ரு ஜாதகத்தில் சனி பகவான் பலமாக இருந்தால், அந்த ஜாதகர் சொந்த நிலம் வைத்திருப்பார்.

அரசில் புராதனப் பொருட்கள் இலாகாவின் அதிகாரியாக சிலர் இருப்பார்கள். சிலர் தொழிற்சங்கத் தலைவராகவோ, மண்ணியல் நிபுணராகவோ, தொழிலதிபராகவோ, பெரும் விவசாயிகளாகவோ இருப்பார்கள். சனி பலவீனமாக இருந்தால், தோல்நோய், மூட்டுவலி, உடல் பலவீனம், வாய்வுத் தொல்லை, பக்கவாதம், தலையில் முடி உதிர்தல் ஆகியவை இருக்கும். சிலருக்கு அடிக்கடி விபத்துகள் நடக்கும்.

saturngod

சனி லக்னத்தில் சுய வீட்டில் அல்லது உச்சமாக இருந்தால், அந்த ஜாதகருக்கு சசயோகம் உண்டாகும். அதனால் அவர் வசிக்கும் பகுதியில் ஒரு சிறிய தலைவராக இருப்பார். சனியை சுபகிரகம் பார்த்தால், அதற்குக் கேந்திரத்தில் சுபகிரகம் இருந்தால் அவர் அரசாங்கப் பதவியில் இருப்பார். பூமி, வாகன வசதிகளுடன் வாழ்வார். சிலருக்குப் பிடிவாத குணமிருக்கும். செவ்வாயுடன் சனி இருந்தால் சிலருக்கு மறுமணம் நடக்கும். ராகுவுடன் சனி இருந்தால் முதுகில் நோய்வரும். கேதுவுடன் சனி இருந்தால் சிலருக்கு மனநோய் வரும்.

Advertisment

2-ஆம் பாவத்தில் சனி இருந்து, அதை குரு பார்த்தால், அந்த ஜாதகர் புகழ்பெற்ற மனிதராக இருப்பார். பாவ கிரகத்துடன் சனி இருந்தால் அல்லது பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் சிலருக்கு மறுமணம் நடக்கும்.

3-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் தைரியம் நிறைந்தவராக இருப்பார். கோப குணமும் இருக்கும். தந்தையுடன் சரியாக உறவிருக்காது. கேதுவுடன் சனி இருந்தால் சிலருக்குத் தம்பி இருக்கமாட்டான். செவ்வாயுடன் சனி இருந்தால் அடிக்கடி விபத்து நடக்கும். சந்திரன், புதனுடன் சனி இருந்தால் அவர் விஞ்ஞானியாக இருப்பார்.

4-ல் சனி இருந்தால், அந்த ஜாதகரின் தாயின் உடல்நலத்தில் பாதிப்பிருக்கும். செவ்வாயுடன் சனி இருந்தால், இல்வாழ்க்கையில் சந்தோஷம் இருக்காது. சுக்கிரனுடன் சனி இருந்து செவ்வாய் பார்த்தால், அவருக்கு வயிற்றில் நோயும், உயிரணுக்கள் குறைவாகவும் இருக்கும்.

Advertisment

5-ல் சனி இருந்தால், அந்த ஜாதகருக்கு வயிற்றில் நோய் இருக்கும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், ராகுவுடன் சனி இருந்தால் கர்ப்பப்பையில் பிரச்சினை இருக்கும். குருவால் சனி பார்க்கப்பட்டால், அந்த ஜாதகருக்கு பல இடங்களில் படிப்பு காரணமாக பாராட்டுகள் கிடைக்கும்.

6-ல் சனி நீசமாகவோ அஸ்தமனமாகவோ இருந்தால், அந்த ஜாதகருக்கு பித்தநோய், முதுகுத்தண்டில் நோய், பக்கவாதம், தூக்கமின்மை போன்றவை இருக்கும். செவ்வாயுடன் சனி இருந்தால், சிலருக்கு ரத்தக் கொதிப்பு இருக்கும். கணவன்- மனைவி உறவு நன்றாக இருக்காது. சிலருக்கு விபத்து நடக்கும்.

