உலகில் ஒரு வழக்குச்சொல் உறுதியாக உண்டு. அது "மாற்றம் ஒன்றே மாறாதது' என்பதுதான். ஆம்; அது உண்மைதான். உலகத்தில் அனைத்தும் மாறிக்கொண்டேதான் இருக்கும். ஓரறிவு ஜீவன்முதல் ஆறறிவு மனிதன்வரை மாற்றங் கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மாறுதல் உண்டாகும் விஷயங்கள் எத்தனையோ உள்ளன. அவற்றுள் ஒன்று இடமாறுதல். இது ஒருவர் வசிக்குமிடம், வேலை செய்யுமிடம், தொழில் செய்யுமிடம், கல்வி கற்குமிடம், மருத்துவ சேவை பெறுமிடம், ஆன்மிக ஆற்றல் பெறுமிடம், அரசு சேவை, அரசியல் செய்யுமிடம் என ஒரு மனிதரின் வாழ்வோட்டம் சம்பந்தப்பட்ட இடங்களும் மாறிக்கொண்டேதான் இருக்கும்.
இந்த இடமாறுதலைக் கூறுவது ஜோதிடத்தின் 12-ஆமிடமாகும். ஜாதகத்தில் 12-ஆமிட அதிபதி, 12-ஆமிட அதிபதி சாரம், 12-ஆமிட அதிபதி இணைவு மற்றும் பரிவர்த்தனையானது எந்த பாவாதிபதியுடன் உள்ளதோ அதன் சம்பந்த மாற்றம், இடமாறுதல் அதன் தசா புக்தி அந்தர காலங்களில் நடக்கும்.
12-ஆமிடமும் லக்ன சம்பந்தமும்
எப்போதும் லக்னமானது 12-ஆமிட- 12-ஆமதிபதி சம்பந்தம் பெறுவது அவ்வளவு சிலாக்கியமானதல்ல. ஏனெனில் லக்னம் என்பது ஜாதகரைக் குறிப்பது. ஒரு ஜாதகர் அவசியமானால் இடமாற்றம் செய்வது தவிர்க்கமுடியாதது. சிலசமயம் இட மாற்றமானது வாழ்க்கையில் ஏற்றத் தைக் குறிக்கும் வகையிலும் அமையும். ஆனால் எப்பொழுது பார்த்தாலும் இடமாறுதல் செய்வது ஏற்புடையதல்ல.
அந்த மனிதர் சோர்ந்து விடுவார். இத்தகைய வர்கள் பெரும்பாலும் தங்கள் பிறந்த இடத்தில் வாழமாட்டார்கள். இவர்கள் அரசியல் தொடர்புகொண்டிருந் தால், இருக்கும் அத்தனை கட்சிகளிலும் இடம் மாறிவிடுவார்கள். அடிக்கடி வெகுதூரப் பயணம் மேற்கொள்வர். முக்கிய விஷயத்திற்காக இவர்களைத் தேடும் போது, இவர்கள் இடம் மாறிக்கொண்டே இருப்பதால் வாழ்க்கை யில் நல்ல வாய்ப்புகளை இழந்துவிடுவார்கள். அனேகமாக இவர்களில் பலரது தலை வழுக்கைவிழுந்து காணப்படும்.
லக்னம், 12-ஆமிட சம்பந்தமான மாறுதல் முழுக்க முழுக்க ஜாதகரைச் சார்ந்தே அமையும்.
12-ஆமிடம், இரண்டாம் வீட்டு சம்பந்தம்
12-ஆமதிபதியும் 2-ஆமதிபதியும் சம்பந்தப்படும்போது விளையும் இடமாற்றம்- பள்ளிக்கூடம் மாறுதல், பற்கள் பெயர்ந்துபோதல், அசையும் சொத்து இடமாற்றம், வீடு மாற்றம், நகை மாற்றம், கண் லென்ஸ் மாற்றம், மாட்டுக் கொட்டகை மாற்றம், வியாபார இடமாற்றம், ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள், குறிசொல்பவர்கள் என இவர்கள் செய்யும் தொழில் சார்ந்த இடமாற்றம், டியூஷன் சென்டர் இடமாற்றம், பணம் கொடுக்கல்- வாங்கல் செய்வோர் இடமாற்றம், பத்திர விற்பனையாளர்கள் இடமாற்றம், மருத்துவமனை, சிறையில் இருப்போர் இடமாற்றம் என இவ்வித மாற்றங்கள் நிகழும்.
