சென்ற இதழ் தொடர்ச்சி...

ஜாதகத்தில் ஆறாம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தின் பொதுப்பலன்களைக் கடந்த இதழில் கண்டோம். இனி 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

Advertisment

இதன் அதிபதி செவ்வாய். இது சர ராசி. சர லக்னத்தின் தன்மை, தன்னுடைய செயல் களை விரைவாகச் செய்து முடித்துவிடும். இதன் 6-ஆம் அதிபதி புதன். 8-ஆம் அதிபதி செவ்வாய். பாதகாதிபதி சனி. இவர்களுக்கு புதன் தசை, சனி தசை, செவ்வாய் தசை வரும் காலங்களில் மட்டும் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் இருக்கும்.

அஸ்வினி நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கு, செவ்வாய் தசையில் 6-ஆம் பாவக இயக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்களுக்கு ஆயுள்காலத்தில் சனி, புதன் தசை வரும் வாய்ப்பு மிகக்குறைவு.

ஜென்ம நட்சத்திர நாளில் வயதானவர்களுக்கு மருத்துவ உதவி செய்துவர வேண்டும்.

Advertisment

பரணி நட்சத்திரத்தைச் சார்ந்தவர்களுக்கு, 6-ஆம் பாவக இயக்க பாதிப்பு மத்திமமாக இருக்கும். இவர்களுக்கு வயதான காலத்தில் சனி தசை வரும். பரணி நட்சத்திரம் சனியின் நட்பு கிரகமான சுக்கிரனின் நட்சத் திரம் என்பதால், சுபப் பலனே மிகும். உங்களின் அதிதேவதை துர்க்கையை செவ்வாய்க் கிழமைகளில் வழிபட சுபப்பலன் மிகும். கிருத்திகை நட்சத்திரத்திற்கு, 6-ஆம் பாவக இயக்கம் செவ்வாய் தசையில் மிகமிகக் குறைவாகவே இருக்கும். சிறு நோய்த்தாக்கம் மட்டுமே இருக்கும். இவர் களுக்கு சனி தசைக்காலத்தில்- ஓய்வுபெறும் காலத்தில் வந்து சிரமம்செய்யும். ஞாயிற்றுக் கிழமைகளில் சிவ வழிபாடு செய்வதுடன் பிரதோஷ வழிபாடு நல்ல பலன் தரும்.

ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய், சனி லக்ன சுபர்களின் சாரம் பெற்று, மறைவு ஸ்தானங் களில் சம்பந்தம் பெறாதபோது தாக்கம் குறையும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதம்)

இதன் அதிபதி சுக்கிரன். இது ஸ்திர ராசி. இதன் செயல்பாடு நின்று நிதனமாக இருக்கும். இதன்தாக்கம் நீண்டகாலத்திற்கு இருக்கும். பாதிப்பிற்குரிய தசை முடிந்ததால்கூட தாக்கம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களின் 6-ஆம் அதிபதி சுக்கிரன். 8-ஆம் அதிபதி குரு. பாதகாதிபதி சனி. இவர்களுக்கு சனி, குரு தசைக் காலங்களில் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கு, லக்னாதிபதி சுக்கிரனே 6-ஆம் அதிபதியாக வருவதால் பாதிப்பு நீண்டகாலத்திற்கு இருக்கும். அத்துடன் ரிஷபத்தினருக்கு சுக்கிர தசை வரும் வாய்ப்பே குறைவு. இவர்கள் ராகு தசை முடியும்வரை கஷ்டம் என்றால் என்னவென்பதே தெரியாதவர்கள்.

Advertisment

கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு குரு தசைக் காலத்தில் பாதிப்பு குறைவாகவும், சனி தசைக் காலத்தில் பாதிப்பு மிகுதியாகவும் இருக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரம் செய்துவர வேண்டும். ஜென்ம நட்சத்திர நாளில் ஆன்மிக குருமார்களின் ஆசிபெற்று, இயன்ற வரை அன்னதானம் செய்ய நல்ல பலன் தரும்.

ரோகிணி நட்சத்திரத்தினருக்கு குரு, சனி தசைக் காலங்களில் பாதிப்பு மிக மிக அதிகம். சிலருக்கு குழந்தைப்பருவத்தில் பாதிப்பை அதிகப்படுத்தும் என்பதால், ரோகிணி நட்சத் திர அன்பர்கள் பிரம்மா வழிபாடு அதிகம் செய்வதுடன், திங்கட்கிழமைகளில் பச்சரிசி உணவு உண்டு, பௌர்ணமி நாளில் விரதமிருந்து சத்திய நாரா யணரை வழிபட கைமேல் பலன் கிடைக்கும்.

