எனது மகனுக்கு திருமணம் இதுநாள் வரை கைகூடவில்லை. எப்போது திருமணம் நடைபெறும்? ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? -வெங்கடசுப்ரமணியம், சென்னை.
பதில்: பூராட நட்சத்திரம், தனுசு ராசி, ரிஷப லக்னத் தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி செவ்வாய்- கேது சேர்க்கைப்பெற்று 2-ல் இருப்பதும் சுக்கிரன் நீசம்பெற்று இருப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். தற்போது ராகு மகா தசையில் ராகு புக்தி 12-11-2024 முடிய நடக்கிறது. ராகு- கேது சாரம் பெற்றிருப்பதால் அடுத்து வரக்கூடிய குரு புக்தியில் 2025 தொடக்கத்தில் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் அமைய வாய்ப்புண்டு. ராகு பாவகரீதியாக 7-ல் இருப்பதால் திருமணம் அமைந்தாலும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய ஜாதக மாகும். அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
நான் ஒரு சொந்த வீடு 2017-ல் கட்டி குடியேறி வித்துட்டேன். எந்தவொரு வீட்டுலையும் நிலைச்சு இருக்க முடியலை. இப்ப கட்டிட்டு இருக்கிற புது வீட்டில் நான் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? -ராணி சீமா, சாத்தூர்.
பதில்: ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, தனுசு லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி குரு 3-ல் இருப்பதும், சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்றிருப்பதும் நல்ல அமைப்புதான். உங்களுக்கு தற்போது அஷ்டமச்சனி நடக்கிறது. அடுத்து 12-ல் இருக்கக்கூடிய செவ்வாய் தசையில் 12-ல் இருக்கக்கூடிய ராகு புக்தி நடக்கிறது. இதற்குமுன்பு 8-ல் இருந்த சந்திர தசை நடைபெற்றது. மறைவு ஸ்தானத்தில் இருக்கக்கூடிய தசை நடைபெறுவதால் தேவையற்ற மன உளைச்சல்கள், தேவையற்ற கவலைகள் உண்டாகிறது. சுக்கிரன் சிறப் பாக இருப்பதால் இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும். சனி பார்வை 4-ஆம் வீட்டிற்கு இருப்பதால் வீட்டில் நிம்மதியில்லாத நிலை இருக்கிறது. காலபைரவரை வழிபாடு செய்யவும்; நல்லது நடக்கும்.
எனக்கு எப்போது திருமணம் நடக்கும்? வரன் உள்ளூரில் கிடைக்குமா, வெளியூரில் கிடைக்குமா? அரசு வேலையில் பணிபுரிபவர்கள், தொழில் பார்க்கிறவர்கள், தனியாரில் வேலை பார்க்கிறவர்கள் இதில் யாரை பார்க்கவேண்டும்? -சேதனா தேவி, கோவில்பட்டி.
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, கும்ப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம லக்னத்தில் கேது, 2-ல் சனி, 7-ல் ராகு இருக்கிறது. 7-ஆம் அதிபதி சூரியன் 6-ல் மறைந்திருக்கிறது. இப்படிப்பட்ட கிரகநிலை இருப்பதால் அமையும் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவேண்டும். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் 8-ல் மறைந்து செவ்வாய் தோஷம் இருக்கிறது. தற்போது சூரிய தசையில் சனி புக்தி 8-3-2024 முடிய நடக்கிறது. அடுத்த புதன் புக்தி வருகின்றபொழுது சொந்தமில்லாமல் அந்நியத்தில் வரன் அமைய வாய்ப்பு உண்டு. 7-ஆம் வீட்டுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் 7-ல் புதன் சேர்க்கைப்பெற்று சிறப் பாக இருப்பதால் சொந்தத் தொழில் செய்பவரை வரனாக பார்ப்பது சாதகமாக இருக்கும். எந்த வரன் அமைந்தாலும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய ஜாதகம் ஆகும். 7-ஆம் அதிபதி 6-ல் இருப்பதால் சொந்த ஊரைவிட வெளியூர் தொடர்புடைய நபரை திருமணத்திற்காக வரன் பார்ப்பது சிறப்பு.
