சித்தர்தாசன் சுந்தர்ஜி
ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
சென்ற இதழ் தொடர்ச்சி...
2020-ஆம் ஆண்டு, ஆவணி மாதம் 16-ஆம் தேதி (1-9-2020) செவ்வாய்க்கிழமை கேது பகவான் தனுசு ராசியிலிருந்து கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியடைந்து, அங்கு 18 மாதங்கள் இருந்து உங்கள் முற்பிறவியிலோ, முன்னோர்கள் வாழ்வில்- வம்சத்தில் உண்டான சாபங்களுக்குத் தகுந்த தண்டனைகளைத் தந்து அனுபவிக்கச்செய்வார்.
பிறப்பு ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், கடகம், துலா ராசிகளில் எந்த கிரகங்கள் உள்ளதோ, அந்த கிரகங்களுடன் இணைந்து கேது பகவான் சாபத்திற்குரிய பலன்களைத் தருவார்.
மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், சித்த ஞானம், பூரணஞானம், குண்டலினி சக்தி, அஷ்டமகாசக்திகள், மரண மில்லாப் பெருவாழ்வு, பிறப்பில்லா நிலை, பிறவி முடிவு, மோட்ச கதி, பகுத்தறிவு, சமத்துவம், சமநோக்கு, சமாதானம், நியாயம், நேர்மை, பாரபட்ச மற்ற மனநிலை, மூலிகை ரகசியம், மருத்துவம் ஆகியவற்றுக்குக் கார கனாவார்.
மனிதர்கள் வாழ்வில் குடும்பம், உறவு, திருமணம், புத்திர பாக்கியம், நட்பு, காதல், பூமி, வீடு, மனை, சொத்துகள், தொழில், பணம், பொருளாதாரக் கடன், தீர்க்க முடியாத- மருந்தில்லா வியாதிகள் என அனைத்திலும் தடைகளைத் தந்து, அனுப விக்கவேண்டிய நன்மைகளை அனுபவிக்க முடியாமல் தடுத்துவிடுபவர் கேது பகவான்தான்.
கேது பகவானின் அருள், அம்சம் பெற்று சித்தர்கள், ஞானிகள், மகான்கள், அரசர்கள், அரசியல் தலைவர்களும் பிறந்து வாழ்ந்தது தென்தமிழ்நாட்டில் தான். நமது தமிழ் மக்கள் வாழும் தமிழ்ப்பகுதி கேது பகவானின் அருள் பெற்ற பூமியாகும். இதனால்தான் தமிழ் நாட்டை ஞானபூமி, சித்தர்கள் பூமி என்று கூறியுள்ளனர்.
அகத்தியர் முதலான சைவத்தமிழ்ச் சித்தர்கள் 18 பேர், புராண- இதிகாசக் கதைகளில் கூறப்படும் விநாயகர், ஆஞ்ச நேயர் கேதுவின் அருளும் அம்சமும் பெற்றவர்கள். நமது காலத்தில் கேதுவின் அருள், அம்சத்துடன் நியாயம், நேர்மை, பூரண ஞானத்துடன் பிறந்து, துறவு நிலையில் வாழ்ந்து மோட்ச நிலை பெற்றவர் பெருந்தலைவர் காமராஜர்.
கேது பகவானின் முகம் ஐந்து தலை உடைய நாகப்பாம்பின் தலைபோலவும், உடல் மனிதனின் உடம்புபோலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பின் ஐந்து தலைகளும் உடம்பின் மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை தொப்புள், வயிறு, நெஞ்சுக்குழி, இதயம், புருவமத்தி என இந்நிலைகளின் வழியாக முதுகுத்தண்டிலுள்ள வெள்ளை நரம்பான சூட்சும நாடிமூலம் தலைக்குமேல் ஏற்றி அஷ்டமகா சக்திகளை அடையும் நிலையை பாம்பின் ஐந்து தலைகளும் குறிப்பிடுகின்றன.
குண்டலினி சக்தி பெற்றவர்களுக்கு மரணமில்லை. அதனால், பிறவித் தொடர்ச்சி யில்லை. பல பிறவிகள் பிறந்து, பல உடம்புகள் எடுக்கவேண்டிய நிலையில்லை. கேதுவுக்கு மனிதன் உடம்பைக் குறிப்பிட்டதற்கு இதுவே சூட்சும ரகசியம்.
