பிரபஞ்ச சக்தி உண்மை என்பதை சூரிய, சந்திர ஒளி நமக்கு உணர்த்துகிறது. முற்றிலும் பிரபஞ்சத்தின் தத்துவமான வான சாஸ்திரத்தை அடிப்படையாகக்கொண்டு அறியப்படுவதே ஜோதிட சாஸ்திரமாகும். வழிதெரியாமல் இருட்டில் நடந்துவரும் ஒருவருக்கு வெளிச்சம் கிடைத்தால் எவ்வளவு உதவியாக இருக்குமோ, அதுபோல் ஒருவரின் வாழ்க்கைப் பாதையைக் காண்பிக்கும் வெளிச்சமாக ஜோதிட சாஸ்திரம் விளங்குகிறது.

ஜனன காலத்தைக்கொண்டு கணிக்கப்படும் ஜாதகம், ஒருவரின் கர்மவினையின் அடிப்படையில் அவர் அனுபவிக்க இருக்கும் பலன்களை அறிந்துகொள்ள உதவுகிறது. ஜனன நேரம் மிகத்துல்லியமாக இருந்து கணிக்கப்படும் ஜாதகம்மூலம் மிகத்தெளிவான பலன்கள் அறியப்படும். ஜனன நேரம் சரியாக இல்லாதவர்கள், குலம், கோத்திரம், வம்சம் தொடர்பான பலன்களையும், தலைமுறை தலைமுறையாக வரும் தோஷங்களையும், ஏவல், பில்லி, சூனியம் போன்ற செய்வினைக் கோளாறுகள் தொடர்பான பிரச்சினைகளையும் பிரசன்னத்தின்மூலம் தெளிவாக அறியமுடியும்.

narashimar

இந்தக் கட்டுரையில் செய்வினை தொடர்பான சில கருத்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். சென்றமுறை சென்னைக்கு வந்தபோது என்னிடம் ஜாதகம் பார்க்க வந்தவர்களில் 75 சதவிகிதம் பேர் "எனக்கு செய்வினை இருக்கிறதா' என்று கேட்டனர்.

பெரிய நகரங்களிலிருந்து வருபவர்களே இந்தக் கேள்வியை அதிகம் கேட்கிறார்கள்.

செய்வினை- செய்த+வினை என்கின்ற செயல். ஆக, ஒருவருக்கு செய்வினை தாக்குகிறது அல்லது செய்வினை குறித்த பயவுணர்வு வந்தால், நிச்சயம் அவரது செயல்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை பாதித்திருக்கும். மனதிலுள்ள குற்ற உணர்வுதான் கேள்வியாக வருகிறது என்பதுதான் உண்மை. "உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிப்பான்' என்ற பழமொழிக்கேற்ப, தனக்கு துன்பம் நேரும்போது, தன்னால் பாதிகப்பட்ட நபர் நமக்கு செய்வினை செய்திருப்பார் என்ற பயவுணர்வு வருகிறது. இதையே வேறுவிதமாகச் சொன்னால் தாய், தந்தை, சகோதர, சகோதரி, கணவன்- மனைவி, குழந்தை என்று யாருடைய அன்பாவது மனதிற்கு இனிமையாக இருந்திருக்கும். அந்த இனிமையான உறவுகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பாதிப்பு ஏற்படும்போது, பாதிக்கப்பட்ட உறவின்மேல் பழிசொல்லி அந்த உறவுகளால் செய்வினை வந்தது என்கிறார்கள்.

செய்வினை என்பது முதலில் உண்மையா என்று ஆய்வுசெய்யும்போது நம் கண்ணுக்குப் புலப்படாத தீயசக்தி சில சமயங்களில் ஏவப்படுகிறது. பலசமயங்களில் ஜாதகரின் தவறுக்கு பிரபஞ்சம் தரும் தண்டனை ஏவப்பட்ட தீயசக்திபோல் ஜாதகரின் உள்ளுணர்வுக்குத் தோன்றும் என்பதே நிதர்சனமான உண்மை.

இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையும், கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிளும், முஸ்லிம்களின் புனித நூலான குரானும் தீயசக்தியின் ஏவலை மறுக்கவில்லை. செய்வினை சரிசெய்யப்பட்டு பலர் மறுவாழ்வு அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை. ஜனன சந்திரன் கோட்சார ராகு- கேதுவுடன் சம்பந்தம் பெறும்போது, ஜாதகருக்கு யாரோ செய்வினை வைத்ததுபோன்ற உணர்வு வரும்.

