● வ. ரூபாவதி, குடந்தை.
என் கணவர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிட நூல்களைப் படித்து ஜோதிட ஞானம் பெற்றுள்ளார். தற்போது (எட்டு வருடமாக) அரசுப்பணியில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் வாங்குகிறார். அவர் பணியில் இருந்த காலத்தில் தேனி- ஈரோடு அருகில் பிளாட் வாங்கிப் போட்டுள்ளார். அவருக்கு வீடு கட்டும் யோகம் உண்டா? அது எப்போது நடக்கும்? எங்கள் ஆயுள், ஆரோக்கியம், எதிர்காலம் எப்படி இருக்கும்?
கணவர் வசீகரன் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மேஷ லக்னம். மனைவி ரூபாவதி உத்திராட நட்சத்திரம், மகர ராசி, துலா லக்னம். சமசப்தம லக்னம். ஆயுள், ஆரோக்கியம் தெளிவாக உள்ளது. பிளாட்டுகளை விற்றுவிட்டு விரும்பிய இடத்தில் வீடு கட்டலாம். கடன் கிடைக்கும். முன்னதாக பொன்னமராவதி அருகில் செவலூர் சென்று பூமிநாத சுவாமி, ஆரணவல்லியம்மனுக்கு ஒரு அபிஷேகம் செய்து வீடுகட்ட மனுபோடவும். (பிரார்த்தனை வேண்டுதல்). வீடு கட்டி முடித்து கிரகப் பிரவேசம் செய்தபிறகு அதே தலத்தில் 108 சங்கு வைத்து ருத்ரஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு ருத்ராபிஷேக சங்காபிஷேக பூஜை செய்யவும். (தொடர்புக்கு: ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863). வசீகரன் உத்திரட்டாதி நட்சத்திரம். அவர் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தேவகோட்டையிலிருந்து ஓரியூர்வழி திருப்புனல்வாசல் சென்று தீயத்தூர் சஹஸ்ர லட்சுமீஸ்வரர் கோவிலில் (உத்திரட்டாதியன்று) நடக்கும் ஹோமத்திலும் பூஜையிலும் கலந்துகொள்ளவும். (தொடர்புக்கு: டி.எஸ். கணேச குருக்கள், செல்: 99652 11768). இந்த இரண்டு பிரார்த்தனை செய்தபிறகு இடம் விற்கவும், வீடு கட்டவும் தடையில்லாமல் முயற்சி கைகூடும்.
● எஸ். சரஸ்வதி, கிருஷ்ணகிரி.
தங்களின் அறிவுரையாலும் பண்புமிக்க ஜோதிடத்தாலும் பயன்பெறும் லட்சக்கணக்கான உள்ளங்களில் நானும் ஒருத்தி! எங்களைப் போன்றவர்களின் தோஷங்களை நிவர்த்தி செய்து ஆலோசனை கூறும் தங்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க பிரார்த்திக்கிறேன். தங்களுடைய அறிவுரைப்படி என் பேத்திகளின் படிப்பு, வேலை நன்றாகப் போகிறது. அடுத்து திருமணம் செய்யவேண்டிய கடமை! ஆனால் பேத்தி திருமணம் வேண்டாமென்று மறுத்து வருகிறாள். ஏன்? எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. திருமணத்தடையோ தோஷமோ இருக்கிறதா? ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா? எனக்கும் 76 வயது ஆகிவிட்டது.
மூத்த பேத்தி சிவரஞ்சனி (வயது 25) ரேவதி நட்சத்திரம், மீன ராசி, விருச்சிக லக்னம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது, ராசிநாதன் குரு லக்னத்துக்கு 12-ல் மறைவு. நாகதோஷம், மாங்கல்ய தோஷம் உண்டு. 27 வயது முடிந்தபிறகு திருமணப்பேச்சை எடுக்கவும். வேலை, சம்பாத்தியம், அதன்பிறகு திருமணம் என்பது சிவரஞ்சனியின் லட்சியம். இளைய பேத்தி ஹரிதா (வயது 23) பூச நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னம். லக்னத்தில் குரு நிற்பது நல்லது என்றாலும், 7-ல் சனி, புதன் இருப்பது தோஷம். இவருக்கும் 27 வயது முடிந்த பிறகு திருமணம் பற்றிப் பேசலாம். இருவருக்கும் 2018-க்குப் பிறகு நல்ல வேலை அமையும்.
● ராமநாதன், பரமக்குடி.
திருமணப் பொருத்தம் பத்து என்றும் 13 என்றும் சொல்லுகிறார்கள். இதில் எவை மிக மிக முக்கியமானவை?
