கல்யாணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குப் போயிருப்பீர்கள்.
அங்கே மண்டபத்திற்குப் போனவுடன் ஒரு நான்கு பேர் டேபிள்முன் நின்றுகொண்டு, பன்னீர் தெளித்து, சந்தனம் கொடுத்து, கல்கண்டு தந்து, பூ முடிப்பையும் தருவார்கள். இப்போதெல்லாம் பேட்டரியில் ஓடும் ஒரு பொம்மையை நிற்க வைத்து எல்லாரையும் கும்பிடுவதுபோல வைத்திருக்கிறார்கள். இது சரியா தவறா என்று சொல்ல வரவில்லை.
சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவரும்போது, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் தேங்காய், மற்றும் பூ வைத்துத் தருவார்கள். இதை தாம்பூலம் தருதல் என்னும் சடங்காக வைத்திருப்பார்கள்.
இதுபோன்று தாம்பூலம் தரவில்லை என்றாலோ அல்லது இதில் ஒன்று குறைந்தாலோ அவ்வளவுதான். மண்டபமே அமர்க்களப்படும் அளவுக்கு சண்டை வந்துவிடும்.
இப்போதெல்லாம் அப்படியில்லை. எல்லாவற்றையும் ஒரு நெகிழிலி அதாங்க பிளாஸ்டிக் பையில் போட்டு டேபிளில் வைத்து, பக்கத்தில் குழந்தைகள் அல்லது இளவயதுப் பெண்கள் கையில் மொபைலைக் கொடுத்து, ஆளுக்கொரு பைதான் எடுத்துச் செல்லவேண்டுமென சொல்லி, நிற்கவைத்து விடுகிறார்கள். போகிறவர்கள் டோக்கனைக் காட்டி எடுத்துக்கொண்டு போவதுபோல, ஆளுக்கொரு பையை எடுத்துக்கொண்டு போகிறார்கள்.
இது என்னவோ சம்பிரதாயத்திற்குத் தருவதுபோல இருக்கிறது என்று நினைக்காதீர்கள். உண்மையில் அப்படிதான் இருக்கிறது. தாம்பூலம் தருவதென்பது இப்படி இல்லை.
"காலச் சூழலுக்கேற்ப வந்த மாற்றங்கள் தானே. இதை பெரிதாக சொல்லவேண்டுமா' என்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. அதை சொல்வதற்கு தான் இந்த வாரப் பதிவு.
இறைவனை வழிபட அஷ்ட புஷ்பங்கள், பிறப் பிலி இறைவனை வழிபடவேண்டிய அட்ட வீரட்டத் தலங்கள், அஷ்டமா சித்துக்கள், அஷ்ட கர்மங்கள் என்ற வரிசையில் அஷ்ட மங்களங்களும் உண்டு.
அந்த அஷ்ட மங்களங்களில் முதலில் வருவது இந்த தாம்பூலம்தான். சாப்பிட்டபிறகு தாம்பூலம் தரித்தல் என்ற சடங்கே இந்து வாழ்க்கை முறையில் உண்டு.
இப்போதும் சில பெரிசுகள், இதைப் பழக்கத்தில் வைத்திருக்கிறார்கள். என்றாலும், சிலர் இதில் இன்றையநாளில் சுவைக்காகவோ அல்லது வேறு காரணத் திற்காகவோ புகையிலையையும் சேர்த்துக்கொள்கிறார்கள். அது ஆன்மாவிற்கு மட்டுமல்ல; ஆயுளுக்கும் கெடுதியை செய்யக்கூடியது என்பதைத் தெரிந்துகொண்டால் நல்லது.
தாம்பூலம் என்றதும் ஏதோ வெற்றிலை வைத்தோமோ இரண்டு பழத்தை வைத்தோமா என்று இருக்கக்கூடாது. அதற்கான சில வழிமுறைகளைத் தருகிறோம்.
ஒளி கிரகங்களான சூரிய, சந்திரனும், இருள் கிரகங்களான ராகு- கேதுவும் நீங்கலாக, மீதமுள்ள பஞ்சப் பூதங்களைக் குறிக்கும் ஐந்து கிரகங்களும் இந்த தாம்பூலத்தில் இடம்பெறும் என்பதாலேயே இது சுப நிகழ்ச்சிகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏன் இருள் கிரகங்களையும் ஒளி கிரகங்களையும் நீங்கலாக என்று யோசித்துப் பாருங்களேன். எங்கே ஒளி இருக்கிறதோ அங்கேயெல்லாம் இருள் இருக்கும். ஒளிக்கும் இருளுக்கும் இடம் ஒன்றே என்பது சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கனுள் ஒன்றான உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த "கொடிக்கவி' என்னும் நூலில் காணாலாம்.
சரி; இந்த தாம்பூலம் எப்படி முறையாகத் தரவேண்டுமென பார்க்கலாம். தாம்பூலம் தரும்போது, தருபவர் கிழக்கு பார்த்தபடி இருந்து தரவேண்டும். பெறுபவர் மேற்குநோக்கி நின்று பெறவேண்டும். அதுசமயம் வெற்றிலை நுனிப்பகுதி கிழக்குநோக்கி இருக்கவேண்டும். அதாவது பெறுபவரை நோக்கி இருக்க வேண்டும்.