"சுற்றியே யலைவது தில்லை சூட்சுமம் சூட்சுமம்
சுழியிலே நிலையறிந்தால் மோட்சம் தானே'
மனிதன் மோட்ச நிலையை அடைய முகத்திலுள்ள கண்கள், காதுகள், மூக்கு, வாய், நாக்கு என இந்த ஐந்து உறுப்புகள்தான் தடையாக உள்ளன. இவற்றால் உண்டாக் கப்படும் ஆசை, பாசம், மோகம், போகம், சுகம், விறுப்பு, வெறுப்பு போன்ற செயல்கள்தான் இந்தத் தடைக்குக் காரணம். மனிதன் இந்த உறுப்புகளின் செயல்திறனை அடக்கி, இவற்றால் அனுபவிப்பதைத் துறந்து ஐம்புலன்களை அடக்கி இல்லறத்தில் துறவியாக வாழ்ந்தால், அவனைத் தன் அருளாளல் மோட்சமடையச் செய்துவிடுவார் கேது பகவான். கேதுவின் அருளில்லாமல் பணம், பதவி, பக்தி, மந்திரம், பூஜை, யாகம், பிரார்த்தனை, தானம், தர்மம் போன்ற நம்பிக்கை சார்ந்த மாயச் செயல்களைச்செய்து யாரும் பிறவி முடித்து மோட்சம் அடைய முடியாது.
விருச்சிக ராசியில் கேது பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில், தேசத்தின் வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு திசை நாடுகளில் புயல், மழை, வெள்ளம், நிலப்பகுதிகளில் இயற்கைப் பேரிடர்களை உண்டாக்குவார்.
நீர் சம்பந்தமான புதிய வியாதிகளைத் தருவார்.
கேது பகவான் விருச்சிகம், மீனம், கடகம், துலா ராசிகளில் பிறப்பு ஜாதகத்திலுள்ள கிரகங்களுடன் இணைந்து எவ்விதப் பலன்களைத் தருவார் என அறிவோம்.
சூரியன்+ கேது
ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், கடகம், துலா ராசிகளில் சூரியன் இருந்தால், தற்போது கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்கு வந்துள்ள கேது கிரகம், ஜென்மச் சூரியனுடன் இணைந்திருந்தால் கீழ்க் காணும் பலன்களைத் தருவார்.
பெற்ற தந்தை, பெற்ற மகனிடம் கருத்து வேறுபாடுண்டாகும். தந்தை- மகன் பாசம் தடையாகும். பூர்வீக சொத்துகளில் பிரச் சினைகள், வில்லங்கம், வழக்குகள் உண்டாகும். தந்தைவழி உறவுகள் தடை யாகும். கோர்ட் வழக்குகளில் எதிர்பார்த்தது போல முடிவு இராது. வழக்குகள் இழுக்கும், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளால் தொல்லைகள் உண்டாகும். அரசுக் காரியங் களில் அனுகூலமிராது. அரசியல்வாதி களுக்குத் தேர்தலில் தோல்வி உண்டாகும். சிலரின் பதவி பறிக்கப்படலாம், பதவி இழப்பு ஏற்படலாம். புகழ், செல்வாக்கு குறையும். அரசு உத்தியோகத்தில் இருப் பவர்களுக்கு உயரதிகாரிகளால் தொல்லை கள் உண்டாகும். பதவி உயர்வு தடைப்படும்.
ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், கடக ராசிகளில் சூரியன், கேது, சந்திரன், என்ற நிலையில் இந்த மூன்று கிரகங்களும் இருந்தால், உங்களின் தாய்க்கும் தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்படும். கேதுவின் தாக்கத்தால் நீங்கள் திட்டமிட்டது போல வாயைவிட்டுச் சொல்வது எதுவும் நடக்காது. செய்யும் காரியம், செயல்களில் வெற்றி தடைப்படும் அல்லது தாமதமாகும். சிலர் கௌரவக்குறைவான செயல்களைச் செய்வார்கள்.
