அன்றாட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருப்பதால் அவற்றின் மதிப்பு எங்கும் பரவிக்கொண்டிருக்கிறது. தினக்கூலி செய்பவர் முந்நூறு ரூபாய் பெறுகிறார். இயந்திரம் இயக்குபவர் ஐந்நூறு பெறுவார். கடை வைத்திருப்பவர் தினம் 1,500 ரூபாய் லாபம் ஈட்டுகிறார். ஒரு கம்பெனி முதலாளி லட்சம்முதல் கோடிவரை சம்பாதித்துவிடுகிறார்.
அனைத்துப் பணிகளுக்கும் எண்களின் பங்கு அவசியம்.
"நான்காம் எண் அமைந்த கட்டடத்தை வாடகைக்கு எடுத்தவர் நான்கு கோடி சம்பாதித்துவிட்டார்; மூன்றாம் எண் கட்டடத்தை எடுத்தவர் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்' என்று சொல்வது அறியாமையே. எல்லா எண்களுக்கும் ஒரு தெய்வீகத்தன்மை இருக்கிறது. அதை அறிந்துகொண்டால் நினைத்தபடி குபேர கடாட்சத்துடன் வாழமுடியும். எண் என்பது ஒரு அடையாளக்குறி மட்டுமல்ல; ஓசைக்கான குறி, ஒலியின் அடையாளம்.
எண்களின் ஆற்றலும் வெற்றியும்ஒன்றுமுதல் ஒன்பதுவரையுள்ள எண்களுக்கு நவகிரகங்களின் பெயர்களும், அவர்களது ஆதிக்கத்தால் வெற்றியும் கிடைக்குமென்று வானசாஸ்திர நிபுணர்களால் சொல்லப்பட்டது. இந்த எண்களை ஒருவகை கிரக வரிசையில் சேர்க்கும்போது அவை அபரிமிதமான செல்வச் சேர்க்கையையும், பேர கடாட்சத்தையும் தந்து நம்மை வாழவைக்கின்றன.
"எண்கள் நமது வாழ்க்கையின் கண்கள்; அவையே நம் வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்கின்றன' என்று கணிதமேதை பிதாகரஸ் கண்டறிந்து மாணவர்கள்முதல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்வரை வியத்தகு வளர்ச்சியைக் காணச்செய்தார். இவரால் எண்களின் ஆற்றலும் அதன்மூலம் பல வெற்றிகளும் உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது. ஒரு குறிப்பிட்ட எண்களை வரிசைப்படுத்தி எழுதினால் வியக்கும்படியான ஆற்றலைத் தந்துவிடும் என்பதை பண்டைக்காலத்திய சுமேரியர்களும் எகிப்தியர்களும் சீனர்களும் உலக மக்களுக்கு எடுத்துக்கூறினர்."பிரபஞ்சத்தின் சக்தி அளவை அறிந்து ஈர்க்கலாம்' என்று பிதாகரஸ் சொல்ல, விஞ்ஞானி ஈரோ ஐன்ஸ்டீன் எண்களை வைத்துப் பலன்கூறும் ஜோதிட சித்தாந்தத்தை விளக்கிக்கூறினார். ஒரு சமயம் கணிதமேதை ராமானுஜம் அவர்களை, படிக்கும் காலத்தில் கணித வகுப்பாசிரியர் அழைத்து, "பூஜ்ஜியத்தை பூஜ்ஜியத்தால் பெருக்கினால் என்ன வரும்?' ன்று கேட்க, "பூஜ்ஜியம்தான் வரும்' என்றார். "ஒன்றை பூஜ்ஜியத்தால் பெருக்கும்போது என்ன வரும்?' என்று கேட்க, "ஒன்றுதான் வரும்' என்று உடனே சொன்னார்.
