, அசிடிட்டி, அல்சர், குடல் வால், மூலம், ஆசனவாய் பிரச்சினையைத் தரும், தசாபுக்திகள் சரியாக இல்லையென்றாலோ, ஏழரைச்சனி, கண்டச்சனி, அஷ்டமச்சனி, அர்தாஷ்டமச் சனியாக இருந்தாலோ அறுவை சிகிச்சை ஏற்படக்கூடும், மனம் வெறுத்து "என்னடா வாழ்க்கை' என நொந்து, இறப்பிற்குப் போகுமளவு விஷபாதிப்பு குடும்பத்தில் ஏற்படக்கூடும். கேது தசை என்றால் உடல், மனம் கெட்டு பற்றற்ற நிலைக்குச் சென்றுவிடும் சூழல் அமைந்துவிடும். ஆறில் கேது சோதனைகள் தந்தாலும், வெற்றிகளையும் எதிர்பாராத அதிர்ஷ்ட வாழ்க்கையையும் தரும். குரு பார்வை ஜாதகரை கோடீஸ்வரராக மாற்றிவிடும். நோய், எதிரி, கடனின்றி அதிசய அற்புதங்களை சிலருக்கு கேது நடத்திக்காட்டுவார்.
பரிகாரம்
ஆறாமிடத்தில் இருக்கும் கிரகங்களின் தலங்களுக்குச் சென்று அர்ச்சனை, அபிஷே கம் செய்துவந்தால் நோய் தீரும். எதிரிகள் மட்டுப்படுவர். கடன் பிரச்சினைகள் தீர்ந்து நல்ல புத்தி பிறக்கும். உடலுக்கேற்ற உணவுப் பழக்கத்தை மேற்கொண்டால் தெளிவான சிந்தனை பிறந்து நோய், எதிரி, கடனிலிலிருந்து விடுபடலாம்.
செல்: 96003 53748