ஜீவநாடி படிக்கவரும் பெற்றோர்கள், "என் மகனுக்கு எந்த திசையில் பெண் அமையும்?
சொந்தமா? அன்னியமா? வசதியான குடும்பா? பெண் உத்தியோகம் பார்ப்பவளா? உடன்பிறந்த சகோதரர்கள் இருப்பார்களா?' என பலவித மான கேள்விகளைக் கேட்கிறார்கள்.
இன்னும் பலர், "எங்கள் மகன், மகளுக்கு வயது அதிக மாகிக் கொண்டேபோகிறது. பலவிதமான பரிகாரங்களைச் செய்தும் திருமணம் நடக்க வில்லை. உறவுகளும் கேள்வி கேட்கின்றார்கள். திருமணம் நமக்குமா?' என்று மனம் வேதனைப்பட்டுப் புலம்பு கிறார்கள்.
திருமணம் புரிந்து, கணவன்- மனைவியாக சிறிது காலம் வாழ்ந்து, "என் மகனைவிட்டு மருமகள் சென்றுவிட்டாள்' என்றும், "மகளை விட்டு மருமகன் சென்றுவிட்டான்; இவர்கள் மறுபடியும் சேர்ந்து வாழ்வார்களா? பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி அமையும்' என்றும் சில பெற்றோர் கேட்கிறார்கள்.
குழந்தைகள் பிறந்தபின்பு "என் மருமகள் குழந்தை களை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள். அவள் திரும்பவருவளா? எங்கள் பேரக் குழந்தைகள் தகப்பனுடன் வந்து சேர்வார்களா? அல்லது தாயுடன்தான் இருப்பார்களா?' என இதுபோன்ற கேள்வி களைத்தான் அதிகமாகக் கேட்கின்றார்கள். இது போன்ற பிரச்சினைகள் அதிகம் படித்தவர்கள் குடும்பத்தி லும், அந்தஸ்து, செல்வத்தில் உயர்ந்தவர்களின் குடும்பத் திலும்தான் அதிகமாக உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/marriage_40.jpg)
இன்றையநாளில் பெண், மாப்பிள்ளை பார்ப்பதும், திருமணம் செய்து கொள்வதும் திரைப்படத்தில் நடக்கும் திருமணம்போல் ஆகிவிட்டது. திருமணச் சடங்கு, சம்பிரதாயங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, திருமணத்திற்குமுன்பு தருவதில்லை. சரியாக ஆராய்ந்து பாராமல் அவசர கதியில் செய்யும் திருமணங்கள், இன்டெர்நெட்டில் பெண், மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்யும் நிறைபேரின் வாழ்க்கை திருமணம் முடிந்த கொஞ்ச காலத்தில் அலங்கோலமாகத்தான் ஆகிவிடுகிறது. கோர்ட் வாசலில் நிறுத்திவிடுகிறது.
இதுபோன்ற நிலைக்குக் காரணம் அவரின் முற்பிறவி, வம்சத்தில் உண்டான பெண் சாபம்தான் என சித்தர்கள் கூறியுள்ளனர். இதுபோன்று குடும்பப் பிரச்சினைகளில் அவதிப்படுவோர் பலரின் ஜாதகங்களிலுள்ள கிரக அமைப்பினை ஆய்வுசெய்தபோது, நாடியில் சித்தர்கள் கூறியது நடைமுறையில் 90 சதவிகிதம் பலன் சரியாகவே உள்ளது.
இந்தக் கட்டுரைமூலம் ஒரு ஆணுக்கு மனைவியாக அமையப்போகின்றவள் எங்கே பிறந்துள்ளாள் என்பதைப் பற்றி மட்டும் அறிவோம்.
