சித்தர்தாசன் சுந்தர்ஜி
ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்
ஒவ்வொரு மனிதனும், தான் முற்பிறவிகளில் செய்த பாவச்செயல்களுக்குரிய தண்டனைகளை அனுபவித்துத் தீர்த்துமுடிக்கவே, அடுத்தடுத்து இந்தப் பூமியில் பிறக்கிறான்.
மனிதப் பிறப்புக்கும் பிறவிகள் தொடர்ச்சிக்கும் காரகனாக விளங்குவது ராகு. உயிர்கள் பிறப்புக்கு மூலமாக உள்ளது ஆணின் விந்துவும், பெண்ணின் கரு முட்டையும்தான். ஆண்- பெண் இணைவால்தான் உடல் உண்டாகிறது. அந்த உடலால்தான் அநேக பாவங்களுக்குரிய தண்டனையை அடுத்தடுத்தப் பிறவிகளில் அனுபவித்துத் தீர்க்கிறோம்.
உயிரினங்களின் உடலுக்கு எலும்புகளும் நரம்புகளுமே அடித்தளமாக, ஆதாரமாக உள்ளது. தலைமுதல் பாதம் வரையுள்ள அனைத்து உறுப்புகளையும் எலும்புகளும் நரம்புகளுமே இணைந்து செயல்படச் செய்கின்றன.
மனிதன் மற்றும் உயிரினங்களின் உடலுக்கு ஆதாரமான விந்து, கருமுட்டை, எலும்பு, நரம்புகள், பிறவித்தொடர்ச்சி என அனைத்திற்கும் ராகுவே காரகன். மனிதனின் முற்பிறவி வினைகளை முழுமையாக அனுபவித்துத் தீர்க்கச் செய்து, பிறவியை முடிக்கச்செய்வதால் ராகு முக்தி காரகன் ஆவார்.
ஒவ்வொருவரும் தன் முற்பிறவி பாவ-சாப-புண்ணியப் பதிவுகள் அனைத்தையும் ஒவ்வொரு பிறவியிலும் நடைமுறை வாழ்க்கையில் நன்மை- தீமை என மீதமில்லாமல் அனுபவித்துத் தீர்த்தபின்பு, இனி பூமியில் பிறந்து அனுபவிக்க முன்வினைப் பதிவுகள் ஏதுமில்லை என்ற நிலை உருவானவுடன், அவருக்குப் பிறவித் தொடர்பை அறுத்து, இனி பிறவியில்லை என்னும் நிலையைத் தந்து, பிறவியை முடித்து, மோட்ச நிலையைத் தருபவர் கேது பகவான். எனவே, கேது மோட்சகாரகன் ஆவார்.
ஆண்- பெண் இணைந்து உருவாக்கிய இந்த உடல் இயங்க உயிர் சக்தி தேவை. ஒவ்வொரு பிறவியிலும் உயிர்சக்தி யைத் தருவது கேது. எனவே, கேது உயிர்க்காரகன். ஒவ்வொருவரும் உடலோடும் உயிரோடும் வாழ ராகு- கேது கிரகங்களே காரணமாவர்.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ஆசையைத் தூண்டி, தாங்கள் விரும்புவதை யடைய நன்மை- தீமையை உணராமல் செயல்படச் செய்பவை. இந்த கிரகங்கள் மனிதனுக்கு பாவ-சாபப் பதிவுகளை உருவாக்கும்.
2020-ஆம் ஆண்டு, புராட்டாசி மாதம் 16-ஆம் தேதி (1-9-2020) அன்று கோட்சார நிலையில், ராகு பகவான் மிதுன ராசியிலிருந்து ரிஷப ராசிக்கும், கேது பகவான், தனுசு ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும் மாற்றமடைந்து 18 மாதங்கள் இருந்து, ஒவ்வொருவருக்கும் தாங்கள் முற்பிறவிகளில் செய்த பாவ-சாபங்களுக்குத் தகுந்த பலனைத் தந்து அனுபவிக்கச் செய்வார்கள்.
வேதமுறைக் கணித ஜோதிடத்தில், அவரவர் பிறந்த ராசியைக்கொண்டு 12 ராசிக்காரர் களுக்கும் ராகு- கேது பெயர்ச்சிப் பலனைக் கூறுவார்கள். ஒரே ராசியில் பல கோடிபேர் பிறந்திருப் பார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரேமாதிரிப் பலன்கள் நடை பெறுமா என்றால், நடக்காது. ஆனால், ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டாகும் பலன்களை சித்தர் பெருமக்கள் தமிழ்முறை ஜோதிடத்தில் தெளிவாகக் கூறியுள்ளனர்.
