திருமணம் என்பது இரு மனங்கள் இணைகின்ற உன்னதமான நிகழ்வு. நல்ல வரனைத் தேடிப்பிடித்துத் திருமணம் செய்துவைப்பதற்குள் எவ்வளவு பிரச்சினைகள், அலைச்சல்கள்!

Advertisment

பார்த்துப்பேசி எல்லாம் நல்லபடியாக முடிந்ததும், கை நனைத்துவிட்டு அடுத்து யோசிக்க வேண்டியது எப்பொழுது திருமணம் செய்யலாம் என்பதனைப் பற்றித்தான். மணம்முடித்து வாழப்போகிறவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமேயானால் கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறும் நேரம் நல்லதாக இருக்க வேண்டும். ஜோதிடரீதியாக எந்த நேரத்தில் மணமுடித்து வைப்பது நல்லதென தெரிந்துகொள்வோமா..

திருமணம் செய்ய குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் அஸ்தமனம் இல்லாத தேதியில், ரோகிணி, மிருகசீரிஷம், மகம், உத்திரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அமைவது மிகவும் உத்தமம். அஸ்வினி, புனர்பூசம், பூசம், சித்திரை, அவிட்டம், சதயம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திமம்.

மேற்கூறிய நட்சத்திரங்களில் துவிதியை, திருதியை, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி போன்ற திதிகளுடன் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகளும் சேர்ந்து வருமேயானால் இந்த நாட்களில் திருமணம் வைப்பது மிக உத்தமம்.

Advertisment

மேற்கூறிய திதி, கிழமை, நட்சத்திர நாட்களில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, கும்ப லக்னங்களாக அமைந்து, முகூர்த்த லக்னத்திற்கு 3, 6, 11-ல் பாவிகள் இருப்பது நல்லது. 6, 8-ல் சுக்கிரன், புதன் இல்லாமல் இருப்பதும், 7-ஆம் இடம் சுத்தமாக இருப்பதும் உத்தமம். 2, 3-ல் சந்திரன் இருக்கலாம்.

திருமண நாளானது ஆண்- பெண் இருவருக்கும் தாரபலன் உள்ள நாளாக இருக்கிறதா என பார்க்கவேண்டும். இருவருக்கும் இல்லை என்றால் ஒருவருக்கு இருந்தாலும் திருமணம் செய்யலாம். திருமணம் ஜென்ம நட்சத்திரத்திலும், 7-ஆவது நட்சத்திரத்திலும் செய்யக்கூடாது. செவ்வாய், சனிக்கிழமைகளில் ஆயிரம் பொருத்தங்கள் கூடிவந்தாலும் திருமணம் செய்யக்கூடாது.

திருமணத்திற்கு திதி, நாள், சந்திர தாராபலன் இல்லாவிட்டாலும் மிருகசீரிஷம், மகம், சுவாதி, அனுஷம் ஆகிய நட்சத்திரங்களில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் திருமணம் செய்யலாம்.

Advertisment

திதியைவிட நாள் பலமுடையது. நாளைக்காட்டிலும் நட்சத்திரம் பலமுடையது. நட்சத்திரத்தைக் காட்டிலும் லக்னம் பலமுடையது. லக்னத்தில் குருவோ, சுக்கிரனோ இருந்தால் எல்லா தோஷங்களும் விலகிவிடும்.

தாராபலன் நட்சத்திரம் என்பது ஆண்- பெண் நட்சத்திரங்களுக்கு 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 17, 18, 20, 22, 24, 26, 27-ஆவது நட்சத்திரங்களாக வருவதாகும்.

ஒருவரது ஜென்ம ராசிக்கு 8-ஆவது ராசியில் வரும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டம நாட்களாகும். சந்திராஷ்டம தினங்களில் எந்தவொரு சுபகாரியத்தையும் மேற்கொள்ளாதிருப்பது நல்லது.

வளர்பிறையில் திருமணம் செய்வதுதான் நல்லது என்றாலும், தேய்பிறையிலும் நல்ல நாளாக இருந்தால் திருமணம் செய்யலாம். ஆனால் அமாவாசைக்கு முன் இரண்டு மூன்று நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

கரிநாள், தனியநாள், அசுப திதி போன்றவை வரும் நாட்களில் திருமணம் செய்யக்கூடாது என்றாலும், தவிர்க்கமுடியாத காரணங்களால் திருமணம் நடத்தியே தீர வேண்டுமென்றால் சூரிய உதயத்திற்குமுன்பு பிரம்ம முகூர்த்தமான அதிகாலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் திருமணம் செய்தால் தோஷமில்லை.

குருபலம் இருக்கும்போதுதான் திருமணம் செய்யவேண்டுமென மக்கள் கருதுகிறார்கள். சுபகிரக தசை, புத்தி நடைபெற்றால் குருபலம் இல்லாத போதும் திருமணம் செய்யலாம். அதுபோல (கோட்சாரத்தில்) குருபலம் இல்லாதபோது குரு வக்ர காலத்தில் திருமணம் செய்யலாம்.

கத்திரியில் திருமணம் செய்யக்கூடாது என கருத்துள்ளது. ஆனால் புதுமனைப்புகுதல், மனைபூஜை செய்தல்தான் கூடாது. கத்திரியில் திருமணம் செய்யலாம்.

