எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

தபால் பெட்டி எண்: 2255,

வடபழனி, சென்னை- 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 2488 1038, 2483 9532.

Advertisment

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

ன்புடையீர், வணக்கம். திருக்கணிதப்படி கார்த்திகை 4-ஆம் தேதி (20-11-2021) சனிக்கிழமை 11.31 மணிக்கு குரு மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குச் சென்று 13-4-2022 வரை சஞ்சரிக்கிறார். (வாக்கியப்படி 13-11-2021 முதல் 13-4-2022 வரை). கும்ப ராசியில் குரு சஞ்சரிப்பதால் 12 ராசிகளுக்கும் ஏற்படும் பலன்களை இங்கு வழங்கியுள்ளோம்.

guru

Advertisment

மேஷம்

(அசுவினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரித்து பல்வேறு இன்னல்களை ஏற்படுத்திய குரு 20-11-2021 முதல் 13-4-2022 வரை ஜென்ம ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். குரு தனது சிறப் புப் பார்வையாக 3, 5, 7-ஆம் வீடுகளைப் பார்வை செய்வது சிறப் பாகும். எல்லா வகையிலும் லாபமும் வெற்றியும் உண்டாகும். உங்களது பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன்கள் குறைந்து சேமிக்கும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்து விஷயங்களில் இருந்துவந்த வம்பு வழக்குகள் மறைந்து, உங்களுக்கு சாதகமாக தீர்வு அமையும். தெய்வ தரிசனங்களுக்கான பயணங்களையும் மேற்கொள்வீர்கள். சொந்த வீடு, மனை, வாகனம் போன்றவற்றை வாங்கிச் சேர்ப்பீர்கள். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். குரு சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் யோகம் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியைத் தரும். உத்தியோகஸ்தர்களின் திறமை களுக்கேற்ற பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். கடந்தகால நெருக்கடிகள் குறையும். வேலைப்பளு சற்று கூடுதலாக இருந்தாலும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பம் நிறைவேறும். ராகு 2-ல், கேது 8-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு உணவுண்பது உத்தமம். விநாயகப் பெருமானுக்கு அறுகம்புல்லாலும், முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலராலும் அர்ச்சனைசெய்து வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 20-11-2021 முதல் 13-4-2022 வரை ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், உத்தியோகத்தில் சற்று இடையூறுகளை ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் ராசிக்கு தர்மகர்மாதிபதியான சனி (9, 10-க்கு அதிபதி) 9-ல் ஆட்சிபெற்று வலுவாக சஞ்சரிப்பதால், பொருளாதாரநிலை சாதகமாக இருந்து வளமான பலனைப் பெறுவீர்கள். பொதுவாக 10-ல் குரு நின்றால் பதவியும் பாழ் என்பது பழமொழி. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பிறர் வேலைகளையும் சேர்த்துச் செய்யவேண்டி வரும். என்றா லும் அதற்கேற்ற சன்மானம் கண்டிப்பாகக் கிடைக்கும். புதிதாக வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் ஏப்ரல் மாதத்திற்குப்பிறகு உயர்வான நிலையை அடையமுடியும். மேலதிகாரிகளிடம் பேசும்போது சற்று பொறுமையுடன் பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சற்று நெருக்கடிகள் இருக்கும் என்றா லும், எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். வேலை யாட்களையும், கூட்டாளி களையும் அனுசரித்துச் சென்றால் போட்ட முதலீட்டை எடுத்துவிட முடியும். அதிக முதலீடுகொண்ட செயல்களை சற்று கவனத்துடன் கையாள்வது நல்லது. குரு தனது சிறப்புப் பார்வையாக உங்கள் ராசிக்கு 2, 4, 6-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமை, தேவைக்கு ஏற்றவகையில் பணவரவுகள், எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். அசையும்- அசையா சொத்துகளால் அனுகூலம் உண்டாகும். கடந்த காலங்களில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நிம்மதி ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலனை அடையமுடியும். சிலருக்கு வெளியூர் செல்லும் யோகமும் அதன்மூலம் ஆதாயமும் உண்டாகும். பெற்றோர்வழியில் ஒருசில