ஒருவர் உண்ணும் உணவே அவருக்கு செய்வினை உணர்வைத் தந்துவிடுகிறது. தக்காளி கிலோ பத்து ரூபாய்க்குக் கிடைக்கிறது என்பதால் தக்காளி சட்னி, தக்காளி சாதம், தக்காளி ரசம் என்று அன்றாட உணவில் ஏதாவது ஒரு உணவு வழியாக தினமும் தக்காளி உட்கொள்ளப்படுகிறது. தக்காளித் தோல் எளிதில் ஜீரணமாகாது. செய்வினை பாதிப்பு இருக்கிறது என்று அநர்த்தமாகப் புலம்புபவர்களின் குடலில் குறைந்தது கால் கிலோ தக்காளித் தோல் வெளியேற்றப்படாமல் உடம்பைப் படாதபாடு படுத்தும். அத்துடன் பாஸ்ட் புட், அசைவ உணவும் செய்வினை போன்ற உணர்வை உடம்பிற்குத் தரும். சாத்வீக உணவே பிரபஞ்ச சக்தியை நம் உடம்பில் உட்புகச்செய்யும். செய்வினை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள்கூட "செய்வினை செய்வினை' என்று புலம்பி, செய்வினை எடுக்கிறோம் என்று நேரம், பணத்தை விரயம்செய்து மனநோயாளியாகிறார்கள்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மிகக்குறைவான அளவிலே தத்ரூபமாகச் செய்பவர்கள் இருக்கிறார்கள். மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வரும் தமிழர்கள் கடுமையான பாதிப்போடு வருகிறார்கள். அங்கே சாதாரண விஷயங்களுக்குக்கூட செய்வினை என்ற ஆயுதத்தைப் பிரயோகம் செய்கிறார்கள். எதிரியை தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய சக்தி இல்லாத 6-ஆம் பாவக வலிமை குறைந்தவர்களே இதுபோன்ற தவறான செயல்களைச் செய்கிறார்கள். தனி மனிதனுக்கு யாரையும் தண்டிக்கும் அதிகாரத்தை பிரபஞ்சம் கொடுக்கவில்லை. நம் சுவாசக் காற்றைக்கூட காலபகவான் தன் காலப்பதிவேட்டில் பதிந்துவருகிறார். காலத்திற்கும் காலபகவானுக்கும் ஞாபக மறதியே கிடையாது. செய்தவினை மறுபடியும் நம்மீது வரும் என்ற புரிதல்வேண்டும். இயற்கைக்கு மாறாக என்ன செய்தாலும் தனக்குத்தானே சூனியம் வைத்துக்கொள்வதற்குச் சமம். அதனால் உங்களின் மனக்குமுறலை பிரபஞ்சத்திடம் முறையிடுங்கள். நிச்சயம் நீதி கிடைக்கும். தவறான ஆயுதத்தைக் கையில் எடுக்கக்கூடாது. ஒரு ஆன்மாவைத் துன்புறுத்துவது மிகவும் கொடூரமானது.

பஞ்சமகா பாதகமான பிரம்மஹத்தி தோஷத்தைத் தரவல்லதான இந்த தோஷம் ருண, ரோக, சத்ரு ஸ்தானமான 6-ஆம் பாவகம் தொடர்பான தசா, புக்தி, அந்தர காலங்களில் மட்டுமே அதன் தாக்கம் இருக்கும். மற்ற நேரங்களில் செயல்படுத்த முடியாது.

இதை ஜோதிடரீதியாகப் பார்க்கும்போது, ஒருவரை பழிவாங்க ஜாதகத்தில் பாதகாதிபதி, மாரகாதிபதியைப் பலப்படுத்துவது, ஜாதகரின் மாரக, பாதக மூலமந்திரங்கள் அல்லது சக்கரங்களை மின்கடத்தியான செப்புத்தகட்டில் அல்லது எளிதில் தீய சக்திகளை வெளிப்படுத்தக்கூடிய பொருளில் வர்ம தத்துவமுறையில் எழுதி, ஜாதகர் அதிகமாகப் பயன்படுத்தும் இடத்தில் புதைத்துவிட்டால் அந்த செய்வினைப் பொருள் அதனுள் உள்ள அந்த மந்திர வீரியத்தை அவருள் செலுத்தி அவரை பலவீனப்படுத்தும். 6-ஆம் பாவகம் இயங்கும் நேரத்தில் ஜாதகரையும், 1, 5, 9-ஆம் பாவகம் இயங்கும்போது எய்தவரைத் தாக்கும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். செய்வினைப் பொருளுக்கும் குறிப்பிட்ட கால அளவிற்கே சக்தி இருக்கும்.

