திறக்குமா கதவு? தீருமா சந்தேகம்?
தங்கத்தின் விலை தரையிறங்குமா என்று கவலைப்பட்டு, கிராம் கணக்கில் பொத்திப் பாதுகாத்த தங்கத்தை, குவியல்குவியலாகப் பார்த்து வியந்துபோனார்கள். திருவனந்தபுரம் அனந்த பத்மநாபர் கோவில் நிலவறை தங்கச் சுரங்கமாகக் காட்சியளித்தது.
ஜூன் 27, 2011 அன்று உச்சநீதிமன்றம் ஏழுபேர் கொண்ட குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வுநடத்த உத்தரவிட்டது. ஆனாலும், ஒரு நிலவறையை மட்டும் திறக்கமுடியாமல் போனது. அந்த அறையை மட்டும் ஏன் திறக்கமுடியவில்லை? அதற்குள் என்ன உள்ளது என்ற கேள்வி இன்றுவரை உலகைச்சுற்றி வருகிறது. அந்த ரகசியத்தை அறிய குரு ஆத்மானந்தரைப் பின்தொடர்வோம்; வாருங்கள்.
வித்யாபதி: குருவே, இதுவரை திறக்கப் படாத அறையினுள்ளே உள்ள ரகசியத்தை பிரசன்ன ஆரூடத்தின்மூலம் துல்லியமாகக் காணமுடியுமா?
யோகி ஆத்மானந்தர்: மூடிய கையில் முத்து இருக்கிறதா? முள் இருக்கிறதா என்பதை அறிவதே ஆரூடம். கருவுற்ற தாயின் கர்ப்பத்திலிருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா என்று கணிக்கமுடிந்த ஜோதிடத் தால், கோவில் கருவறையிலிருக்கும் ரகசியத்தை அறியமுடியாதா? மேஷ ராசிக்கு ஆடும், ரிஷப ராசிக்குக் காளையும் ராசி ரூபங்களாக சுட்டிக் காட்டப்படுவதால், அந்த ராசியின் தன்மை அறியப்படுகிறது. அதேபோல், தேவப் பிரசன்னத்தில் ராசி, நவாம்சம், திரேகாணங் களின் ரூபங்களைக்கொண்டும், தாது (உலோகம்), ஜீவன் (உயிர்), மூலம் (தாவரம்- கருவி) ஆகிய பிரிவுகளை ஆராய்ந்தும் மறைந் திருக்கும் பொருளை அறியலாம்.
* ஸ்வர்ண லக்னம் மற்றும் சந்திரன் நிற்கும் திரேக்காணத்தின் ரூபம்: ஒரு பெண்ணின் உடலை சர்ப்பங்கள் சுற்றி இருக்கின்றன. பெண் தேவதையாகிய யட்சி, தன் உடலில் சர்ப்பங்கள் சூழ இருப்பதால், அவள் ஆபத்தானவள் எனத் தெரிகிறது.
* பெண் கிரகமான சுக்கிரன் கடகத்தில் அமரும் திரேக்காணத்தின் ரூபம்: பாம்பு சூழ்ந்த பெண்ணின் உடல், தாமரை மலர்கொண்டு அலங்கரித்த தலையுடன், பலா மரத்தில் அமர்ந்து கூச்சலிடும் உருவம் யட்சியின் ஆதிக்கத்தையும், பலா மரத்தில் அமர்ந்த உருவம் யட்சியின் பூர்வீகத்தையும் நிச்சயிக்கிறது. இளமை ததும்பும் உருவம் கடகத்திலும், வெறிபிடித்த எண்ணம் விருச் சிகத்திலும் சேர்வது, யட்சியைத் திருப்திப் படுத்துவது பாதகத்தில் சென்றுமுடியுமெனத் தெரிகிறது.
* ராகு நிற்கும் இடம்: சந்தனமரக் காட்டைக் காவல் காக்கும் உருவமாக இருப்பதால், ஒரு சந்தனப் பேழையை சர்ப்பம் காவல் காப்பதும், கதவுகளுக்குக் காப்பிடும் கபாட பந்தனம் செய்யப்பட்டிருப்பதும் தெளிவாகிறது.
வித்யாபதி: குருவே, "பரதக் கோன்' அறையைக் காவல் காக்கும் நவ யட்சினிகளைப் பற்றி விளக்கவேண்டுகிறேன்.
