9-செவ்வாய்
9 என்ற எண் செவ்வாயின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது. 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள்.
இயற்கையிலேயே துடிப்பும், வேகமும், கட்டுப்பாடும், திறமையும், சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் இவர்களுக்குண்டு. அறிவு மிகுதி. போராடவே பிறந்தவர்கள்.
சாகசம், வீரச் செயல்கள், சூழ்ச்சி செய்வதில் ஆர்வம் உண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவர். தன் விருப்பப்படி நடப்பவர். அறிவுடையவர். எதிரிகளை அதிகம் கொண்டவர். ராஜதந்திரி. அதீத கோப உணர்வு, முரட்டுத்தனம், அடக்கியாளுதல், வளைந்துகொடுக்காத தன்மையுள்ளவர்.
மனோதைரியம் மிக்க வர். பிறரை இம்சிப்பதில் ஆனந்தமடைபவர்.
சிலர் தீராத பெண் பித்தர்கள். மிருக குணம் நிரம்பியவர்கள். சிறிய காரியங்களுக்குக்கூட உயிரைப் பணயம் வைப்பவர். ரத்தத்தைப் பார்த்தால்கூட பயப்பட மாட்டார்கள். தெருச் சண்டை, யுத்தகளம் போன்ற இடங்களில் இவர்களைப் பார்க்க லாம். மற்றவர்கள் செய்ய பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக்கொள் வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள். இவர்களுக்கு முன் கோபமும் படபடப்பும் உண்டு. உடலும் சற்று முறுக்கேறி நிற்கும். நான்காம் எண் காரர்களைப்போல் இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங் களும் நிறைந்திருக்கும். எனவே இவர் களுக்கு எதிர்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.
9-ஆம் எண்ணில் பிறந்தவர்களின் பெயர்கள் 8-ஆம் எண்ணில் மட்டும் இருந்து விட்டால் தற்கொலை முயற்சிகளும், வாகனங்களால் விபத்தும் உண்டு.
ஆண்களில் பெரும்பாலோர் மீசை வளர்ப்பதில் விருப்பம் உடையவர்கள். இந்த எண்காரர்களுக்கு உடலில் அடிக்கடி காயங்கள், விபத்துகள் போன்றவை ஏற்படும். ஆயினும் அதைக்கண்டு பயப்படமாட்டார்கள். இவர்கள் எதற்கும் எப்போதும் பயப்பட மாட்டார்கள். மேலும் தங்களது நோக்கத்திற் காகக் கடுமையாக உழைக்கவும் தயங்க மாட்டார்கள். எப்போ தும் அலைபாயும் மனதை உடையவர் களாக இருப்பார்கள்.
சோம்பலை வெறுப் பவர்கள். ஊர்சுற்று வதில் அலாதிப் பிரிய முண்டு. இந்த செவ்வாய் கிரக ஆதிக்கர்கள் வீர விளையாட்டு, குஸ்தி, உடற்பயிற்சிகள், சர்க்கஸ், நீச்சல்போட்டிகள், மிருகவேட்டை, விளையாட்டுகளில் விருப்பமுடன் ஈடுபடுபவர்கள். கார், சைக்கிள், லாரி, பஸ் ஆகியவற்றை மிகவும் வேகமாக ஓட்டுபவர்கள். தேசப்பற்று மிகுந்தவர்கள்.
சமூகக் கட்டுப்பாடுகளுக்கு மிகவும் மதிப்புக் கொடுப்பார்கள். வாழ்க்கைத் துணையின்மூலம் சொத்துகள் கிடைக்கும் யோகமும் உண்டு. எவ்வளவு துன்பம் வந்தாலும் தாங்கிக்கொள்ளும் மனோ தைரியமும் உண்டு. கூர்மையான அறிவுடையவர்கள். எதிரிகளை சமயமறிந்து அழித்துவிடும் இயல்பினர். தீவிரமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள். தெய்வம் உண்டு என்பதை முழுமையாக நம்புவார்கள். சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும், தங்ளது மனவுறுதியினாலும், விடா முயற்சியினாலும், இவர்கள் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறிவிடுவார்கள்.
