இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் கோட்சாரப்படி அஷ்டமச்சனி, ஏழரைச்சனியை இரண்டு, மூன்று, நான்கு சுற்றுகள் என்று சந்திப்பார்கள். ஒருசிலர் பிறக்கும்பொழுதே அஷ்டமச்சனி, ஏழரைச்சனியில் பிறப்பார்கள். இதேபோல அஷ்டமச்சனி, ஏழரைச்சனி வரும்பொழுது திருமணத்திற்காக பலர் காத்துக்கொண்டிருப்பார்கள்.
அப்பொழுது திருமணம் நடைபெறுமா? செய்யலாமா என்று பலர் சந்தேகத்தில் இருப்பார்கள். ஒருசில ஜோதிடர்கள் ஏழரைச்சனி, அஷ்டமச்சனியில் திருமணம் செய்யக்கூடாது என்றும், சிலர் செய்யலாம் என்றும் கூறுவார்கள். திருமணத்தடைக்குக் காரணம் தசாபுக்தியா? கோட்சாரப்படி வரும் ஏழரைச்சனி, அஷ்டமச்சனியா என்பதை சற்று ஆராய்வோம்.
ஒருவர் ஜாதகத்தில் யோக தசாபுக்தி நடைபெற்றால் கண்டிப்பாக ஏழரைச்சனி, அஷ்டமச்சனிக் காலங்களில் திருமணம் நடைபெறும். செய்யலாம்; தவறில்லை. யோக தசாபுக்தி நடைமுறையில் இருவருக்கும் இருக்கும்பொழுது சனி பகவான் திருமணத்தின்மூலம் கால்கட்டு போட்டுவிடுவார். வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படாது.
ஒருசிலருக்கு தசாபுக்தி சரியில்லாத காலங்களில், கோட்சாரப்படி ஏழரைச்சனி, அஷ்டமச்சனி வரும்பொழுதும், பூர்வபுண்ணியம் சரியில்லாத பொழுதும் திருமணம் நடைபெறுகிறது. அத்தகையவர்களுக்குத் திருமணத்திற்குப்பிறகு பிரச்சினைகள், துன்பங்கள் வரும். ஏழரைச்சனி, அஷ்டமச்சனியில் திருமணம் நடைபெற்ற விளைவு இதுவென்று சிலர் கூறுவார்கள். காரணம் அதுவல்ல. தசாபுக்தி சரியில்லாததே.
ஏழரைச்சனியைக் காரணம் காட்டி திருமணத்தைத் தடை செய்தால், ஒருவர் ஆயுளில் ஏழரை வருடம் போய்விடும். சில நேரங்களில் சனிப்பெயர்ச்சி இரண்டரை வருடத்திற்கு பதில் மூன்று வருடங்கள் வருகின்றன. எட்டு வருடங்களுக்குமேல் காலம் வீணாகும்.
ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடைமுறையில் இல்லாதவர்கள் மற்றும் சனி 3, 6, 11-ல் யோக இடத்தில் இருக்கும்பொழுது எத்தனைப் பேருக்குத் திருமணம் நடைபெறுகிறது என்பதை நாம் யோசிக்கவேண்டும்.
நாம் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுது இறைவன் இன்ன வருடத்தில், இன்ன நாள், நேரத்தில், இன்னார்க்கு இன்னார் என்று எழுதிவிட்டபிறகு, ஏழரைச்சனி, குரு சரியில்லை, ராகு- கேது கோட்சாரத்தில் சரியில்லை என்று சொல்வதில் என்ன பயன்?
அதனால்தான் சிலருக்கு இளமையிலேயே திருமணம் முடிந்துவிடுகிறது. சிலருக்கு நடுவயதில் அமைகிறது. சிலருக்கு அமையாமலே போய்விடுகிறது. இந்த ஜென்மாவில் திருமணப் பிராப்தம் இருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும். இறைவனின் ஆசியும், பூர்வபுண்ணிய விதியும் ஒத்துழைத்தால்தான் திருமணம் நடைபெறும்.
6, 8-க்குடைய தசை நடைமுறையில் இருந்தால், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி இல்லாதபொழுதும் திருமணம் நடைபெறாது.
ஒரு மனிதனின் திருமணத்தை நடத்தி வைப்பது தசாபுக்திதான்.
எனவே யோக தசாபுக்தி இருவருக்கும் நடைமுறையில் இருந்தால் தாராளமாகத் திருமணம் செய்யலாம்.
இதனால் வாழ்க்கையில் பிரச்சினைகள், துன்பங்கள் ஏற்படாது. தசாபுக்தியும், கோட்சாரமும் சேர்ந்து சரியில்லையென்றால் மட்டுமே திருமண வாழ்க்கை பாதிக்கும். பொதுவாக சனி பகவான் யாருக்கும் எதிரியில்லை. நன்மை வழங்குவதில் அவருக்கும் பங்குண்டு. "சனி கொடுத்தால் எவர் தடுப்பார்' என்ற ஜோதிடப் பழமொழிக்கேற்ப, சனி கொடுத்தால் மூன்று தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்குக் கொடுப்பார்.
பொதுவாக மனிதர்கள் எந்த கிரகத்தைக் கண்டும் பயப்படக்கூடாது. நாம் பயந்தால் அது நம்மைத் துரத்தும். துணிச்சலாக எதையும் சந்திப்போம் என்ற மனோநிலையில் நாம் இருக்கவேண்டும்.
செல்: 98403 69513
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-06/guru-t_1.jpg)