உதவிகள் கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். உங்கள் ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் மங்களங்கள் உண்டாகும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரித்த குரு 20-11-2021 முதல் 13-4-2022 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது அற்புதமான அமைப்பாகும். அதுமட்டுமின்றி சர்ப்ப கிரகமான கேது உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பாகும். தாராள தனவரவு ஏற்பட்டு உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். குரு ஜென்ம ராசி, 3, 5-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால், அன்றா டப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, இதுநாள்வரை குடும்பத்தில் தடைப் பட்ட சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சி நடைபெறும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துகளில் நீண்டநாட்களாக இருந்த தீர்க்கமுடியாத சிக்கல்கள் முடிவுக்குவரும் நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்களின் சுய முயற்சியால் படிப்படியான வளர்ச்சியை அடைவீர்கள். கடந்தகால பொருட்தேக்கங்கள் விலகி நல்ல வாய்ப்புகள் கிடைத்து லாபங்களை அடைவீர்கள். வேலையாட்களால் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால், அவர்களை கவனமாகக் கையாள்வது நல்லது. கூட்டாளிகளின் உதவியால் தொழில்ரீதியாக அனுகூலங்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் பணிபுரிய முடியும். சில நேரங்களில் மற்றவர்கள் வேலையை நீங்கள் எடுத்து செய்யவேண்டிய நிலை இருந்தாலும், அதனை சிறப்பாகக் கையாண்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். வெளியூர்ப் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உங்கள் ராசிக்கு 8-ல் சனி சஞ்சரித்து தற்போது அஷ்டமச்சனி நடைபெறுவதால், உடல்நலத்தில் சிறிது பாதிப்பு, அதிக உழைப்பால் உடல் அசதி, சோர்வு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால், எதிலும் சிக்கனமாக இருப்பது, அதிக முதலீடு கொண்ட செயல்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சனி பகவான் வழிபாடும், குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தி வழிபாடும் நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குரு பகவான் 20-11-2021 முதல் 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதென்று கூற முடியாது. இதனால் உங்களது பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சர்ப்ப கிரகமான ராகு சஞ்சரிப்பதால், எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் யோகமுண்டு. என்றாலும் எதிலும் சிக்கனத்துடன் இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத் துக் கொள்வது நல்லது. குரு உங்கள் ராசிக்கு 2, 4, 12-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால் நெருங்கியவர்களால் ஒருசில அனுகூலம், வீடு, வாகனம் போன்றவற்றைப் புதுப்பிக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபங்கள் சுமாராக இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை. கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து செயல்பட்டால் எதையும் சமாளித்து வளமான பலனை அடையமுடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால், அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு சற்று அதிகப்படியாக இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் வேலையையும் நீங்களே எடுத்துச்செய்ய நேரிடும். தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உங்கள் பணிக்கான அங்கீகாரத்தை அடைய இடையூறு ஏற்படும். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளும் சூழ்நிலை- அதன்மூலம் வீண் விரயங்கள் ஏற்படும். சனி உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பென்பதால், உங்களது ஆரோக்கியம் நன்றாக இருக்கும். என்றாலும் 5-ல் கேது சஞ்சரிப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது, பிரதோஷ நாளில் விரதமிருந்து சிவ வழிபாடும் நந்தி வழிபாடும் செய்வது, சிவ மந்திரங்கள் படிப்பது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு, ராசியாதிபதிக்கு நட்பு கிரகமான குரு 20-11-2021 முதல் 13-4-2022 வரை ஜென்ம ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது மிகவும் சிறப் பாகும். அதுமட்டுமின்றி சனி தற்போது உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி தரும். உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமின்றி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களது நீண்டநாள் கனவுகள் நிறைவேறி மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன்கள் குறைவதுடன் குடும்பத் தேவைகள் அனைத் தும் தடையின்றிப் பூர்த்தியாகும். மறைமுக எதிர்ப்புகள் விலகி, போட்டி, பொறா மைகள் மறைந்து நிம்மதி ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்புப் பார்வையாக ஜென்ம ராசி, 3, 11-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால், இருக்குமிடத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு, உற்றார்- உறவினர்கள்மூலம் அனுகூலம், கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும் அமைப்பு, சகலவிதத்திலும் லாபகரமான பலனை அடையும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுபகாரியங்கள் யாவும் கைகூடும். புத்திர பாக்கியம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். செய்யும் தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் குறைந்து லாபங்கள் பெருகும். தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகம் ஏற்படும். உங்களது கடந்தகால உழைப்பிற்கான பலனைத் தற்போது முழுமையாக அடைவீர்கள். எதிர்பார்த்த லாபமடைந்து அதன்மூலம் நீங்கள் அசையா சொத்துகளில் முதலீடு செய்யும் வாய்ப்புண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர், புகழ் உயரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் யாவும் தடையின்றிக் கிட்டும். அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். ஜென்ம ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் எந்தவிதத்திலும் பாதிப்புகள் உண்டாகாது. செவ்வாய்க்கிழமை துர்கையம்மனுக்கு எலுமிச்சைப் பழத்தில் தீபமேற்றி வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரித்த ஆண்டுக் கோளான குரு 20-11-2021 முதல் 13-4-2022 வரை ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது பெருளாதாரரீதியாக அவ்வளவு சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. என்றாலும் உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சனி சஞ்சரிப்பதால் எந்தவிதத்திலும் நெருக்கடிகள் ஏற்படாத அளவிற்கு பணவரவு சாதகமாக இருக்கும். தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், உடனிருப்பவர்களே வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால், மற்றவர்களிடம் சற்று கவனத் துடன் இருப்பது நல்லது. சிலருக்கு கடன்கள் ஏற்படலாம் என்பதால், பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உங்களது உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மனம் நிம்மதியான நிலையில் இருக்கும். தொழில், வியாபாரரீதியாக மறைமுக எதிர்ப்புகள், சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும் என்றாலும், உங்களின் தனித்திறமை யால் அடையவேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்க-ல் சிறிது தேக்கநிலை இருந்தாலும் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்து லாபம் காணமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தினால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால், எந்தவொரு காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும் கௌரவமான பதவிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருந்து படிப்படியான வளர்ச்சிகளை அடைவீர்கள். என்றா லும் உடனிருப்பவர்களால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் மூலம் அனுகூலப்பலன்கள் ஏற்படும். சிவ பெருமானையும் முருகப் பெருமானை வழிபட்டால் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