யோகி ஆத்மானந்தர்:
புதையல்களையும், கருவூலங்களையும் யட்சி எனும் தேவதையே காவல் காக்கிறது. நம் பாரத தேசத்தின் மத்திய வங்கி யின் வாயிலிலும், யட்சி சிலை நிறுவப்பட்டு, கருவூலம் காக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. யட்சினிகள் பராசக்தியின் படைக்காவலர்கள். லட்சக் கணக்கான யட்சினிகள் இருந்தாலும், மந்திர சாத்திரத்தில் அறுபத்து நான்கு யட்சினிகளே முக்கியமாகும். அதர்வண வேதத்தில் சிறப்பிக்கப்படும் யட்சினிகளை சித்தர்கள் தங்கள் காவல் தேவதைகளாகவும், ஏவல் தேவதைகளாகவும் பயன்படுத்தி னார்கள். கேரள மாநிலத்தில் பெரும்பாலான ஆலயங்களில் யட்சி எனும் பரிவார தேவதை வடமேற்கு மூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது. தேவப் பிரசன்னத்தில், ஸ்வர்ண லக்னத்திற்கு ஒன்பதாம் வீடாக அமைந்த கடக ராசி யிலுள்ள ஒன்பது அம்சங் களும் நவயட்சினிகளின் தன்மையைக் காட்டுகின்றன. ஹம்சினி, பூத யட்சினி, விசாலா, மகாபயா, வத்யாட்சினி, லட்சுமி, மாலினி,
நடி, சுவர்ணாவதி எனும் ஒன்பது யட்சினிகளும் தங்கத்தையும், ரசவாத ரகசியங்களையும் காத்து வருகிறார்கள்.
வித்யாபதி: குருவே, மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத பொருள் ஒன்று கோவில் கருவூலத்தின் திறக்கப்படாத அறையில் உள்ளதாகச் சொன்னீர்கள். அதைப் பற்றி அறிய ஆவல்கொண்டவனாக இருக்கிறேன்.
யோகி ஆத்மானந்தர்: தங்கக்குவியலை மட்டுமே இதுவரை அறிந்தவர்கள், செம்பைத் தங்கமாக்கும் இரசவாத வித்தையை விளக்கும் செப்பேடுகள் அந்த அறையிலிருப்பதைப் புரிந்துகொள்ளவில்லை. ஸ்வர்ண லக்னத்திற்கு (விருச்சிகம்) பத்தாமிட மாகிய சிம்மத்தில் புதன் அமைவது "அபரஞ்சி' எனும் தூய பொன்னை உருவாக்கும் சாத்திரம் அந்த அறையில் உள்ளதைத் தெரிவிக்கிறது. உலகத்திலேயே அபரஞ்சி தங்கத்திலான பெருமாள் சிலைகள் இரண்டு இடங்களில்தான் இருக்கின்றன. ஒன்று தமிழ்நாட்டிலுள்ள அழகர் கோவிலிலும், இன்னொன்று திருவனந்தபுரத்திலுள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலிலும் உள்ளது.
வித்யாபதி: குருவே, சித்தர்களின் ரச வாதம் உண்மைதானா? அவ்வாறாயின் ஏன் அவர்கள் அதை வெளிப்படுத்த வில்லை? வெளிப்படுத்தியிருந்தால் நம்நாட்டில் ஏழ்மை என்பதே இல்லாமல் போயிருக்குமே.
யோகி ஆத்மானந்தர்: மரம் கரியாகி, அதன்பின் வைரமாக மாறுவது உண்மை யென்றால், இளநீர் முற்றிய தேங்காயில் எண்ணெய்யாக மாறும் என்றால், செம்பு தங்கமாவதில் வியப்பேது மில்லை. நீர், நெருப்பு, காற்று, நிலம் எனும் நான்கு கூறுகளால் மட்டுமே உலகிலுள்ள எல்லா பொருட்களும் உருவாகின்றன. அந்த நான்கு பூதங்களின் அளவுகள் மாறும்போது பொருட்களின் தன்மைகளும் மாறுகின்றன. ஆதியில் ஒன்றாக இருந்ததே, பின்னர் பலவாகத் தோற்றமளிக்கின்றன. எல்லா பொருட்களும் அணுக்களால் ஆனவை. அந்த அணுக் களின் மூலக்கூறுகளின் அமைப்பை மாற்றியமைப்பதனால் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றமுடியும். தேவப் பிரசன்னத்தில் ஒன்பதாம் வீடு கடக ராசியாக அமைந்ததைக் கண்ட துமே ரசவாதத்தைப் புரிந்துகொண்டி ருக்கலாமே. செம்பைக் குறிக்கும் செவ்வாய் நீசமாகி, பொன் பரமகுரு உச்சமடையும் ராசி அதுவல்லவா? போலியாய் ரசமணியை சந்தையில் விற்கும் பாவிகளும், மூடர்களும், முரடர்களும், பேராசை கொண்டவர் களும் ரசவாத ரகசியங்களை அறியக் கூடாதென்பதால், சித்தர்கள் ரசவாத ரகசியங்களை மறைகுறியீடுகளால் மறைத்துவிட்டார்கள்.
"பருவமறிந்து நின்னருளான குளிகை கொடு
பரிசித்து வேதி செய்து
பத்து மாற்றுத் தங்கமாக்கியே பணிகொண்ட
பட்சத்தை என் சொல்லுவேன்?'
(அகத்தியர் 12,000)
பொதுவாக, சித்தபுருஷர்கள் ஜீவசமாதியான இடங்களில் ரசவாத ரகசியங்கள் புதைந்திருக்கும். சித்தர் களில் முதன்மையான அகத்தியர் ஜீவசமாதி அடைந்த இடம் திருவனந்த புரத்தில் அனந்த சயனத்தில் இருக்கும் பத்மநாபரின் மூலஸ்தானமேயாகும். இதைப் புரிந்துகொண்டாலே ரசவாத ரகசியத்தின் செப்பேடுகள் உள்ள இடத்தைப் புரிந்துகொள்ளலாம்.