தமிழ்முறை ஜோதிடத்தில் ராகு- கேது பெயர்ச்சிப் பலன்களை அறிந்துகொள்ள, நீங்கள் பிறந்தபொழுது எழுதிவைக்கப்பட்டுள்ள பிறப்பு ஜாதகத்தில் ரிஷப ராசி, அதற்கு திரிகோண ராசிகளான கன்னி, மகரம், ரிஷபத்திற்கு 12-ஆவது ராசியான மேஷம் என இந்த நான்கு ராசிகளுள், சூரியன்முதல் கேதுவரையுள்ள ஒன்பது கிரகங்களுள், எந்தெந்த கிரகங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
பிறப்பு ஜாதகத்தில் ரிஷபம், கன்னி, மகரம், மேஷம் ஆகிய நான்கு ராசிகளில் உள்ள கிரகங்களுடன், தற்போது கோட்சார ராகு இணைந்து, முற்பிறவி பாவ-சாபங்களுக்குத் தக்க பலனைத் தந்து அனுபவிக்கச் செய்வார்கள். இந்த நான்கு ராசிகளுள் எந்த கிரகமும் இல்லையென்றால், கோட்சார ராகுவால் உங்களுக்கு எந்த பாதிப்பும் இராது.
ராகு- கேது கோட்சாரப் பலன்களை உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரவர் பிறப்பு ஜாதகத்தைக் கொண்டு அறிந்துகொள்ளுங்கள். இனி, முதலில் ராகு தரும் பலனை அறியலாம்.
சூரியன்+ ராகு
சித்திரை, வைகாசி, புரட்டாசி, தை மாதத்தில் பிறந்தவர்களின் ஜாதகத் தில், சூரியன் மேஷம், ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் இருப்பார். சூரியன் தந்தை, மகன், புகழ், அரசியல், அரசு உத்யோகம் ஆகியவற்றுக்கு காரகன். மேலும், பித்ருசாபம், புத்திர சாபம் போன்ற முற்பிறவி பாவ சாபங்களுக்கு கோட்சார சுழற்சிநிலையில், பிறப்பு ஜாதகத்தில் நிலையாக வுள்ள சூரியனுடன் ராகு இணையும்பொழுது, அந்த பாவங்களுக்குத் தக்க தண்டனைகளைத் தந்து அனுபவிக்கச்செய்வார்.
கோட்சார ராகு, சூரியன் இணைவால் தந்தை- மகனிடையே கருத்துவேறுபாடு உண்டாகக்கூடும். ஏதாவதொரு காரணத்தால், தந்தை, மகன் பிரிந்துவாழ நேரிடும். சிலர் பூர்வீகம்விட்டு வேறிடம் சென்று வசிப்பார்கள். நேர்மையான அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு உயரதிகாரிகளால் பிரச்சினைகள் உண்டாகும். நேர்மையில்லாத அரசியல்வாதிகள், அதிகாரிகள் நன்மை அடைவார்கள். இது அவரவர் பூர்வஜென்ம பாவ புண்ணியக் கணக்கீடு அளவில் நடைபெறும்.
ஜாதகருக்கோ அவரது தந்தைக்கோ நோய், விபத்து, கண்டம், கஷ்டம் உண்டாகும். தந்தைவழி உறவுகளிடையே கருத்துவேறுபாடுகள் உண்டாகும். இதய சம்பந்தமான நோய்கள், ரத்தக் கொதிப்பு, வலது கண் சம்பந்தமான நோய் பாதிப்பு உண்டாகும்.
ரிஷபம், கன்னி, மகர ராசிக்காரர்களுக்கு, வம்சத்திலுண்டான பித்ரு தோஷம், புத்திர சாபத்திற்குண்டான தண்டனையைத் தந்து, ராகு அனுபவிக்கச் செய்வார்.
சந்திரன்+ ராகு
பிறப்பு ஜாத கத்தில் ரிஷபம், கன்னி, மகரம், மேஷ ராசிகளில் சந்திரன் இருந் தால், தற்போது கோட்சார நிலையில் ரிஷப ராசிக்கு வந்துள்ள ராகு, ஜென்மச் சந்திரனுடன் இணைந்து, எந்தவிதமான பலனைத் தருவார் என்பதைப் பார்க்கலாம்.
இந்த சந்திரன், ராகு இணைவினால் தாய்க்கு நோய், மாரகம், கண்டம், கீழே விழுந்து கால்களில் அடிபடுதல் போன்ற சிரமங்கள் ஏற்படும். பெண்களானால், மாமி யாருக்கு இதுபோன்ற சிரமம் உண்டாகும். பெண்களால் அவமானம், விரயச்செலவுகள் உண்டாகும். சிலர், பெற்ற தாயைப் பிரிந்து வாழலாம். பணம், பொருள், நகை திருட்டுப் போதல்- தொலைந்துபோகக்கூடும்.