மணமக்களுக்கு அஷ்டமத்துச்சனி, ஏழரைச்சனி நடக்கும்போது திருமணம் செய்யக்கூடாது. ஆனால் மணமக்களுக்கு நல்ல தசை, குருபலம் இருக்கும்போது இதைக் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியமில்லை.

ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி, பங்குனி ஆகியவை திருமணம் செய்யக்கூடாத மாதங்கள். சிலர் மாசி, பங்குனி மாதங்களில் திருமணம் செய்கின்றனர். ஆந்திர, கர்நாடக மாநிலத்தவர்கள் ஆடி, புரட்டாசியிலும் திருமணம் செய்கின்றனர்.

தமிழர்கள் திருமணத்தை காலை நேரங்களில் செய்கின்றனர். ஆந்திர, கர்நாடக மக்கள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் செய்கின்றனர்.

பெண் பார்த்தல் போன்ற நிகழ்வுகளை சனி, செவ்வாய் தவிர மற்ற கிழமைகளில், மாலை நேரங்களில் குரு, சுக்கிரன், புதன் போன்ற சுபக்கோள்களின் ஓரையில் மேற்கொள்வது மிகவும் உத்தமம்.

எல்லா லக்னத்திற்கும் 11-ஆம் இடத்தில் பகலில் சூரியன், இரவில் சந்திரன் இருந்தால் கோடி தோஷம் தீரும். புதன் லக்னத்திலாவது, கேந்திரத்திலாவது அஸ்தங்கம் அடையாமல் இருந்தால் 300 தோஷங்கள் விலகும். சுக்கிரன் இருந்தால் எல்லா தோஷங்களும் விலகும். குரு இருந்தால் 14 ஆயிரம் தோஷங்கள் இருந்தாலும் சூரியனைக் கண்ட இருள்போல் விலகிவிடும்.

குரு, புதன், சுக்கிரன் ஏதாவது ஒன்று கேந்திரத்தில் இருந்தால் சிங்கத்தைக் கண்ட யானைபோல் சகல தோஷமும் அழியும்.

லக்னத்தில் ஏதாவது கிரகம் இருந்தால் பஞ்சில் நெருப்பு வைத்ததுபோல தோஷங்கள் பொசுங்கிவிடும்.

கேது தோஷத்தை ராகு போக்கும். இவ்விருவரின் தோஷத்தை சனி போக்கும். மூவரின் தோஷத்தையும் செவ்வாய் போக்கும். நால்வரின் தோஷத்தையும் சூரியன் போக்கும். ஐவரின் தோஷத்தையும் புதன் போக்கும். ஆறுபேரின் தோஷத்தையும் சந்திரன் போக்கும். அந்த ஏழுபேரின் தோஷத்தையும் சுக்கிரன் போக்கும். எல்லா தோஷங்களையும் குரு போக்கும். லக்னத்திற்கு பாவர் அம்சம், பார்வை முதலிய தோஷத்தை குரு சம்பந்தம் போக்கிவிடும்.

சூரியன் சஞ்சரிக்கக்கூடிய நட்சத்திரத்தில் இருந்து முதல் மூன்று நட்சத்திரம் குருடு. அதற்குமேல் ஒன்பது நட்சத்திரங்கள் ஒற்றைக் கண் உடையவை. இதற்குமேல் 12 நட்சத்திரங்கள் இரண்டு கண்கள் உடையவை. இதற்குப் பலன்- குருடு நட்சத்திரத்தில் திருமணம் செய்தால் மலடியாகவும் விதவையாகவும் ஆவாள். ஒற்றைக் கண்ணில் செய்தால் சந்ததி (பரம்பரை) அழியும். இரட்டைக் கண்களானால் ஐஸ்வரியம் (செல்வம்), புத்திர பாக்கியமும் உண்டு. கடைசி மூன்று நட்சத்திரங்களும் செவிடு. இதில் திருமணம் செய்தால் மலடியாவாள்.

திருமணத்திற்கு 21 மகா தோஷங்கள் உண்டு. 1. பஞ்சாங்க சுத்தியில்லாதது; 2. லக்னத்திற்கு 7-ஆமிடம் சுத்தமில்லாமல் இருப்பது; 3. மாதப்பிறப்பு, 4. பாவஷட்வர்க்கம்; 5. சுக்கிரன் 6-ஆம் இடத்தில் இருப்பது; 6. செவ்வாய் 8-ஆம் இடத்தில் இருப்பது; 7. கண்டாந்தம்; 8. கத்திரி யோகம்; 9. லக்னத்திற்கு முன்னும் பின்னும் பாவ கிரகங்கள் இருப்பது; 10. 6, 12-ல் சந்திரன் இருப்பது; 11. தம்பதிகளுக்கு முகூர்த்த லக்னம் 8-ஆவதாக இருப்பது; 12. நாள் தோஷம் இருப்பது; 13. ஒரே கணம்; 14. விஷக் கடிகை; 15. தோஷமுள்ள முகூர்த்தம்; 16. கிரகணம் பிடித்த நட்சத்திரம்; 17. உட்பாதம் கண்ட நட்சத்திரம்; 18. பாவகிரக கிரகந்தம்; 19. பாபாம்சம்; 20. மகா வியாதீபாதம், மகாவை திருதி; 21. பாவகிரக வேதை. மேற்கண்டவற்றை நீக்கவேண்டும்.

செல்: 72001 63001