2-சந்திரன்
2, 20, 29, 38, 47, 56, 65, 74, 83, 92, 101 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் சந்திரன் ஆதிக்கம் மிகுந்தவர்கள்.
பகலின் அரசன் சூரியன் என்றால், இரவின் அரசி சந்திரன். சூரியன் தந்தைகாரன்; சந்திரன் தாய்காரகன். எனவே இந்த எண்காரர்களிடம் பெண்மையும், மென்மையும் உண்டு. கற்பனை சக்தி, சாத்வீக குணம், எதிர்காலம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும். வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும். தன்னையும் நம்பமாட்டார்கள்; பிறரையும் நம்பமாட்டார்கள். சந்தேக குணம் மிகுதியாக இருக்கும். எதனையும் மிகைப்படுத்தலாகக் கூறுவார்கள். யாராவது எதிர்த்தால் அமைதி யாவார்கள். கெஞ்சினால் மிஞ்சுவார்கள்; மிஞ்சினால் கெஞ்சுவார்கள். புத்தி ஒரேமாதிரி இருக்காது. இந்த எண் பெண்தன்மை கொண்டது. எனவே, இந்த எண் ஆதிக்கத்தில் பிறப்பவர்களுக்கு மனோபலமும், கற்பனைத் திறனும் இயற்கையிலேயே உண்டு. இவர்களது மனதின் வேகத்திற்கேற்றவாறு செயல்களில் வேகம் இருக்காது. காரணமற்ற கவலைகளால் வாழ்க்கையைத் தொலைப்பவர்கள்.
சந்திரன் வளர்பிறை, தேய்பிறை என வளர்வதும் தேய்வதுமாக இருப்பதால் இவர்களது வாழ்க்கை வளர்வதும் தேய்வதுமாகவே இருக்கும். சந்திரனுடைய குணத்தைப்போல் நிலையில்லாத அலை பாயும் மனதைக் கொண்டிருப்பதால் எதிலும் திடமான முடிவெடுக்க மாட்டார் கள். இல்லாததைக் கற்பனை செய்து கொண்டு தங்களது வாழ்க்கையில் முடிவெடுக்க முடியாமல் திண்டாடுவார்கள். காலையில் சுறுசுறுப்புடன் தொடங்குவார்கள். இவர் களுக்கு எண்ணங்களின் ஓட்டம் மிகுதியாக இருப்பதால் மாலைக்குள் ஊக்கம் குறைந்து, சோர்ந்துவிடும் இயல்பினர்.
2-ஆம் எண் சந்திரனுக்குரியது. சந்திரன் நன்றாகப் பிரகாசிக்க சூரியனின் உதவி தேவை. சூரியன் இல்லையென்றால் சந்திரனுக்குப் பிரகாசமில்லை. மதிப்புமில்லை. அதைப் போன்றே 2-ஆம் எண் ஆதிக்கம் மிகுந்தவர் கள் சரியான ஆலோசகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தபின்பு, அவரின் ஆலோசனைப் படியே தங்கள் காரியங்களைச் செய்துவர வேண்டும். இதனால் மனதில் தன்னம்பிக்கை உருவாகும். திட்டமிட்டபடி செயல்கள் நடக்கும். வெற்றிகள் தொடரும்.
சமூகப் பணிகளில் ஈடுபாடு உடையவர்கள். அனைவரும் விரும்பும்படியான அமைதியான உள்ளம், மனம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள். பொறுமையானவர்களாகவும், இளகிய மனம் உடையவர்களாகவும் இருப்பார் கள். விட்டுக்கொடுக்கும் குணமுள்ளதால், மக்களால் பெரிதும் விரும்பப்படுவார்கள். இனிய சொற்களால் யாரையும் கவர்ந்து விடுவார்கள். நல்ல பேச்சாற்றல் உடையவர்கள்.
