ரகசியம்! பரம ரகசியம்!

(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)

இயற்கை எழில் கொஞ்சும் இமயத்தின் அடிவாரம். அந்த ஆசிரமத்தின் வாயிலில், கார்களின் அணிவகுப்பு. உள்ளே தியான வகுப்பு. செல்வாக்கு மிக்கவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பார்க்காமல், வழக்கம்போல் கண்களை மூடியிருந்தார்கள். வெளிநாட்டினருக்கு நம்நாட்டு யோகக்கலை என்ற பெயரில், ஏதோ ஒன்று விற்பனையாகிக்கொண்டிருந்தது. மேல்நாட்டு வாசனை திரவியத்தின் மணமும், பாதுகாவலர்களும், பெண் சீடர்களும் சூழ்ந்திருக்க, அந்த கபட வேடதாரியான யோகா குரு சபையில் பிரவேசித்தார்.

astrologer

Advertisment

பொதுமக்களின் நிலங்களை வளைத்துப்போட்டுக் கட்டப்பட்டிருந்த அந்த ஆசிரமத்தின் வாயிலில், கண்களில் கோலமிடும் கண்ணீருடன் ஒரு தம்பதி, வாயில் காவலர்களிடம் அனுமதிகேட்டு மன்றாடினார்கள். ஒருவழியாக அனுமதி பெற்று, தன் மகளைக் காண்பதற்காக ஆசிரமம் என்று பெயரிடப்பட்ட திறந்த வெளி சிறைச்சாலைக்குள் நுழைந்தார்கள். ஆசிரமமா அல்லது அமெரிக்க ஜனாதிபதி யின் வெள்ளை மாளிகையா என்று புரியாத அளவிற்கு பாதுகாப்புக் கெடுபிடிகள். வெள்ளை குர்தாவும் பேன்ட்டும் அணிந்த பெண்கள் இடுப்பை வளைத்து வணங்கினார்கள். காவிச்சீருடை அணிந்திருந்த முரட்டு ஆண்சீடர்களிடம் அவதிப்பட்டபின், அந்த சடாமுடி சாமியாரின் முன் நிறுத்தப்பட்டார்கள்.

ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்ட அந்த தம்பதி, ஆசிரமத்தில் தங்கியிருக்கும் தங்கள் மகளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்தார்கள். ஏளனமான சிரிப்புடன் அந்த யோகா குரு அனுமதித்து தலையசைத்தார். தங்கள் மகளை ஆரத்தழுவிய பெற்றோர், ஆசிரமத்தை விட்டு, வீடு திரும்புமாறு அவளை கெஞ்சினார்கள். மிரண்ட பார்வையுடன் நின்றிருந்த அந்தப்பெண், ஆசிரமத்தைவிட்டு விலக மறுத்தாள். சோர்ந்த முகத்துடன் அந்த தம்பதி வீடு திரும்பினர்.

தன்னுடைய நித்ய பூஜைகளை முடித்துவிட்டு சற்றே ஓய்விலிருந்தார், கிருஷ்ணன் நம்பூதிரி. அவர் வீட்டு வாயிலில் நிழலாடியது. சோகமே உருவாக ஸ்ரீதரன் நின்றுகொண்டிருந்தார். ஜோதிடரை வணங்கிய ஸ்ரீதரன், தன் மகள் தியானப் பயிற்சிக்காக ஒரு ஆசிரமத்திற்குச் சென்றதையும், திரும்ப வீட்டுக்கு வர மறுப்பதையும் சொல்லி முடித்தார்.

Advertisment

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): உங்கள் மகள் தியானப் பயிற்சிக்காக ஆசிரமத்தை நாடிச் செல்லவேண்டியதன் அவசியம் ஏன் வந்தது?

ஸ்ரீதரன்: இந்த நவீன உலகில், மன அமைதியை தியானம் தருமென்று சொல்லப்பட்டதால், அவளை தியானப் பயிற்சிக்கு அனுப்பி வைத்தோம்.

