யாரைத்தான் நம்புவதோ?
(சம்பவம் உண்மை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.)
பகலில் சாமியார் வேடம் போட்ட அந்த ஆசிரமத்தின் குரு, இரவில் கிருஷ்ணர் வேடமிட்டுத் தள்ளாடிக்கொண்டிருந்தார்.
அவரைச்சுற்றி பல குற்றவழக்கு களிலும் தேடப்பட்டு வந்த பெரிய மனிதர்களின் கூட்டம். இளைஞர் கள் சுதந்திரம் என்ற பெயரில் வரம்பு மீறினார்கள். மொத்தத்தில், நம் இந்திய கலாச்சாரம் சீரழிந்து கொண்டிருந்தது.
காற்றில் கந்தகத்தின் வாசம். கொடியவனான நரகாசுரனைக் கொன்ற கண்ணனைப் பாராட்டி விழா எடுத்துக்கொண்டிருந்தார்கள். நாட்டின் தலைநகர் தீப ஒளியில் மிதந்துக்கொன்டிருந்தது. டில்லியின் புறநகர்ப் பகுதியில் கவலையுடன் ஸ்ரீதரன். ஆன்மிகப் போர்வையில், இந்த மண்ணுக்கும், மக்களுக்கு துரோகமிழைக்கும் அசுரகுருவை அழிக்கக் கண்ணன் வருவானா? விடைதெரியாத கேள்வியுடன் காத்திருந்தார். தன் மகள், ஆசிரமத்திலிருந்து வீடு திரும்புவாளா? இந்த கேள்வியே அவர் மனதில் எதிரொலித் துக்கொண்டிருந்தது.
கிருஷ்ணன் நம்பூதிரி, தன் இஷ்ட தெய்வமாகிய காடம்புழா பகவதியை தியானித்து, சோழிகளை உருட்டினார். ஐந்து சோழிகள் நிமிர்ந்ததால், இழந்தது திரும்ப வரும் என்ற நம்பிக்கை உண்டானது.
ஸ்ரீதரன்: என் மகளின் ஜாதகத்தை ஆராய்ந்து பலன் கூறமுடியுமா?
கிருஷ்ணன் நம்பூதிரி: ஜனன ஜாதகத்தில் சில குறிப்புகள் தென்படுகின்றன.
மனதைக் குறிக்கும் நான்காம் பாவாதிபதி, புத்தி ஸ்தானமாகிய இரண்டாம் பாவத்தில் நீசம் பெறுவதும், இரண்டாம் பாவாதிபதியும், நான்காம் பாவாதிபதியும் பரிவர்தனையாவதும் ஜாதகரின் நிலையில்லாத மனதைக்காட்டுகிறது.
மாதாகாரகனாகிய கேது, நான்காம் பாவத்திலிருப்பதால், மன வேற்று மையால் தாயைவிட்டு சிலகாலம் பிரிந்திருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும்.
சந்திரனுக்கு மூன்று, ஆறாமதிபதியின் தசையாகிய குருதசையில், சந்திரனுக்குப் பன்னிரண்டாமிடத்திலிருக்கும் செவ்வாய், ராகு புக்திகளில் மனத் தடுமாற்றம் உண்டாகும்.
பிரசன்ன ஆரூடத்தில் கண்டறிந்த பலனும், ஜனன ஜாதகத்தின் அமைப்பும் ஒன்றாகவே இருக்கிறது.
ஸ்ரீதரன்: பிரசன்ன ஆரூடத்தில் எதிர் காலத்தையும் கணிக்கமுடியுமா?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): கைரேகை சாத்திரத்தில், வலதுகை எதிர் காலத்தையும், இடதுகை கடந்த காலத்தையும் காட்டுவதுபோல், லக்னம் முதல் ஆறு பாவங்களைக்கொண்டு கடந்த காலத்தையும், ஏழாம் பாவம் முதல் பன்னிரண்டாம் பாவம்வரை ஆராய்ந்து எதிர்காலத்தையும் அறியலாம். பிரசன்ன ஆருடம், உலகத்தையே பார்க்க உதவும் ஜோதிடத்தின் ஜன்னல் என்றால் அது மிகையாகாது.
ஸ்ரீதரன்: என் மகள் இப்போது எங்கே யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளார்?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): வீட்டைவிட்டு வெளியேறியவர், திரும்பி வருவாரா? வரமாட்டாரா?
அவர் எங்கே, யார் கட்டுப்பாடிலிருக்கிறார் என்பதை யாத்திராப் பிரசன்னத்தால் அறியலாம்.