கணித ஆசிரியர் வியந்து, "எப்படி?' என்றார். "பொருண்மை இல்லாத பூஜ்ஜியத்தை ஒன்றால் பெருக்கும்போது அங்கே ஒன்று கிடைக்கும்' என்றார். இப்படி வித்யாசமாகச் சிந்தித்த கணிதமேதை, "0-வை 0-வுடன் சேர்த்தால் உருவ அமைப்புப்படி 8 வரும்' என்றும் வகுப்பறையில் சிலேடைநயம் பேசி உயர்ந்ததாகச் சொல்வார்கள்.
கரன்சி எண் ரகசியம்தினமும் பணப்புழக்கம் இல்லாமல் மனித வாழ்க்கை கிடையாது. நாம் பயன்படுத்தும் கரன்சி நோட்டில் எண் 7, 8, 6 இணைகிறபோது அதற்கொரு வகை ஈர்ப்புத்தன்மையும் குபேர கடாட்சமும் வந்துவிடுகிறது. எண்களில் 7 கேதுவுக்குரியது; 8 சனி பகவானுக்குரிய எண்; 6 சுக்கிரனுக்குரிய எண்ணாக அமைகிறது.
உதாரணமாக, ரூபாய் நோட்டிலுள்ள எண் 74ட 690786 என்று வைத்துக்கொள்வோம். கடைசியாக வருவது 786 ஆக வந்தாலும், தொடக்கத்தில் 786 எண் அமைப்பு வந்தாலும் அந்த கரன்சி தனக்குள் ஒருவித ஈர்க்கும் குணத்தைக் கொண்டுள்ளதை அனுபவத்தில் உணர்ந்து கொள்ளலாம். இது எவ்வாறு சாத்தியம் என்றால், அதற்கு கிரகங்களின் மதிப்பெண் உறுதுணையாக இருக்கக் காணலாம்.
எண் 7-ல் ஞானகாரகன் கேது அமர்ந்துள்ளார். அறிவைத் தூண்டி ஆராய்ச்சி மனப்பான்மையையும், பணவரவை அதிகமாக்கிட என்னென்ன செயல்களைச் செய்ய வேண்டுமென்றும் திட்டமிடும்படி செய்பவர்.
கடன்களைத் தீர்த்து அருள்கிற தோரண கணபதி, ருணவிமோசன காரகம் பெற்று இதில் அமர்ந்துள்ளார். தொழில், வியாபாரத்தில் தனித்தன்மை பெற்றுத்திகழும்படி செய்வது எண் 7. வடநூலார் இந்த எண்ணை சப்தமில்லாமல் சாதிக்கும் குணமுடைய அபூர்வ எண் என்றும், அறிவாற்றல் தரும் குணமுடைய இலக்கம் என்றும், சப்த மாத்ருகா தேவதா சக்திகள் இந்த எண்ணுள்ள இடத்தில் இருக்குமென்றும் கூறியுள்ளனர்.
கன்னிப்பெண்கள் திருமணமாகாமல் தடைகண்டால், சப்தகன்யா பூஜையைச் செய்தால் உடன் பலனடைவது 7-ன் அதிசயம். தொழில், வியாபாரத்தைத் தங்கள் பெயரில் அமைத்துக்கொண்ட பெண்கள் சப்தமுகீ ருத்ராட்சத்தைப் பயன்படுத்தி வழிபாடுகள் செய்தால் உயர்நிலை அடையலாம். வெளிநாட்டுப் பயணம், வியாபாரத்தில் அந்நிய தேச உறவுகளை ஏற்படுத்துவது எல்லாம் 7-ஆம் எண்ணால்!
