சிறப்பான வரன்கள் அமைந்தாலும், இதைவிட நல்ல வரன் அமையும் என எதிர்பார்த்துத் திருமணத்தைத் தள்ளிப்போடுவதால் சிலருக்குத் திருமணம் நடைபெறுவது தாமதமாகிவிடுகிறது. ஆணுக்குத் திருமணம் தாமதமானால் சமுதாயம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. ஆனால் பெண்களுக்குத் திருமணம் நடைபெறத் தாமதமானால் எந்தவொரு வீட்டிலும் அதை தலைவலியாகவும், மற்றவர்களுக்குத் தடைக்கற்களாக இருப்பதாகவும் கருதுகிறார்கள். வசதி வாய்ப்புகள் குறைவால் திருமணம் தாமதமானால், "அவர்கள் ஏழை; அதனால் திருமணம் செய்துவைக்க முடியவில்லை' என்றொரு சமாதானம் ஏற்படும்.

Advertisment

balaஆனால் எல்லா வசதி வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களுக்கே திருமணம் தள்ளிக்கொண்டே சென்றால் அந்தப் பெண் ராசியில்லாதவள் என்று பேசத் தொடங்கிவிடுவார்கள். அவர்களைப் பொருத்தமான துணையோடு அனுப்பி வைக்கும்வரை அப்பெற்றோருக்கு நிம்மதியிருக்காது.

வயதைக் கடந்து திருமணம் செய்வதால் கருத்தரிக்கும் ஆற்றலும், தாம்பத்ய வாழ்வில் ஈடுபாடு குறைவதால் குழந்தைப் பேறு உண்டாவதில் இடையூறுகளும் உண்டாகும். தற்போதுள்ள சூழ்நிலையில் பெரும்பாலும் முப்பது வயதைக் கடந்துவிட்டாலே உடல்ரீதியாக பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர்.

இதனால் பருவ வயதிலேயே ஆண்- பெண்களின் உணர்வுகளும், சிந்தனைகளும் வேறு திசைக்கு மாறிவிடாமலிருக்க அவர்களுக்குப் பாதுகாப்பை ஏற்படுத்துவது பெற்றோரின் கடமையாகிறது. குறிப்பிட்ட வயதில் தாம்பத்ய உறவில் திருப்திகரமான சுகம் கிடைக்காமல்போவது ஒரு பெரிய இழப்பாகும். உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தாமதமாகத் திருமணம் செய்வது தவறாகும்.

Advertisment

சமூக ஆய்வாளர்களும், மார்க்க அறிஞர்களும், மருத்துவ வல்லுநர்களும் ஒருமித்த கருத்துடன் தகுந்த வயதில் திருமணம் செய்வதையே நல்லது என கூறுகின்றனர். "பருவத்தே பயிர் செய்' என்பது பழமொழி. காலம் தாழ்த்திச் செய்யும் எந்தவொரு காரியத்திலும் அதன் பலன் குறைவாகவே இருக்கும்.

நிறைய பொருத்தங்கள் பார்த்தாலும், வரன் தேடினாலும் காலம் கடந்தே தான் சிலருக்குத் திருமணம் நடைபெறுகிறது.

அதற்கான காரணங்களை ஜோதிடரீதியாக ஆராயும்போது ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டு அதிபதியும், களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டு அதிபதியும் மறைவு ஸ்தானங்களாகிய 6, 8, 12-ல் மறைந்து அமைந்திருந்தாலும், ஆண்களுக்கு களத்திர காரகனான சுக்கிரனும், பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் மறைவு ஸ்தானங்களாகிய 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும் வக்ரம் பெற்றாலும் திருமணம் தாமதமாகக்கூடிய நிலை உண்டாகும்.

Advertisment

லக்னாதிபதியும், 7-ஆம் அதிபதியும் ஒருவருக்கொருவர் 6, 8, 12-ல் மறைந்திருந்தாலும் திருமணம் தாமதமாகும் நிலை உண்டாகும்.

