ஒரு தம்பதியர், தங்கள் மகனுடன் நாடி பலன் காணவந்தார்கள். காவி உடை கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றி, கழுத்து, கைகளில் விபூதி பட்டையுடன் பக்திப் பழமாக இருந்தார்கள். ஆனால் மூவருக்கும் மெலிந்த தேகம், ஒட்டிய கன்னங்கள், சீவன் இல்லாத கண்பார்வை கொண்ட உடல் அமைப்புடன் இருந்தார்கள் நான் அவர்களிடம், என்ன காரியமாக பலன் கேட்க வந்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, "ஐயா, எனக்கு 43 வயதாகின்றது. எனது மனைவிக்கு 36 வயது, மகனுக்கு 12 வயது. நாங்கள் மூவரும், உடல் சதைப்பிடிப்புடன், நல்ல திடகாத்திரமாகத்தான் இருந்தோம். ஆனால், கொஞ்சம், கொஞ்சமாக எங்கள் உடல் மெலிந்து வருகின்றது. உடலில் சக்தியும் குறைந்துவருகின்றது.
இதன்காரணம் அறிய மருத்துவர்களைச் சென்று பார்த்தோம். அவர்கள் நோய் தாக்கம் எதுவுமில்லை. உடலில் சத்து குறைவு என்று கூறி, நல்ல சத்தான ஆகாரங்கள், பால், முட்டை, பழங்கள், கீரைகள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார்கள். இன்னும் சிலர் உங்கள் எதிரிகள், யாராவது ஏவல், பில்லி, சூனியம் செய்திருக்கலாம் என்று கூறி மாந்த்ரீகர்களைப் பார்க்கச் சொன்னார்கள். எங்கள் மடத்துக்குரு, ருத்ரயாகம் செய்து, சிவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, மடத்தில் அன்னதானம் செய்தால், அனைத் தும் சரியாகிவிடும் என்று கூறினார். யார் யார் எதைக் கூறினார்களோ, அவை அனைத்தையும் செய்தோம். உடல்நலிவு தீரவில்லை; எந்த பலனுமில்லை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agathiyar_5.jpg)
எனது நண்பர் ஒருவர், தங்களைப் பற்றிக் கூறி, ஜீவநாடி யில் பலன் கேட்டால் அகத்தியர் உண்மையான காரணத்தைக்கூறி, பிரச்சினை தீர நல்லவழியைக் கூறுவார் எனச் சொன்னதால், தங்களை நாடி வந்துள்ளேன். எங்களின் இந்தப் பிரச்சினைக்கு, முற்பிறவி பாவ- சாபமா? கிரக தோஷ பாதிப்பா? செய்வினை பாதிப்பா? என்பதை அகத்தியர்தான் கூறி, எங்கள் பிரச்சினை தீர வழிகாட்டவேண்டும்'' என்றார்.
அவர் கூறியதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
"இவர்களின் இந்த நிலையை மாற்றி தோற்றப் பொலிவையும், சரீர சக்தியையும் தந்தால், இந்த அகத்தியனுக்கு என்ன தருவான்?'' அகத்தியர் கூறியதை நான் அவரிடம் கூறியபோது, அவர், "குரு அகத்தியர் எதைக் கேட்டாலும் தருகின்றேன். இது என் மகன்மீது சத்தியம்'' என்றார்.
"இவர்களின் இந்த நிலைக்கு பூர்வ சென்ம பாவ- சாபமோ, செய்வினை, ஏவல், பில்லி சூனியமோ, கிரகங்கள் பாதிப்போ காரணமில்லை. இவன் கடவுள் பக்தியை பயன்படுத்திக்கொண்டு, இவன் நண்பன் ஒருவன், இவனை ஒரு மடாதிபதியிடம் அழைத்துச்சென்று, அவனுக்கு அறிமுகப் படுத்தி வைத்தான். அந்த நண்பன் அந்த மடத்திற்கு ஆள்பிடித்துத் தருபவன்.
அந்த மடாதிபதி, இவனின் கடவுள் பக்தியைப் பயன்படுத்திக்கொண்டு, ருத்ராட்ச மாலைகளை அணிவித்து, சிவ தீட்சை தந்து, அதற்குரிய பூஜை, விரதமுறைகளை கூறி, நான் கூறியபடி முறையாகச் செய்து வந்தால், சிவனின் தரிசனமும், வாழ்வில் உயர்வும் கிட்டுமென்று கூறி நிறையப் பணத்தைப் பெற்றுக்கொண்டான் அந்த மடாதிபதி.