ஒரு வெற்றிலைக் கொடியிலிருந்து வரும் வெற்றிலை எப்படி பெறுபவரை நோக்கி நுனி இருக்கிறதோ, அதுபோல இருந்து தரவேண்டும்.
ஆனால் தாம்பூலம் தரிக்கும்போது, காம்பையும் நுனியையும் கிள்ளி எறிந்துவிட்டு, நடுவிலுள்ள நரம்பைக் கிழித்து, அதில் மங்களப் பொருட்களை வைத்து உமிழ்நீருடன் கலந்து சாப்பிடவேண்டும்.
இதில் இடம்மாறிக் கொடுத்தால் அதன் பலன் மாறும் என்பதுதான் முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பாடம்.
முக்கனி என சொல்லும் மா, பலா, வாழை என்ற வரிசையில், மாவிலையை வாசலில் கட்டவேண்டும். இதில் இலை வாசலைப் பார்த்துக் கட்டியிருந்தால் சுபகாரியம், வீட்டைப் பார்த்திருந்தால் அசுப காரியம் என்று பொருள். பலா இலையில் தொன்னை. (தொன்னை என்பது இன்றையநாளில் நாம் புரிந்துகொள்ளும்படி சொல்லவேண்டுமென்றால் கட்டோரி அல்லது கிண்ணம்.) வாழையிலையில் சாப்பாடு என தனியாக இதிலுள்ள சோதிட சிந்தனையை இன்னொரு நாள் சிந்திக்கலாம்.
அதுபோல இந்த வெற்றிலையும் என்பதைப் புரிந்துகொண்டால் நல்லது. வெற்றிலையைத் தனித்துத் தரக்கூடாது என்பதை மனதில் பதித்துக்கொள்க. சோதிடத்தில், சூரியனுடனோ சுக்கிரனுடனோ சேர்ந்துதான் புதன் இருக்கும் என்பதை சேர்த்து சிந்திக்க வைத்துக்கொள்ளுங்கள்.
அதனால்தான் பாக்கு (அல்லது சீவல்) இல்லாமல் வெறும் வெற்றிலை தரக்கூடாதென்பது மரபாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.
தனித்த புதன்கூட கூடுதல் பலன் எனசொல்வார்களே! பத்ர யோகம் என்றும் சொல்லுவார்களே என கேட்கவருகிறீர்கள். அதை சோதிட அன்பர் கள் சிந்தனைக்குத் தந்துவிடலாம்.
அதற்கு மருந்துக்குப் பயனாகும் வெற்றி லையை வைத்து சிந்தித்தால் இதன் விவரம் புரியும். வெறும் வெற்றிலையை வெந்நீரில் போட்டு கொதிக்கவைத்து அருந்துதல், வெற்றிலையுடன் உப்பு, மிளகு சேர்த்து சுவைத்தல், வெற்றிலையை பற்றுபோடுதல் போன்ற மருத்துவ குறிப்புகளை வைத்து சிந்திக்கலாம்.
"பத்ரம்' என்றால் இலை. தனித்த புதன் பத்ர யோகம். இவற்றை மருத்துக்குப் பயனா கும் வெற்றிலையுடன் வைத்து சிந்தித்துப் பாருங்கள்.
துவர்ப்புத் தன்மைகொண்டது பாக்கு அல்லது சீவல். இது செவ்வாய் அம்சம். பூ சுக்கிர அம்சம். வாழைப்பழம் குரு அம்சம். தேங்காய் சனி அம்சம். சிதறுகாய் போடுவது, முழுத் தேங்காயை இறைவனுக்குமுன் உடைத்து நிவேதனம் செய்வது என அதனைத் தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.
ஆக இந்த ஐந்து கிரகத்தையும் இந்த தாம்பூலத்தில் வைத்து அறிந்துகொள்ள முன்னோர்கள் சொல்லித்தந்த சோதிடக் குறிப்புகளே இவையென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!
அதுசரி; சில வடக்கிந்தியர்கள் பீடா போடுவதைத் தவிர இப்போது யாருங்க சார் வெற்றிலை, தாம்பூலம் போடுகிறார்கள்? பஹந்ங் ஐர்ம்ங் மாதிரி எங்களுக்கு ஏதாவது சொல்லுங்க என்று கேட்பது புரிகிறது.
சர்ப்ப கிரகங்களால் பாதிப்பிருப்பவர்கள், சர்ப்ப கிரகங்கள் நடப்பு தசாபுக்தியில் இருப்பவர்கள், ராகு- கேது பெயர்ச்சியில் சிரமங்களை அனுபவிப்பவர்கள், இந்த சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு கூடுதல் பணச்சுமை, தேவையில்லாத செலவு என சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் விநாயகப் பெருமானுக்கு வெற்றிலை மாலை சாற்றுங்கள்.
குறிப்பாக மாலை கட்டும்போது ஒவ்வொரு ஜோடி வெற்றிலையுடனும், ஒரு ஏலக்காய், ஒருமலர், உடையாத லவங்கம்- கிராம்பு சேர்த்துவைத்து மாலை கட்டவேண்டும்.
இந்த வெற்றிலை மாலை எண்ணிக்கை ஒற்றைப்படையில் வரும்படி அமைத்து விநாயகப் பெருமானுக்கு சாற்றுங்கள். உங்கள் சுமைகுறைந்து நிம்மதி கிடைக்கும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172