அடுத்ததாக எண் 8-ஐ எடுத்துக்கொண்டால், சனி பகவானுடைய பீடம் என்று ஜோதிட உலகமே கூறுவதைக் காண்கிறோம். அபாரமான சக்தியுடைய இந்த எண்ணை ஏனோ எங்கு பார்த்தாலும் பயந்து ஒதுக்குகிறார்கள். எட்டைப்போல ஒரு நல்ல எண்ணைக் காணமுடியுமா? சாதனைக் காரகன் எனப்படும் சனி பகவான் நமது எதிர்கால திட்டங்களை இதில் அமர்ந்து கொண்டுதான் தூண்டுகிறார். ஒரு பெண்ணுடைய மங்களகரமான வாழ்க்கை நிரந்தர சம்பத்துடன் இருக்க மாங்கல்ய காரகன் என்ற பெயரில் ஜாதகங்களில் வீற்றுள்ளார். தொழிலதிபர்களை நட்டம், வழக்கு வந்த காலத்திலும், அபரிமிதமான லாபம் வந்து கொடிகட்டிப் பறக்கின்ற காலத்திலும் இரும்பு மனதுடன் திகழச்செய்யும் இரும்புக்குக் காரகன். தர்மதேவனாகிய எமதர்மராஜனின் அதிதேவதை. எட்டாம் எண்ணை இரண்டு வட்டங்களாகப் பிரித்து நலம் காணலாம். இதில் நன்மை- தீமை என்ன என்று கணக்கிட்டு எதிர்கொள்ளும் ஆத்ம தத்துவம் இருக்கிறது. அஷ்டவசுக்கள், அஷ்டலட்சுமிகள் அஷ்ட நாகங்கள், அஷ்ட ஐஸ்வர்யங்கள் அஷ்ட வாஸ்து புருஷர்கள் அடங்கியுள்ளனர். எட்டைப் புரிந்துகொள்பவர்கள் எட்டாத வெற்றிக்கனியையும் பறித்துவிடுவராம்.
அஷ்டமாசித்திகள் அமர்ந்துள்ள இடமாக உள்ளது.
எண் 6-ஐக் காணும்போது, லட்சுமி தேவி அமர்ந்திருக்க, அவரோடு குபேரனும் சேர்ந்து அமர்ந்துள்ளார். இதற்குக் காரணம் சுக்கிரனுடைய ஆதாரபீடமாக எண் ஆறு அமைந்துள்ளது. வைரம்போல வாழ்வில் ஜொலிக்கவும், பண பலம், அதிகார பலம் பெறவும் உதவுகிறது.
தளராத முயற்சியால் வெற்றி கண்டு பொருளீட்டலாம். எண் 6-ல் உள்ள வளமான தகவல்களை, ஜாதகக் கட்டமாகிய துர்ஸ்தானம் 6-ஐ ஒப்பிட்டு பலன்களைக் கூறுதல் கூடாது. ஷண்முகர், ஷடாக்ஷரம், ஷடங்க தேவதைகள், ஷட்வீர்யங்கள், ஷட்பலங்கள் ஆகியன இந்த வரிசையில் கூறலாம். லட்சுமி கடாட்சம், வறுமை நீங்குதல், நிரந்தர பணவருவாய் ஆகியவற்றை உறுதியாகத் தரும் ஆறு என்ற எண். இந்த எண்ணுக்குரியவர்கள் வராத சொத்து, ஏமாற்றமடைதல் போன்றவை நேர்ந்தால் இந்த எண் தெய்வங்களான லட்சுமி, குபேரன், பைரவ மூர்த்தங்களை வழிபட்டு நலம்பெறலாம்.
7 8 6 என்ற எண் அமைப்பு கரன்சி நோட்டின் தொடக்கத்தில் இருந்தால் சுமாரான பலனும், இறுதியில் இருந்தால் அபரிமிதமான பலனும் தருகிறது. இன்றைய காலகட்டத்தில் 10, 20, 50, 100, 200, 500, 2000 மதிப்புகளில் பல வண்ணங்களில் கரன்சிகள் வருகின்றன. பன்னிரு ராசிகளுக்குரியவர்கள் தங்களுக்குரிய வண்ண நோட்டுகளை எண்ணியல் விதிப்படி தேர்ந்தெடுத்து பூஜை செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கரன்சி எண்ணுக்கும் அதன் மதிப்பைப்போல அபார சக்திகள் இருப்பதைப் பயன்படுத்தும்போது உணரலாம்.
எண்ணியல் விதிப்படி ஒருவர் ஒரு கரன்சியை மட்டுமே பூஜை செய்து பர்ஸ், பணப்பெட்டி, பீரோ அல்லது அலுவலக ஃபைலில் வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டு வைத்துக்கொண்டால் 786 + 786 கூட்டியக்கத்தால் ஒட்டுமொத்த கரன்சி மதிப்பும் போய் குழப்பத்தில்தான் முடியும். கவனம் தேவை.