நான் எப்பொழுது சொந்த வீடு கட்டுவேன்? -விஜயகுமார், காஞ்சிபுரம்.
பதில்: ஆயில் நட்சத்திரம், கடக ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 4-ஆம் அதிபதி சனி 4-ல் ஆட்சி பெற்றுள்ளார். 4-ஆம் அதிபதி சனி என்ற காரணத்தால் சொத்துகள் பார்க்கின்றபொழுது பழைய வீட்டை வாங்கக்கூடிய யோகமானது பலமாக உண்டு. உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் வக்ரம் பெற்றிருப்பதால் முதலீடுகள் செய்யும்பொழுது தனியாக செய்யாமல் குடும்ப உறுப்பினர்களை இணைத்து செய்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ஐயா நான் நல்ல வேலையில் இல்லை. குடும்ப பிரச்சினைகள் அதிகம். சொந்தத் தொழில் வெற்றியடைகிறதோ இல்லையோ அது பாதுகாப்பானது அல்ல. என் எதிர்கால வாழ்க்கை எப்படியிருக்கும்? -கணேஷ், தூத்துக்குடி.
பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி செவ்வாய் கட்டத்தில் 12-ல் இருந்தாலும் பாவகரீதியாக 11-ல் உள்ளார். செவ்வாய் பாதக ஸ்தானமான 11-ல் இருப்பதால் முதலீடுசெய்து தொழில் செய்வது அவ்வளவு சிறப்பு அல்ல. அடுத்து உங்களுக்கு ஜென்ம லக்னத் தில் சுக்கிரன் இருந்தாலும் பாவகரீதியாக 12-ல் உள்ளார். இதன்காரணமாக வெளியூர் தொடர்புகள்மூலமாக ஒருசில அனுகூலங்கள் உண்டு. நீங்கள் பிறக்கின்றபொழுதே லக்னத் திற்கு 2-ஆம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, நெருங்கியவர்களிடம் பகை அதிகம் உண்டு. பொதுவாக பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது மிகவும் நல்லது. தற்போது சுக்கிர தசையில் 2-ல் இருக்கக்கூடிய ராகு புக்தி 4-8-2025 முடிய நடப்பதால் அடுத்து வரக்கூடிய குரு புக்தி முதல் ஒரு நல்ல முன்னேற்றம், குடும்பத்தில் நிம்மதி ஏற்பட வாய்ப்பு உண்டு. 2-ல் உள்ள ராகு புக்தி நடப்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
எனது இளைய மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? -வெங்கடகிரி, கோவை.
பதில்: அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மகர லக்னத்தில் பிறந்த உங்கள் மகனுக்கு 7-ஆம் அதிபதி சந்திரனும் களத்திரகாரகன் சுக்கிரனும் கேது சாரம் பெற்றிருப்பது சாதகமற்ற அமைப்பாகும். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பது நல்ல அமைப்பாகும். சந்திரன், சுக்கிரன், கேது சாரம் பெற்றிருப்பதால் உறவில்லாமல் அந்நியத்தில் வரன் பார்ப்பது நல்லது. தற்போது சூரிய தசையில் சனி புக்தி 25-8-2024 முடிய நடப்பதால் அடுத்து வரக்கூடிய புதன் புக்தி காலத்தில் 2024 ஆகஸ்ட்பிறகு திருமண முயற்சிகள் மேற்கொண்டால் நல்லது நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
எனது பேரனின் ஆயுள், கல்வி பற்றி தெரிவிக்கவும்? -ரமேஷ் பாபு, சென்னை.
பதில்: புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்கள் பேரனுக்கு ஆயுள்காரகன் சனி திரிகோண ஸ்தானமான 5-ல் இருப்பதும், 4, 8-க்கு அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நீண்ட ஆயுள் உண்டு. கல்வி காரகன் புதன்- கேது சேர்க்கைப் பெற்றிருப்பது கல்வியில் சிறுசிறு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு என்றாலும் உடன் சூரியன் இருப்பதால் மருந்து, கெமிக்கல் தொடர்புடைய கல்விமூலம் எதிர்காலத்தில் வளர்ச்சி உண்டு.