மொத்தம் திருமணப்பொருத்தம் 23. அதுமாறி பத்துப் பொருத்தம் என்று சுருங்கிவிட்டது. தினம், கணம், ஸ்திரீ தீர்க்கம், மாகேந்திரம், ராசி, ராசியாதிபதி, யோனி, வசியம், ரஜ்ஜு, வேதை என்ற பத்தும்தான் முக்கியமான பொருத்தம். இத்துடன் பட்ஷி, மரம், நாடி என்று மூன்று சேர்த்து 13 என்றும் கூறுவார்கள். இந்த 3-ம் அவசியமில்லை. திருமண விருந்தில் எண்ணிக்கைக்காக முதலில் ஜாம் என்று இனிப்பு வைப்பார்கள். சில இடங்களில் தயிர் வெங்காயம் வைப்பார்கள். அதுமாதிரிதான். அதற்கு முக்கியத்துவமில்லை. பத்து பொருத்தத்தில் ஸ்திரீ தீர்க்கம், மாகேந்திரம் ஆகிய இரண்டும் அவசியமில்லை. இது சப்ஸ்டிட்யூட் மாதிரி. முக்கியமானது- அவசியமானது யோனி, ரஜ்ஜு, வேதை, ராசி, தினம் (நட்சத்திரம்) ஆகிய ஐந்தும்தான். நட்சத்திரப் பொருத்தத்தில் வதை தாரை கூடாது. ராசி சஷ்டாஷ்டகம் கூடாது. ஒரே ரஜ்ஜு கூடாது. இதற்கும் மேல் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ராகு தசை, சம ராகு புக்தி நடக்கக்கூடாது. பத்துப் பொருத்தம் இருந்தாலும் திருமணத்தேதிதான் மிக மிக முக்கியமானது. தேதி எண்ணும் கூட்டு எண்ணும் 4, 5, 7, 8 வரக்கூடாது. இதில் நடக்கும் திருமணங்கள் பெரும்பாலும் திருப்தியில்லாமல் போய்விடும். வாரிசு இருக்காது. விவாகரத்து ஆகலாம் அல்லது பிரிந்துவிடலாம்.
● ப. சுந்தரம், கோவனூர்.
என் மகள் அனுசுயா (எ) ராஜமீனா திருமண நிச்சயம் 26-3-2018-ல் நடந்தது. திருமணம் நடக்கவேண்டிய தேதி 25-6-2018. இந்தத் திருமணம் நல்லபடி நடக்குமா? உங்கள் சொல்படி நடக்காமல் தீர்மானித்துவிட்டேன்; மாற்றியமைக்க முடியுமா?
நிச்சயம் செய்த தேதி 8+4. இதில் நிச்சயிக்கப்பட்ட திருமண முயற்சிகளில் குழப்பம், தடைகள், குறுக்கீடுகள் உருவாகும். அடுத்து திருமணத் தேதி 25-6-2018. 7 என்பதும் நல்லதல்ல! மேலும் மகளுக்கு மகர ராசி, திருவோண நட்சத்திரம். ஏழரைச்சனியும் ராகு தசையும் நடக்கிறது. 2025 மே வரை ராகு தசை. துலா லக்னத்தில் ராகு, 7-ல் கேது. கும்பச்சனியை கடகச் செவ்வாய் பார்ப்பது தோஷம். எனவே இந்தத் திருமணத்தை கேன்சல் செய்வது நல்லது. மீறி நடந்தாலும் அது கலாட்டா கல்யாணமாகத்தான் இருக்கும். பெண் கண்ணீரும் கம்பலையுமாக பிறந்த வீடு திரும்பலாம். ஆன செலவு ஆனதாக அமையட்டும். 2020-ல் 25 வயது முடிந்தபிறகு நல்ல வரனும் நல்ல மணவாழ்க்கையும் மகிழ்ச்சியும் வாரிசு யோகமும் அமையும். 2019 மார்ச்சில் 24 வயது முடிந்து 25 தொடக்கத்தில் அவருக்கு காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வர கலாஹோமமும் சூலினி துர்க்கா ஹோமமும் திருஷ்டி துர்க்கா ஹோமமும் நவகிரக ஹோமமும் சனி சாந்தி ஹோமமும் ஆயுஷ் ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்ய வேண்டும். வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவிலில் மேற்படி ஹோமம் செய்யலாம். சுந்தரம் குருக்களை 99942 74067-ல் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யவும்.
● ஏ.ஆர்.ஆர். சுதர்சனம், சென்னை.