மிருகசீரிஷ நட்சத்திரத் தினருக்குப் பிறக்கும்போதே உடல் பலவீனமாக இருக்கும். குரு தசைக் காலத்தில் பாதிப்பு குறைவாகவும், சனி தசைக் காலங்களில் பாதிப்பு அதிகமாகவும் இருக்கும். இவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் முருக வழிபாடு செய்வதுடன், சித்தர் ஜீவசமாதி வழிபாடும் செய்து வரவேண்டும். ஜனனகால ஜாதகத்தில் குரு, சனி லக்ன சுபர்களின் சாரம் பெற்று, மறைவு ஸ்தானங்களில் சம்பந்தம் பெறாத போது தாக்கம் குறையும்.

மிதுனம்

(மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதம்)

இதன் அதிபதி புதன். இது உபய ராசி.

இதன் செயல்பாடு மந்தமாக அல்லது விட்டுவிட்டு இருக்கும். இவர்களுக்கு சுயமுடிவு எடுக்கும் திறன் குறைவு. பொதுவாக, உபய ராசியினர் பத்தாயிரம் ரூபாய் பொருளை பத்து தவணை கட்டி வாங்குவார்கள் என்பதால், இவர்களுக்கு 6-ஆம் பாவக இயக்கம் மந்தகதியுடன் இயங்கிக்கொண்டே இருக்கும். இவர்களின் 6-ஆம் அதிபதி செவ்வாய், 8-ஆம் அதிபதி சனி, பாதகாதிபதி குரு என்பதால், செவ்வாய், சனி, குரு தசைக் காலங்களில் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கத்தின் பாதிப்பு மிகும்.

மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதத்தினருக்கு குரு தசைக் காலத்தில் குரு, செவ்வாயின் நட்பு கிரகம் என்பதால் பாதிப்பே இருக்காது. செவ்வாய், சனியின் பகை கிரகம் என்பதால், சனி தசையின் செவ்வாய் புக்திக்காலத்தில் மட்டும் பாதிப்பு மிகுதியாக இருக்கும். சனி மிதுனத்திற்கு 9-ஆம் அதிபதி என்பதால், பாதிப்பு மந்தகதியுடன் இருக்கும். இவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் விநாயகர் வழிபாடு செய்தல் நலம்.

திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்த வர்களுக்கு குரு தசைக் காலத்தில், பாதிப்பு குறைவாகவும், சனி தசைக் காலத்தில் பாதிப்பு அதிகமாகவும் இருக்கும். இவர்களுக்கு செவ்வாய் தசை வரும் வாய்ப்பே கிடையாது. திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் நடராஜர், ராமானு ஜரை வழிபாடுசெய்ய நன்மை தரும்.

புனர்பூச 1, 2, 3-ஆம் பாதத்தினருக்கு பிறக்கும்போதே குரு தசை இருக்கும்.

அதனால் சிறு குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்படும். சனி தசைக் காலம் படிப்பில் மந்தத் தன்மையை ஏற்படுத்தும். மற்ற பாதிப்பு எதுவும் இருக்காது. இவர்கள் நவகிரக குருவை வழிபாடுசெய்ய மந்தகதி குறைந்து நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஜனன ஜாதகத்தில் சனி, செவ்வாய், குரு வலிமை பெற்று, லக்ன சுபரின் சாரம் பெற்று, மறைவு ஸ்தான சம்பந்தம் இல்லா மலிருந்தால் பாதிப்பு குறையும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

இதன் அதிபதி சந்திரன். இது சர ராசி. சர ராசியின் தன்மை தன்னுடைய செயல்களை விரைவாகச் செய்து முடித்துவிடும்.

இவர்களுடைய 6-ஆம் அதிபதி குரு. 8-ஆம் அதிபதி சனி. பாதகாதிபதி சுக்கிரன். இவர்களுக்கு குரு தசை, சனி தசை, சுக்கிர தசைக் காலங்களில் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கத்தின் பாதிப்பு இருக்கும்.

sivanபுனர்பூசம் 4-ஆம் பாதத்தினருக்கு பிறக் கும்போதே குரு தசை வந்துவிடும் என்பதால், குரு தசையின் பாதிப்பு சிறியதாக இருக்கும். சனி தசைக் காலத்தில் படிப்பு அல்லது தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்பவர்களுக்கு சிறு மனசஞ்சலம் மட்டும் இருக்கும். சுக்கிர தசைக் காலங்களில் பாதிப்பு இருக்கும். இவர்கள் தீர்த்தத் தலங்களில் புனித நீராடல் அதிகம்செய்ய சுபப்பலன் மிகும்.

பூச நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு குரு தசை வராது. சனி, சுக்கிர தசையில் சிற்சில பாதிப்பு இருக்கும். இவர்கள் தினந்தோறும் வரும் குளிகை நேரத்தில் சிவ வழிபாடு செய்தால் நவகிரகத் தாக்கம் இருக்காது.

ஆயில்ய நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தவணைமுறையை அதிகம் பயன்படுத்துவதால், ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்க பாதிப்பு பெரிதாகத் தலைதூக்காது. ஆயில்ய நட்சத் திரத்தின் அதிபதி புதன். இவர்களுக்கு குரு, சனி தசை வரும் வாய்ப்பு மிகக்குறைவு. சுக்கிரன் புதனின் நட்பு கிரகம் என்பதால் சுபப்பலன் மிகும். இவர்கள் ஆதிசேஷனை வழிபாடு செய்வது சிறப்பு.

