நிலத்தாலும், நீராலும், காற்றாலும், நெருப்பாலும், ஆகாயத்தாலும் வரும் திடீர் தாக்குதல்களை மனிதர்களால் எதிர்கொள்ள முடியாது. எனவே நம் முன்னோர்கள் தினந்தோறும் அந்த பஞ்சமகா சக்திகளை கைதொழுது வழிபட்டு கடமைகளைச் செய்து வெற்றிகண்டுள்ளனர். அதற்கான ஆலயங்களையும் நிர்ணயித்து வைத்துள்ளனர். நாம் அந்தந்த ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் இயற்கை சீற்றங்களிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல; யாவரும் போற்றும் விதத்திலும் வாழ்க்கை அமையும். புதிய திருப்பங்களும் உண்டாகும்.

Advertisment

tmalai

பக்தர்களின் இன்னல்களைக் களைபவர் சிவபெருமான். கங்காதேவியை முடியில் கொண்டும், மங்கை உமாதேவியை மடியில் கொண்டும் காளை வாகனத்தோடு காட்சி தரும் அவரை தரிசிக்க காசி முதல் இராமேஸ்வரம் வரை ஏராளமான திருக்கோவில்கள் இருக்கின்றன.

tmalai

Advertisment

"அலங்காரப்பிரியர் விஷ்ணு; அபிஷேகப்பிரியர் சிவன்' என்று குறிப்பிடுவர். எனவே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து அதைக் கண்குளிரக் கண்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். தீபம் பார்த்தால் பாவம் விலகும். அதைப்போல் நமது பிரச்சினைகள் தீர அர்ச்சனை செய்வது நல்லது. வரங்கள் கிடைக்க கரங்கள் கூப்பித் தொழ வேண்டும்.

பஞ்சபூதத் தலங்களில் பூமிக்குரிய ஆலயம் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். அன்னை காமாட்சி காஞ்சியில் மண்ணால் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டாள். சிவபூஜை புரிந்த காமாட்சிக்கு பரமேஸ்வரன் மண் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காட்சி தந்து அருள் கொடுத்தார். ஆகவே அங்கு சென்று நாம் வழிபட்டால் இடம், பூமி வாங்கும் அமைப்பு கிட்டும்.

பஞ்சபூதங்களில் நீருக்குரிய தலம் திருச்சி அருகே திருவானைக்காவில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயம். இத்தலத்தில் யானையும், சிலந்தியும் வழிபட்டு முக்தி பெற்றதாகச் சொல்வார்கள். சிலந்தி வலையைப்போல் வாழ்க்கையில் பிரச்சினை, சிக்கல்களில் சிக்கிக் கொண்டவர்கள் யோகம் பலம்பெற்ற நாளில் இத்தலத்திற்குச்சென்று வழிபட்டு வந்தால் அமைதி கிட்டும். ஆனந்த வாழ்வு அமையும்.

Advertisment

நெருப்புக்குரிய தலம் திருவண்ணாமலை. ஆதியும், அந்தமும் இல்லா ஜோதிலிங்கத்தை அடிமுடி காண பிரம்மாவும் விஷ்ணுவும் முயன்று, காணவியலாமல்போகவே பக்தி சிரத்தையோடு வழிபட்டனர்.

அப்போது பரமேஸ்வரன் ஜோதி லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். காரியங்களை முடிக்க இயலாமல் திண்டாடுபவர்கள் வழிபட வேண்டிய தலம் திருவண்ணாமலை. அண்ணாமலையாரை மனதில் எண்ணி அங்கு சென்று வழிபட்டு வந்தால் தினமும் திருநாளாய் அமையும்.

பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய தலம் திருக்காளஹஸ்தி ஆகும். கண்ணுக்குக் கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் திண்ணப்பர் என்ற பெயரோடு திகழ்ந்தவர். இத்தல இறைவனுக்கு கண்ணை அப்பியதால் கண்ணப்பர் ஆனார். பாம்பும் சிலந்தியும் யானையும் வழிபட்ட இத்தலத்திற்கு யோகம் பலம்பெற்ற நாளில் சென்று வழிபட்டால் சர்ப்ப கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அகலும்.

பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்குரிய தலமாக சிதம்பரம் விளங்குகிறது. இங்கு கூத்தபிரான் அருள்பாலிக்கிறார். வானளாவிய புகழ்பெறவும், வரலாற்றில் இடம்பிடிக்கவும் இத்திருக்கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும்.

மேற்கண்ட ஆலயங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், "காஞ்சி காமாட்சி தாயே, திருவானைக்காவில் உள்ள பரமேஸ்வரனே, திருவண்ணாமலை தீபமே, காளஹஸ்தி ஆண்டவனே, கூத்தப்பிரானே, உம்மை வணங்குகிறோம்' என்று தினசரி மனதார சொல்லிவர, நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் முதலிய இன்னல்களிலிருந்து விடுபட்டு நல்லதே நடக்கும்.

இயற்கை சக்தியால் நமக்கு நன்மை கிடைக்கவும், இவ்வுலக மக்கள் சீரோடும் சிறப்போடும் வாழவும், சீற்றங்களிலிருந்து விடுபடவும், போற்றும்படியான வாழ்க்கை அமையவும் வசதி உள்ளவர்கள் மேற்கண்ட திருத்தலங்களுக்கு ஒருமுறையேனும் சென்று வழிபட்டு வந்தால் வளர்ச்சிமேல் வளர்ச்சி காண இயலும்.

செல்: 94871 68174