வேதமுறை கணித ஜோதிடத்தில், லக்னத்திற்கு 7-ஆவது ராசியை களத்திர ஸ்தானம், மனைவியைப் பற்றி அறியச் செய்யும் இடமென்று கூறுவார்கள். ஆனால் தமிழ்முறை ஜோதிடத்தில் மனைவியைப் பற்றி அறிய லக்னம், 7 ஆமிடம் என்று பார்க்கத் தேவையில்லை. மனைவியை உதாரணமாகக் கூறும் சுக்கிரன் ஒரு ஆணின் பிறப்பு ஜாதகத்தில் எந்த ராசியில் உள்ளதோ, அதனைக்கொண்டு மனைவியாக வரப்போகும் பெண்ணைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
மேஷம்
ஒரு ஆணின் ஜாதகத்தில் மேஷத்தில் சுக்கிரன் இருந்தால், அவன் மனைவி குடும்பம் நடத்துவதில் திறமையானவள். பிடிவாதம், முன்கோப குணம் உள்ளவள். ஆதிக்க எண்ணம், பிறரை அடக்கியாள வேண்டும் என நினைப்பவள். சிறிய குற்றம், தவறென்றாலும் பெரிய குற்றமாக எண்ணுவாள். கணவனை மிஞ்சி செயல்களைச் செய்வாள். சில நேரங்களில் முன்யோசனையின்றி தன் விருப்பம்போல் எதையாவது செய்துவிட்டுப் பின் வருத்தப்படுவாள். அவசரபுக்தி உடையவள். இவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் கௌரவமான குடும்பத்தில் பிறந்தவள். ஜாதகன் பிறந்த ஊருக்கு அருகிலோ அல்லது சொந்த ஊரிலோ பிறந்திருப்பாள். சொந்தத்திலும் பெண் அமையக்கூடும். அதிகபட்சமாக 25 மைல் தூரத்தில் தெற்கு அல்லது கிழக்கு சார்ந்த திசையில் பெண் அமையும். அவள் பிறந்த வீடு கிழக்கு- மேற்கு வீதியில், வடக்கு- தெற்கு முன்வாசலுள்ள வீடாக இருக்கும். முருகன், தமிழ், வெற்றி, வீரம், பூமி, வீரர்கள், நெருப்பு சம்பந்தப்பட்ட பெயரை உடையவள் மனைவியாக அமைவாள்.
ரிஷபம்
ரிஷபத்தில் சுக்கிரன் இருந்தால் மனைவியாக வருபவள் அழகானவள். நாகரீகமாக உடை உடுத்துவாள். அலங்காரம் செய்துகொள்வதில் விருப்பம் உள்ளவள். குடும்பம் நடத்துவதில் திறமையுள்ளவள். சுயநல குணம் இருக்கும். மனைவி உறவுப் பெண்ணாகவும் இருக்கலாம். செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். இவனுக்கு மனைவியாக வரும் பெண் பக்கத்திலேயே பிறந்திருப்பாள். தெற்கு சார்ந்த திசையில் பத்துமைல் தொலைவிற்குள் அவள் ஊர் இருக்கும். மனைவி பிறந்த வீடு தெற்கு- வடக்கு வீதியில், கிழக்கு- மேற்கு நோக்கிய தலைவாசலுள்ள வீடு. இந்தப் பெண் லட்சுமி, அழகு, இசை, கவிதை, மலர், வாசனைப் பொருட்கள் சம்பந்தமான பெயரை உடையவளாக இருப்பாள்.
மிதுனம்
மிதுனத்தில் சுக்கிரன் இருந்தால் இவன் மனைவி இளமையான, அழகான தோற்றமுடையவள். மென்மையான குணம், இனிமையாகப் பேசக்கூடியவள். நல்ல புத்திசாலி. வியாபார நோக்கம் கொண்டவள். காரியவாதியாக இருப்பாள். மாமன்வழி உறவுப் பெண்ணாகக்கூட இருக்கலாம். இவனுக்கு நிர்பந்தத்தில் திருமணம் நடக்கும். ஜாதகன் இருதார அமைப்புள்ளவன். இந்த ஜாதகனுக்கு மனைவியாக வரும் பெண் இருபது மைலி-ருந்து 200 மைல் தொலைவுள்ள ஊரில்கூட அமையலாம். அவள் பிறந்தவீடு கிழக்கு- மேற்கு வீதியில், தெற்கு- வடக்கு முன்வாசலுள்ள வீடாக இருக்கும். அவள் பிறந்தவீடு, வியாபாரக் கடைகள், மக்கள் போக்குவரத்துள்ள சாலைப் பகுதியாகவும் இருக்கக்கூடும். இந்தப் பெண்ணுக்கு லட்சுமி, விஷ்ணு, இளமை, அறிவு, மரகதகல், பச்சை, செடி, கொடிகள், கதை, காவியம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர் இருக்கும். ஒரு பட்டப் பெயரும் இருக்கலாம்.