கற்பனை கலந்து கவர்ச்சியுடன் பேசுவதால் இவர்களுக்கு பொதுஜனத் தொடர்புண்டு. தர்மம், நியாயங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியுள்ளவர்கள். சுற்றமும் நட்பும் நிரம்பப் பெற்றவர்களாக இருப்பார்கள். எதிரிகளைக்கூட நண்பர் களாகவே கருதுவார்கள். இவர்கள் நடையில் எப்போதும் வேகமுண்டு. செல்வம் சேர்ப்பதில் மிகவும் ஆசையுடையவர்கள். உலக சுகங்களை அனுபவிப்பதிலும் மிகவும் நாட்டமுண்டு. அளவுக்கு அதிகமாக சாப்பிடும் குணமுள்ளவர்கள். மனோவசியம் மற்றும் மந்திர தந்திரங்களில் இவர்களுக்கு ஈடுபாடு உண்டு. தாய்மையின் இயல்பான பாசம், குடும்பப்பற்று ஆகியவை உண்டு.
இறைவன்மீது நம்பிக்கை கொண்டவர்கள். அந்த நம்பிக்கையின் மூலமே எண்ணிய காரியங்களை சாதித்துக்கொள்ளும் திறமைகொண்டவர்கள். சுயநலமின்றி செயல் படக்கூடியவர்கள். தியாகத்தால் புகழடையக் கூடியவர்கள். மற்றவர்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள். ஆன்மிகம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடும், விருப்பமும் கொண்டவர்கள்.
ஏற்றம்- இறக்கம் நிறைந்த வாழ்க்கையைத் தருமென்ற காரணத்தால் இரண்டாம் எண் ஆதிக்கத்தில் பெயர்வைக்க பலரும் முன்வருவதில்லை. ஜாதகரீதியாக தசாபுக்திகள் சாதகமாக இல்லாத காரணத்தால் வாழ்வில் சோதனைகள் நிச்சயம் ஏற்படும். அதற்கு எந்த எண்ணும் விதிவிலக்கல்ல. மற்ற எண்காரர்கள் துவண்டுவிடும்போது, இவர்கள் மட்டும் வாழ்க்கையின் சோதனைகளில் வளைந்துகொடுத்து முன்னேறிவிடுவார்கள். அம்பாளின் அருள்பெற்ற எண் இது. பிறவி எண் அல்லது விதி எண் அல்லது பெயரெண் 2-ஆக இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். திருமணமானவுடன் அம்பாளின் அனுக்கிரகம் உண்டாகி வேலை, தொழில், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும். இவர்கள் பூர்வீகத்தைவிட்டு வெளியூர், வெளிநாடு சென்று தொழில், வியாபாரம், வேலைசெய்து முன்னேறுவார்கள்.
இவர்கள் கலைத் தொழில், திரைப்படம் தயாரிப்பது, பத்திரிகை நடத்துதல், எழுதுதல், பேச்சாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பாடல் எழுதுபவர்கள் போன்றவர்களாகவும் இருப்பார்கள். விவசாயம், ஜவுளி வியாபாரம், நகை, வெள்ளி ஆபரணங்கள் விற்பனை, புகைப்படத் தொழில் ஆகிய தொழில்களும் நன்கு அமையும்.
துணி தைத்தல், துணி வெளுத்தல், மர வியாபாரம், வாசனைத் திரவியங்கள், காய்கறிகள் விற்பனையும் இவர்களுக்கான தொழில்கள். கற்பனைசக்தி அதிகம் உள்ளதால், மனோவேகம் அதிகமாக இருக்கும்.
இவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதால் வக்கீல் தொழில், வாக்கு வாதம், விவாதம் செய்தல் போன்றவையும் ஏற்புடையவை. சிலர் ஜோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு சொந்தத் தொழில் கைகொடுக்கும்.
இவர்களுக்கு மிக இளம்வயதிலேயே திருமணம் நடக்கலாம். பெரும்பாலும் பெண்களால் உதவிகள் கிடைக்கும். சில பெண்களால் இவர்கள் வாழ்க்கையில் பாதிப்புமுண்டு. காதல் செய்வதில் மிகவும் விருப்பமுண்டு. ஆனால் சிலரின் சந்தேக குணத்தால் திருமண வாழ்வு பாதிக்கப்படும்.
இவர்கள் 1, 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை வாழ்க்கைத் துணையாகத் தேர்வுசெய்யலாம். 4, 7, 8 ஆகிய எண்களில் பிறந்த வர்களை மணந்தால் வாழ்க்கை நரகமாகும். 1-ஆம் எண்ணில் பிறந்தவர்களை மணந்தால் நல்ல வழித்துணையாக, வாழ்க்கைத் துணையாக வழிநடத்துவார்கள்.