காணாமல் போனவர் இருக்குமிடத்தை 7, 8, 9-ஆம் பாவங்களைக் கொண்டு அறியலாம், இவர் ஒரு காட்டில் நீர்நிலைக்கு அருகில் இருக்கிறார். அதனருகில் ஒரு சிவன் கோவிலும் உள்ளது.
லக்ன திரேக்காணத்தைக் கொண்டு, போனவர் எவ்வளவு தொலைவில் உள்ளார் என்று தெரியும். மூன்றாம் திரேக்காணத்தில் லக்னம் உள்ளதாலும், பிரசன்ன காலத்தில் சந்திரன் மிருகசீஷ நட்சத்திரத்திலிருப்பதாலும், வீட்டிலிருந்து வெகுதொலை வில் உள்ளார் என்று தெரிகிறது.
லக்னத்தில் குரு அமைவதால், அவர் உயிருடன் இருப்பதும், உடல் நலத்தோடு இருப்பதும் தெரிகிறது சந்திரனும் ராகுவும் செவ்வாயின் மிருகசிரீட நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில்- லக்னத்திற்கு ஆறாம் பாவத்தில் அமைவதும், அம்சத்திலும் சேர்ந்து கன்னியில் அமைவதும், தாயுடன் உண்டான மனக்கசப்பு, வீடுதிரும்ப விரும்பாததற்கான ஒரு காரணமாகத் தெரிகிறது லக்ன திரேக்காணம் மற்றும் பிரசன்னம் கண்ட நாளின் ஆளும் கிரகத்தைக்கொண்டு காணாமல் போனவர் யாரிடம் அடிமைப் பட்டுள் ளார் என்று அறிய லாம். அவ்வாறு பார்த்தால் காணாமல்போனவர், அழகிய ஆடை கள் அணிந்து, கையில் அதிகார கோல் கொண்டு ஆட்சிபீடத்தில் உள்ளவரின் பின் புலத்தில் இயங்கும் ஒரு போலி ஆன்மிக குருவின் கட்டுப் பாட்டில் உள்ளார் என்பதும் தெரிகிறது.
ஸ்ரீதரன்: போலி குருமார்களைப் பற்றி வெளிப்படையாகத் தெரிந்த பின்னும், மக்கள் ஏன் தவறான ஆசிரமங்களை நாடிச்செல்கிறார்கள்?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): தினமும், பலவிதத் தொல்லைகளுக்கு ஆளாகும் மக்கள், யாரைத்தான் நம்புவது என்ற வழி தெரியாமல், சில ஆன்மிக வியாபாரிகளிடம் சிக்கிக்கொள்கிறார்கள். சில ஆசிரமங்கள், மறைமுக பணப் பரிவர்த்தனை மையங் களாகவே இயங்குகின்றன. தன்னை கல்கியின் அவதாரம் என்றும், சித்தர்களின் வழித்தோன்றலென்றும் சொல்லிக் கொள்ளும் ஆன்மிகத் தலைவர்களை மன நோயாளிகளாக எண்ணிப் புறந்தள்ளினால் மட்டுமே உண்மையான ஆன்மிகம் தழைக்கும்.
ஸ்ரீதரன்: என் மகள் எப்போது வீடு திரும்புவார்?
கிருஷ்ணன் நம்பூதிரி (ஜோதிடர்): ஆரூட லக்னமும் உதய லக்னமும் ஒன்றாக அமைந்து குரு அங்கே இருப்பதால், நல்ல பலன் கிடைக்குமென்றே தெரிகிறது. சந்திரனும் ராகுவும் இதசல யோகத்திலிருப்பதால், உங்கள் மகள் வீடு திரும்புவது உறுதி.
வீட்டைவிட்டுச் சென்றவரை ஏழாம் பாவத்தைக் கொண்டு அறியலாம். லக்னத் திற்கு ஏழாம் பாவாதிபதியும், புத்திக்குக் காரகனுமாகிய புதன், லக்னத்தை நோக்கி நகர்வதால், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் உங்கள் மகள், மனம் திருந்தி, வீடு திரும்புவார். விரைவில் உங்கள் மகள் மனமாற்றமடைந்து நலம் பெறுவதற்குப் பரிகாரமாக பிரதோஷகாலத்தில் சிவன் கோவிலுக்குச் சென்று, ஒரு "தாரா பாத்திரத்தை' நன்கொடையாகத் தருவது நல்லது.
(புலனாய்வு தொடரும்)
செல்: 63819 58636