எண்களில் முடிவானது இந்த எண்தான். எந்த எண்ணுடன் சேர்ந்தாலும், தன் இயல்பு குணத்தை இழக்காதது இந்த எண்தான். 2-ஆம் எண்ணுடன் 9-ஆம் எண் சேர்ந்தால் 11 கிடைக்கும். மீண்டும் கூட்டினால் (1+1) 2 என்ற எண்ணே மீண்டும் கிடைக்கும். எனவே 9-ஆம் எண்காரர்கள் மற்ற எண்காரர்களுடன் சேர்ந்து செயல் பட்டுத் தங்களின் இயல்பிற்கேற்றவாறு அவர்களை மாற்றிவிடும் திறமை படைத்தவர்கள். இவர்கள் தீவிரமான மனப் போக்கும், தைரியமான செயல்பாடும் கொண்டவர்கள். எத்தொழிலிலும், பதவியிலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள்.
தங்களது தொழிலில் மிகவும் உற்சாகம் உள்ளவர்கள். தொழிலைப் பெருகச்செய்வது எப்படி என்பதைப் பற்றிய எண்ணத்திலேயே இருப்பார்கள். பலர் அரசாங்கப் பணியிலும், காவல் துறையிலும், துப்பறியும் தொழிலிலும், இராணுவத்திலும், பாதுகாப்புத் துறையிலும் இருப்பார்கள். மேலாளர், விளையாட்டு வீரர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், சீருடை யணிந்த பணியாளர்களின் அனைத்து வேலைகள், தற்காப்புக் கலைகள் கற்றுத் தருதல், உடற்பயிற்சி ஆசிரியர், மருந்து, கெமிக்கல், உர வியாபாரம், பல் மருத்துவம், இரும்பு, நெருப்பு, கூரான ஆயுதம் உப யோகித்து செய்யப்படும் தொழில்கள், இன்ஜினியர், எந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், பூமி சம்பந்தப்பட்ட தொழில், விவசாயம், மேஸ்திரி, கசாப்புக்கடை, தோல் பதனிடுதல், வீரசாகசங்கள், மின் துறை, உலைக்கூடத்தில் பணி செய்தல், தீயணைப்புத் துறை, செங்கல் சூளை, பானை செய்தல், கட்டடம் கட்டுதல், இயந்திரங்கள், இரும்புப் பொருட்கள் உற்பத்தி- வியாபாரம் ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும்.
சிறந்த அமைச்சர்களாகவும், ராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வானியல் துறையிலும், அரசியலிலும், கலைத் தொண்டிலும், உணர்ச்சியைத் தூண்டும் எழுத்திலும் பிரகாசிப்பார்கள். வேட்டை யாடுதல், விலங்குகளைப் பராமரித்தல், விளையாட்டு வீரர், ஒட்டுநர்கள் தொழிலும் அமையும்.
வாழை, மொச்சை, சிவப்பு தானியம் போன்றவை உற்பத்தி, தச்சு வேலை சம்பந்தப்பட்ட தொழில்கள், மலையேறும் வல்லுநர்கள் போன்ற தொழில்கள் அனைத் தும் வெற்றி தரும். ஆன்மிகத்திலும் சிலர் தீவிரமாக, முழுமையான மனதுடன் ஈடுபடு வார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களை யும் தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.
இவர்கள் இல்வாழ்க்கையில் மிகுந்த விருப்பம் உடையவர்கள். தங்களது நட்பு எண்களான 3, 5, 6, 9 ஆகிய எண்களில் பிறந்தவர்களை மணந்துகொண்டால் மகிழ்சியான மணவாழ்க்கை அமையும். 2, 11, 20, 29, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் களையும், கூட்டு எண் 2, 8 வருபவர்களையும் திருமணம் செய்யக் கூடாது. 3, 6, 9 ஆகிய எண்களை உடையவர் கள் இவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் அமைவார்கள்.