கடகம்
ஒரு ஆணின் ஜாதகத்தில் கடகத்தில் சுக்கிரன் இருந்தால், மனைவி எளிமையான- அழகான தோற்றமுடையவள். மென்மையான குணம், மனசலனம் இருக்கும். அடிக்கடி நோய் வாய்ப்படுவாள். குடும்ப பாரத்தை சுமப்பவள். கடகத்தில் சுக்கிரன் உள்ள ஜாதகன், பல பெண்களிடம் உறவு வைத்துக்கொள்வான். பலதார யோகமுள்ளவன். மனைவிக்கு ஆயுள் பாதிப்பு உண்டாகும். சொந்தத்தில் பெண் அமையாது. வேறு ஜாதி, மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளவும் நேரிடலாம். இவனுக்கு மனைவியாக வரும் பெண், வடக்குச் சார்ந்த திசையில் சுமார் 40 மைல் தொலைவிற்குள் அமைவாள். அவள் பிறந்த அல்லது வசிக்கும் ஊரில் கடல், நதி, ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகள் இருக்கலாம். அல்லது பிரசித்தமான புகழ்பெற்ற அம்மன் ஆலயம் இருக்கலாம். மனைவி நதி, கடல், சந்திரன், தமிழ், உணவுப் பொருட்கள், மீன், முத்து, அம்மனின் பெயர்களை உடையவளாக இருப்பான்.
சிம்மம்
சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால், மனைவி செல்வாக்கான குடும்பத்தில் பிறந்தவள். அதிகாரத் தோரணை, விடாமுயற்சி, பிறரை அடக்கியாளும் குணம், கௌரவத்தை விட்டுக்கொடுக்காத குணமுடையவள். கிழக்கு சார்ந்த திûயில், பத்து மைல்முதல் 100 மைல் தொலைவிற்குள் அவள் ஊர் இருக்கும். அவள் பிறந்த அல்லது வசிக்கும் ஊர், மாநிலம், மாவட்டம், வட்டம் ஆகியவற்றின் தலைமை ஊராக இருக்கும். மலை, வனம், ஒளி, தீபம், சிவன், சக்தி, சூரியன், அரசன், தலைவர்கள், மாணிக்கம், புகழ் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்களை உடையவள்.
கன்னி
கன்னியில் சுக்கிரன் இருந்தால் அழகான, இளமையான, அதிபுத்திசாலியான, இனிமை யான பேச்சு, கண்ணியமான, நல்ல குணங் களைக் கொண்ட, சிறந்த குடும்பத் தலைவியான பெண் மனைவியாக அமைவாள். இவள் பிறந்த ஊர் தெற்கு சார்ந்த திசையில், சுமார் 15 மைல் தூரத்திற்குக்குள் இருக்கும். பிறந்தவீடு தெற்கு- வடக்கு வீதியில், கிழக்கு- மேற்கு முன்வாசலுள்ள வீடு. மனைவி லட்சுமி, விஷ்ணு, இளமை, புத்தி, கிளி, மலர், செடி, கொடி, ராகம், கலைகள், பச்சை நிறம் ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்களை உடையவளாக இருப்பாள்.
துலாம்
ஒரு ஆணின் ஜாதகத்தில் துலாமில் சுக்கிரன் இருந்தால், இவன் மனைவி பொறுமை, தூய்மையான குணம் கொண்டவள். குடும்பத்தைப் பொறுப்பாக கவனித்துக் கொள்வாள். கலைகளில் நாட்டமிருக்கும். செல்வாக்கான, கௌரவமான குடும்பத்தில் பிறந்தவள். இவள் ஊர் மேற்கு சார்ந்த திசையில், பத்து மைல் தொலைவிற்குள் இருக்கும். பிறந்தவீடு கிழக்கு- மேற்கு வீதியில், தெற்கு- வடக்கு முன்வாசலுள்ள வீடு. அழகு, மலர்கள், வாசனைப் பொருட்கள், அன்பு, மகிழ்ச்சி, கல்யாணம், கவிதை, காமம், கலைகள், சுகம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பெயர் உடையவளாக இருப்பாள்.
விருச்சிகம்
விருச்சிகத்தில் சுக்கிரன் இருந்தால் மனைவி முன்கோப குணமுள்ளவள். குரலில் அதிகார தோரணையுடன் பேசுவாள். குடும்பத்தின்மீது பாசமுள்ளவள். உறவுப் பெண்ணுடன் திருமணம் உண்டாகலாம். மனைவி பிறந்த ஊர் வடக்கு சார்ந்த திசையில், சுமார் 30 மைல் தொலைவிற்குள் அமையும். அவள் வீடு வடக்கு- தெற்கு வீதியில், கிழக்கு மேற்கு முன்வாசலுள்ள வீடாக இருக்கலாம். தமிழ், முருகன், ஆயுதம், வீரம், வீரர்கள், வெற்றி, காவல் தெய்வங்களின் பெயர், பூமி, ஊர்களின் பெயர்கள், பவளம், சிவப்பு ஆகிய வற்றைக் குறிக்கும் பெயர்களை உடையவள்.