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கூறினார். இளங்கோவடிகளுக்கு ஜோதிடர் சொன்ன பலனை பொய் என்று நிரூபித்துவிட்டதால் ஜோதிடம் பொய் என்று சிலர் கூறுகிறார்களே...?
ஜோதிடர்கள் இளங்கோவடிகளை சக்கரவர்த்தி ஆவார் என்று சொன்னதால் அவர் அண்ணன் சேரன் செங்குட்டுவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அதனால் இளங்கோவடிகள் சிம்மாசனம் வேண்டாம் என்று துறவு பூண்டார். தமிழ் இலக்கியத்தில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று போற்றப்படுவதில் சிலப்பதிகாரமும் ஒன்று. அதை இயற்றிய இளங்கோவடிகள் தமிழ் இலக்கிய உலகின் சக்கரவர்த்தியாகிவிட்டார். அதனால் ஜோதிடம் பொய்யாகவில்லை. "ஊழிற்பெரு வலியாவுள மற்றொன்று சூழினும்தான் முந் துறும்' என்று வள்ளுவர் சொல்லுவார். அதைத்தான் "ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்' என்று இளங்கோவடிகள் கூறினார். சிம்மாசனம் ஏறினால்தான் சக்கரவர்த்தி என்று அர்த்தமல்ல. மக்கள் மன ஆசனத்தில் இடம் பெற்றாலும் அவர் சக்கரவர்த்திதான். மறைந்த பண்டித ஜவஹர்லால் நேருவை முடிசூடா மன்னர் என்று பாராட்டினார்கள். அவர் எந்த நாட்டுக்கு மன்னர்? ஊழ்வினையை ஒப்புக்கொள்கிறவர்கள் ஜோதிடத்தை நம்பித்தான் ஆகவேண்டும். ஜோதிடம் பொய் என்பவர்கள் ரகசியமாக ஜோதிடம் பார்த்தவர்கள்தான்! பார்க்கிறவர்கள்தான்! ஜோதிடம். என்பது காலத்தின் கணக்குத்தான்! மழைக்காலத்தில் மழைபொழியும். வெய்யில் காலத்தில் வெய்யில் (வெப்பம்) அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் குளிரும் பனியும் இருக்கும். இலையுதிர் காலத்தில் இலை கொட்டும். பகலில் சூரியன் தெரியும். இரவில் சந்திரன் தெரியும். இப்படி இயற்கை மாற்றங்களை விளக்குவதே ஜோதிடம். அந்த மாற்றங்கள் அவரவர் ஜாதகப்படி (ராசி, நட்சத்திரம், தசாபுக்தி, லக்னப்படி) ஏற்றமாகவோ இறக்கமாகவோ எப்படியிருக்கும் என்பதே ஜோதிடம்! நோய்க்கு மருந்து கொடுப்பதே மருத்துவரின் கடமை. கல்வி அறிவைப் புகட்டுவதே பள்ளியின் கடமை. இன்று மருத்துவத்துறையும்- கல்வித்துறையும் பணம் பண்ணும் வியாபாரமாகிவிட்டதுபோல ஜோதிடமும் ஒருசிலரால் பரிகார வியாபாரமாகிவிட்டது. அதற்காக அந்தத் துறைகள் மோசம் என்றாகிவிடாது.
● ஏ. ஏழுமலை, ஆரணி.
என்னைப் போன்ற நடுத்தர மக்களுக்கு ஏற்றதுபோல பரிகாரங்களைச் சொல்லுவதற்கு நன்றி! நீங்கள் எழுதியபடி என் மகனுக்கு காளஹஸ்தி சென்று நாகதோஷப் பரிகாரம் செய்துவிட்டோம். மகனுக்கு 31 வயதில் திருமணம் செய்யவேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அதற்குள் அரசு வேலை அமையுமா?
தனுசு லக்னம். அதில் சனி இருப்பதால் 31 வயதில் திருமணம் என்பது விதி. 10-ல் சூரியன், புதன், செவ்வாய். சூரியனும் புதனுக்கு உத்திர நட்சத்திரம் சூரியன் சாரம் என்பதால் அரசு வேலைக்கு இடமுண்டு. தொடர்ந்து விடாமுயற்சியாக அரசு வேலைக்கான தேர்வு எழுதச்சொல்லவும்.
● பாலமுருகன், பழைய ஏழாயிரம்பண்ணை.
நான் ஒரு ஆலய அர்ச்சகர். இரண்டு வருடமாக "பாலஜோதிடம்' படித்து வருகிறேன். நீங்கள் எழுதும் கேள்வி பதில்களும் கட்டுரைகளும் ஜோதிடம் கற்க மிகவும் எளிதாக உள்ளது. எனக்கும் ஜோதிடம் கற்க ஆசை! ஜாதகப்படி ஜோதிடம் வருமா?