இவர்கள் தங்களது திருமணத்தை 1, 10, 19, 28; 6, 15, 24 ஆகிய தேதி அல்லது கூட்டு எண்களாக வரும் தினங்களில் செய்துகொள்ளவது நலம்.
1, 2 ஆகிய எண்களில் பிறந்தவர்களை தொழிலில் கூட்டாளியாக, நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாம். 5, 6-ஆம் எண்ணிற்கு நடுத்தரமான பலன் உண்டு. 8, 9-ஆம் எண்காரர்களை கூட்டாளிகளாகச் சேர்க்கக்கூடாது.
ஜனனகால ஜாதகத்தில் சந்திரனின் வலிமை குறைந்தால் சிறுநீரகக் கோளாறுகள், சளித்தொல்லை, மனச்சோர்வு, மூலவியாதிகள் தோன்றும். திரவ உணவுகள், குளிர்பானங் கள் ஆகியவற்றை மிகவும் விரும்புவார்கள். உணவுப்பிரியர்கள் என்பதால் அஜீரணம் தொடர்பான உடல் உபாதைகள் எப்பொழுதும் உண்டு. சிலர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள்.
பெயரெண்- 2: முழுமையாக சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால், தெய்வ நம்பிக்கையால் இவர்கள் வாழ்க்கையில் சீரான- படிப்படியான முன்னேற்றம் உண்டு.
பெயரெண்- 20: சந்திரனின் ஆதிக்கத்தைத் தன்னகத்தே கொண்ட எண் என்பதால் அனைவரையும் வசீகரிக்கப்பார்கள். மனோ வலிமையும் செயல்திறனும் கொண்ட உழைப்பாளிகள். தாமும் உயர்ந்து தேசத்திற்கும் மக்களுக்கும் சேவை செய்வார்கள்.
பெயரெண்- 29: சந்திரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் ஒருங்கே இணைந்த எண். ஒரே இடத்தில் நிலையாக இருப்பது அரிது. உலகமே இவர்களுக்கு வசப்பட வேண்டுமென்ற உணர்வு மிகையாக இருக்கும். அதிகார, ஆணவ குணத்தால் குடும்ப வாழ்க்கையில் கலகம் நிறைந்திருக்கும்.
பெயரெண்- 38: குரு, சனி ஆதிக்கம் நிறைந்த எண். தர்மகர்மாதிபதி யோகமுண்டு. உழைப்பால் உயர்ந்து அந்தஸ்தும் செல்வாக்கும் பெறுவார்கள். எதிர்பாராத ஆதாயம் தேடிவரும். சாந்தமான குணம் நிரம்பியவர்கள். நேர்மையாக நடப்பவர்கள்.
பெயரெண்- 47: ராகு மற்றும் கேதுவின் ஆதிக்கம் இணைந்த எண். மிக வேகமான முன்னேற்றமும் எதிர்பாராத இறக்கமும் தரக்கூடிய எண். சமநிலையற்ற வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எண்.
பெயரெண்- 56: புதன் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் இணைந்து சந்திரனின் குணத்தைப் பிரதிபலிப்பதால் எல்லாவிதமான உறவுகள் இருந்தும் உறவுகளால் பயனற்ற நிலை, விரக்தி, உறவுகளைப் பிரிந்துவாழும் சூழல் உண்டாகும். எவ்வளவு மன சஞ்சலம் இருந்தாலும் சுறுசுறுப்பாக இயங்கி, உணர்வுகளை வெளியில் காட்டாமல் வாழ்வார்கள்.
பெயரெண்- 65: சுக்கிரன் மற்றும் புதனின் குணநலன்களை வெளிப்படுத்தும் எண் என்பதால் சொல்வாக்கும், செல்வாக்கும் உள்ளவர்கள். மத்திம வயதிற்குப்பிறகு பெரும் செல்வம் உண்டாகும். தெய்வபக்தி நிறைந்தவர்கள். பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள்.