தனுசு
தனுசு ராசியில் சுக்கிரன் இருந்தால் மனைவி குடும்பம் நடத்துவதில் திறமை வாய்ந்தவள். பெரியோர்களை மதிப்பவள். கணவன், குழந்தைகள்மீது பாசம் கொண்டவள். சொந்தத்தில் இவனுக்கு நல்ல குணம் கொண்ட மனைவி அமையக்கூடும். கிழக்கு சார்ந்த திசையில், 30 மைல்முதல் 300 மைல்களுக்குள் மனைவி பிறந்த ஊர் இருக்கும். அவள் வீடு கிழக்கு- மேற்கு வீதியில், தெற்கு- வடக்கு தலைவாசலுள்ள வீடு. தங்கம், குணம், வேதம், மந்திரம், சக்தி, தேன், ஞானிகள், ரிஷிபத்தினி, கனகபுஷ்பராகம், புண்ணிய தலங்கள், அமைதி ஆகியவற்றைக் குறிக்கும் பெயர்களை உடையவள்.
மகரம்
மகரத்தில் சுக்கிரன் இருந்தால் மனைவி சரியாக அலங்காரம் செய்து கொள்ளமாட்டாள். கணவனை அலட்சியம் செய்வாள். வாயாடி, சண்டை குணம், எதற்கும் எதிர்த்து, மறுத்துப்பேசும் குணமிருக்கும். உழைப்பதற்கு அஞ்சமாட்டாள். பணம் சேர்த்து குடும்பத்தை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவாள். கணவன், குழந்தைகள்மீது அதிக பாசம் கொண்டவள். மனித நேயம் மிக்கவள். மனைவி தெற்கு சார்ந்த திசையிலிருந்து வருவாள். அவள் பிறந்த ஊர் மூன்று மைலி-ருந்து முப்பது மைல் தெலைவிற்குள் இருக்கும். அவள் வீடு வடக்கு- தெற்கு வீதியில் கிழக்கு- மேற்கு முன்வாசலுள்ள வீடு. இவளுக்கு மாரியம்மன், செல்லம்மன், சுடலை, பேச்சி, கருப்பு போன்ற கிராம தெய்வங்களின் பெயர் இருக்கும்.
கும்பம்
ஆண்களின் ஜாதகத்தில் கும்பத்தில் சுக்கிரன் இருந்தால், மனைவி கவர்ச்சியான தோற்றமுடையவள். கணவன், குழந்தைகள்மீது மறைமுக அன்பு வைத்திருப்பாள். அன்பை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள். குடும்பம் நடத்துவதில் திறமையானவள். மனைவி மூன்று மைல்முதல் 300 மைல் தொலைவிற்குள், மேற்கு சார்ந்த திசையிலிருந்து வருவாள். அவள் வீடு கிழக்கு- மேற்கு வீதியில், தெற்கு- வடக்கு முன்வாசலுள்ள வீடு. கிராம தேவதைகள், அம்மன், பெண் தெய்வங்கள், கருப்பு தெய்வங்கள், அடிமை நிலையைக் குறிக்கும் பெயர்களை உடையவள்.
மீனம்
மீனத்தில் சுக்கிரன் இருந்தால் மனைவி அழகான, எளிமையான தோற்றமுடையவள், கௌரவமான குடும்பத்தில் பிறந்தவள். குடும்பத்தினர், பெரியவர்களிடம் பாசம், மதிப்புள்ளவள். நிர்வாகத்திறமை உள்ளவள். சொந்தத்தில் பெண் அமையக்கூடும். மனைவி வடக்கு சார்ந்த திசையிலிருந்து வருவாள். அவள் பிறந்த ஊர் 30 மைல்முதல் 300 மைல் தொலைவிற்குள் இருக்கலாம். அவள் பிறந்த வீடு, வடக்கு- தெற்கு வீதியில், மேற்கு நோக்கிய முன்வாசலுடையதாக இருக்கும். இவளுக்கு தங்கம், பெண் தெய்வங்கள், வேதம், மந்திரம், தேன், ரிஷிபத்தினிகள், குணம், புஷ்பராகம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பெயர்கள் இருக்கலாம். பெண்களுக்கு அமையும் கணவன் பற்றிய விவரங்களை அடுத்த இதழில் அறிவோம்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-08/marriage-t.jpg)