ஜனனகால ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைந்தவர்களுக்கு ஏதாவதொரு நீண்டகாலப் பிணி இருக்கும். ரத்த சோகை, அடிக்கடி வாய்வுத் தொந்தரவுகள், வயிற்றுவலி போன்றவை ஏற்படும். பல் வலி, பற்களில் பூச்சி விழுதல் போன்றவை ஏற்படும். கால் ஆணித் தொந்தரவுகள், பாதங்களில் வலி, வெடிப்பு, உஷ்ண நோய், மலச்சிக்கல், மூலம், கண் எரிச்சல், தூக்கமின்மை, குடற்புண்கள், ரத்தக் கட்டிகள், ரத்தம் கெடுதல் ஆகியவற்றால் பாதிப்பும் உண்டு. மேலும் நெருப்புக் காயங்கள், விபத்துகள் ஆகியவற்றால் உடலில் பாதிப்பும் உண்டு.
பெயரெண்- 9: தனித்த செவ்வாயின் ஆதிக்க எண். நானே ராஜா நானே மந்திரி என சுதந்திரப் போக்கு டையவர்கள். அவசரக் காரர்கள். உணர்ச்சி மய மானவர்கள். பிடிவாத குணம் இயற்கை யிலேயே உண்டு. வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுபவர்கள். புதிய காரியங்களைச் செய்யவேண்டும் என்ற ஆதங்கம் உடையவர்கள். ஆபத்து மிகுந்த தொழிலில் இறங்கிவிடுவார்கள். அதில் வெற்றியும் பெறுவார்கள். இவர்களின் சண்டை குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சினைகள் ஏற்படும். தங்களை எல்லாரும் மதிக்கவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் சமாளித்து வாழ்வில் முன்னேற்றமடைவார்கள். காதல் தோல்வியுண்டு. ஈடு இணையற்ற ஆற்றலைக்கொண்டு உயர்பதவி வகிப்பார்கள்.
பெயரெண்- 18: சூரியன் மற்றும் சனியின் ஆதிக்கம் கலந்த எண். குடும்ப, குல கௌரவத்தை மதிப்பவர்கள். தந்தையின்மேல் மதிப்பு, மரியாதை உண்டு. ஆனால் விலகி யிருப்பவர்கள். மிகுதியான கோபம், பிடிவாதம் உண்டு. தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற நினைப்பு எப்போதுமுண்டு. கஷ்டங்களையும், தாமதத்தையும், குழ்ச்சியையும், ஆபத்தான எதிரிகளையும் உண்டுபண்ணும். சமூக விரோதமான காரியங்களில் ஈடுபடுபவர். சுயநலம், பொறாமை, வஞ்சகம் உண்டு. விவேகமற்ற வேகம். எதையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் சிந்திக்க மாட்டார்கள்.
பெயரெண்- 27: சந்திரன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் கலந்த எண். நற்காரியங் களில் ஈடுபட்டுப் புகழ்பெறுவர். திட்டங்கள் எல்லாம் வெற்றி தரும். சாந்தமானவர்கள். ஆழ்ந்த யோசனையும் தளராத உழைப்புமுண்டு. எந்த முயற்சியையும் திட்டமிட்டு, அதன் படியே செயல்படு வார்கள். எத்துணை சோதனைகள் வந்தா லும், அவற்றைத் துணி வுடன் சந்தித்து வெற்றி பெறுவார்கள். மற்றவர்கள் இவர்களை அலட்சியம் செய்தால் உடனே தட்டிக்கேட் பார்கள். எந்த விஷயத் தையும் தெளிவாக ஆராய்வார்கள். ஆனால் இவர்கள் எதையும் போராடித்தான் பெறவேண்டும்.