12-ஆமிடம், 3-ஆமிடம் சம்பந்தம்
காதணிக் கடை வைத்திருப்போர், செருப்புக் கடை முதலாளி, பொழுது போக்கு ஸ்தாபனம், ஆரோக்கிய மேம்பாட் டுக் கூடங்கள், பணி யாட்களை வேலைக்கு அமைத்துக் கொடுப் போர், வாகனங்களை வாடகைக்கு விடுவோர், விளையாட்டுப் பயிற்சி மையம், மதம் சம்பந்தமான பணி நிலையம், செய்தி பத்திரிகை, கைபேசிக் கடை, தொலைக்காட்சி நிலையம், தொலைக்காட்சி நிகழ்ச்சி நிலையம், அச்சகம், நூல்நிலையம், வாடகைக்கு வீடுபிடித்துத் தருவோர், கல்வி பயிற்சி நிலையம், மன வளர்ச்சி நிலையம், காது, தொண்டை மருத்துவ மனை, சித்த பிரம்மையை சரியாக் கும் இடம் என மேற்கண்ட தொழில்கொண்ட வர்கள் 12-ஆமதிபதி, 3-ஆமதிபதி தொடர்புகொள்ளும் புக்தி, அந்தர காலங்களில் கண்டிப்பாக இடமாற்றம் செய்வார்கள்.
12-ஆமிடம், 4-ஆமதிபதி சம்பந்தம்
12, 4-ஆமதிபதி சம்பந்தம் உண்டாக்கும் இடமாற்றம் என்பது- கல்வி நிலையம், வீடு, கடை, பட்டு, வாகனம், எண்ணெய்க் கடை, துணிக்கடை, கிணறு, குளிர்பானக் கடை, பால்- தயிர்- மோர் கடை, மருந்துக்கடை, திருமண மண்டபம், விவசாய நிலம், தோட்டம், மாடித் தோட்டம், பண்ணைகள், மீன் குட்டைகள், பசு- எருமை- ஆடு- குதிரைகள் இருக்கும் கொட்டகைகள், வாகனம் நிறுத்துமிடம், மூலி-கைக்கடை, பள்ளி, கல்லூரி இடங்கள், விளையாட்டு மைதானம், மனை, வீடு விற்பனை செய்யுமிடம், ஜபம்- மந்திரம் சொல்லுமிடம், நினைவுச்சின்னமுள்ள இடம் என இவைசார்ந்த இடங்கள் 12, 4-ஆமிட சம்பந்தம் பெறும்போது இட மாறுதல்களை சந்திக்கும்.
12, 5-ஆமிட சம்பந்தம்
குழந்தைகள் அறை, மாணவர்களின் பள்ளி, கல்லூரி, ஆடைகள் விற்கும் கடைகள், ஆடைகள் அடுக்கும் அலமாரி, காதலர்கள் சந்திக்குமிடம், மருத்துவம் பார்க்கு மிடம், சங்கீதம் கற்குமிடம், மழலையர் பள்ளி, பொழுதுபோக்கு மிடம், விளையாடு மிடம், தொலைக்காட்சி படப்பிடிப்பு நடத்துமிடம், திரைப்படம் தயாரிக்குமிடம், திரையரங்கு, இசை- நடனம் கற்கும் மற்றும் கற்பிக்கும் இடங்கள், அமைச்சர்களின் வீடு, கலைநுணுக்கப் பொருட்கள் செய்யுமிடம், பங்கு பத்திரம் விற்குமிடம், மந்திரங்கள் கற்கும்- கற்பிக்குமிடம், உணவுசார்ந்த இடம், ஹோட்டல், பாட்டனாரின் வீடு போன்றவை 12-ஆமதிபதி, 5-ஆமதிபதியின் தசா, புக்தி, அந்தர காலங்களில் இடமாற்றங் களைச் சந்திக்கும்.