பெயரெண்- 74: கேது மற்றும் ராகுவின் ஆதிக்கம் அடங்கிய எண். தீராத மதப்பற்றும் சீர்திருத்த நோக்கமும் உண்டு. பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்க்கையிலும் மனநிறைவு, தன்னிறைவு ஏற்படாது. அரசியல் ஈடுபாடு இருக்கும்.
ஆனால் ஆதாயம் இருக்காது.
பெயரெண்- 83: சனி மற்றும் குருவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண். மேன்மையான பதவி, அனைவரும் வணங்கும்படியான அந்தஸ்து, ராஜயோக வாழ்க்கை, உயர்பதவிகள் வாழ்நாள் முழுவதும் உண்டு. திருமணத்திற்குப்பிறகு வளர்ச்சி இரட்டிப்பாகும். அரசருக்குரிய உயர்ந்த அந்தஸ் துடன் வாழ்வார்கள்.
பெயரெண்- 92: செவ்வாய் மற்றும் சந்திரன் ஆதிக்கம் பெற்ற எண்கள் இணைந்து 2-ஆம் எண்ணின் பலனை வெளிப்படுத்துவதால் பொன், பொருள், பூமி லாபங்கள் ஏற்படும். ஆன்மிக சிந்தனையுண்டு. திரண்ட சொத்துகள் உருவாகும். பரம்பரை சொத்துகளைப் பராமரிப்பார்கள். பெரிய மாளிகை, வேலையாட்கள், வாகன வசதிகள், சுகபோக யோகம் இந்த எண்ணுக்குரிய அம்சமாகும்.
பெயரெண்- 101: சூரியனின் குணநலன்களை வெளிப்படுத்தும் ஒன்றாம் எண் பூஜ்ஜியத்துடன் சம்பந்தம்பெற்று சந்திரனின் ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதால் தொழில் மந்தம், பொருளாதாரப் பிரச்சினை, மனக் கஷ்டம் ஏற்படும். இவர்கள் சுறுசுறுப் பாக செயல்பட்டாலும் அலைச்சல்தான் மிகுதியாக இருக்கும். இவர்களுக்கு சொந்த வாழ்க்கையைவிட பொதுவாழ்க்கையில்தான் அதிகப்படியான அக்கறை இருக்கும்.
பொதுவாக பெயரெண் இரண்டு வரும்படி வைக்கும்போது 29, 56, 59, 74, 101 ஆகிய எண்களில் பெயர் வைப்பதைத் தவிர்த்தல் நலம்.
சந்திரனால் சுபப்பலனை அதிகரிக்க வெள்ளியால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணியலாம். முத்து, சந்திரகாந்தக்கல் ஆகியவற்றை அணிந்தால் அதிர்ஷ்டப் பலன்கள் தேடிவரும். மஞ்சள், வெள்ளை நிறங் கள் அதிர்ஷ்டகரமானவை. கருப்பு, சிவப்பு, அடர் நீலம் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.
வளர்பிறைக் காலங்களில் தினமும் சந்திர தரிசனம் செய்துவர வேண்டும். திங்கட்கிழமைகளில் சிவன் கோவில் அம்பிகையை வெண்மையான வாசனை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
அன்னபூரணியை வழிபடலாம். குழந்தைகளுக்குப் பசும்பால் தந்து உதவலாம். அன்று பச்சரியால் செய்த உணவை தானம் செய்து உண்ணவேண்டும். இரண்டு முக ருத்ராட்சம் அணியலாம்.
அதிர்ஷ்ட தேதிகள்: 2, 11, 29; 1, 10, 19.
அதிர்ஷ்டக் கிழமை: ஞாயிறு, திங்கள், வியாழன்.
அதிர்ஷ்ட ரத்தினங்கள்: முத்து, சந்திரகாந்தக்கல், புஷ்பராகம்.
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்.
அதிர்ஷ்ட தெய்வம்: எளிமையான அம்மன்.
அதிர்ஷ்ட மலர்கள்: மல்லிகை, முல்லை.
அதிர்ஷ்ட சின்னம்: வளர்பிறைச் சந்திரன், பசுமாடு, அன்னம், ராணி.
அதிர்ஷ்ட மூலிகை: மழைநீர்,
அருவிகளில் விழும் மூலிகை நீர்.
அதிர்ஷ்ட உலோகம்: வெள்ளி.
(தொடரும்)
செல்: 98652 20406