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): தியானம் என்பதன் உண்மையான பொருளைப் பெரும்பாலனவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாததால் வந்த கோளாறுதான் இது. கண்களை மூடியிருப்பது தியானம், வாய் பேசாமலிருப்பது மௌனம் என்பது தவறான புரிதல். மனதின் மௌனமே தியானம். மனம் சும்மா இருந்து சுகம் பெறுதலே தியானம். மூச்சு விடுவதையும், பசியையும் யாராவது கற்பித்தார்களா? அதுபோல், தியானமும் இயற்கையான நிகழ்வு. மன அமைதியைப் பிறரால் தரமுடியாது. அது, விரும்பிப்போனால், விலகிப்போகும். விலகிப்போனால் விரும்பி வரும். பதஞ்சலி, திருமூலர் போன்ற முனிவர்கள் சொன்ன தியானமும், இன்று நடைமுறையிலுள்ள தியானமும் தொடர்பே இல்லாதவை. விளம்பரமும், வியாபாரமும் புகுந்து விட்டதால், ஆன்மிகம் கடைச்சரக்காகி விட்டது.

ஸ்ரீதரன்: அந்த ஆசிரமத்தின் குரு, ஏதோ குற்றத்தை நிகழ்த்துவதாகவே சந்தேகப்படுகிறேன். தாங்கள் பிரசன்ன ஆரூடத்தில் அதைக்கண்டறிய இயலுமா?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): பிரசன்ன நேரத்து லக்னத்தைக் கொண்டும், சோழிப்பிரசன்னத்தின் லக்னத்தைக் கொண்டும் ஆராய்ந்த பின், அந்த ஆசிரமத்தின் தலைமை குருவின் குணத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வரலாம்.

ஆன்மிககாரகனா கிய குருவின் வீடாகிய மீனம் மூன்றாம் பாவ மாகி அதில் மாந்தியும், எட்டாம் பாவத்தில் நீச சுக்கிரனும் இருப்பதால், செல்வத்திற்காக ஆன்மிகத்தை வைத்து வணிகம் செய்பவராக இந்த நபர் இருப்பார்.

எட்டாம் பாவாதிபதி சூரியன் நீசத்தில் மரபு மீறியவற்றுக்குக் காரகனாகிய ராகுவின் ஸ்வாதி நட்சத்திரத்தில் இருப்பதும் கிரகணத்தைக் காட்டுகிறது, இங்கு ஆன்மிகம் அறவே இல்லை என்பதும், வழக்கத்திற்கு மாறாக சமுதாயம் ஒப்புக்கொள்ளாத வகையில் இருக்கும் என்பதும் தெளிவாகிறது.

ஆரூட லக்னமாகிய மீனத்திற்கு பாதகாதிபாதியான புதன் நட்சத்திரத்தில் கேது நிற்பதும் ஆன்மிக விஷயங்களுக்கு இங்கே இடமில்லை என்றும், ஆன்மிகத்தை வியாபாரமாகவே அவர் செய்வதையும் காட்டுகிறது

மீனத்திற்கு தனுசு மகா பாதக ஸ்தானமாக இருக்கிறது. அந்த இடத்திலேயே குரு அமைவதையும், 12-ஆம் பாவமாக இருப்பதையும் பார்த்தால் இந்த குரு முறையான தீட்சை பெற்றிருக்க வாய்ப்பில்லை.

5-ஆம் பாவத்தில் ராகு, செவ்வாய் தொடர்பில் இருப்பதால், எந்த ஒரு மந்திர உபதேசமோ, மந்திர சித்தியோ இவருக்கு இல்லை என்பதும் தெரிகிறது.

புதன் வக்கிரமாக 9-ஆம் பாவத்தில் நீச சூரியனோடு சேர்ந்திருப்பது இவர் தர்மத்திற்கு எதிரானவர் என்றும், வாக்குவண்மை மிக்கவர் என்றும் தெரிகிறது. பணத்திற்காக தர்மத்தைத் திரித்து கவர்ச்சியாகப்பேசி மக்களைக் கட்டிப்போடும் வித்தை அறிந்தவர் என்பதும் உறுதியாகிறது.