குருவிடம் தீட்சைப்பெற்ற இவனும், மனைவி, மகனும், அந்தக் குரு கூறிய அனைத்து, பூஜை, விரதம், மந்திர ஜெபம் இவற்றை கட்டுப்பாட்டுடன் கடைப் பிடித்தார்கள். இதனால் சரியான உணவு சாப்பிடாததால், உடல் இளைக்க ஆரம்பித்தது. சரீரத்தில் சக்தி குறைந்தது. இவனின் சரீர பிரச்சினைக்கு, இவனின் அறிவற்ற செயல்தான் காரணம். ஒரு மனிதனின் வாழ்வில் முற்பிறவி பாவ- சாபமோ கிரகங்களோ மட்டும் பாதிக்காது. அவரவர் அறிவற்ற செயல்களாலும் இதுபோன்று பிரச்சினைகளை அவரவரே ஏற்படுத்திக்கொண்டு கஷ்டப்படுவார்கள். இவர்கள் ருத்ராட்ச மாலையைக் கழற்றி வைத்துவிட்டு, இல்லறவாசிகளாக, நன்கு சத்தான உணவு வகைகளைச் சாப்பிடச்சொல், விரதம், பூஜை என எதுவும் இருக்கவேண்டாம். படிப்படியாக இவன் உடல் தேரும், சரீரம் சக்திபெறும்.''
"அகத்தியர் கூறியபடியே செய்கின் றேன். இந்த ருத்ராட்ச கொட்டைகள் தோஷமுள்ளதா?''
"ருத்ராட்சம் ஒரு மூலிகை பொருள். இதற்கு மருத்துவ குணம் உள்ளதே தவிர, மந்திரம், பக்தி, கடவுள் சம்பந்தமான எந்த ஒரு சக்தியும் கிடையாது. சித்தர்கள் நாங்கள் ருத்ராட்சம் அணியமாட்டோம். வாசியோகம் செய்வதால் உடலில் அதிகமான உஷ்ணம் உண்டாகும். அந்த சரீர வெப்பத்தை குறைக்க நாங்கள் ருத்ராட்சத்தை தேனில் உறைத்து அந்த விழுவதையும், சில மூலிகைகளையும் சாப்பிட்டு, உடல் வெப்பத்தை சமன்படுத்திக்கொள்வோம். பொதுவாக தீட்சைப்பெற்று, ருத்ராட்சம் அணிந்து, பூஜை, விரதங்களை முறையாக கடைப்பிடித்து வாழும் அனைவருக்கும் உடல் உஷ்ணம், சரீரம் மெலிவு, சக்தி குறைவு, தோல் நோய் உண்டாகும். இவனுக்கு தீட்சை தந்த குரு ருத்ராட்சம் அணிந்து, குண்டாக இருப்பான். அவன் எந்த விரதமும் இருக்க மாட்டான். ஆசைப்பட்ட எல்லா உணவுகளையும் உண்பான்.
இவர்கள் உடம்பிலுள்ள உஷ்ணம் குறைந்து, உடல் தேறுவதற்கு, நான் கூறும் மூலிகைச் சாற்றினை தினமும் குடித்து வரச்சொல். அதேபோன்று, இவன் மாலையாகப் போட்டு இருக்கும் ருத்ராட்சக் கொட்டைகளை, தேனில் உறைத்து, அந்த விழுதினையும் சாப்பிட்டு வரச்சொல்.
இதனால் சாப்பிடும் சாப்பாடு உடலில் சேரும். மூலிகைச் சாறு உடம்பில் புதிய திசுக்களை உருவாக்கும். இனியாவது கடவுள், பக்தி என்று கூறி பணம் பொருளைப் பறிப்பவர்களிடம் ஏமாறாமல், எவர் எதைச் சொன்னாலும் அதிலுள்ள உண்மை, பொய்யை அறிவால் ஆராய்ந்து, வாழச்சொல்'' என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியதையெல்லாம், அவரிடம் விளக்கமாகக் கூறிவிட்டு, இனியாவது பக்தி என்ற பெயரில் பிறரிடம் ஏமாறாமல், உங்கள் மனைவிக்கு நல்ல கணவனாகவும், மகனுக்கு நல்ல தகப்பனாகவும், நல்ல குடும்பத் தலைவனாக வாழுங்கள். பொருள் சொத்துகளை காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பிவைத்தேன்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-07/agathiyar-t_0.jpg)