நடப்பு குரு தசை எப்படி இருக்கும்? -மாணிக்கவள்ளி, சிவகங்கை.
பதில்: கன்னி லக்னம், கன்னி ராசி, உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 4, 7-க்கு அதிபதி குரு 11-ல் உச்சம்பெற்று இருப்பது நல்ல அமைப்பு என்றாலும் கன்னி லக்னத்திற்கு 7, 11-ஆம் வீடுகள் மாரக ஸ்தானமாகும். மாரகாதிபதி குரு, மற்றொரு மாரக ஸ்தானமான 11-ல் இருந்து தசை நடத்துகிறார். குரு உச்சம்பெற்று தசை நடப்பதால் கெடுதலை செய்யமாட்டார். ஒருபுறம் பொருளாதார உயர்வையும், பெயர், புகழையும் தந்தாலும் ஒருபுறம் சிறு சிறு உடல் உபாதைகளை தருவார். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. குரு தட்சிணாமூர்த்தியை தொடர்ந்து வழிபாடு செய்வதுமூலமாக வளமான பலன்களை அடையமுடியும். குரு பாதகாதிபதி என்ற காரணத்தால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது.
அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடக்கும் -மாணிக்கவாசகர், சங்கரன்கோவில்.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி சனி 9, 12-க்கு அதிபதியான குரு நட்சத்திரத்தில் 12-ல் உள்ளார். பத்தாம் அதிபதி 9, 12-க்கு அதிபதியின் நட்சத்திரத்தில் இருக்கின்ற காரணத்தால் பிறந்த ஊரைவிட வெளியூர், வெளிமாநிலங்கள் மூலமாகவும் ஒருசிலருக்கு வெளிநாடு மூலமாக அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ஜாதகத்தில் குரு பார்வை சனி, சந்திரனுக்கு இருப்பதால் பயணங்களால் வளர்ச்சிகள் உண்டு. ஒரு ஜாதகத்தில் 10-ஆம் அதிபதி உடன் சூரியன் இணைந்தால் தான் அரசு வேலை எனலாம். உங்களுக்கு சூரியன்- ராகு சாரம் பெற்றிருப்பதால் நேரடியாக அரசு வேலை இல்லாமல் வெளியூர் தொடர்புகள் வெளி மாநில தொடர்புகள்மூலமாக அனுகூலங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன்- ராகு சாரம் பெற்றிருப்ப தாலும் தற்போது சூரிய தசை நடப்பதாலும் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
பொருளாதார நெருக்கடிகளால் கஷ்டத்தில் உள்ளேன். கடன் பிரச்சினைகள் எப்போது தீரும்? -சுரேஷ், திருச்சி.
பதில்: சிம்ம லக்னம், சுவாதி நட்சத்திரம், துலா ராசியில் பிறந்த உங்களுக்கு தற்போது சிம்ம லக்னத்திற்கு அதிபதியான சூரியனுக்கு பகை கிரகமான சனி 5-ல் அமையப்பெற்று சனிக்கு 6-ல் உள்ள வக்ர குருபுக்தி நடக்கிறது. தசாநாதனுக்கு புக்திநாதன் 6, 8-ல் இருந்து தசை நடத்தினால் பொருளாதார நெருக்கடி கள் ஏற்படும். சனிக்கு 6-ல் குரு அமையப் பெற்று சனி தசையில் குருபுக்தி நடப்பது தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தும் அமைப்பு ஆகும். துலா ராசியில் பிறந்த வர்களுக்கு தற்போது கோட்சாரத்திலும் குரு 8-ல் இருப்பதால் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. சனி தசை குருபுக்தி 7-2-2025 முடிய நடக்கிறது. அடுத்துவர இருக்கின்ற புதன் தசையில் உங்களுக்கு தற்போது இருக்கக்கூடிய கடன் பிரச்சினைகள், நெருக்கடிகள் குறைந்து தாராள தனவரவுகள் உண்டாகி நல்லது நடக்கும். சிம்ம லக்னத்திற்கு அதிபதியான சூரியனுக்கு சனி பகைவர் என்பதாலும் துலா ராசி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு 3-ஆவது தசையாக சனி தசை நடப்பதும் அவ்வளவு சிறப்பு அல்ல. அடுத்து உங்களுக்கு 2, 11-ஆம் அதிபதி புதன் தசை நடக்கின்றபொழுது தற்போது இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் குறைந்து ஒரு வளமான பலன்கள் ஏற்படும்.
