"என்றைக்கும் சிரஞ்சீவி' என்ற பட்டத்தை சீதாதேவியிடமிருந்து வரமாகப் பெற்றவர் மாருதி என்று அழைக்கப்படும் ஆஞ்சனேய சுவாமி ஆவார். நினைத்தபொழுதே விஸ்வரூபம் எடுக்கும் மகாசக்தியைப் பெற்ற அவர் எப்போதும் ஸ்ரீராம நாமத்தையே உச்சரித்துக்கொண்டிருப்பவர். இன்றைக்கும் இராமாயண உபன்யாசம் செய்யும் இடங்களில் நேரில்வந்து ஸ்ரீராம கதையினை பக்தியுடன் கேட்டுவருபவர் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

இப்படி அருமை, பெருமைகள் வாய்ந்த ஆஞ்சனேய சுவாமியை பக்தி சிரத்தையுடன் வழிபட்டுவந்தால் எட்டுவித மகாசக்திகளை அள்ளிக் கொடுப்பார் என்று நிச்சயம் நம்பலாம். அதற்கான ஸ்லோகம் இதோ...

"புத்திர் பலம் யஸோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா

அஜாட்யம் வாக்படுத்வம் சஹனுமத் ஸ்மரணாத் பவேத்!'

முதன்முதலில் கிடைக்கப்பெறுவது "புத்தி.' எல்லாவற்றுக்கும் அடிப்படை, ஆதாரமாக விளக்குவது அறிவுதான். அந்த அறிவைத் தந்துவிடுகிறார். பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் போட்டித் தேர்வு எழுதுபவர்களும் இதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

அடுத்ததாக "பலம்' என்னும் உடல்வலிமையைக் கொடுத்துவிடுகிறார். கடினப்பயிற்சி மற்றும் விளையாட்டு வீரர்களும் பயன்பெறலாம் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

Advertisment

anjenar

அடுத்தபடியாக "யசஸ்' என்னும் புகழ், கீர்த்திபெறும் நிலையைத் தருகிறார். புத்தியும் பலமும் பலரிடம் இருக்கத்தான் செய்கிறது.

ஆனாலும் அனைவரும் புகழ்பெற்று பாராட்டப்படுவதில்லை. ஆஞ்சனேய சுவாமியைப் போல அடுத்தவர் நலனுக்காக செயல்படுபவர்கள் நீடித்த, நிலைத்த புகழைப் பெற்றுவிடுகிறார்கள் என்பதே உண்மை. வாழ்க்கையில் பெயரும் புகழும் பெற விரும்புபவர்கள் கவனத்தில் கொள்வார்களாக.

அடுத்து கிடைக்கப்பெறுவது "தைரியம்.' தைரியம் என்றாலே எதற்கும் அஞ்சாத நிலை என்பதே பொருள். எந்தவித காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கும் தைரியத்தை- தன்னம்பிக்கையை அள்ளிக்கொடுத்துவிடுகிறார்.

பின்னர் கிடைக்கப்பெறுவது "நிர்பயத்வம்.' தைரியம் என்றாலே எதற்கும் அஞ்சாத நிலைதான். நிர்பயத்வம் என்றாலும் எதற்கும் பயப்படாமல் இருப்பது என்று பொருள் கொள்ளலாம். இந்த நிர்பயத்வம் என்ற அஞ்சாமைக்கு, தைரியத்திலிருந்து வேறு பொருள் கொள்ளலாம். அதாவது இவரைக் கண்டு மற்ற எவரும் அஞ்சாத- பயப்படாத நிலை என்று எடுத்துக்கொள்ளலாம். பிராணிகள்கூட பயப்படாத நிலை வேண்டும். அப்படிப்பட்ட நிர்பயத்வம் என்னும் பிறரும் தன்னைக்கண்டு பயப்படாத நிலைமையைத் தந்துவிடுவார்.

தொடர்ந்து கிடைக்கப்பெறுவது "அரோகதா' என்ற நிலை. அதாவது ஆரோக்கியமான- நோய் நொடி நெருங்காத நிலையைத் தந்துவிடுகிறார். மருந்து, மாத்திரைகளைத் தொடர்ந்து உண்பவர்கள் கவனத்தில் கொள்ளலாம்.

தொடர்ச்சியாகப் பெறப்படுவது

"அஜாட்யம்' என்ற நிலை. இந்த அஜாட்யம் என்ற சொல் மிகவும் சூட்சுமமான பொருளைக் கொண்டது. வெறும் ஜடமாக இல்லாமல் அமைவதே என்று எடுத்துக்கொள்ளலாம். புத்தி மந்தமடைந்து, சுறுசுறுப்பில்லாமல் உற்சாகமின்றி சோம்பேறியாக இருப்பவர்களை ஜடம் என்று கூறுவதுண்டு. இந்த ஜடம் என்னும் சொல்லிலிருந்து வருவதே ஜாட்யம். இத்தகைய தன்மை பலரிடம் காணப்படுகிறது.

அ-ஜாட்யம் என்றால் ஜடத்தன்மை துளிகூட இல்லாமல் அமைவதே. இந்த அஜாட்யத்திற்கு ஆஞ்சனேய சுவாமியை மிகச்சிறந்த உதாரணமாகக் கருதலாம். அவர் எப்போதும் சுறுசுறுப்புடன், விறுவிறுப்புடன்,

உற்சாகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருப்பவர். சிற்பங்களிலும், சித்திரங்களிலும் சஞ்சீவி மலையை அனாயாசமாக கையில் தூக்கிப் பறந்துகொண்டிருப்பதைக் காணலாம்.

எப்போதும் பளிச்சென்று- விழிப்புணர்வுடன்கூடிய சுறுசுறுப்பான நிலையான அஜாட்யத்தை அளித்துவிடுகிறார்.

கடைசியாக பெறப்படுவது "வாக்படுத்வம்.' அதாவது வாக்குவண்மை, சாமர்த்தியம் என்ற நிலைப்பாடு. அனுமந்த சுவாமியை வால்மீகி மகாமுனிவர் நவவியாகரண பண்டிதர் என்றும், கம்பச்சக்கரவர்த்தி சொல்லின் செல்வர் என்றும் வர்ணித்துள்ளனர். அதேபோல பக்தர்களுக்கு வாக்கு, சொல்வண்மையை அளவின்றி கொடுத்துவிடுகிறார். எனவே அறிவாளிகளும், அரசியல் பேச்சாளர்களும் கவனத்தில் கொள்வார்களாக.

மேற்கூறிய எட்டுவிதமான மகாசக்திகளையும் ஸ்ரீஆஞ்சனேய சுவாமி அருள்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை. இத்தனை மகாசக்திகளையும் அவர் எப்போதாவது சொந்த நலனுக்காகப் பயன்படுத்திக்கொண்டாரா என்று பார்த்தால் இல்லவே இல்லை. முதலில் சுக்ரீவனுக்கும் பின்னர் ஸ்ரீராமபிரானுக்கும் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் அல்லவா அந்த மகான்? அவரை தூய்மையான மனதுடன் வழிபட்டுவருபவர்கள் மேற்சொன்ன எட்டு மகாசக்திகளும் கிடைக்கப் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட அரிதான விளக்கங்களை அளித்த காஞ்சி மகாபெரியவரையும் போற்றிப் பணிவோம்!

செல்: 74485 99113