சூரிய உதய காலத்திலிருந்து இரவு பத்து மணிவரை பலரும் "இன்றைக்குக் கல்யாணத்திற்குப் போகிறேன். மணிவிழா வுக்கு அழைத்தார்கள். கோவிலில் யாகம் செய்கிறார்கள்' என்று வண்டியில் பறந்து செல்வதைப் பார்க்கிறோம்.

உறவினர்கள் சந்திப்பு, நண்பர்களின் கைகுலுக்கல், பாசம் மனதில் இல்லாவிட்டாலும், "வாங்க! காலையிலதான் உங்களைப் பத்தி பேசிக்கிட்டிருந்தேன்' என்ற உதட்டளவுப் பேச்சுகள். இக்காட்சிகளைக் கடந்து மேடைக்குச் செல்லும் எல்லாரும் ஒரு விஷயத்தை கவனிக்கவேண்டும்.

வாழ்த்துவோரும் வாழ்த்த வருவோரும் மஞ்சள் அரிசியால் அங்குள்ள வேத பண்டிதர்முன் தலைகுனிந்து ஆசியுரை பெறுவர். "சத சம்வத்ஸரம் தீர்க்கமாயுஹு' என்று, ரிக்வேதத்தின் ஸ்ரீசூக்தத்திலிருந்து இந்த நல்வாக்கு சொல்லப்படுகிறது. "எல்லா அம்சங்களும் கிடைத்த மனிதா! உனக்கு பகவான் தீர்க்கமான நீடித்த ஆயுளைத் தரவேண்டும்' என்று பொருள். கிருமிகளின் தாக்குதல்கள், சுற்றுச்சூழல் மாசுபடுதல், புவி வெப்பமயமாதல் காரணமாக அதிக மழைப்பொழிவால் நீர்த்தொற்று, ஒருநாட்டை இன்னொரு நாட்டவர் ஆட்சிசெய்ய ரசாயனக் கலவைகளைக் காற்றில் கலந்துவிடுதல் என்று விரும்பத்தகாத செயல்களால், சுவாசத்திற்குச் கேடு என்ற துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப் படுகிறது மனித இனம்.

சுவாசம் குறைந்தால் உடனே ஏற்படுவது மாரணம் என்ற விதி முடிவு. கபம் அதிகமானால் நுரையீரல் பாதித்து எந்தப் பணியும் செய்யமுடியாமல் உடல் அடங்கி ஓய்வெடுக் கிறது.

Advertisment

இந்த உலகத்தில் பிறந்த மனிதர்களில் ஒருவர்கூட சோம்பித்திரிவது கூடாதென்று, "வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்' என்றார் பாரதியார். நமது மூச்சுக்காற்றை ஒழுங்குபடுத்தி உடல்நலத்தைக் காப்பதற்கு பல்வேறு வழிகளைக் கொடுத்தனர் சித்தர்கள்.

வள்ளலார் சுவாமிகள், "வேம்புக் கற்பம் என்ற மருத்துவமுறையால் உடல் திடமாகும்' என்றார். "முப்பது நாட்கள் வேம்புக் கொழுந்து உண்டு, ஒருநாள் இடைவெளிவிட்டு, அடுத்து இரு முப்பது- தொன்னூறு நாட்கள் சாப்பிட்டு வர உடல் திடமாகிவிடும்' என்றார்.

அரைக்கிலோ மிளகைப் பேயன் வாழையின் கிழங்குச் சாற்றில் ஊறவைத்துக் காய்ந்தபின், இளநீர், கரிசலாங்கண்ணிச் சாறு, பொன்னாங்கண்ணிச்சாறு, பசுங்கோமியம், பசும்பால் இவற்றில் மூன்று நாட்கள் ஊறவைத்து, நிழலில் காயவைத்து தினமும் காலையில் ஐந்து மிளகு வீதம் உட்கொண்டால், நாட்கள் செல்லச்செல்ல திடமான வலுப்பெற்ற உடம்பு அமைந்துவிடும்' என்றார். இந்த காயகற்ப விதி செய்யும்போது மது, மாமிசம் சேர்க்கக்கூடாது. மனவுறுதியுடன் இருக்கவேண்டும். தேகத்திற்குத் தீங்கு விளைவித்து ஆயுளைக் குறைத்துவிடும் என எச்சரித்தார்.

Advertisment

ஒருநாள் உச்சிவேளையில் வள்ளலாரைக் காணவில்லையென்று பக்தர்கள் எல்லா இடங்களிலும் தேடியலைந்தனர்.

ஓரிடத்தில் அவரது உடற்பாகங்கள் தனித்தனியாக சிதறிக்கிடப்பதைக் கண்டு மயங்கிட, உடனே அங்கங்கள் ஒன்றுசேர, அடிகளார் முழு உடம்போடு நடந்துவந்து, "உயிர் வேறு; உடம்பு வேறு' என்று உணர்த்தி நின்றார். மனிதன் தான் மட்டும் நலமுடன் வாழவேண்டு மென்று பிரார்த்திப்பதைவிட, இந்த உலகமெல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல்வேண்டும். அப்படிச் செய்வதால் தனி மனிதனுக்கு வேண்டியவையும் அடங்கிவிடுகின்றன. மனிதர்கள் செய்யவேண்டிய கடவுள் பிரார்த்தனை இதுவே...

பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை

எழுப்பி அருட்ஜோதி அளித்தென்

உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான்பெற்ற

நெடும் பேற்றை ஓதிமுடியாது

என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே.'

வள்ளலார் பெருமான் ஒரு காயகற் பத்தைக் கூறிட, கோரக்கர், போகர், காலாங்கிச் சித்தர், அகப்பேய்ச் சித்தர் போன்றோர் மூலிகைகளால் நம் உடலை நீண்டநாட்கள் வாழச் செய்திட முடியும் என்று காட்டினர். அவற்றில் போகர் கடுக்காய் பற்றிய ரகசியத்தைச் செய்யுள் வடிவில் தந்து, மனித இனம் நிறைய ஆயுளுடன் வாழ வழிகாட்டியுள்ளார்.

dd

மிடுக்காய் வாழ கடுக்காய் உண்க...

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து, மகாவிஷ்ணு தேவர்களுக்கு அமுதத்தை அள்ளிக்கொடுத்தார். பின்னர் தனது கைகளை உதறியபோது அமிர்தத்தின் ஒருதுளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக மாறித் துளிர்த்தது. இதனால் கடுக்காயை சக்திவாய்ந்த கற்ப மூலிகை மரம் என்பர். தமிழ்நாட்டில் கொல்லிமலையிலும், காவிரி, தாமிரபரணி ஆறுகள் தொடங்கும் இடங்களிலும் கடுக்காய் மரங்கள் இருந்தன.

வாதங்காய் மரம்போல காணப் பட்டதால், இதைக் கடுக்காய் மரமில்லை என்று விட்டுவிட்டனர். நாட்டு மருத்துவ முறையில் கடுக்காய் பயன்படுத்தப் படாத லேகியங்களே இல்லையென்று சொல்லலாம். குழந்தைப் பிறப்புமுதல் வயது முதிர்வுவரை இதைச் சாப்பிடலாம். தமிழ் மாதங்கள் பன்னிரண்டிலும் ஒரு குறிப்பிட்ட பொருளோடு இதைப் பொடி செய்து சாப்பிட உடல் கட்டுடன் விளங்கி, ஆயுள் அதிகமாக இருக்குமென "பதார்த்த குண சிந்தாமணி' சொல்கிறது.

சித்திரை, வைகாசி மாதங்களில் தேனுடனும்; ஆனி, ஆடி மாதங்களில் வெல்லம் கலந்தும்; ஆவணி, புரட்டாசி மாதங்களில் இந்துப்பு கலந்தும்; ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சர்க்கரை, தேன் கலந்தும்; மார்கழி, தையில் சுக்கு, மிளகு கலந்தும்; மாசி, பங்குனியில் அமுரி, பால் கலந்தும் சாப்பிட வேண்டும். கடுக்காயை ஏழாக வகைப்படுத்தி யுள்ளனர்.

துர்சக்தி அகற்றும் பிருத்வி: சௌராஷ்டிரம், வங்கதேசம், இலங்கையில் கிடைக்கும் இவ்வகைக் கடுக்காயைக் கடுங்கடுக்காய் என்பார்கள். சிவபெருமான் இதனுள்ளிருந்து நம் ஆயுளைக் கூடச் செய்வார். கையில் வைத்திருந்தால் நம்மை நெருங்குகின்ற துர்ஆவிகள் விலகிச் சென்றுவிடும்.

யாத்ரா பலன் தரும் அமயங்காய்: மரங்களில் கருப்பு நிறத்துடன் காணப் படும் இந்த கடுக்காயைத் தொட்டு வணங்கினாலே வாரணாசி சென்றுவந்த புண்ணியம் கிட்டும். சிவபக்தி மனதில் அதிகமாக உண்டாகும். இந்திய மண்ணில் மிக அபூர்வமாகக் கிடைப்பது. உடல் தளர்ந்திருப்போர் இதைப் பக்குவப்படுத்தி உட்கொண்டால் திடமான தேகம் உண்டாகிவிடும்.

அருமருந்தாம் திருவ்ருதா: மாதம் ஒருமுறை உண்டுவருவோர்க்கு ஆயுள்காலம் வரை எந்த நோயும் உடற்பாகங்களைத் தாக்காது. வந்த நோயும் அகன்றுவிடும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட வர்கள், அமிர்த சஞ்சீவினி ஆயுர்தேவி மந்திரத்தால் இந்த கடுக்காய் நீரை அபிமந்திரணம் செய்து உட்கொண்டால் உடல்நலம் கூடும். ஐந்துவகை வண்ணங்க ளோடு காணப்படும் இவ்வகைக் காய் மத்தியப்பிரதேசம், அஸ்ஸாம் காடுகளில் அதிகம் கிடைக்கும்.

