ஒரு தனி மனிதனுக்கு என்னதான் பெற்றோரின் அரவணைப்பும், பாசமும், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கப்பெற்றாலும், திருமண உறவு வரும்போதுதான் அவன் முழுமையடைகிறான். அமையும் துணையின் அரவணைப்பு சிறப்பாக இருந்தால் அந்த வாழ்க்கையே இன்பமயமாக மாறிவிடுகிறது. தனக்கென ஒரு குடும்பம், தன் மனைவி, தன் பிள்ளைகள் என ஒரு தனித்துவமே வந்துவிடுகிறது. மற்ற உறவுகள் அனைத்தும் குடும்ப வாழ்க்கைக்கு அடுத்தபடியாகத்தான் இருக்கும். ஆனால் சிலருக்கு இந்த திருமண உறவு எட்டாக்கனியாகவே மாறிவிடுகிறது. சிலருக்குத் திருமணம் நடந்தாலும் மணவாழ்வில் பிரச்சினைகள், இளம்வயதிலேயே வாழ்க்கைத் துணையை இழக்கக்கூடிய சூழ்நிலை, பிரியக்கூடிய வாய்ப்பு என பலவகையில் சங்கடங்கள் உண்டாகின்ன. சிலருக்கு வாழ்க்கைத்துணையாலேயே பாதிப்புகள் உண்டாகின்றன. இதில் ஜோதிடரீதியாக வாழ்க்கைத்துணையே ஏற்படாத நிலை ஏன் என பார்ப்போம்.
ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் வீடு குடும்ப ஸ்தானமாகும். 7-ஆம் வீடானது களத்திர ஸ்தானமாகும். ஆண்களுக்கு களத்திரகாரகன் சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயும் திருமண வாழ்க்கைக்கு முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஒருவரது ஜாதகத்தில் திருமண வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டிலோ, களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டிலோ பாவ கிரகங்களான சனி, ராகு- கேது போன்றவை அமைவதும், ஜென்ம ராசி என வர்ணிக்கப்படும் சந்திரனுக்கு 2, 7-ல் பாவிகள் அமைவதும் நல்லதல்ல. மேற்கூறிய கிரக அமைப்பு கொண்ட ஜாதகருக்கு அக்கிரகத்தின் தசை அல்லது புக்தி திருமண வயதில் நடைபெற்றால் திருமண வாழ்க்கை அமைவதில்லை. அப்படி அமைந்தாலும் பிரிவு, பிரச்சினை, ஒற்றுமையில்லாத நிலை உண்டாகும்.
ஒருவர் ஜாதகத்தில் கிரகங்கள் வக்ரம் பெற்றால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஜென்ம லக்னத்திற்கு 2, 7-ஆம் வீட்டின் அதிபதிகளோ, களத்திரகாரகன் சுக்கிரனோ வக்ரம் பெற்றால் திருமண வாழ்வில் நல்ல பலன் ஏற்படுவதில்லை. 2-ஆம் அதிபதி வக்ரம் பெறுகின்றபோது குடும்ப ஒற்றுமை பாதிக்கப்பட்டு ஜாதகர் ஒரு ஊரிலும் வாழ்க்கைத்துணை ஒரு ஊரிலும் வாழும் இக்கட்டான சூழ்நிலை ஏற்படுகிறது. அதுபோல 7-ஆம் அதிபதி வக்ரம் பெற்றவர்களுக்கு வாழ்க்கைத் துணையால், இல்லற சுகத்தை அடையமுடியாத நிலை, வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கியக்குறைபாடு, இருவருக்கும் புரிதல் இல்லாத நிலை உண்டாகும். ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் பெண்கள் ஜாதகத்தில் செவ்வாயும் வக்ரம் பெற்றால் திருமண வாழ்வில் நிம்மதி குறையும்.
திருமணம் என்ற சடங்கே வாரிசு யோகம் ஏற்படுவதற்குதான். ஒரு ஆணின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 3-ஆம் வீடு வீரிய ஸ்தானமாகும். 5-ஆம் வீடு புத்திர ஸ்தானமாகும். புத்திர காரகன் குரு; சூரியன் ஆண்மை கிரகமாகும்.
ஆணின் ஜாதகத்தில் 3-ஆம் அதிபதி, 5-ஆம் அதிபதி, குரு, சுக்கிரன் ஆகியவை நீசம் அல்லது வக்ரம் பெற்றாலோ, சூரியன் நீசம் அல்லது சனி, ராகு சாரம் பெற்றாலோ ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டு குழந்தை பாக்கியம் உண்டாகத் தடை ஏற்படும்.