பெயரெண்- 36: குரு மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் சேர்ந்த எண். சாமானியரையும் வெளியுலகத்திற்கு அடையாளம் காட்டும் எண். வெளிநாட்டு யோகம் மிகையாக உண்டு. பொருளாதார மேம்பாடு உண்டு. விசுவாசமில்லாதவர்கள் சூழ்ந்திருப்பர். குடும்ப வாழ்க்கை சிக்கலை ஏற்படுத்தும். மனதில் எப்போதும் தைரியம், தன்னம்பிக்கை உண்டு. எதையும் திட்டமிட்டு, நேரம், காலம் பார்த்துத் தங்களது காரியங்களை நடத்திக் கொள்வார்கள். எதிர்பாரத முன்னேற்றம் வாழ்வில் உண்டு.
பெயரெண்- 45: ராகு மற்றும் புதனின் ஆதிக்கம் இணைந்த எண். நம்பிக்கை துரோகிகள் அதிகமுண்டு. பெரிய பதவி கிடைக்கும். வாக்கு சாதுரியம் உண்டு. எல்லாரையும் மகிழ்விக்கக்கூடிய காரியம் செய்பவர். தொழிலில் நிகரில்லா ஸ்தானத்தை அடைபவர். அடிக்கடி நோய் வரும். மிகுந்த சகிப்புத்தன்மையுடன் சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றமடைவர். விரைவிலேயே ஒரு முடிவெடுத்து அதை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவார்கள். தாங்கள் செய்யும் தவறுக்கான ஆதாரங்களைப் பாதுகாத்து தாங்களே வலிய வம்பில் மாட்டுவார்கள். மற்றவர்களை ஈர்க்கும் தன்மையுடையவர்கள். எதையும் பிரம்மாண்டமாக செய்யவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.
பெயரெண்- 54: புதன் மற்றும் ராகுவின் ஆதிக்கம் கலந்த எண். படிப்படியான வெற்றியும், முன்னேற்றமும் தரும். வெற்றியும் தோல்வியும் கலந்த வாழ்க்கையே அமையும். சுதந்திரமாக வாழமுடியாது. பேராசை உண்டு. எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். வாழ்க்கையின் முற்பாதியில் மிகுதியான புகழும், செல்வமும் உண்டு. பிற்பகுதி கடினமான வாழ்க்கை உண்டு. பலரிடமும் பலவிதமான யோசனைகளைக் கேட்பார்கள். ஆனாலும் தான் நினைப்பதே சரி என்னும் மனப்போக்கு கொண்டவர்கள். மற்றவர்களை அடக்கியாளவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதனாலேயே பலருக்கும் இவர்களைப் பிடிக்காது.
பெயரெண்- 63: சுக்கிரன் மற்றும் புதனின் ஆதிக்க எண். எந்த நிர்வாகத்திலும் தலைமைப் பதவி அல்லது பொறுப்புகள் தனக்கே கிடைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் உண்டு. அதில் தீவிரமாகவும், சிறப்பாக வும் ஈடுபட்டு, அந்தக் காரியங்களைச் செய்துமுடிப்பார்கள். இல்லையென்றால் அவற்றை அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கி விடுவார்கள். பின்பு அந்தக் காரியங்கள் கெட்டழிந்தாலும்கூட அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டார்கள். புத்தியை நல்ல விஷயத்திற்குப் பயன்படுத்தமாட்டார்கள். இது அதிர்ஷ்டமான எண்ணல்ல.
