ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பவர்கள் சிறந்த கலைஞர்கள், புகைப்பட நிபுணர்கள், ஓவியர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், பாடகர்கள், நகை வியாபாரிகள், நில உரிமையாளர்கள், வாகன உரிமையாளர்கள் என்று இருப்பார்கள். பிறரை ஈர்க்கக்கூடியவர்கள். சுக்கிரன் பலவீனமாக இருந்தால் வீட்டில் பல தோஷங்கள் இருக்கும். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சிலருக்கு வாரிசு இருக்காது. சிலருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருக்கும். பலர் பால்வினை நோயால் பாதிக்கப்படுவார்கள். சிலருக்கு ஆண்மைக் குறைவு இருக்கும். கபம் கட்டும்; மலச்சிக்கல் இருக்கும்.
லக்னத்தில் சுக்கிரன் சுயவீட்டில் இருந்தால், மற்றவர்கள் தன்னைப் பாராட்ட வேண்டுமென்று ஜாதகர் நினைப் பார். தன்னை அழகுபடுத்திக் கொண்டு பிறரை அவர் ஈர்ப்பார். அவரது இல்வாழ்க்கை நன்றாக இருக்கும். சுக்கிரனுக்கு குருவின் பார்வை இருந்தால், ஜாதகருக்கு வாக்குசித்தி இருக்கும். தன் சொற்களால் பலரையும் ஈர்ப்பார். சுக்கிரன், கேதுவுடன் இருந்தால், அவர் பல பெண்களுடன் உறவு கொள்ள நினைப்பார். சுக்கிரன், செவ்வாயுடன் இருந்து, அதற்கு சனியின் பார்வை இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சுக்கிரன் 2-ஆம் பாவத்தில் சுய வீட்டில் இருந்தால், அந்த ஜாதகர் வசதியாக வாழ்வார். தன் வார்த்தைகளால் பிறரைக் கவர்வார். சுக்கிரனுடன் செவ்வாய், ராகு அல்லது செவ்வாய், சனி இருந்தால், அவர் பிறருடன் சண்டையிடுவார். ஆனால் குருவின் பார்வை இருந்தால், அந்த ஜாதகர் இளம்வயதில் கஷ்டப்பட்டாலும் 30 வயதிற்குப்பிறகு தன் பேச்சை மூலதனமாக வைத்து பல வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பார். சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு வீரிய தோஷம் ஏற்படும்.
சுக்கிரன் 3-ஆம் பாவத்தில் இருந்தால் அந்த ஜாதகருக்கு தைரியம் அதிகமாக இருக்கும். ஆனால், தன் திறமையை அவர் வெளிக்காட்ட மாட்டார். சுக்கிரன், ராகுவுடன் அல்லது செவ்வாய், சனியுடன் இருந்தால், கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. மனதில் மகிழ்ச்சி இருக்காது.
சுக்கிரன் 4-ஆம் பாவத்தில் தனித்திருந்து அதை சுப கிரகங்கள் பார்த்தால் அவர் அலங்காரங்கள் கொண்ட வீட்டில் வாழ்வார். பல வாகனங்கள் இருக்கும். இல்வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆனால், சுக்கிரன் பாவகிரகப் பார்வை அல்லது சேர்க்கை பெற்றால் அவரது வீட்டில் சந்தோஷம் இருக்காது. சிலருக்கு பால்விணை நோய் இருக்கும்.
5-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் புகழ்பெற்ற கலைஞராக இருப்பார். சிலர் ஓவியராக இருப்பார்கள். அதை குரு பார்த்தால் ஜாதகர் புகழுடன் இருப்பார். சுக்கிரனை சனி, செவ்வாய் பார்த்தால், குழந்தை பிறப்பதில் பிரச்சினை ஏற்படும். சிலருக்கு மனநோய், சிறுநீரகப் பிரச்சினை உண்டாகும்.
6-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் சந்தோஷமாக இருப்பார். சுக்கிரன்- செவ்வாய், புதனுடன் அல்லது சந்திரன், புதனுடன் இருந்தால், அவர் தன் மனைவியைத் தவிர, வேறு பெண்களுடன் உறவு வைத்திருப்பார். சிலர் நல்லவரைப்போல நடிப்பார்கள்.