12, 6-ஆமிட சம்பந்தம்
இந்த இணைவு இருப்பின், தாய்மாமன் வீடு, எதிரிகள் உள்ள இடம், கடன் கொடுக்குமிடம்- கடன் வாங்குமிடம், பிச்சை எடுக்குமிடம், சிறைச்சாலை இடமாற்றம், மருத்துவமனை மாற்றம், வேலையாட்கள் இடமாற்றம், தொழிலாளர்கள் இடமாற்றம், மருந்துக்கடை, பஞ்சாயத்து செய்யுமிடம் மாற்றம், வழக்குகள், வழக்கறிஞர்களின் அலுவலங்கள், நீதிமன்றங்கள் இடமாற்றம், வாடகை வீடு மாற்றம், தன் கைப்பொருள் திருடர்மூலம் இடமாற்றம், வட்டி வியாபாரம் மாற்றம், இலவச உணவுக்கூட மாற்றம் என இடமாற்றங்களைத் தரும்.
12, 7-ஆமிட சம்பந்தம்
12, 7-ஆமதிபதிகள் சம்பந்தமானது- திருமணம்மூலம் வீடு மாற்றம், திருமண மண்டபம் இடமாற்றம், தெரு மாற்றம், வியாபார பங்குதாரர்களின் இடமாற்றம், வியாபார ஸ்தலம் மாற்றம், வழக்கு எண் மாற்றம், அழகு மலர்க்கடை மாற்றம், வாசனை திரவியக் கடை மாற்றம், குளிர்பானக் கடை மாற்றம். சுவையான இனிப்புப் பலகாரக்கடை இடமாற்றம், வெளிநாடு சம்பந்த மாற்றம், சில கணவன்- மனைவி இடமாற்றம், பால் விற்பனை, பால் அட்டை வாங்குமிடம் மாற்றம், நெய்க்கடை மாற்றம், ரகசியத் தொடர்புகள் இடமாற்றம், சிறுநீரக மாற்றம், சொத்து இடமாற்றம் போன்றவை நிகழும். சிலருக்கு இவ்வுலகிலிருந்து மேலுலகத்திற்கு இடமாற்றமும் உண்டு.
12, 8-ஆமிட சம்பந்தம்
உடலுறுப்புகள் இடமாற்றம், சிறை இடமாற்றம் (வீட்டிலி-ருந்து சிறை அல்லது சிறையி-லிருந்து வீடு), தாலி- மாற்றம், வழக்குகள் இடமாற்றம், வெளிநாடு மாற்றம், புதையல் இடமாற்றம், பண மாற்றம், ஆயுதக்கிடங்கு மாற்றம், நெருப்புத் தொழில் மாற்றம், அடகுக்கடை, சுடுகாடு இடமாற்றம், மரம் இடமாற்றம், கடன் மாற்றம், இன்ஷூரன்ஸ் இடமாற்றம், அறுவை சிகிச்சை மருத்துவமனை இடமாற்றம், கசாப்புக்கடை மாற்றம், ஏற்றுமதி- இறக்குமதி அலுவலகங்கள் மாற்றம், வங்கி மாற்றம் என 12-ஆமதிபதி, 8-ஆமதிபதி சம்பந்தமானது இடமாற்றங் களைத் தரும்.
12, 9-ஆமிட சம்பந்தம்
மேற்கண்ட சம்பந்த காலத்தில் சிலரது குலகுரு இடமாற்றம் செய்வார். மேலும் ஆசிரியர், உயர்கல்வி, கல்லூரி, தந்தையின் பெயரிலுள்ள, சொத்து, யானை கட்டுமிடம், குதிரை லாயம், பசுமடம், சில கோவில்கள், திருமண அமைப்பிடம், புத்தக அலமாரி, சட்டரீதியான இடங்கள், புத்தக வெளியீட்டு அலுவலகம், சில பல்கலைக்கழகங்கள், சில கிணறுகள், ஏரிகள், பணப்பரிவர்த்தனை இடம், தியானம் கற்பிக்குமிடம், ஆராய்ச்சி நிலையங்கள், தெய்வ வழிபாட்டுக்கூடம், வைதீக செய்முறை இடங்கள், பயண அமைப்பு அலுவலகம், வெளிநாட்டு வர்த்தக அமைப்பு, கப்பல் சார்ந்த இடம், விமான நிலையம், போக்குவரத்து நிலையம், பேருந்து நிறுத்தங்கள், யாகம் செய்யுமிடம், ஜீவகாருண்ய நிலையம், உபதேச மன்றம் என இவ்வாறான இடங்கள் இடப்பெயர்ச்சி பெறும். குறிப்பாக கோவில், கடவுள்சிலை போன்றவை இடமாற்றம் பெறுவது நடக்கும். சிலர் பூஜையறையை இடம் மாற்றுவர். (கோவிலி-ல் சுவாமியின் இடமாற்றம் என்பது ஆலய கும்பாபிஷேகத்தின்போது நடக்கும்.)