ஸ்ரீதரன்: ஆசிரமங்கள் சமுதாயப்பணிகளைச் செய்யவும், மக்களை நல்வழிப்படுத்தவுமே உருவானவை. அவ்வாறிருக்க, ஏன் இதுபோன்ற தவறுகள் நிகழ்கின்றன?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): எல்லா ஆசிரமங்களும் தவறானவை என்று சொல்லமுடியாது. பெரிய தொழிலதிபர்கள் முதலீடு போட்டு நடத்தும் ஒரு நிறுவனம்போல் உள்ள ஆசிரமங்கள் மட்டுமே கொடியவர்களின் கூடாரமாகிவிட்டன. உண்மைக்கு விளம்பரம் தேவையில்லை. ஆன்மிகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டி னாலே அது பொய் என்பது புலனாகும்.

ஸ்ரீதரன்: அந்த ஆசிரமத்திற்கு தியானப் பயிற்சிக்காகச் சென்றவர்கள் ஏன் வீடு திரும்ப மறுக்கிறார்கள்? அவ்வளவு சக்திவாய்ந்த தியானத்தைக் கற்றுக்கொடுக்கிறார்களா?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): தன்னை மறந்திருப்பதே தியானம் என்ற தவறான எண்ணம் கொண்டவர்கள், மயக்கம் தரும் வஸ்துகளை உட் கொண்டு மயங்கிக்கிடப்பார்கள். சில ஆசிரமங்கள், அதையே தியானம் என்று சொல்லி இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார்கள். உண்மையான ஆன்மிகத்திற்கு விளம்பரம் எதற்கு? இதைப் புரிந்துகொண்டாலே நாம் விழிப்படையலாம்.

குருவும் சனியும் 12-ஆம் பாவத்தில் சேர்வது, யோகம், தியானம் முதலான விஷயங்களில் செயற்கையாக, அதனுடைய அனுபவத்தை மனதை மயக்கும் மருந்துகளைக் கொண்டு உருவாக்குவது தெரிகிறது. மேலும் சனியின் தொடர்பு, தீயபழக்கத்தைக் காட்டுகிறது. இதுபோன்ற பழக்கங்களில் ஈடுபடுத்தப்பட்டவர்கள்

அந்த இடத்தைவிட்டு நீங்குவதில்லை.

ஸ்ரீதரன்: அந்த ஆசிரமத்தில் நடக்கும் மறைமுகமான செயல்களை யாரும் கண்டுக்கொள்ளாததன் காரணம் எதுவோ?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): ஆசிரமத்துடன், சமூக விரோதிகளின் தொடர்பு தெளிவாகத் தெரிகிறது.

பிரசன்ன ஜாதகத்தில் சூரியன், ராகுவின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது, நிழல் உலகத்து, செல்வாக்குள்ளவர்களின் தொடர்பு அந்த ஆசிரமத்தின் தலைவருக்கு உண்டு என்பது தெளிவாகிறது. செல்வமும், செல்வாக்கு முள்ளவர்களால், குற்றங்களை மூடி மறைக் கவும், எதையும் சாதிக்கவும் முடியுமென்பது அனைவரும் அறிந்ததே.

எட்டாம் வீட்டு அதிபதியாகிய சூரியன் பத்தாம் வீட்டில் நீசமாக, நீதிமன்றத்தைக் குறிக்கும் துலாத்திலிருப்பதால் உதவியாளரின் தந்திரத்தால் சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வார். நான்கு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் சுக்கிரனுடைய நட்சத்திரத்தில் அமைவதாலும், நவாம்ச லக்னத்தில் ராகு, குரு சேர்க்கையாலும், பெண்களால் இவர் மதிப்பை இழக்க நேரிடும் என்பதும் உறுதியாகிறது.

ஸ்ரீதரன்: ஆசிரமத்தில் அடிமைபோல் மாட்டிக்கொண்ட என் மகள் வீடு திரும்புவாளா?

கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): உங்கள் மகளின் ஜனன ஜாதகத்தை ஆராய்ந்தால் மட்டுமே தெளிவு கிடைக்கும். கொடுப்பினை, தசாபுக்தி, அந்தரங்களை ஆய்வு செய்தபின்தான் அதைக் கண்டறிந்து சொல்வேன்.

(புலனாய்வு தொடரும்)

செல்: 63819 58636