sss

அஸ்தம்

அஸ்தம் என்றால் கை என்று பொருளாகும். இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள ஐந்து நட்சத்திரங்கள் கைபோல் வானத்தில் காட்சியளிப்பதால் இதற்கு அஸ்தம் என்ற பெயர்வந்தது. இதன் அதிபதி சந்திரன் ஆகும். இதன் அதிதேவதை சாஸ்தா. அஸ்தம் நட்சத்திரத்தின் வசிப்பிடம் நீர் நிலைகளாகும்.இது புதனின் வீடான கன்னி யில் அமைந்துள்ளது. இந்த நட்சத்திரத்தில் உச்சம் அடையும் கிரகம் புதன் மட்டுமே தன் சொந்த வீட்டில் உச்சமடையும். புதன் கல்விக்கு காரக கிரகமாக விளங்குவதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுக்கூர்மை, சாமர்த்தியம், புத்திசாலித்தனம், ஞாபக சக்தி உள்ளவர்களாக இருப் பார்கள்.

Advertisment

இதில் கல்வி கற்க துவங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். ஞாபக சக்தி குறைவாக இருக்கும் மாணவர்கள் புரிந்துகொள்ளும் தன்மை குறைவாக இருப்பவர்கள் இந்த நட்சத்திரநாளில் விரதமிருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி அர்ச்சனை செய்து வழி பட்டால் அறிவுக்கூர்மை அதிகரிக்கும், புதிய ஒப்பந்தம் கையெழுத்திட, சித்திரம் எழுத, கன்னிகாதானம் செய்துகொடுக்க, குளம், கிணறு வெட்ட, வியாபாரம் துவங்க, கூட்டுத் தொழில் துவங்க, புதிய நண்பர்களிடம் அறிமுகமாக, மாடு வாங்க, பிறரிடம் உதவி உகந்த நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தின் வசிப்பிடம் கன்னியாகுமரியாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கன்னியாகுமரியம்மனையும் இதற்கு அருகிலுள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியையும் வழிபட வாழ்க்கை வளமாகும்.

இவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் சப்த கன்னிகளை வழிபட, மேன்மை கூடும்.

Advertisment

சித்திரை

சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இது கன்னி, துலாம் ராசியில் அமைந்துள்ளது.

இதன் முதல் 2 பாதம் கன்னி ராசியிலும் 3, 4-ஆம் பாதங்கள் துலாம் ராசியிலும் உள்ளது. இதன் அதிதேவதை விஸ்வகர்மா. இது சிவப்பு நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாகக் காணப்படும் நட்சத்திரம். இதன் அதிபதி செவ்வாய் கிரகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் தசையே முதலில் தொடங்கும். இது சுக்கிரன் மற்றும் சூரியன் நீசம்பெறும் ராசியில் அமைத்திருக்கும் நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சுக்கிரன் மற்றும் சூரியன் நீசம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல.

சித்திரை இந்த நட்சத்திரத்தின் உருவம் புலிக்கண் அல்லது மீனின் கண் அல்லது முத்துமணி என கூறப்பட்டுள்ளது. இதன் வசிப்பிடம் வயல் காடு. இந்த நட்சத்திரத்தின் உருவம் நவமணிகளில் ஒன்றான முத்துமாலைபோல் முத்து மணிபோல் தோற்றம் அளிப்பதால் நவரத்தினங்கள் தங்க நகைகள் வாங்க உகந்த நட்சத்திரமாகும் காது மூக்கு குத்தி கொள்ள, வீடு கட்ட தொடங்க, கிரக பிரவேசம் செய்ய, தச்சு வேலை செய்ய உகந்த நட்சத்திரம். இந்த நட்சத்திரம் காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு ஏழாம் வீட்டில் இருப்பதால் கர்ப்பதானம் நிஷேகம் என்னும் சாந்தி முகூர்த்தம் விவாகம் போன்ற காரியங்கள் செய்யலாம். விவசாயம் சம்பந்தமான வேலைகள் செய்யலாம். பணிப் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம். ஆயுதப் பிரயோகம் செய்ய உகந்த நட்சத்திரம் ஆகும். இது சுக்கிரனின் வீட்டையும் புதனின் வீட்டையும் இணைக்கும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் திருச்செந்தூர் சென்று அங்குள்ள முருகனையும் வள்ளியையும் வழிபட்டால் காதல் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டு திருமணத்தில் முடியும் காதலுக்கு எதிரான எதிர்ப்புகள் நீங்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் தன தாரையான சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த லட்சுமி நரசிம்மரை வழிபட பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை, நிம்மதி பெருகும்.