பெண்கள் ஜாதகத்தில் 5-ஆம் வீடு புத்திர ஸ்தானமாகும். புத்திர பாக்கியத்திற்கு 5-ஆம் வீடு மட்டுமல்லாமல், 5-க்கு 5-ஆம் வீடான 9-ஆம் வீட்டையும் பார்க்கவேண்டும்.
பெண்கள் ஜாதகத்தில் ரத்த ஓட்டத்திற்குக் காரகனான செவ்வாய் பலமாக இருப்பது நல்லது. செவ்வாய் பெண்களுக்கு களத்திர காரகனாகவும், கருமுட்டை, கருப்பை, மாதவிடாய்க்குக் காரகனாகவும்; குரு புத்திரகாரகனாகவும், கர்ப்பப்பைக்குக் காரகனாகவும் உள்ளனர். பெண்களுக்கு 5, 9-ஆம் வீடுகள் பலவீனமாகவோ வக்ரம் பெற்றோ இருந்தாலும் குரு, செவ்வாய் வக்ரம்பெற்றோ நீசம்பெற்றோ இருந்தாலும் குழந்தை பாக்கியம் உண்டாகத் தடை ஏற்படும். இதனால் திருமண வாழ்வில் பிரச்சினை, சிலருக்கு திருமணமே அமையாத நிலை ஏற்படுகிறது.
சூரிய கிரகணம் ஏற்படும் சமயங்களில் எல்லாம் சூரியன், சந்திரன், ராகு ஆகிய மூன்று கோள்களும் அல்லது சூரியன், சந்திரன், கேது ஆகிய மூன்று கோள்களும் ஒரே ராசியில் இடம் பெற்றிருக்கும். சூரியன் நின்ற ராசிக்கு நேர் எதிர் ராசியில் 7-ஆமிடத்தில் ராகுவோ கேதுவோ இடம்பெற்றிருக்கும்.
சூரியனும் ராகுவும் கூடியிருந்தால் அது ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் என்றும், கேதுவுடன் கூடியிருந்தால் அது கேது கிரகஸ்த சூரிய கிரகணம் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல கேதுவும் சூரியனும் ஒரே ராசியிலிருந்து அதன் நேர் எதிர் ராசியில் ராகுவும் சந்திரனும் இருக்கும் போதும், ராகுவும் சூரியனும் ஒரே ராசியிலிருந்து அதன் நேர் எதிர் ராசியில் கேதுவும் சந்திரனும் இருக்கும் போதும் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கிரகணத்தின்போது சந்திரனுக்கு 1, 7-ஆம் பாவங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் கிரகணங்கள் ஏற்படும்போது பிறப்பவர்களுக்கு கிரகண தோஷம் உண்டாகி, திருமண வாழ்க்கை ரீதியாக நன்மைடைய தடை உண்டாகிறது.
கிரகண தோஷம் உள்ளவர்களுக்குத் திருமண வயதில் சூரியன், சந்திரன், ராகு, கேதுவின் தசை நடைபெற்றால் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடைபெற்றாலும் மணவாழ்வில் நிம்மதி இருக்காது. கிரகண தோஷம் உள்ளவர்களுக்கு ராகு- கேது தோஷம் உள்ளவராகப் பார்த்துத் திருமணம் செய்து வைப்பது நல்லது.
ஒருவரது ஜாதகத்தில் 4-க்கு மேற்பட்ட கிரகங்கள் எந்தவொரு வீட்டில் அமைந்தாலும் அது சந்நியாச வாழ்க்கையை ஏற்படுத்தும்.
அதுபோல செவ்வாய், சூரியன், சனி, ராகு- கேது தேய்பிறைச் சந்திரன், பாவிகள் சேர்க்கைப் பெற்ற புதன் ஆகியவை பாவகிரகங்கள் என்பதால், இவற்றில் நான்கு அல்லது ஐந்து கிரகங்கள் சேர்க்கைப் பெற்று ஒருவரது ஜாதகத்தில் அமைந்திருக்குமேயானால் மணவாழ்க்கையே இல்லாமல் போய்விடும். குறிப்பாக இந்த மாதிரியான கிரகச் சேர்க்கையானது 7-ஆம் வீட்டில் இருந்தாலும், சுக்கிரன் அல்லது 7-ஆம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றிருந்தாலும் சந்நியாச வாழ்க்கை வாழ நேரிடும்.
செல்: 72001 63001