மணி- மந்திரம்- ஔஷதம் என்று சொல்லப்படும்! மணி என்பது ஜோதிடத்தைக் குறிப்பது. மந்திரம் என்பது ஆலயப்பணி. ஔஷதம் என்பது மருத்துவம் மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்த கலை- உடன்பிறப்புக்கள். நீங்கள் ரிஷப லக்னம்- கன்னியா ராசி. லக்னத்துக்கு 2-ல் கேது. ராசிக்கு 2-ஆம் இடத்தை சனியும் செவ்வாயும் பார்க்க- குரு பூரம் 2-ல் சுக்கிரன் சாரம் பெறுவார். (நீங்கள் அனுப்பிய குறிப்பில் பாதசாரம் பூராடம் 2-ல் வியாழன் என்று எழுதியிருப்பது தவறு. பூராடம் என்றால் தனுசு ராசியில்தான் குரு இருக்க வேண்டும். குரு சிம்மத்திலும்- நவாம்சத்தில் கன்னியிலும் இருப்பதால் பூரம் என்றுதான் இருக்கவேண்டும்). எனவே ஜோதிடம் எளிதாக வரும். சென்னையில் பி.எஸ்.பி. விஜயபாலாவை செல்: 98410 40251-ல் தொடர்புகொண்டு அவர் தகப்பனார் எழுதிய ஜோதிடப் பயிற்சிப் புத்தகத்தை வரவழைத்துப் படியுங்கள். நீங்களும் பெரிய ஜோதிடராகலாம். விஜய்பாலா தகப்பனார் பி.எஸ். பரமசிவம் (பி.எஸ்.பி.) சிறந்த ஜோதிட ஆய்வாளர். மணிக்கணக்கில் பேசி கின்னஸ் சாதனை படைத்தவர். எனக்கு நல்ல நண்பர். உறவினரும்கூட! அவர் எழுதிய ஜோதிடப் பாடநூல் கற்பதற்கு எளியதாகவும் தெளிவாகவும் அமைந்துள்ளது.
● பெயர் இல்லாதவர், ஊர் தெரியாதவர்.
"நல்ல நேரம்' நாகராஜ் என்பவர் மேஷம், துலா ராசி அல்லது லக்னம் உடையவர்கள் திருப்பதி செல்லக்கூடாது என்கிறார். அது உண்மையா? ஒருவருக்கு குலதெய்வமாக பாலாஜி இருந்து அவர் மேஷம், துலா ராசிக்காரர் ஆக இருந்தால் போகாமல் இருக்க முடியுமா?
"எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான். படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்' என்ற நிலைதான். எந்த ராசிக்காரர்களானாலும் சரி; லக்னத்தவராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எந்தத் தெய்வமும் ஆகாத தெய்வம் என்றோ- கெடுக்கும் தெய்வம் என்றோ எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை. அதேசமயம் ஒருசிலரின்- தனிப்பட்டவர்களின் அனுபவத்தில் சில கோவில்களுக்குப் போனால் நல்லது நடக்கிறது. சில கோவில்களுக்குப் போனால் கெட்டது நடக்கிறது. முருகனையே விரும்பி வழிபடுகிறவர்களில்கூட ஒருவருக்கு பழனி யோகமாக அமைகிறது. வேறொருவருக்கு திருச்செந்தூர் நன்மை தரும் தலமாக அமைகிறது. பழனி தண்டாயுதபாணியும் திருச்செந்தூர் முருகனும் ஒருவருக்கொருவர் பகைவர்களா? எல்லாம் மனதின் தன்மையைப் பொருத்ததே! மற்ற பாகுபாடுகள் எல்லாம் மூடநம்பிக்கைதான்! கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன்- இப்படிப் பாகுபாடு பார்க்கிறவனைவிட நல்லவன் எனலாம்.
● பி.பி. ராஜமோகன், திருச்சி.
எனது நண்பரின் மகன் கணேசனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்?