இதுபோன்ற நிலையில் கடவுள் நம்பிக்கை கொண்டு, கடவுள் காப்பற்றுவார் எனக்கூறி கோவில், யாத்திரை, அர்ச்சனை, அபிஷேகம் எனச்செய்து பணம் விரயமாக்குவீர்கள். பலன் இராது. வேண்டுதல் பலிக்காது. எதையும் அனுபவிக்கும் ஆசை குறையும், மனதில் விரக்தி யுடன் சந்நியாசிபோல வாழநேரிடும்.
தந்தை- மகனுக்கு நோய்த்தொல்லை உண்டாக்கும். கண் சம்பந்தமான நோய் சிரமம் தரும். புத்திரத் தடையுண்டாகும். பெண் களுக்கு கர்ப்பத்தடை, கருக்கலைதல் உண்டாகும். மற்றும் இதயம், ரத்த அழுத்தம், ரத்த ஓட்டம், ரத்தக்குறைவு போன்ற நோய்கள் சிரமம் தரும். இது பித்ரு சாபம், புத்திர தோஷம் செயல்படும் காலம்.
சந்திரன்+ கேது
ஜாதகத்தில் விருச்சிகம், மீனம், கடகம், துலா ராசிகளில் சந்திரன் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்கு வந்துள்ள கேது பகவான் விருச்சிகத்திலுள்ள ஜென்மச் சந்திரனுடன் இணைந்து கீழ்க்காணும் பலன்களைத் தருவார்.
தாயுடன் கருத்து வேறுபாடு, மூத்த சகோதரியுடன்- மாமியாரிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். தாய், மாமியார் உடல்நிலை பாதிப்படையும். மருத்துவச் செலவுண்டாகும். தாய்வழி உறவு தடை யாகும். தாய் பகையாவார். பெண்களால் பிரச் சினைகள் உண்டாகும். மனதில் குழப்பம், புத்தியில் சலனம் உண்டாகும். சந்தேக குணம் உண்டாகும். எதிலும் தெளிவாக முடிவெடுக்க முடியாது. கற்பனைகள் அதிகமாகும். ஆனால், காரியம்தான் நடக்காது. பயணங்களால் பலனிராது. மனதில் இனம்புரியாத பயம், கவலை இருந்துகொண்டே இருக்கும்.
சந்திரன், கேது, சுக்கிரன் இந்த மூன்று கிரகங்களும் ஒரே ராசியில் இருந்தால், ஜாதகரின் தாய்க்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்பத்தில் குழப்பம், பிரச்சினைகள் உண்டாகும். தாய்க்கும் மனைவிக்கும் உண்டாகும் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியாமல் ஜாதகர் தவிப்பார்.
வயிறு, சுவாசம், நீர், மனம், இடது கண் சம்பந்தமான நோய்கள் உண்டாகும். பெண்களுக்குக் கர்ப்பத்தடை, கர்ப்பப் பையில் நீர்க்கட்டி, கருக்குழாய் அடைப்பு, கருச்சிதைவு, கருக்கலைதல் போன்றவை சிரமம் தரும்.
முற்பிறவிகளில் வம்சமுன்னோர்கள் காலத்தில் பெற்ற தாய்க்குச் செய்த கொடுமையால், பெற்ற தாய் கைம்மண் வாரி இறைத்துவிட்ட சாபம் செயல்படும் காலம்.
செவ்வாய்+ கேது
ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் விருச்சிகம், மீனம், கடகம், துலா ராசிகளில் இருந்தால், இப்போது கோட்சார நிலையில் விருச்சிக ராசிக்கு வந்துள்ள கேது பகவான் ஜென்மச்செவ்வாயுடன் இணைந்து தரும் பலன்கள்...
சகோதரர்கள், பங்காளிகள், ரத்த சம்பந்தமான உறவுகளுடன் கருத்து வேறுபாடு, பகை உண்டாகலாம். பூமி, நிலம், வீடு, சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தமான தகராறுகள் உண்டாகலாம். கடன்தொல்லை அதிகமாகி சிரமம் தரும். கடன் கொடுத்தால் பணம் திரும்ப வராது. கடன் வாங்கினால் திரும்பக் கொடுக்க சிரமமாகும். விவசாயம் லாபம் தராது. முன்கோப குணம் உண்டாகும். மனைவியின் சகோதரர்கள், மைத்து னர்கள் பகையாகக் கூடும். சகோதரருக்கு நோய்த்தொல்லை காட்டும். திருமணம் தடை, தாமதமாகும்.