6-ஆம் பாவகம் இயங்கி செய்வினை வேலைசெய்ய ஆரம்பித்தால் ஜாதகரிடம் தெரியும் மாற்றங்கள்:

செய்வினை வைத்தவருக்கு வசியமாக இருப்பது, வீட்டில் நிம்மதிக் குறைவு, கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு, பொருள், பணவிரயம், இனம்புரியாத நோய், விபத்து, தெய்வ வழிபாடு செய்யமுடியாத நிலை, கடவுள் நம்பிக்கைக் குறைவு, கடன், தொழில் நஷ்டம், மனநிம்மதிக் குறைவு, மனதில் எதிர்மறை சிந்தனை போன்றவை ஏற்படும்.

ஜாதகம் பார்க்க வரும் நேரத்தில் ஜாதகத்தில் செய்வினை இருக்கிறதா என்பதை பிரசன்ன ஜோதிடத்தில் தெளிவாகக் கூறமுடியும். நமக்கு சத்ரு தொல்லை இருக்கும்போதுதான் இந்த செய்வினை பிரச்சினையும் எழுகிறது. 6-ஆம் அதிபதியும் பாதகாதிபதியும் சம்பந்தம் பெறும்போது சத்ருவின்மூலம் பாதிப்பு நேருகிறது. 6-ஆம் அதிபதி, பாதகாதிபதி, மகாபாதகாதிபதி ஆகியோர் சம்பந்தம் பெறும்போது சிறு பாதிப்பாகவும், ராகு- கேதுவுடன் சம்பந்தம் பெறும்போது பாதிப்பு கடுமையாகவும், ராகு- கேது, மாந்தியுடன் 12-ஆம் பாவகம் சம்பந்தம் பெறும்போது செய்வினைப் பொருளையும் சத்ருவையும் இனம் காணமுடியாமல் சிலருக்கு மரணத்தையும்கூட தருகிறது.

6-ஆம் வீடு மற்றும் அதன் அதிபதி, பாதக வீடு மற்றும் அதன் அதிபன் ஆகியவற்றைக்கொண்டு செய்வினை செய்த பகைவரின் சாதி, இனம், எந்த நோக்கத்திற்காக செய்வினை செய்யப்பட்டது என்பதனைக் கூட பிரசன்னத்தில் அறிய இயலும். 6-ஆம் அதிபதி தனித்திருந்தால் சத்ரு ஒரே நபர். 6-ஆம் அதிபதி 10-ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால் சத்ருக்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் என அறியலாம். 6-ஆம் அதிபதி மற்றும் பாதகாதிபதி அமர்ந்த வீட்டினைக் கொண்டு எதிரி என்ன நோக்கத்திற்காக செய்வினை செய்தார் என்பதையும் அறியலாம். பாதகாதிபதி 2-ல் இருந்தால் பணத்திற்காகவும், 3, 11-ல் இருந்தால் பெரும் பணத்திற்காகவும், 4-ல் இருந்தால் சொத்து காரணமாகவும், 5-ல் இருந்தால் பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகளுக்காகவும் செய்யப்பட்டுள்ளது எனலாம். மேலும் பிரசன்ன லக்னம் சரமானால் பகைவர் சொந்த குடும்ப நபராகவும், ஸ்திரமானால் ஒன்றுவிட்ட சொந்தமாகவும், உபயமானால் வெளி நபராகவும் இருக்கலாம்.

6-க்குடையவன், மகாபாதக ஸ்தானாதிபதியும் இணைந்து செவ்வாய் சம்பந்தம் பெற்றால், செய்வினைத் தாக்கம் கடுமையாக உள்ளது என்றும், சனி தொடர்புபெற்றால் வெகுநாட்களாகத் தாக்கம் இருக்கிறது என்பதையும் அறியமுடியும். மேலும் மாந்திக்கு கேந்திரத்திலுள்ள கிரகத்தைக்கொண்டு செய்வினை வைக்கப்பட்ட இடத்தை அறியலாம்.

மாந்திக்கு கேந்தித்திரத்தில் சூரியன் இருந்தால் வீட்டின் முன்புறமுள்ள மரக்கிளையிலோ, வரவேற்பறையிலோ இருக்கும்.