பெயரெண்- 72: கேது மற்றும் சந்திரனின் ஆதிக்கம்பெற்ற எண். சிறப்பான எண். சிரமப் பட்டு பெரிய பதவியை அடைவர். புகழ், நிலையான ஐஸ்வர்யத்தை சிரமப்பட்டு அடையநேரும். ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டே இருக்கவேண்டும். தவறுகளைக் கண்டால் உடனே தட்டிக்கேட்கவும் தயங்கமாட்டார்கள். இவர்கள் பல ஊர்களைச் சுற்றிப்பார்க்க விரும்புவார்கள். பலர் வெளிநாடுகளுக்கும் சென்று வருவார்கள். ஆன்மிகத் தலைவர்களைக் கண்டவுடன் பணிந்து மிகவும் மதிப்புகொடுப்பார்கள். பலருக்கு முன்னோர்கள் தேடிவைத்த செல்வங்கள் இருக்கும்.
பெயரெண்- 81: சனி மற்றும் சூரியனின் ஆதிக்கம் கலந்த எண். இவர்களது பேச்சில் எப்போதும் வேகமும், அதிகாரமும் உண்டு. பயமென்பது இருக்காது. இவர்களுக்கு சண்டையிடும் மனோபாவம் இயற்கையிலேயே அமைந்துவிடும். எதிர்ப்புகள், எதிரிகள் அதிகம் உண்டு. உள்மனப் போராட்டங்களும், குடும்பத்தில் அமைதியின்மையும் உடைய எண். எதிரிகளாலும், வழக்குகளாலும் பலவித கஷ்டங்கள், சிரமங்கள் நிறைந்திருக்கும். குல கௌரவம் காற்றில் பறக்கும். பலருக்கு உடலில் காயங்களும், சிறு விபத்துகளும் ஏற்படும்.
பெயரெண்- 90: தனித்த செவ்வாயின் ஆதிக்க எண். புகழ் உண்டு. வீர தீரமான செயல்களைச் செய்யக்கூடியவர்கள். வித்தியாசமான லட்சியங்களை உடையவர்கள். சாதுர்யமான செயல்பாடுகளால் எதிர்ப்புகளை வெற்றி கொள்ளக்கூடியவர்கள். புதிய சிந்தனைகள், தொலைநோக்குப் பார்வைகொண்டு செயல்படக்கூடியவர்கள். நினைத்ததை சாதிக்க கடைசிவரை போராடுவார்கள். இவர்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். ரத்தம், விபத்து, கொலை போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வார்கள். இது வேகம்,
சக்தி, அழிவு, போர் என்பவற்றின் எண்.
பெயரெண்- 99: தனித்த செவ்வாயின் ஆதிக்க எண். போராட்டமே இவர்களது வாழ்க்கையாக இருக்கும். எதையும் தங்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரவே முற்படுவார்கள். பேச்சுத்திறமை அதிகமுண்டு. கட்டைப் பஞ்சாய்த்து செய்துவைக்கும் குணத்தவர்கள்.
அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றால் பிரச்சினைகள் உண்டு. நிதானம் குறைந்த வர்கள். புத்தி தவறான வழியில் செல்லும்.
எதிரிகளால் தாக்கப்படுவர். உணர்ச்சி வசப்பட்டவர்கள். பிறருக்கு அடங்கி நடக்க முடியாதவர்கள். பகைவர்களை இவர்களே உருவாக்கிக்கொள்வார்கள். பல சமயங்களில் இவர்களது பேச்சே பல சண்டைகளைக் கொண்டுவந்துவிடும். பங்காளிச்சண்டை, குடும்பத்தாருடன் சண்டை என்று அடிக்கடி பிரச்சினைக்குள்ளாவார்கள். பிறர் தங்களைக் குறைகூறவதை மட்டும் இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. நிலையான வாழ்க்கை அமையாது. கஷ்டங்களை மாறிமாறி அனுபவிக்கவேண்டி இருக்கும்.