இவர் எந்தவிதமான படிப்பை தேர்ந்தெடுத்து படிப்பார்? அரசு ஊதியம் கிடைக்குமா?
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, மேஷ லக்னத்தில் பிறந்த ஜாதகிக்கு 4-ஆம் அதிபதி சந்திரன் 4-ல் ஆட்சி பெற்று கேதுடன் இருப்பதால் மருந்து, கெமிக்கல், உணவு சார்ந்த கல்வி யோகம் உண்டு எனலாம். கல்வி காரகன் புதன் ஜென்ம லக்னத்தில் வக்ரகதியில் அமையப்பெற்று செவ்வாய் சேர்க்கை பெற்றுள்ளார். புதன் வக்ரகதியில் இருப்பதால் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளக்கூடிய அமைப்புகள், படிப்புக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய அமைப்புகள் ஏற்படும். புதன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று செவ்வாய் வீட்டில் இருப்பதால் மருந்து தொடர்புடைய கல்வி, நிர்வாகத் தொடர்புடைய கல்வி யோகம் சாதகமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மேஷ லக்னத்துக்கு 10-ஆம் அதிபதி சனி- சூரியன் வீட்டில் அமையப்பெற்று செவ்வாய், சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் வலுவாக இருக்கின்ற காரணத்தால் நல்ல வேலையில் அமரக்கூடிய யோகம் உண்டு. சனி- சூரியன் வீட்டில் இருப்பதால் அரசு, அரசு சார்ந்த துறைகளில் போட்டித் தேர்வு களில் பங்கேற்றால் சில தடைக்கு பிறகு நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறந்த ஊரைவிட வெளியூர் தொடர்புகள் மூலமாக கற்ற கல்வியால் வளர்ச்சிகள் உண்டு, ராசிக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் பலமாக இருப்பதால் நிர்வாகப் பணிகளை வகிக்கக் கூடிய வாய்ப்புகள் எதிர்காலத்தில் உண்டாகும்.
என்னுடைய உடல் நலம் எவ்வாறு இருக்கும் என்று கூறுங்கள்? -பாரதி, மதுரை.
பதில்: மேஷ லக்னம், சதய நட்சத்திரம், கும்ப ராசியில் பிறந்த உங்களுக்கு ஆயுள், ஆரோக்கிய காரகன் சனி வக்ர கதியில் இருப்பது உடல்ரீதியாக சிறிது நலிவு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடிய நிலையை உண்டாக்கும். உங்களுக்கு தற்போது 3, 6-க்கு அதிபதியான புதன் தசையில் புதனுக்கு 8-ல் உள்ள சனி புக்தி நடப்பது ஆரோக்கியரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். சனி வக்ரகதியில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கக்கூடிய நிலை, கால் பாதங்களில் வலி ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு. அன்றாட செயல்களில் சற்று பொறுமையோடு நிதானத் தோடு செயல்படுவது நல்லது. உங்களுக்கு ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் உங்கள் ஜாதகத்தில் 12-ல் உள்ள குரு லக்னத்திற்கு 6, 8-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டாலும் உடனடியாக அதிலிருந்து குணமாகி சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய அனுகூலங்கள் உண்டு. சனி வக்ர கதியில் இருப்பதால் எதிலும் அவசரப்படாமல் எந்த காரியத்தையும் பொறுமையாக செய்வது நல்லது. சனி புக்தி நடப்பதாலும் ஏழரைச் சனி நடப்பதாலும் ஆஞ்சநேய வழிபாடு, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.