துலா லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். ராசிக்கு 8-ல், லக்னத்துக்கு 12-ல் செவ்வாய்- சனி சேர்க்கை. களஸ்திர தோஷம் உடைய ஜாதகம். பொருத்தம் பார்க்கும் பெண் வீட்டார் இவர் ஜாதகம் தோஷ ஜாதகம் என்று சொல்லி தட்டிக்கழிப்பார்கள். 40 வயதானாலும் திருமணம் ஆவது சந்தேகம்தான். இப்பொழுது 36 வயது. இவர் தம்பிக்கும் 34 வயதாகிறது. காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவிலில் அண்ணன்- தம்பி இருவருக்கும் சேர்த்து காமோகர்ஷண ஹோமமும் கந்தர்வராஜ ஹோமமும் சூலினி துர்க்கா ஹோமமும் செய்து இருவருக்கும் கலச அபிஷேகம் செய்தால் விரைவில் பெண் அமையும். செலவைப் பற்றி சிந்திக்காமல் ஏற்பாடு செய்யுங்கள். விவரங்களுக்கு சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு விசாரிக்கவும்.
● ஆர். பாஸ்கரன், பெங்களூரு-60.
எனக்குச் சொந்தமான ஒரு பிளாட் கோவையில் உள்ளது. அதை விலை பேச முடிவு செய்துள்ளேன். எப்போது முயற்சிக்கலாம்?
உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னம். 2019 பிறந்த பிறகு விலை பேசலாம். சனிப்பெயர்ச்சிக்குள் விலைபோகும். பொன்னமராவதி அருகில் செவலூர் பூமிநாத சுவாமி கோவிலுக்கு வேண்டுதல் செய்து ஒரு கவரில் நூறு ரூபாய் எடுத்து வைக்கவும். கிரயம் முடிந்த பிறகு அங்கு சென்று சங்காபிஷேக ருத்ரஹோம பூஜை செய்யவும். அது வாஸ்துக் கோவில். ராஜப்பா குருக்கள், செல்: 98426 75863-ல் தொடர்புகொள்ளலாம்.
● திருமதி தனவிஜயா, அம்பத்தூர்.
"பாலஜோதிட'த்தில் கேள்வி- பதில் பகுதியில் தங்களின் பதிலும் விளக்கமும் மிக அருமை. தெளிவாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது. எனக்கு இரு மகன்கள். முதல் மகன் கீர்த்திவாசன் எம்.எஸ்., படிக்க அமெரிக்கா சென்று அங்குப் பணிக்கும் முயற்சிக்கிறார். படிப்பை முடித்து அங்கேயே வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும்? இரண்டாவது மகன் ஜெகன் திருவோண நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னம். தற்போது குறைவான சம்பளத்தில் வேலைபுரிகிறார். நல்ல கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?
கீர்த்திவாசனுக்கு கும்ப ராசி. ராசிக்கு 12-ல் சனி, 2020-ல் வரும்போது படிப்பும் முடியும், வெளிநாட்டிலேயே வேலையும் அமையும். 30 வயது முடிந்த பிறகு திருமணத்துக்கு முயற்சிக்கலாம். 2-ல் சனி, 7-ல் செவ்வாய். அவர் காட்டுகிற பெண்ணை முடிக்கலாம். ஜெகன் ஜாதகப்படி விரயச்சனி நடக்கிறது. லக்னத்தில் சனி (கோட்சாரப்படி), சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு (2020) நல்ல சம்பளம், நல்ல வேலை அமையும். முடிந்தால் அவரையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கலாம். சென்னையில் பல்லாவரம் அருகில் பொழிச்சலூரில் (சனிக்குரிய தலம்) சுவாமி, அம்பாளுக்கு ஒரு அபிஷேக அர்ச்சனை, பூஜை செய்யவும். (சனிக்கிழமை). இரு மகன்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். அண்ணனுக்குத் திருமணம் முடிந்த பிறகுதானே தம்பிக்குத் திருமணம் செய்ய வேண்டும்.
● பத்மா, சென்னை-125.
எனக்கு இரு மகன்கள், ஒரே பெண். பிள்ளைகள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது. மகளுக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. எப்போது நடக்கும்?
மகளுக்கு திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னம். சந்திரனும் சனியும் ஒன்றுகூடியிருப்பது தோஷம். 2018 டிசம்பரில் 34 வயது முடியும். செலவைக் கருதாமல் காரைக்குடி அருகில் வேலங்குடி வயல் நாச்சியம்மன் கோவிலில் காமோகர்ஷண ஹோமமும் பார்வதி சுயம்வர கலாஹோமமும் செய்து மகளுக்கு அபிஷேகம் செய்தால் இந்த 34 வயதுக்குள் நல்ல வரன் அமையும். எதிர்காலம் இனிமையாக அமையும். முதல் தாரமாகவே முடிக்கலாம். இல்லாவிட்டால் 40 வயதுவரை தள்ளும். இரண்டாம் தார அமைப்பு உண்டாகும். சுந்தரம் குருக்கள், செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு தகவல் அறியவும்.