பணவரவைத் தூண்டும் கரன்சி வழிபாடு நாம் பயன்படுத்துகிற எண் மதிப்புகள் நமது உடற்சக்கரங்களோடு தொடர்புகொண்டுள்ளன. அந்த சக்கரங்கள் தூண்டப்படும்போது அது தொடர்புடைய ஆதிக்கபலம் கூடி, வறுமையில் கஷ்டப்படுபவனுக்கும் தாராளமாகப் பணம் புரளும் அதிர்ஷ்டகாலம் பிறந்துவிடுகிறது. இதற்குச் சரியான உதாரணத்தை இங்கே கவனியுங்கள்.
ஒரு மனிதனின் மணிப்பூரகச் சக்கரத்தில் அறிவுக்குக் காரகன் கேது அமர்ந்து செயலைத் தூண்டுகிறார். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்துதி 101-ன் விளக்கப்படி திருமகள் "மணிபூராந்த ருதிதா' என்று போற்றப்படுகிறாள். இதனால் ஏழாம் எண் சக்திமிக்கதாக விளங்குகிறது.
அடுத்ததாக மூலாதாரச் சக்கரத்தில்தான், பல தொழில் வல்லுநராக்கும் சாதனைக்கு ஆதிபத்ய கிரகமான சனி பகவான் அமர்ந்து விருத்திகளைத் தருகிறார். இங்கே 99-ம் நாமாவளியில் "மூலாதாரைக நிலயா' என்று கிரியா சக்தியாய் திருமகள் பூஜிக்கப்படுகிறாள். இதன்பொருட்டு 8-ஆம் எண் சக்தி மிக்கதாகப் பயன்படுகிறது. தொடர்ந்து சுவாதிஷ்டானச் சக்கரத்தில் தனமருளும் சுக்கிரன் அமர்ந்து லட்சுமி குபேரன் வரவைச் சொல்கிறார்.
சகஸ்ரநாமத்தில் 505-ம் நாமத்தில், "சுவாதிஷ்டானாம் புஜா' என்று திருமகளின் ஒருவகை சக்தி போற்றப்படுகிறது.
நமக்குத் தேவைப்படும் நிரந்தரமான பணவரவைத் தூண்டும் பிரார்த்தனைகளைச் செய்வதற்கு முன்பாக உடற்சக்கரங்களுக்கும் எண்களின் சக்திக்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தங்களது ராசிக்குரிய வண்ண கரன்சி நோட்டைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அல்லது பொதுவாக மஞ்சள் செந்நிற கரன்சியை எடுத்துக்கொண்டு, பௌர்ணமி அல்லது வெள்ளிக்கிழமையன்று அத்தர், புணுகு, ஜவ்வாது, கோரோஜனை, குங்குமம் இட்டு, சந்தனமும் இட்டு ஒரு தட்டில் வைத்து, அருகில் நெய்தீபம் ஏற்றி வைக்கவேண்டும். ஸ்ரீஸ்துதி என்னும் சௌபாக்கிய லட்சுமி துதியை மூன்றுமுறை சொல்லி செம்மலர்களால் வழிபடவேண்டும்.