7-ல் சனி தனித்திருந்தால், அந்த ஜாதகருக்கு வாய்வுத் தொல்லை இருக்கும். ரத்த அழுத்தம் இருக்கும். செவ்வாயுடன் சனி இருந்தால் அல்லது செவ்வாய், ராகுவுடன் சனி இருந்தால் அல்லது செவ்வாய், சூரியனுடன் இருந்தால், சிலருக்கு மறுமணம் நடக்கும். சிலருக்கு இல்வாழ்கை மகிழ்ச்சியாக இருக்காது. புதனுடன் சனி இருந்தால் சிலருக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும். சிலர் திருநங்கைகளாக இருப்பார்கள்.

8-ல் சனி இருந்தால் ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பாவ கிரகத்தால் சனி பார்க்கப்பட்டால் பணவசதி இருக்காது. இல்வாழ்க்கையில் பல கஷ்டங்கள் இருக்கும். சனி, சுப கிரகத்தால் பார்க்கப்பட்டால், நல்ல பணவசதி, நீண்ட ஆயுள் இருக்கும். சந்திரன், புதனுடன் சனி இருந்தால், சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பார்கள். சிலருக்கு தூக்க மாத்திரை சாப்பிட்டால்தான் தூக்கமே வரும்.

9-ல் சனி இருந்தால், அந்த ஜாதகர் இளம் வயதில் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரும். குரு, புதனுடன் சனி இருந்தால் பல வெற்றிகள் கிடைக்கும். பணவசதி, சந்தோஷம் இருக்கும். செவ்வாய், ராகுவுடன் சனி இருந்தால் தந்தையுடன் உறவு சரியாக இருக்காது. 36 வயதிற்குப்பிறகு நன்கு சம்பாதித்து, மகிழ்ச்சியாக இருப்பார். சிலர் மதம் மாறுவார்கள்.

10-ல் சனி இருந்தால், அந்த சனியின் பார்வை 12, 4, 7-க்கு இருக்கும். அதனால் அந்த ஜாதகரின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும். குருவுடன் சனி இருந்தால், அந்த ஜாதகர் நீதிபதியாவோ, பெரிய வர்த்தகராகவோ இருப்பார். செவ்வாய், குருவுடன் சனி இருந்தால் பெரிய அரசியல் தலைவராக இருப்பார்.

11-ல் சனி இருந்தால் ஜாதகர் பணவசதியுடன் இருப்பார். வயிற்றில் பிரச்சினை, மூட்டுவலி இருக்கும். சனி, செவ்வாய், சூரியன் சேர்ந்திருந்தால் 5-ஆம் பாவத்தைப் பார்ப்பார்கள். அதனால், குழந்தைப் பிறப்பதில் பிரச்சினை இருக்கும். சிலருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யவேண்டி வரலாம்.

12-ல் சனி இருந்து, அதை பாவகிரகங்கள் பார்த்தால், அந்த ஜாதகர் போதைக்கு அடிமையாவார். கணவன்- மனைவி உறவு சரியாக இருக்காது. செவ்வாய், ராகுவுடன் சனி இருந்தால் திருமணத்தடை இருக்கும். சிலருக்கு 32 வயதிற்குப் பிறகுதான் திருமணம் நடக்கும். சூரியன், புதனுடன் சனி இருந்தால் வெளிநாட்டில் வசிக்கநேரும்.

பரிகாரங்கள்

தினமும் சிவனை வழிபட்டு, அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். மகாமிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜெபிப்பது நன்று. அனுமன் வழிபாடும் சிறந்தது. பெண்கள் செவ்வாய்க்கிழமை விநாயகரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடவேண்டும். சமையலறையில் சிவப்பு, பச்சை, நீல வண்ணங்களைத் தவிர்க்கவும். குலதெய்வ வழிபாடு இன்றியமையாதது. சனி, லக்னத்திற்கு யோக காரகனாக இருந்தால், நீலக்கல் (ப்ளூ சஃபையர்) அணியலாம். வீட்டின் தென்மேற்கு திசையில் பூமிக்குக் கீழே நீர்த்தொட்டி, கிணறு இருக்கக்கூடாது. சமையலறை தூய்மையாக இருப்பது அவசியம்.

செல்: 98401 11534