செவ்வாய் இருந்தால் வீட்டின் தோட்டம், விவசாய பூமி, வண்டி வாகனம் நிறுத்தும் இடத்தில் இருக்கலாம். சந்திரன் இருந்தால் படுக்கை அறை, ஓய்வு அறையிலும், புதன் இருந்தால் புகைப் பொருட்களால் மந்திரிக்கப்பட்டு இருக்கும். மாந்தி வர்க்கோத்தமாக இருந்தாலோ பல கிரகங்களால் பார்க்கப்பட்டாலோ செய்வினை பல இடங்களில் இருக்கும். மாந்தி நின்ற ராசி நெருப்பு தத்துவ ராசி என்றால் தோல் பொருட்களாலும், நிலத்தத்துவ ராசி என்றால் மண் பாத்திரப் பொருட்கள் என்றும், காற்று தத்துவ ராசி என்றால் மூங்கில்மரப் பொருட்கள் என்றும், நீர் ராசி என்றால் தேங்காய் அல்லது உணவுப்பொருள் மூலமாக செய்வினை செய்யப்பட்டது என்றும் கூறமுடியும்.

பிரசன்னம் பார்த்து செய்வினை எடுக்கப்பட்ட பிறகு மீண்டும் பிரசன்னம் பார்க்கும்போது ஆரூட ராசி சரமானால் தோஷம் நீங்கியுள்ளது எனவும், ஸ்திரமானால் மத்திமமாக நீங்கியுள்ளது எனவும், உபயமானால் தாக்கம் குறையவில்லை என்பதையும் உணரமுடியும். பாதிப்படைந்தவரின் முன்னேற்றத்தைக்கொண்டும் அறியமுடியும். கண்ணுக்குத் தெரியாத ஆற்றலான தீயசக்தியை அழிக்கமுடியாது. ஆனால் இடமாற்றம் செய்யமுடியும். எப்படிப்பட்ட பாதிப்பு இருந்தாலும் அதை சரிசெய்ய ஒருபிடி சாம்பல் போதும்.

அதைப் பெறுவதற்கு ஈசனின் அருள்வேண்டும்.

அதனால் செய்வினை எடுக்கிறேன் என்று கூறுபவர்களிடம் சென்றால், சிறிது காலத்திற்குப்பிறகு மேலும் ஒரு செய்வினை தோஷத்தால் பாதிக்கப்படுவதும் உறுதி. ஒருவனுக்கு மரணத்தை, உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டேகூட கொடுக்கக்கூடிய வல்லமை சக்திகள் சில செய்வினைகளுக்கு உண்டு என்றும் ஆயுர்வேதம் படித்த ஜோதிடர்கள் கூறுவார்கள்.

புதன் அம்சம் நிறைந்த ஜோதிடர்கள் மருத்துவர்களாகவும் இருந்து, கிரக சமித்துக்களை வைத்தே செய்வினையை சரிசெய்திருக்கிறார்கள். இதை முஸ்லிம் சகோதரர்கள் இன்றும் பயன்படுத்தி நற்பயன் அடைந்து வருகிறார்கள்.

விருட்சங்களுக்கு அரசனான அரச சமித்தும், அரசியான வேம்பு சமித்தும் சர்வரோக நிவாரணியாகும். அதனால்தான் அந்த இரண்டையும் தெய்வநிலைக்கு வைத்தார்கள். மேலும் கோட்சார சந்திரன், ராகு- கேதுவால் ஏற்படும் மனப் பிரம்மையை எளிய மூலிகைப் புகைமூலமும், சில குறிப்பிட்ட ஹோமியோ மருந்தின்மூலமும் சரிசெய்ய முடியும்.

நமது முன்னோர்கள் பாதிப்பிற்கான கிரகத்திற்குரிய சக்கரங்களை செப்புத் தகட்டில் வரைந்து, ஒரு மண்டலத்திற்கு மேல் பூஜைசெய்து அதற்கு உரு ஏற்றி, பிறகு உடலில் கட்டிக்கொள்பவருக்கு சில மந்திர உச்சாடனங்களையும் வழங்கி வந்தனர். சில சக்கரங்களை சில வருடம் கழித்து மாற்றவேண்டும் என்றும் சிலர் கூறுவர். இது கிரக வசியம்.

கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் என்ன வகையான பாதிப்பு என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டு அதற்குரிய எளிய பரிகார வழிபாட்டுமுறைகளைச் செய்யலாம். சுய பரிகாரம் என்றுமே ஆபத்துதான்.

பரிகாரம்

பைரவருக்கு வெண்பூசணி விளக்கு ஏற்றுதல், 108 மிளகை சிகப்புத் துணியில் கட்டி தீபம் ஏற்றுதல், இலுப்பை எண்ணெய் விளக்கேற்றுதல், சரபேஸ்வர வழிபாடு நன்மை தரும். அமாவாசைதோறும் அய்யா வாடி பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடைபெறும் யாகத்தில் கலந்துகொள்ளவேண்டும். மிகக்கொடூரமாக பாதிக்கப்பட்டவர்களையும் ஹோமங்கள்மூலம் சரிசெய்ய முடியும்.

செல்: 98652 20406