"ஓம் நமோ லக்ஷ்மியை மகாதேவ்யை
பத்மாயை சததம் நம/:
நமோ விஷ்ணு விலாசின்யை
பத்மஸ்தாயை நமோ நம//:
த்வம் சாக்ஷாத் ஹரிவக்ஷஸ்தா
ஸுரே ஜ்யேஷ்டா வரோத்பவா/:
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா
பத்ம ஹஸ்தா பராமயீ//:
பரமானந்தா அபாங்கீ ஹ்ருத
ஸம்ஸ்ருத துர்க்கதி/:
அருணா நந்தினீ லக்ஷ்மி:
மகாலக்ஷ்மி த்ரிசக்திகா//:
சாம்ராஜ்யா சர்வ சுகதா
நிதிநாதா நிதிப்ரதா/
நிதீஸ் பூஜ்யா நிகமஸ்துதா
நித்ய மகோந்நதி//:
ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ
சுபகா சம்ஸ்துதேஸ்வரி/:
ரமா ரக்ஷாகரீ ரம்யா
ரமணீ மண்டலோத்தமா//:
இந்த வழிபாடு மிக எளிமையாக இல்லங்களில் தனவரவுக்காகச் சொல்லப்பட்டுள்ளது. மிகப்பெரிய தொழிலகங்கள், கம்பெனிகளுக்கு அபரிமிதமான லாபங்கள் சேர்வதற்கு எளியமுறையின் ஆரம்ப வழிபாடுகளைச் செய்தபிறகு, இதன் தொடர்ச்சியாக ஸ்ரீலக்ஷ்மி ஹ்ருதயத்தை வெள்ளிக்கிழமை இரவுநேரத்தில் பாராயணம் செய்துவிட்டு குபேரன், சித்தலக்ஷ்மி மூலமந்திரத்தை 108 முறை ஜெபம்செய்து வரவேண்டும். இத்துடன் உக்ரதெய்வ மந்திரத்தைச் சேர்த்து பூஜை செய்தல் கூடாது.
பணவரவு அதிகமாக தெய்வ ரகசியம் என்ன?
நாம் தினமும் சூரிய உதய காலத்தில் எழுந்து நீராடியபின் தீபமேற்ற வேண்டும். சேர்கின்ற செல்வமாகிய பணத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டி வைக்காமல், அதில் பத்து சதவிகிதமாவது தான தர்மங்களுக்குச் செலவிடல் வேண்டும்.
காகிதத்தில் வருகின்ற பணத்தைச் சிலர் கசக்கிப் பிழிந்து நான்காக எட்டாக மடித்து அலட்சியப்படுத்துகிறார்கள். அதனால் எத்தனை வழிபாடுகள் செய்தாலும் பணம் வேறிடத்தில் சுருண்டுகொள்ளும்.
வடஇந்தியர்களும், அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழும் மக்களும் மிக வசதியாக வாழ்வதற்குக் காரணம், அதைச் சுழலவிடுகின்றனர். 'Trinity Method'என்ற எண் மடிப்பு முறையில் பர்சில் அடுக்கி வைத்து அதற்கு ஒரு ஈர்ப்புத் தன்மையை உருவாக்குகின்றனர்.
எண்ணியல் விதிப்படி ஒரு கரன்சியை வழிபட்டு மடிக்காமல் பர்சிலோ, ஆன்மிகப் புத்தகத்திலோ பரிமள வாசத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கரன்சியை ஆண்டுக்கு ஒருமுறை சுபநாளில் புதிதாக மாற்றி பூஜை செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இது ஒரு பணவரவுக்கும், பொருளாதார பலத்திற்கும் வழிகூறும் எண்ணியல் ஆய்வுக் கட்டுரை. ஒருவர் ஜாதகத்தில் சூரியன், புதன் சேர்ந்தால் புதாதித்ய யோகம் கைகூடும். 156-ஆம் எண் கரன்சிகள் பணபலத்தைக் கூட்டும்.
குரு, செவ்வாய், சந்திரன் சுபர் வீட்டில் கூடினால் 392-ஆம் எண் கரன்சிகள் பணபலம், அதிகார பலத்தைக் கூட்டும். இந்தத் தகவல்கள் அனைத்தும் தசாபுக்திக்காலங்களை முறையாகக் கணித்து எடுக்கப்பட்டவை. இவ்வரிசையில் "பராசர ஹோரா' சொல்லும் 144 நாபஸ யோகங்களுக்கும் எண்ணியல் ரகசியங்களைக் கணித்து ஒரு தனிமனிதனின் பணபலம், வாழ்க்கை பலத்தைக் கூட்டலாம். எல்லாருக்கும் குபேர கடாட்சம் நிலைக்கட்டும்.
செல்: 91765 39026