12, 10-ஆமிட சம்பந்தம்
12-ஆமதிபதி, 10-ஆமதிபதி சம்பந்தம் உண்டாக்கும் இடமாற்றங்கள்: தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வியாபார "மால்'கள் மற்றும் கடைகள், அரசு வேலை, விவசாயப் பணிகள், மருத்துவமனை, டியூஷன் சென்டர்கள், நீதிமன்றங்கள், தகனம் செய்யுமிடம், மண்டபங்கள், அர்ச்சனை செய்யுமிடம், சந்நியாசி மடங்கள், தாயார் வசிக்குமிடம், குதிரைப் பயிற்சிக்கான இடம், சேவை புரியுமிடம், மருந்துக்கடைகள், சில அணைக்கட்டுப் பகுதிகள் போன்ற அனைத்து வேலைசெய்யும் இடங்களும் இந்த 12, 10-ஆமதிபதிகளின் தசை, புக்தி, அந்தர காலங்களில் மாற்றங்கள் நடைபெறும். 10-ஆமிடம் என்பது கர்ம ஸ்தானம். எனவே அது சம்பந்தமான இடப்பெயர்ச்சியும் மாறுதலும் உண்டு.
12, 11-ஆமிட சம்பந்தம்
மேற்கண்ட அதிபதிகளின் சம்பந்தமானது நிறைய அரசியல் இடமாற்றங்களை ஏற்படுத்தும். மூத்த சகோதரரின் வீடு, லாபங்களின் அஸ்திவார இடங்கள், வருமா னம் குவிக்கும் இடங்கள், சித்தப்பாவின் வீடு, பூர்வீக சொத்து, ஆபரணக் கடை, அமைச்சர் பதவி, மைத்துனர் மாற்றம் (இது ரகசிய மனைவி வருவதால் ஏற்படும்), சமையலறை, காதணி, பதவி உயர்வால் இடமாற்றம், வழக்குகள், மாநகர இடம், பஞ்சாயத்து நிலம், சில நிறுவனங்கள், சொசைட்டி, ஆடம்பரப் பொழுதுபோக்கு இடங்கள், நண்பர்களை சந்திக்குமிடம் என இவை சார்ந்தவை மாற்றம் பெறும். அரசு இடத்தை தன் பெயருக்கு பட்டாபோட்டு மாற்றிக்கொள்வதும், மூட்டு வலி-யால் மூட்டு இடம்பெயர்தலும் நடக்கும். 12-ஆமதிபதி சுய சாரம் மற்றும் ஆட்சியாக அமர்ந்திருந்தால் படுக்கையறை மாற்றம், கட்டில் மாற்றுவது, வெளிநாடு மாற்றம், பாதங்கள், சிறைவாசம், முன்னோர் களின் சொத்து, சில உடலுறுப்புகள் இடமாற்றம், தம்பதிகளின் மாற்றம், முதலீடு மாற்றம், குடும்பத்தில் மாற்றம், இரண்டாவது தொழில் இடமாற்றம், ரசாயன ஆய்வு இடமாற்றம், சிலர் பிறரிடம் ஏமாந்து இடமாற்றம், குற்றம்சாட்டப்பட்டு இடமாற்றம், அதீத செலவுகளால் வீடு மாற்றம், மருத்துவமனைக்குச் செல்வதால் மாற்றம் என 12-ஆமதிபதி, சாரநாதன், 12-ஆமதிபதியின் காரக கிரகம் ஆகியவற்றை அனுசரித்து இடமாற்றங்கள் ஏற்படும். நம் கண்ணெதிரே தினமும் இடமாறுதல் பெற்று அசைந்துகொண்டிருப்பவர்கள் சூரியனும் சந்திரனும்தான். எனவே நல்ல இடமாறுதல் விரும்புபவர்கள் சூரியனையும் சந்திரனையும், பிரதோஷ கால சிவனையும், பௌர்ணமி நாளில் அம்பாளையும் வணங்கவும். எல்லா இடமாறுதலும் இனிய மாற்றமாக அமையும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94449 61845