வித்யாபதி: குருவே! செவிவழிச் செய்திகளையும், அனுமானங்களையும் கடந்து, ரசவாத ரகசியத்தின் செப்பேடுகள் அந்த அறையில் உள்ளதைத் தெரிவிக்கும் வேறு சான்றுகள் உள்ளனவா?
யோகி ஆத்மானந்தர்: "ரசவாதக் குறியீட்டி யல்' அறிந்தவர்களால், மூடிய கதவில் செதுக்கப் பட்டுள்ள சின்னங்களைக்கொண்டு எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். மூன்று இலைகளையும், பன்னிரண்டு விதைகளையும் கொண்டு லட்சுமியின் சொரூபமாக விளங்கும் மூலிகையின் சாறுகொண்டு செய்யப்படும் ரசவாத முறையைப் பற்றிய விவரங் கள், அந்த அறையிலுள்ள செப்பேடுகளில் உள்ளன. தில்லை சிதம்பரத்தில் காட்டப்படும் ரகசியமும் அதுவே. திறக்கப்படாத கதவில் காணும் மறைமுகக் குறியீடுகளைக் கவனமாக அறிந்துகொள்.
- பொன்னை சுத்திகரிப்பது.
-பொன் பரமகுரு-ரசவாதக் குறியீடு.
☽- வெள்ளி
மூன்று இலைகளையும், பன்னிரண்டு விதைகளையும்கொண்ட மூலிகை.
14 மேல் நோக்கிய முக்கோணங்கள்- 14 திதிகள், தீயில் தங்கத்தை புடம் போடுவதையும் குறிக்கும்.
☿ புதன்- பாதரசம்.
ரசவாதத்தில் சூரியனும் தங்கமும்.
வித்யாபதி: குருவே, சித்தர் பாடல்களின் பொருளறிந்து, எவரேனும் முயன்றால் ரசவாதம் கைகூடுமா?
யோகி ஆத்மானந்தர்: ரசவாத மூலிகைகையை அறிந்தால் மட்டும் வெற்றியடைந்துவிட முடியாது. பூச நட்சத்திரத்தன்று மட்டுமே கரிசாலைக்கு உயிர்ப்புண்டாகும். அதுபோல், ஒவ்வொரு மூலிகைக்கும் உயிர்சக்தி தரும் நாளை அறியவேண்டும். குருவின் அருளால் மூலிகை சாபநிவர்த்தி செய்து மூலிகைக்கு உயிரூட்டி, சிவனார் விந்து எனும் ரசத்தின் குற்றத்தை நீக்கி, சரக்கு வைப்பு முறையைக் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு மட்டுமே ரசவாதம் சாத்தியமாகும். ஆதி சரக்காகிய வாதமுப்பு எனும் குரு மருந்தைக் கண்டவரே கோடியில் ஒருவர்தான். "குருக்காணா மூடரப்பா கோடா கோடி கும்பித்துத் தம்பித்து மாண்டார்கோடி.'
வித்யாபதி: குருவே, கருட மந்திரத்தால் "பரதக்கோன்' நிலவறை யைத் திறக்க முடியுமென்று கூறுகிறார்களே, அது உண்மையா?
யோகி ஆத்மானந்தர்: பாம்புக்குப் பகை கருடன் என்ற எண்ணத் தில் சித்தர்களின் ரகசியம் தெரியாத யாரோ செய்துகொண்ட கற்பனை உண்மையாகாது.பாம்பு, கருடன் இரண்டுமே அனந்த பத்மநாபரின் பிரியத்திற்கு உரித்தானவையே. கர்மக்கட்டுகளை நீக்கிவிட்டு, அனந்த சதுர்த்தசியில் சர்ப்ப ஸ்தம்பனமும், முழு பௌர்ணமியன்று யட்சினி வசியமும்செய்து, அகத்தியரின் அருள்பெறுபவருக்கு மட்டுமே விதியிருந்தால் வாய்க்கும். யட்சினியை வசியம்செய்வது எளிதான காரியமல்ல. நீண்ட தலைமுடியும், மின்னலைப்போன்ற தோற்றமும், கோரைப் பற்களும் கொண்ட யட்சினியிடம் மயங்கி மாண்டவர்கள் பலருண்டு. யட்சினி காவல் காக்கும் பொருளைக் கவர்ந்து செல்ல நினைப் பவர்கள் மர்மமான முறையில் இறந்த சம்பவங்கள் பல உண்டு. தேவப் பிரசன்னத்தில், அனந்த பத்மநாபரின் அனுமதியைப் பெற்றே அந்த ரகசிய நிலவறையைத் திறக்க வேண்டும். அவ்வாறில்லாமல் தவறான முறையில் முயற்சி செய்தால் நாட்டிற்கு பெரும் கேடு விளையும் என்பது உறுதி.
(புலனாய்வு தொடரும்)
செல்: 63819 58636