தேகமின்னலுக்கு விஜயன்: உடலில் நோய் நெருங்காது. வாதம், பித்தம், கபம் போன்றவை நீக்கி சுவாசத்திற்குப் புத்துணர்வு தருவது. தங்க நிறத்திற்கு ஈடான மஞ்சள் நிறமுடைய கடுக்காய், விந்தியம், கேதார மலைப்பிரதேசங்களில் நெல்லிக்கனிபோல் தோன்றுவது.

சிந்திக்கும் திறன் கூட்டும் சிவந்தி: குழந்தைகளுக்கு மனப்பாடம் வராமல் மறதி அதிகமிருந்தால், இதை அரைத்து தேனில் குழைத்து நாவில் தடவலாம். கருமையான வண்ணத்தில் காணக்கிடைப்பது. மூலம், பவுத்திர நோயால் துன்பப்படுவோர் இதை உண்டுவந்தால் விரைவில் குணமடை யலாம்.

அழகூட்டும் அமிர்தா: காசி, கயா போன்ற இடங்களில் அடர்த்தியாகக் காணக்கிடைக்கிறது. பொன்னிறமாகவும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும் இது, நெல்லிக் கனிபோல தோலுக்குள் சதைப்பற் றோடிருக்கும். தோல், தசைக்குள் கிருமி படர்தல், வீக்கம், குன்ம ரோகம் போன்றவை தீரும். உடல் அழகைக் கூட்டும். இவ்வகைக் கடுக்காயை ஊறவைத்த நீர் அமிர்தம் என்றும் சொல்வர்.

ஆன்மபலம் தரும் உரோகினி: உடல் சூடு தணித்து குளிர்ச்சியைத் தருவது.

காய் முற்றினால் பக்கவாட்டில் ஆரஞ்சுபோல் பிளவுபடக்கூடியது. நெல்லை, விருதுநகர், கன்னியாகுமரி, பொதிகை மலைப்பகுதிகளில் கடந்த நூற் றாண்டில் கொட்டிக்கிடந்தது. ரோகினி என்றும் அழைக்கப்படும் இவ்வகைக் கடுக்காயின் உட்பொருளே ரோகங்களை விரட்டும் சஞ்சீவினிதான். ஆன்மபலம் கூட்டி மனதில் தெய்வீக சிந்தனையை வளர்த்து நல்வழிப்படுத்துவது. மனநிலை பாதித்த குழந்தைகள், பெரியவர்களுக்கு பைரவத் துதி கூறி உட்கொள்ளச் செய்ய பலன் கிடைக்கும்.

பெண்கள் ருதுவானபின் கடுக்காய் சாப்பிட்டால் அவர்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினைகளே வராது. அமயன், அமயங்காய் என்று அழைக்கப்படும் கடுக்காயை ருத்ராட்சம்போலவே உபசா ரங்கள் செய்து, ஐஸ்வர்ய சிவபெருமானை அதில் பூஜை செய்து வணங்கினால், பணத்திற்குக் குறைவு வராதென்று சித்தர்கள் வாக்கில் தகவல் இருக்கிறது. கடுக்காயைக் கற்ப மூலிகை என்று சொல்லியிருப்பதன் உட்பொருள்- "ஒரு கற்பம் முடிவடைந்து அடுத்த கற்பம் தோன்றும்போதுகூட இந்த தெய்வீக மூலிகை உயிருடன் இருந்து விதையாய் பூமியில் விழுந்து முளைக்கும் என்று ஒரு பொருள். இரண்டாவது, முறையாக உண்ணும் மனிதர்களை கற்பகாலம் உள்ளவரை காக்கும் என்று பொருள்.

மிடுக்காய் வாழ கடுக்காய்

பொதுவாக 18 வயதுடையவர்கள் 21 நாட்கள் உண்டபிறகு மூன்று நாட்கள் விட்டு அடுத்த 21 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து சாப்பிட்டால் மலம் இளகக்கூடும். 26 வயதுமுதல் 30 வயதுள்ளவர்கள் 32 நாட்கள் சாப்பிடலாம். 45 வயதுமுதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள் 64 நாட்கள் எடுக்கலாம். 56 வயதுமுதல் 62 வயதுடையவர்கள் 42 தினங்கள் உண்ணலாம். 65 வயதானவர்கள் 51 தினங்கள் எடுத்துக்கொள்ளலாம். உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வஸ்துகள் மருந்தில் இருந்தால் அதை வெளியேற்றும் தன்மை கடுக்காய்க்கு இருக்கிறது.

தெய்வீகச் சித்தரான போகர்

"அன்புள்ள அமுதந்தான் கடைந்த பின்பு

ஆழியான் அமரர்களுக்கு அமுத மீந்து

உள்ளவே கைதனையே உதறும்போது

உற்றதுளி மண்ணில் விழ மரமுமாச்சே'

என்கிறார். ஆரோக்கியமே பேரதிர்ஷ்டம். அதனுடன் செல்வ வளமும் தரும் அமிர்த மூலிகை கடுக்காயின் ரகசியத்தை அறிந்து நிறைவாழ்வு வாழ்வோம். தெய்வ மூலிகையான இந்த கடுக்காய் திருக்குறுக்கை வீரட்டம் என்ற சிவத் தலத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.

செல்: 91765 39026