நவகிரகங்களில் மந்தகாரகன் சனியின் ஆதிக்கம், ஒருவர் ஜாதகத்தில் திருமண வாழ்வை வழிவகுக்கக்கூடிய பாவங்களான 2, 7-ல் பலமாக இருந்தால் திருமணம் நடைபெறுவதற்குத் தாமதநிலை உண்டாகும்.

நவகிரகங்களில் சனியின் பார்வையானது சற்று கெடுதலை உண்டாக்கக்கூடியது. சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3, 7, 10-ஆம் வீடுகளைப் பார்வை செய்வார். சனியின் பார்வை 7-ஆம் வீட்டிற்கோ, 7-ஆம் வீட்டின் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ ஏற்படுமானால் திருமணம் நடைபெறத் தாமதம் ஏற்படும்.

மணவாழ்க்கைக்கு 7-ஆம் வீடு மட்டுமின்றி, தாமதமின்றித் திருமணம் அமைய குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீடும் பலமாக இருப்பது மிகவும் முக்கியம். சனியின் பார்வை இந்த 2-ஆம் வீட்டிற்கோ, 2-ஆம் வீட்டின் அதிபதிக்கோ இருக்குமேயானாலும் மணவாழ்க்கை தாமதமாகத்தான் அமையும்.

களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், 7-ஆம் வீட்டதிபதி சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கை, பார்வை அல்லது சாரம் பெற்றிருந்தாலும் மணவாழ்க்கை தாமதமாகவே உண்டாகும். சனி எந்தவொரு காரியத்திலும் தாமதத்தை ஏற்படுத்தும் என்றாலும், லக்னாதிபதியாகவோ, 7-ஆம் அதிபதியாகவோ ஒருவர் ஜாதகத்தில் சனி இருக்கும் பட்சத்தில் பெரிய கெடுதல்களை உண்டாக்குவதில்லை.

கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரங்களாலும், களத்திரகாரகன் சுக்கிரன் சனியுடன் சேர்க்கை பெறுவது போன்றவற்றாலும் திருமணம் நடைபெறத் தாமதநிலை உண்டாகும். ஒருவருக்கு 7-ஆம் பாவம், 7-ஆம் அதிபதி சிறப்பாக இருந்தாலும் நடக்கக்கூடிய தசாபுக்தியோ சாதகமின்றி இருந்தால்- எடுத்துக்காட்டாக சர்ப்பகிரகங்களான ராகு- கேதுவின் தசாபுக்தியானது, ராகு- கேதுவின் சாரம் பெற்ற கிரகங்களின் தசாபுக்தியோ திருமண வயதில் நடைபெறுமேயானால் திருமணம் அமைய தாமதநிலை உண்டாகிறது.

திருமண வயதையடைந்த ஆண்- பெண்ணுக்கு ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரா லக்னத்திற்கோ 2, 7-ல் சனி, ராகு- கேது போன்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று, சுபர் பார்வையின்றி அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெற்றால் திருமணம் நடைபெறத் தாமதநிலை உண்டாகும்.

உதாரணமாக, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் கேது இருந்து, கேதுவின் தசை 20 முதல் 28 வயதுவரையுள்ள காலத்தில் நடைபெற்றால் திருமணம் நடைபெறத் தாமதநிலை ஏற்படும். அப்படியே திருமணம் நடைபெற்றாலும் ஒற்றுமைக்குறைவு உண்டாகும்.

அதுபோல ஒரு ஆணின் ஜாதகத்தில் 7-ஆம் வீட்டில் ராகு இருந்து, ராகு தசை 20 முதல் 30 வயது வரையுள்ள காலத்தில் நடைபெற்றால் திருமணம் நடைபெற இடையூறு ஏற்படும்.

காலபுருஷ தத்துவப்படி 2, 7-ஆம் வீடுகளான ரிஷபம், துலாத்தில் பாவ கிரகங்கள் அமையப் பெற்றால் திருமணம் நடைபெறத் தாமதமாகும்.

செல்: 72001 63001