மனதில் இனம்புரியாத பயம் இருந்து கொண்டே இருக்கும். மனக் குழப்பம், செயல்களில் தடை, தாமதம் ஏற்படும். இதனால், யாரோ ஏவல், பில்லி, சூனியம் வைத்துவிட்டார்கள் என்றெண்ணிக் கொண்டு, மந்திரவாதி மடாதிபதி, குருவைத் தேடி ஓடியும், கோவில் கோவிலாக அலைய வைத்தும், மாயமந்திரச் செயல்களைச் செய்தும் உங்கள் கையில் இருக்கும் பணத்தையும் விரயமாக்கிவிடும். கையிலுள்ள பொருளையும் பணத்தையும் காப்பாற்றிக்கொள்வது அவரவர் பகுத்தறிவு, புத்திசாலித்தனம். எந்தப் பரிகாரமும் பலன்தராது.
சிலருக்கு இடமாற்றம், அலைச்சல், பயணம் அதிகமாகும். ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளுக்குச் செல்லும்பொழுது கவனமாக இருக்கவேண்டும். சிலருக்கு நீரில் கண்டம் உண்டாகும். வயிறு, சளி, சுவாசம் சம்பந்தமான நோய்கள் இடது கண்ணில் சிரமம் உண்டாகும்.
உங்கள் வம்சத்தில் வாழ்விழந்து, பாதிக்கப் பட்டு இறந்துபோன பெண்ணின் ஆத்மாவின் கோபம், இந்தக் குடும்பத்தில் வாழவந்த பெண்களுக்கும்- பிறந்த பெண்களுக்கும் நிம்மதியைத் தராது; சிரமம் தரும். குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்கிக்கொண்டே இருக்கும். இது வம்சத்தில் உண்டான பெண்சாபம், தாய்சாபம் செயல்படும் காலமாகும்.
செவ்வாய் + ராகு
பிறப்பு ஜாதகத்தில் ரிஷபம், கன்னி, மகரம் மேஷ ராசிகளில் செவ் வாய் இருந்தால், இப்போது கோட்சார ராகு, செவ்வாயுடன் இணைந்து எந்தவிதமான பலனைத் தந்து அனுபவிக்கச் செய்வார் என அறிவோம்.
இந்த செவ்வாய், ராகு இணைவினால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு, பிரிவு அல்லது அவரவர் விருப்பம்போல வாழ்வது, மனைவி கணவனை மனைவி மதிக்காத சூழ்நிலை, சகோதரர் களிடையே கருத்து வேறுபாடு, நிலங்களில் பிரச்சினைகள் உண்டாகக்கூடும்.
பெண்களானால் கணவனுக்கு நோய் தாக்கம், மூத்த சகோதரன், மூத்த மகனுக்கு சிரமம், விபத்து, ரத்தக் காயம், தடித்த வார்த்தைகள், முன்கோபம்- இதனால் பிரச்சினைகள், அகங்காரம், ஆணவம் தலைதூக்குதல், பிடிவாத குணத்தால் பிரச்சினைகள் உண்டாகும்.
புதன்+ ராகு
பிறப்பு ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கன்னி, மகர ராசிகளில் புதன் இருந்தால், ரிஷபத்திற்கு வந்துள்ள ராகு, ஜென்ம புதனுடன் இணைந்து எந்தவிதப் பலன்களை அனுபவிக்கச் செய்வார் என்பதை அறிவோம்.
புத்தி மந்தமாகும். கல்வியில் தடை உண்டாகும். இளைய சகோதர, சகோதரிகளிடம் கருத்துவேறுபாடு உண்டாகும். தாய்மாமனுக்கு சிரமம் காட்டும். வரவு- செலவுகளில் சிக்கல் ஏற்படும். சொந்த இனத்து மக்களால் நன்மை இராது. மாற்று சமுதாய மக்களால்- வேறு மொழி பேசுபவர்களால் அவ்வப்பொழுது சில நன்மைகள் உண்டாகும். தீயவர்கள் நட்பு உருவாகும். சில பெண்கள் உங்களை ஏமாற்றிப் பணம், பொருளைப் பறித்துவிடுவார்கள். வியாபாரத்தில் தொழில்முறை கூட்டாளிகளால் ஏமாற்றப் படநேரிடும்.
பத்திரிகை, புத்தகம், மக்கள் தொடர்புத் துறை, தகவல்தொழில் நுட்பக் கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு ஓரளவு நன்மைகள் உண்டாகும். தரகு, வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவர்.
சுரப்பிகள் சம்பந்தமான நோய்கள், தோல் வியாதி, காது, தொண்டை சம்பந்தமான நோய் பாதிப்பு தரும்.
குரு, சுக்கிரன், சனி, ராகு- கேது, கிரகங்களுடன் இணைந்து கோட்சார ராகு தரும் பலன்களை அடுத்த இதழில் அறிவோம்.
செல்: 99441 13267