7-ல் சுக்கிரன் இருந்தால், அந்த வீட்டை அவர் கெடுப்பார். அதனால், சிலருக்கு திருமணத்தடை இருக்கும். சுக்கிரன், செவ்வாயுடன் இருந்தால் திருமணத்தடை உண்டாகும். சிலருக்கு மறுமணம் நடக்கும். சுக்கிரன், சனியுடன் இருந்தால் சிலருக்கு ஆண்மைக்குறைவு இருக்கும். சுக்கிரன், சந்திரனுடன் இருந்தால் சிலருக்கு கள்ள உறவு ஏற்படும். சிலர் காதலித்துத் திருமணம் செய்துகொள்வார்கள்.
8-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகருக்கு இளம்வயதில் வயிற்றுப்போக்கு இருக்கும். வீட்டில் பணவசதி இருக்காது. சுக்கிரன்- சந்திரன், புதனுடன் இருந்தால், சிலர் தூக்கத்தில் பேசுவார்கள். சிலருக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு இருக்கும். சுக்கிரன்- சனி, செவ்வாயுடன் இருந்தால், சிலர் மறுமணம் செய்துகொள்வார்கள். சிலர் மோசமான பெண்களுடன் உறவு வைத்திருப்பார்கள்.
9-ல் சுக்கிரன் இருந்தால் பலர் உயர்ந்த பதவியில் இருப்பார்கள். பணவசதி இருக்கும். சுக்கிரன், சனி, குரு 9-ல் இருந்தால், ஜாதகர் நன்கு பணம் சம்பாதிப்பார். சுக்கிரன், ராகு- செவ்வாயுடன் இருந்தால், வாழ்க்கையின் முற்பகுதியில் சிரமப்பட்டாலும், 36 வயதிற்குப்பிறகு சந்தோஷத்துடன் வாழ்வார். ஆனால் சகோதரர்களுடன் உறவு சரியாக இருக்காது.
10-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் வசதியாக வாழ்வார். துணிக்கடை, நகைக்கடை வைத்திருப்பார். சுக்கிரன்- செவ்வாய், ராகுவுடன் அல்லது சனி, செவ்வாயுடன் இருந்தால், ஜாதகர் பல தொழில்களைச் செய்வார். எனினும் மனதில் மகிழ்ச்சி இருக்காது. மனக்குறையுடன் இருப்பார்.
11-ல் சுக்கிரன் இருந்தால், அவருக்கு நல்ல வசதிகள் இருக்கும். சுக்கிரன், சந்திரனுடன் இருந்தால் அவர் புகழ்பெற்ற வர்த்தகராக இருப்பார். சுக்கிரன், குருவுடன் இருந்தால் நல்ல பாடகராக, சட்ட நிபுணராக இருப்பார்.
12-ல் சுக்கிரன் இருந்தால், அந்த ஜாதகர் வாழ்க்கையின் முற்பகுதியில் நிறைய கஷ்டங்களைப் பார்ப்பார். 30 வயதிற்குப் பிறகு பணம் சம்பாதிப்பார். சுக்கிரன்- செவ்வாய், சனியுடன் இருந்தால் கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. சுக்கிரனுடன் செவ்வாய், ராகு சேர்ந்தால், சிலருக்கு விவாகரத்து நடக்கும். சுக்கிரனை குரு பார்த்தால் வசதியான வீட்டில் வாழ்வார்கள்.
பரிகாரங்கள்
தினமும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை ஆலயத்திற்குச் சென்று விளக்கேற்றவேண்டும் சிவப்பு மலர்களால் பூஜை செய்யவேண்டும். உணவில் உளுந்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும். மிளகாய், உப்பு, புளியைக் குறைக்க வேண்டும். படுக்கையறையின் தென்மேற்கில் முகம்பார்க்கும் கண்ணாடி இருக்கக்கூடாது. வீட்டில் வடக்கு, வடகிழக்கு திசை சுத்தமாக இருக்கவேண்டும். சுக்கிரன் யோககாரகனாக இருந்தால் வைரத்தை அணியலாம்.
செல்: 98401 11534