பெண்களுக்குத் திருமணத் தடை, தாமதம் காட்டும். கணவருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சில பெண்களு களுக்கு கணவர் பிரிவு, விவாகரத்து, வழக்குகள் உண்டாகலாம். கணவர் வீட்டு உறவினர்களால் தொல்லைகள், சிரமங்கள், குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். கேதுவின் தாக்கத்தால், கட்டிய கணவரால் பெரிய சுகம் அடையமுடியாமல் செய்துவிடும். தாம்பத்திய சுகம் குறையும். சில பெண்களின் கணவர் மனைவியைத் தவிர வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு கொள்வார். பெண்களால் பெண்களுக்குப் பிரச்சினைகள் உண்டாகும். இதனால் கணவன்- மனைவியிடையே சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.
கணவர் சந்நியாசி போன்று பொறுப் பற்றவராக இருப்பார். கடமைக்காக வீட்டிற்கு வருவார். மனைவிதான் குடும்பத்தை நிர்வாகம் செய்து காப்பாற்றவேண்டிய நிலையுண்டாகும். கணவர், மூத்த சகோதரர், மூத்த ஆண் மகன் இவர்களுக்கு சுகவீனம், நோய்த்தாக்கம் உண்டாகலாம். இதனால் பணவிரயம் உண்டாகும்.
பெண்ணின் பிறப்பு ஜாதகத்தில் கேது பகவான் பெயர்ச்சியடைந்து துலா ராசிக்குச் சென்றபின், திருமணத்தடை நீங்கி திருமணம் நடைபெறும்.
பெண்ணின் ஜாதகத்தில் விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தால் சொந்தத்திலோ, சொந்த ஊரிலோ வரன் அமையும். கணவர் பிறந்த வீடு வடக்கு, தெற்கு வீதியில் கிழக்கு, மேற்கு நோக்கி முன்வாசல் உள்ள வீடு. அதிகப்பட்சமாக 25 மைல் தூரத்தில், வடக்கு சார்ந்த திசையில் மாப்பிள்ளை அமைவார்.
ஜாதகத்தில் மீனத்தில் செவ்வாய் இருந்தால், அந்தப் பெண்ணிற்கு சொந்தத்தில் மாப்பிள்ளை அமைவார். வடக்கு சார்ந்த திசையில் அதிகப்பட்சமாக 100 மைல் தூரத்திற்குள் அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில்கூட வரன் அமையும். கணவர் வீடு வடக்கு, தெற்கு வீதியில் மேற்கு, கிழக்கு நோக்கி முன்வாசல் உள்ள வீடு.
ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் இருந்தால், இந்தப் பெண்ணிற்கு கணவராக வரக்கூடியவர் ஏதாவதொருவகையில் கொஞ்சம் தாழ்ந்தவராக இருப்பார். கணவர் அமைதியான குணம் கொண்டவர். சொந்தத்தில் மாப்பிள்ளை அமையாது. வடக்கு சார்ந்த திசையில் 40 மைல் தூரத்தில் வரன் அமையும். கணவர் வீடு வடக்கு, தெற்கு வீதியில் மேற்கு, கிழக்கு வாசற்படி உள்ள வீடு. கணவர் பிறந்த ஊர் கடல், நதி, ஆறு, ஏரி போன்ற நீர்நிலையுள்ள பகுதியாகும். அந்த ஊரில் பிரசித்தமான அம்மன் கோவில் இருக்கலாம்.
ரத்த ஓட்டத்தில் தடை, ரத்த சோகை, ரத்த விரயம் போன்ற ரத்தம் சம்பந்தமாக நோய்கள், மூலவியாதி, புற்றுநோய்க் கட்டிகள், வயிறு, சுவாசம் சம்பந்தமான நோய்கள் சிரமம் தரும்.
அடுத்த இதழில் புதன், குரு, சுக்கிர கிரகங்களுடன் கேது இணைந்து தரும் பலன்களை அறிவோம்.
செல்: 99441 13267