ஜனன ஜாதகத்தில் குரு, சனி, சுக்கிரன் சுபவலிமை பெற்று, லக்ன சுபரின் சாரம் பெற்று, மறைவு ஸ்தான சம்பந்தம் இல்லாமலிருந்தால் பாதிப்பு இருக்காது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

இதன் அதிபதி சூரியன். இது ஸ்திர ராசி. நின்று நிதனமாக செயல்படும். இதன் தாக்கம் நீண்டகாலத்திற்கு இருக்கும். இவர்களின் 6-ஆம் அதிபதி சனி. 8-ஆம் அதிபதி குரு. பாதகாதிபதி சனி. இவர்களுக்கு ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் குரு, சனி தசைக் காலங்களில் பாதிப்பைத் தரும்.

மக நட்சத்திர த்தில் பிறந்தவர்களுக்கு, ஓய்வுபெறும் வயதில் குரு தசை வந்து விரயம், நோய்த் தாக்கம் தரும். சனி தசை வராது என்பதால், இவர்கள் சிவ வழிபாடுசெய்து பிரதோஷ காலத்தில் வில்வர்ச்சனை செய்ய நல்ல குணம் தெரியும்.

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, குரு தசைக் காலங்களில் 6-ஆம் பாவக இயக்கம் இருக்கும். சனி தசை வாய்ப்புக் குறைவு. எனவே, இவர்கள் சிவாம்சம் நிறைந்த அம்மன் வழிபாடு செய்தால் பாதிப்பே இருக்காது.

உத்திரம் 1-ஆம் பாதத்தினருக்கு, குரு தசை மத்திமமான பாதிப்பையும், சனி தசை அதிகமான பாதிப்பையும் தரும். இவர்கள் பிரதோஷ வேளையில் நந்திக்கு அரிசி மாவு அபிஷேகமும், சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகமும் செய்ய நல்ல குணம் தெரியும். ஜனன ஜாதகத்தில் குரு, சனி சுபவலிமை பெற்று, லக்ன சுபரின் சாரம் பெற்று, மறைவு ஸ்தான சம்பந்தம் இல்லாமலிருந்தால் பாதிப்பு இருக்காது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதம்)

இதன் அதிபதி புதன். இது உபய ராசி.

இதன் செயல்பாடு மந்தமாக அல்லது விட்டுவிட்டு இருக்கும். இவர்களுக்கு சுயமுடிவு எடுக்கும் திறன் குறைவு. பொதுவாக உபய ராசி யினர் தவணைமுறையை அதிகம் பயன் படுத்துவதால், இவர்களுக்கு 6-ஆம் பாவக இயக்கம் மந்தகதியுடன் இயங்கிக்கொண்டே இருக்கும். இவர்களுக்கு 6-ஆம் அதிபதி சனி, 8-ஆம் அதிபதி செவ்வாய், பாதகாதிபதி குரு என்பதால், செவ்வாய், சனி, குரு தசைக் காலங் களில் ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கத்தின் பாதிப்பு மிகும். உத்திரம் 2, 3, 4-ஆம் பாதத்தினருக்கு செவ்வாய் தசைக் காலத்தில் கல்விக்கடன் உருவாகும். குரு தசையில் பாதிப்பு மிதமாகவும், சனி தசைக் காலத்தில் மிகுதியாகவும் இருக்கும். இவர்கள் தினமும் சூரிய நமஸ் காரமும், நித்திய பிரதோஷ வேளையில் சிவ தரிசனமும் செய்ய நல்ல பலன் தெரியும்.

ஹஸ்த நட்சத்திரத்தினருக்கு, செவ்வாய் தசைக் காலத்தில் சிறு உடல் நலக்குறைவு இருக்கும். குரு தசையில் மிகுதியாகவும், சனி தசைக் காலங்களில் மிதமாகவும் 6-ஆம் பாவக இயக்கம் இருக்கும். இவர்கள் புற்றுடன் கூடிய அம்மன் கோவிலில் நெய்தீபமேற்றி வழிபட சிறப்பான பலன் உண்டு.

சித்திரை 1, 2-ஆம் பாதத்தினற்கு செவ்வாய் தசைக் காலத்தில் சிறு உடல் நலக்குறைவு இருக்கும். குரு தசையில் மிகுதியாகவும், சனி தசைக் காலங்களில் மிதமாகவும் இருக்கும். சனி புதனின் நட்பு கிரகம். எனவே, இவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் முருகனுக்கு செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஜனன ஜாதகத்தில் செவ்வாய், குரு, சனி சுபவலிமை பெற்று, லக்ன சுபரின் சாரம் பெற்று, மறைவு ஸ்தான சம்பந்தம் இல்லாமலிருந்தால் பாதிப்பு குறையும்.

மற்ற ஆறு ராசிகள் அடுத்த இதழில்...

செல்: 98652 20406