இதுநாள்வரை 4-ல் சஞ்சரித்த குரு 20-11-2021 முதல் 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். இது மிகவும் சிறப்பான அமைப்பென்பதால் உங்களது பொருளாதராநிலை சிறப்பாக இருக்கும். தற்போதுள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாகக் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு சிறப் பான புத்திர பாக்கியம் உண்டாகும். சொந்த பூமி, வண்டி, வாகனங்கள் யாவும் வாங்கமுடியும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல்- வாங்க-ல் இருந்த தேக்கநிலை விலகி லாபகரமான பலன் ஏற்படும். கொடுத்த கடன்களும் வீடு தேடிவரும். குரு பார்வை ஜென்ம ராசிக்கும் 9, 11-ஆம் வீடுகளுக்கும் இருப்பதால், எதிலும் தைரியத்துடன் செயல்படும் வாய்ப்பு, வெளியூர் தொடர்புகளால் அனுகூலம், எதிர்பாராத தனச்சேர்க்கை ஏற்படும். ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுவதாலும், உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறு, உடல் அசதி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட ஒற்றுமைக்குறைவு ஏற்படலாம் என்பதால், விட்டுக்கொடுத்துச் செல்வதும், பேச்சில் நிதானத்துடன் இருந்து உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது. செய்யும் தொழில், வியாபாரத்தி-ருந்த மந்தநிலை விலகி முன்னேற்றங்களை அடைவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவு சுமாராக இருக்கும் என்பதால், எதிலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால்தான் லாபகரமான பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகளும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும் என்றாலும், வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். சனி பகவானுக்கு எள்தீபமேற்றி நீலநிற சங்கு மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் கவலைகள் தீரும்; மகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த ஆண்டுக் கோளான குரு பகவான் 20-11-2021 முதல் 13-4-2022 வரை ஜென்ம ராசிக்கு 4-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதால், உங்களுக்கிருந்த தேவையற்ற இடையூறுகள் சற்று குறைந்து படிப்படியான முன்னேற் றம் ஏற்படும். பொருளாதாரரீதியாக சிறிது நெருக்கடி இருந்தாலும், ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி தற்போது உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சியில் அனுகூலப்பலனை அடையும் வாய்ப்பு, அடையவேண்டிய இலக்கை அடையும் நிலை ஏற்படும். குரு பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12-ஆம் வீடுகளுக்கு இருப்பதால், உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் திறன், எடுக்கும் பணியை சிறப் பாகச் செய்துமுடித்து நல்லபெயர் பெறும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான பலன்கள் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் நிறைவேறும். பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும் என்றாலும், நேரத்திற்கு உணவுண்ண முடியாத அளவுக்கு உழைக்கவேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, உயரதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. நல்ல வாய்ப்புகள், கௌரவப் பதவிகள் கிடைக்குமென்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். சக ஊழியர் களை அனுசரித்துச் செல்வது நல்லது. குறிப்பாக ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் உங்களது பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க முடியும். கொடுக்கல்- வாங்க-ல் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும்போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள், வாக்குவாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப் பது நல்லது. கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் சென்றால் அவர்கள்மூலம் உதவிகளைப் பெறமுடியும். முருகன், துர்கையம்மனை வழிபட்டால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி குரு பகவான் 20-11-2021 முதல் 13-4-2022 வரை உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால், எடுக்கும் முயற்சிகளில் தேவையற்ற தடை, தாமதங் கள் உண்டாகும். பணவரவில் தேக்க நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு தனது சிறப்புப் பார்வையாக 7, 9, 11-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால் குடும்பத்தில் திருமணம் சார்ந்த சுப முயற்சிகள் வெற்றிபெறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பதால் எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் சிறப்பாக எதிர்கொண்டு அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனி பகவான் தற்போது உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனியில் பாதச்சனி நடப்பதால், உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்பு களும், நெருங்கியவர்களிடம் வீண் வாக்கு வாதங்களும் உண்டாகும் என்பதால், பொதுவாக பேச்சில் பொறுமையுடன் இருந்து, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்க-ல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிலும் முன்நின்று செயல்பட்டால் ஏற்றங்களை அடையமுடியும். தேவையற்ற அலைச்சல், வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும், நீங்கள் நிதானமாக செயல்பட்டால் பொருட்தேக்கமின்றி லாபங்களை அடையமுடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று கவனத்துடன் செயல்பட்டால் வீண் இழப்புகளைத் தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் உடன்பணி புரிபவர்களை அனுசரித்துச் சென்றால் எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்து முடிக்க முடியும். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்குமென்றாலும் வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்பிற்கான ஊதியங்களைப் பெற இடையூறுகள் ஏற்படும். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். சனி பகவானையும், சனிப்ரீதியாக ஆஞ்சனேயரையும் விநாயகரையும் வழிபடுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி சனி ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால், உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதால் உங்கள் தேக ஆரோக்கியத்தில் பாதிப்பு, உடல் அசதி, பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும் காலம். என்றாலும் ஜென்ம ராசியில் இதுநாள்வரை சஞ்சரித்த குரு 20-11-2021 முதல் 13-4-2022 வரை தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்தகாலக் கடன்கள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சர்ப்ப கிரகமான கேது 11-ல் சஞ்சரிப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்கும் அமைப்பாகும்.உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்புப் பார்வையாக 6, 8, 10-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால் குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் விலகும். கணவன்- மனைவி ஒற்றுமை மிகவும் சிறப்பாக இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்குள்ள உடம்பு பாதிப்புகள்கூட படிப்படியாகக் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் வாய்ப்பு, கடந்தகால வம்பு, வழக்குகள் விலகி நிம்மதியான நிலை, எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் அனைத்தும் தடைகள் விலகி கைகூடும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடல்நலம் சிறப்பாக அமையும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை விலகி படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும். வேலையாட்கள் மற்றும் கூட்டாளிகளின் ஆதரவால் உங்களுக்கிருந்த நெருக்கடிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்க-ல் சிறப் பான நிலை இருக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். உங்களுக்கிருந்த வேலைப்பளு குறைந்து நிம்மதியான நிலை ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவு மன மகிழ்ச்சி தரும். வெளியூர் தொடர்புகள்மூலம் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டுவந்தால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் 20-11-2021 முதல் 13-4-2022 வரை ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதும், ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமும், உங்கள் ராசியாதிபதியுமான சனி தற்போது உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரித்து ஏழரைச்சனியில் விரயச்சனி நடப்பதும் அவ்வளவு சாதகமான அமைப்பென்று கூறமுடியாது. உங்களது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப் பாட்டுடன் இருப்பது நல்லது. பண வரவுகள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது என்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைப் பது நல்லது. எதிர்பாராத வகையில் திடீர் செலவுகள் ஏற்படும் காலம் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்புப் பார்வையாக 5, 7, 9-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால் பூர்வீக சொத்துகளால் அனுகூலமும், கணவன்- மனைவியிடையே ஒற்றுமையும் நிலவும். சிலருக்கு அழகான புத்திர பாக்கியமும், புத்திர வழியில் மகிழ்ச்சியும் நிலவும். தடைப் பட்ட திருமண சுபகாரியங்களில்கூட அனுகூலங்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால், ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்கும் பலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க் கும் லாபங்களை அடைய இடையூறு ஏற்படும். போட்ட முதலீட்டை எடுக்கவே பாடுபட வேண்டி இருக்கும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நன்று. அதிக முதலீடு கொண்ட செயல் களைத் தவிர்ப்பது நல்லது. ஏப்ரல் 2022-ல் ஏற்படவிருக்கும் குரு, ராகு, கேது பெயர்ச்சிக்குப் பிறகுதான் நெருக்கடிகள் குறைந்து நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச் சுமை காரணமாக உடல் அசதி ஏற்படும். உழைப்பிற்கான சன்மானம் அடைய இடையூறுகள் ஏற்படும் என்பதால், மன நிம்மதி குறையும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது. சர்ப்ப கிரகமான ராகு ஜென்ம ராசிக்கு 4-ல், கேது 10-ல் சஞ்சரிப்பதால், தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வீடு, வாகனங் கள் பராமரிப்புக்காக செலவுசெய்ய நேரிடும். துர்க்கை வழிபாட்டையும், ஏகாதசி நாளில் பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டால் முன்னேற்றங்கள் ஏற்படும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் ராசியாதிபதி குரு 20-11-2021 முதல் 13-4-2022 வரை சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதாரரீதியாக சிறிது ஏற்றத் தாழ்வுகள் ஏற்படும் என்றாலும், சனி தற்போது உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், சர்ப்ப கிரகமான ராகு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால், எதிர்பாராத உதவிகள் கிடைத்து பண வரவுகள் சாதகமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெறமுடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சிதரும் செய்தி கிடைக்கும். ஜென்ம ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் குரு தனது சிறப்புப் பார்வையாக 4, 6, 8-ஆம் வீடுகளைப் பார்வை செய்வதால் குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும், அசையும்- அசையா சொத்து வழியில் சாதகமான பலன்கள் கிட்டும். வீடு, வாகனங்களைப் பழுதுபார்க்கக்கூடிய வாய்ப்புண்டாகும். உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள் விலகி நிம்மதியான நிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால், எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சிறிது நெருக்கடிகள் இருந்தாலும் லாபகரமான பலனை அடையமுடியும். அதிக முதலீடு கொண்ட செயல்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். உங்களுக்கிருந்த போட்டி, பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் மறையும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் பூர்த்தியாகும் வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். வேலை தேடிக்கொண்டு இருப்பவர் களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்துமுடிக்கும் திறன் உண்டாகும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் ஏற்படும். சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.