ஜோதிடத்தில் "குரு பார்வை கோடி நன்மை' என்று ஒருவிதி உள்ளது. ஒரு கிரகத்தை குரு பார்த்தால் அந்த கிரகத்தின் நல்ல பலன்கள் கூடலாம் அல்லது தீமைகள் குறையலாம் என்பது ஒரு பொது விதி. குரு பார்வை எல்லா லக்னக்காரர்களுக்கும் ராசிக்காரர்களுக்கும் நன்மை செய்யுமா என்றால் ஒருசில லக்ன- ராசிக்காரர்களுக்குச் செய்யாது.
ஜோதிடத்தில் குரு ஒரு சுபகிரகம் மற்றும் நன்மையான கிரகம் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ரிஷப லக்னம்- ராசி, மிதுன லக்னம்- ராசி, கன்னி லக்னம்- ராசி, துலா லக்னம் ராசி, மகர லக்னம்- ராசி ஆகியோருக்கு குரு பார்வை நன்மை செய்யாது. ரிஷப லக்னம், துலா லக்னத்துக்கு குரு எதிரி. மிதுன லக்னம், கன்னி லக்னத்துக்கு குரு பாதகாதிபதி. மகர லக்னக்காரர்களுக்கு குரு பாவி. இதன் அடிப்படையில் குரு பார்வை நன்மை செய்யாது. எப்பொழுது இந்த ராசி- லக்னகாரர்களுக்கு குரு பார்வை நன்மை செய்யுமென்றால் குரு பகை, நீசம், அஸ்தமனம், மறைவு போன்ற நிலைகள் ஏற்பட்டால் குரு பார்வை நன்மை செய்யும். குரு பலமிழந்தால் நன்மை செய்யும் அதேநேரத்தில், குரு பலமிழந்தால் பணவரவு, பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். புத்திரகாரகம் பாதிக்கப்படும்.
பொதுவாக ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. எல்லா விஷயங்களிலும் வல்லவனாக இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெறமுடியும். அதேபோல் நன்மை செய்யும் கிரகமான குரு நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. கொடுப்பதில் வல்லவராகவும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் குரு பார்வை கோடி நன்மை என்னும் அடிப்படையில் குரு நன்மை செய்வார். இல்லையென்றால் குரு பார்வை சதவிகித அடிப்படையில் வேறுபாடு உண்டாகும். மனிதர்களின் கண்ணுக்கு கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளதுபோல குருவின் பார்வைக்கும் பல்வேறு வகையில் வித்தியாசங்கள் உண்டு.
மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், கும்பம், மீனம், தனுசு ஆகிய ராசி- லக்னக்காரர்களுக்கு குரு நன்மை செய்யும் கிரகம். ஆனால் இந்த ராசி- லக்னக்காரர்களுக்கு குரு பகை, நீசம், அஸ்தமனம், கிரகயுத்தம், வக்ரம், மறைவு போன்ற பாதிப்புகள் அடைந்தால் குரு பார்வை முழுமையாக செயல்படாமல் போய்விடும்.
பொதுவாக குருவுக்கு 5, 7, 9-ஆம் பார்வை உண்டு என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. குரு நீசமானால் நீசப்பார்வை, மறைவு பெற்றால் மறைவுப் பார்வை., பகை பெற்றால் பகைப் பார்வை, வக்ரம் பெற்றால் வக்ரப் பார்வை, லக்னத்திற்கு குரு எதிரியாக இருந்தால் எதிரிப் பார்வை, கிரக யுத்தத்தில் குரு மாட்டிக்கொண்டால் குரு பார்வை முழுமையாக செயல்படாது. இதுபோன்ற காரணங்களால் குரு பார்வை ஒரு கிரகத்திற்கு இருந்தாலும் முழுமையான பலன் கிடைக்காது. அரைப்பார்வை, முக்கால் பார்வை, கால் பார்வை என்ற அடிப்படையிலேயே நன்மை அமையும். குரு இயற்கையிலேயே சுபகிரகமாக இருந்தாலும், லக்னத்திற்கும் ராசிக்கும் சுபராக இருக்க வேண்டும். சில ராசி- லக்னக்காரர்களுக்கு குரு நன்மை செய்யமாட்டார். அவர் கெட்டுப்போய்விட்டால் "கெட்டவன் கிட்டிடில் ராஜயோகம்'; "கெட்டாலும் மேன்மக்களே' என்ற பழமொழிக்கு ஏற்ப சில சமயம் குரு நல்லது செய்யலாம். ஆனால் இவையெல்லாம் கடைசி நேரத்தில் பலன் கொடுப்பவையாகும்.
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் நான்கு எதிரிகள் இருப்பார்கள்; இருக்க வேண்டும். இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். உத்வேகம் கொடுக்கும். அதன் அடிப்படையில் சில ராசி- லக்னக்காரர்களுக்கு குரு எதிரியாக உள்ளார். லக்னத்திற்கு யோகத்தைக் கொடுக்கும் குரு பலம் வலுவிழக்கக் கூடாது. வலுவிழந்தால் முழுமையான நன்மையான பலன்கள் கொடுக்கமாட்டார். அதாவது கொடுக்கவும் மாட்டார்; கெடுக்கவும் மாட்டார்.
உதாரணமாக துலா லக்னத்திற்கு குரு 3, 6-க்குடையவர். இவர் வலுவாக இருந்தால் இவருடைய பார்வைகள் எந்த ராசிகள், கிரகத்திற்குப் படுகிறதோ அந்த ராசிகள், கிரகத்திற்கு நன்மை செய்யவிடமாட்டார். கொடுப்பார்.மற்றொரு உதாரணமாக, விருச்சிக லக்னத்திற்கு குரு 2, 5-க்குடையவர். இவர் மகரத்தில் நீசம்பெற்று நீசபங்கமாகவில்லையென்றால், குரு நீசமானதனால் குரு பலம் இழந்துவிட்டார். விருச்சிக லக்னத்திற்கு முழு யோகக்காரகன் என்ற அடிப்படையில் நீசமானதால், நீசப்பார்வை உண்டாவதால் குரு பார்வை படும் இடங்களுக்கு, கிரகங்களுக்கு முழுமையான நன்மைகள் ஏற்படாது. இந்தப் பார்வையால் நன்மையும் கிடைக்காது; தீமையும் நடைபெறாது.
ஜோதிடத்தில் "குரு பார்வை கோடி நன்மை' என்ற சொல் பொது விதியாகும். குரு இருக்கும் இடம், பார்க்கும் இடம், சேர்க்கை கிரகம், ஆதிபத்யம் ஆகியவற்றைப் பொருத்து குரு பார்வைப் பலன்கள் அமையும்.
கடக ராசி லக்னக்காரர்களுக்கு குரு 6, 9-க்குடையவர். இவர் முழு யோகக்காரகன் அல்ல. அரை யோகக்காரகன். சிம்ம ராசி- லக்னக்காரர்களுக்கு குரு 5, 8-க்குடையவர். இந்த ராசி- லக்னக்காரர்களுக்கு குரு பார்வையின் பலன்கள் முழுமையாகக் கிடைக்காது. அரை யோகக்காரகர்.
எனவே குரு பார்வை கோடி நன்மை தருமா என்றால், தரும். ஆனால் எப்போதுமல்ல. குரு பார்வைக்கும் கோளாறு உண்டு.
செல்: 98403 69513