பெயரெண்- 108: சூரியன் மற்றும் சனியின் ஆதிக்கம் கலந்த எண். பெரிய பதவியும் காரியசித்தியும் உண்டு. மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த எண். மந்திரி பதவி போன்ற அரசு தொடர்புடைய மகிமைமிக்க பதவிகளில் அமரக்கூடிய அம்சம் உண்டு. சந்தர்ப்பங்களை சமாளிக்கும் திறமையும்,
சிறந்த நிர்வாக ஆற்றலுமுண்டு. அதிகாரத் துடன் மற்ற அனைவரையும் வேலைவாங்கு வார்கள். நல்லவர்களுக்கு நல்லவராகவும், கெட்டவர்களுக்குக் கெட்டவராகவும் திகழ்வார்கள். நியாயம் மற்றும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். குடும்பத்தின்மீது அதீத அன்புகொண்டவர்கள். அறிவும், ஆற்றலும் ராஜதந்திரமும் நிறைந்தவர்கள். பலர் ராஜதந்திரிகளாகவும் விளங்குவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல செல்வாக்குண்டு. இவர்களது திட்டங்கள் எல்லாம் நிச்சயம் வெற்றியடையும். மனம்தளராமல் உழைப்பவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும். நல்ல செயல்களின்மூலம் பேரும் புகழும் அடைவார்கள். சுதந்திர மனப்பான்மை உண்டு. நிதானமாக, அவசரப்படாமல் சீரான திட்டத்துடன் செயல்பட்டு வெற்றியை சீக்கிரம் அடைவார்கள். ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்தே காரியங்களில் ஈடுபடுவார்கள்.
எண் 9 வரும்படி பெயர் வைக்கும்போது 18, 54, 63, 81,99 ஆகிய எண்களைத் தவிர்ப்பது நலம். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க செவ்வாயின் கடவுளான முருகன் மற்றும் சிவனை தினமும் வழிபடவேண்டும். கந்தசஷ்டி கவசம் தினமும் படிக்கவேண்டும். தினமும் 108 முறை 'ஓம் நமசிவாய' சொல்ல வேண்டும். செவ்வாய்க்கிழமை துவரம் பருப்பு, சிவப்புப் பயறு தானம் கொடுக்க வேண்டும்.
பவள மோதிரம் அணியலாம். கருஞ் சிவப்பு, சிவப்புநிற ஆடைகள் அணியலாம். கரும்பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை நிறங் களைத் தவிர்க்கவும்.செவ்வாய் கடன்களைத் தீர்ப்பவர் மற்றும் செல்வம் கொடுப்பவர். கடன் மிகுதியாக இருப்பவர்கள் வால்மீகி இராமாயணத்தில் பாலகாண்டத்தின் 36 மற்றும் 37-ஆவது அத்தியாயம் தினமும் படிக்க கடன்தீரும். செல்வம் பெருகும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் விரதமிருந்து விநாயகப் பெருமானை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கி திருமணம் இனிதே நிறைவேறிடும்.
அதிர்ஷ்ட தேதிகள்: 9, 18, 27; 6, 15, 24.
அதிர்ஷ்டக் கிழமை: செவ்வாய், வியாழன், வெள்ளி.
அதிர்ஷ்ட ரத்தினம் : பவளம்.
அதிர்ஷ்ட திசை: தெற்கு
அதிர்ஷ்ட தெய்வம்: முருகன்.
அதிர்ஷ்ட மலர்கள்: செண்பகம், செவ்வரளி.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
அதிர்ஷ்ட உலோகம்: செம்பு.
அதிர்ஷ்ட தூப, தீபம்: குங்குலியம், சாம்பிராணி, கருங்காலி.
அதிர்ஷ்ட சின்னங்கள்: அன்னப்பட்சி, மயில், வேல், பழங்கள்.
கடந்த பத்து வாரங்களாக எண்கணிதம் பற்றிய பலன்களை அறிந்துகொண்டோம்.
ஒருவருக்கு ஐந்து வழிமுறைகளைப் பின்பற்றி பெயர் வைக்கலாம். எண் கணிதத்தில் எந்த முறையில் அதிர்ஷ்டப் பெயர் வைக்கலாமென்று அடுத்த வாரம் பார்க்கலாம்...
(தொடரும்)
செல்: 98652 20406