சுவாதி

சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் அமைந்துள்ளது. இதன் ராசி அதிபதி சுக்கிரன். சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு. இதில் உச்சம் அடையும் கிரகம் சனிபகவான். நீசம் அடையும் கிரகம் சூரியன். இதன் அதிதேவதை வாயு. இந்த நட்சத்திரத்தின் வடிவம் தீபம் மற்றும் பவள மணி. இந்த நட்சத்திரத்தில் வசிப்பிடம் பருத்திக்காடு. சுவாதி நட்சத்திரம் காலபுருஷ லக்னமான மேஷத்திற்கு ஏழாம் வீடான துலாம் ராசியில் அமைந்துள்ளதால் விவாகம், கர்ப்பதானம், சாந்தி முகூர்த்தம், புதிய தொழில் துவங்க, வேலைக்கு விண்ணப்பிக்க, தொழில் உத்தியோகம் சம்பந்தமான எல்லா காரியங்களிலும் ஈடுபட, தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த, தொழிலாளர்களின் உரிமைக்காக போராட உகந்த நட்சத்திரமாகும். இதில் நீசம் அடையும் கிரகம் சூரியன் என்பதால்

அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சுவாதி நட்சத்திரம் வரும்நாளில் எந்தவிதமான புதிய முயற்சியிலும் ஈடுபடக்கூடாது குறிப்பாக பதவிகளையோ, புதிய பொறுப்புகளையோ ஏற்கக்கூடாது. ஜாமீன் போடக்கூடாது. சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு என்பதாலும் காலபுருஷனுக்கு ஏழாம் வீட்டில் அமைந்துள்ளதாலும் பல வருடங்களாக குழந்தை இல்லாதவர்கள் சுவாதி நட்சத்திரம் வரும்நாளில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் கருத்தரிப்பு ஏற்படும்.

இந்த நட்சத்திரம் நாளில் கடன் கொடுக்கக்கூடாது. பணம் பொருள் எதுவும் யாருக்கும் கொடுக்கக் கூடாது இந்த நட்சத்திரநாளில் கொடுத்த கடன் வசூலாகாது. கடனாளி அந்தத் தொகையை ஏப்பம் விட்டு விடுவான்.

அதனால் ஜோதிடரீதியாக ஆய்வு செய்தால் இந்த உண்மை விளங்கும். இதன் அதிபதி ராகு பித்தலாட்டம், வஞ்சகம் சூது இவற்றிற்கு காரக கிரகமாகும். இதில் உச்சமடையும் கிரகம் சனி வறுமையைக் குறிக்கும் கிரகமாகும். சனி ராகு சேர்க்கை சம்பந்தம் சுபித்துச் சொல்லக்கூடிய பலன் அல்ல.

இந்த நட்சத்திரம்நாளில் திருவாலங்காட்டிற்கு சென்று சிவபெருமானை வழிபட்டால் களத்திர தோஷம் , புத்திர தோஷம், அபிச்சார தோஷம் நீங்கும்.சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிசெய்வது நல்லது.

விசாகம்

இதன் அதிபதி குருவாகும் இதில் நீசமடையும் கிரகம் சந்திரன். இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை சுப்பிரமணியர். இதன் வடிவம் முறம், குயவன் சக்கரம் அல்லது தோரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் நீசமடையும் கிரகம் சந்திரன்.

இதன்முதல் மூன்று பகுதி துலாம் ராசியிலும் நான்காம் பகுதி விருச்சிக ராசியிலும் அமைந்துள்ளது. சுக்கிரனுடைய ராசியையும் செவ்வாயின் ராசியையும் இணைக்கும் நட்சத்திரம் விசாகம் என்பதால் விசாக நட்சத்திரம் நாளில் விரதமிருந்து மாலை நேரத்தில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்படும். கருத்து வேறுபாடு நீங்கும். பெண்கள் செவ்வாய்க்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் விரதமிருந்து முருகன் வழிபாடு செய்தால் தம்பதிகளிடம் ஒற்றுமை கூடும். கருத்து வேறுபாடு நீங்கும். வெள்ளிக்கிழமையும் விசாக நட்சத்திரமும் இணைந்து வரும்நாளில் ஆண்கள் விரதமிருந்து முருகனை வழிபட்டால் திருமணத்தடை அகலும். மனைவி அன்பாக பேசுவாள். இந்த நட்சத்திரம் விவாகம், கர்ப்ப தானம், நிஷேகம் போன்றவற்றிற்கு உகந்த நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரநாளில் திருச்செந்தூர் முருகனை வழிபட, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு திருமணத் தடைகள் அகலும். நினைத்த, விரும்பிய நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திரநாளில் கந்தசஷ்டி கவசம் படிக்கவேண்டும் அல்லது கேட்கவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406