சுமார் 60 வயதுடைய ஒருவர், நாடியில் பலன்கேட்க வந்திருந்தார்.
"ஒரு சிறிய நகரத்தில் நான் வசித்துவருகிறேன். இளம் வயது முதல், கடவுள் பக்தியுடன் வாழ்ந்துவருகிறேன். என் மனதில் நீண்ட காலமாக ஒரு கோவில் கட்டவேண்டுமென்ற ஆசையுண்டு. ஆனால், அது இன்றுவரை நிறைவேறவில்லை.
கோவில் கட்டும் பிராப்தம் எனக்கு உண்டா என்று ஜோதிடம் பார்த்தேன்.
"அரசர்களுக்குத்தான் கோவில் கட்டும் பிராப்தம் உண்டு. உன் ஜாதகம் ராஜயோக ஜாதகம். இந்த தசை, புக்தி நடக்கும்போது கோவில் கட்டுவாய்' என கூறினார்கள்.
அவர்கள் கூறிய தசை, புக்தி நடந்து, அதற்கு அடுத்த தசை, புக்தியும் நடந்து முடிந்தது. ஆனால் இன்றுவரை கோவில் கட்ட முடியவில்லை. இந்தப் பிறவியில் ஒரு ஆலயம் என்னால் கட்டமுடியுமா? என் ஆசை நிறைவேறுமா என்பதை அறிந்து கொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agathiyar_26.jpg)
ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். அதில் அகத்தியர் எழுத்துவடிவாகத் தோன்றி பலன் கூறினார்.
"இவன் எந்த வகையான ஆலயம் கட்ட விரும்புகிறான் என்று கூறவில்லையே. ஆன்மிக ஆலயமா அல்லது கடவுள் சம்பந்தமான ஆஸ்திக ஆலயமா?'' என்றார்.
"அகத்தியர் கூறுவது எனக்குப் புரியவில்லை'' என்றார் ஜாதகர்.
"இந்த உலகில் நல்லறிவுக் கருத்துகளைக் கூறி, எல்லா உயிரினங்களையும், அந்த ஆன்மாக்களையும் தன் அகத்தால் நேசித்து, தங்கள் வாழ்வைப் பிறருக்காத் தியாகம் செய்து வாழ்ந்தவர்களுக்குக் கட்டும் கோவில் ஆன்மிக ஆலயம்.
கோவிலில் கற்சிலைக்கு பூஜை, யாகம் அபிஷேகம், அர்ச்சனை உற்சவம், திருவிழா என பணம், பொருட்களை செலவு செய்வது ஆஸ்திக ஆலயம். கடவுளின் பெயரால் மக்களிடமுள்ள பணத்தை செலவுசெய்து வழிபடச் சொல்வார்கள். இதில் எந்தவிதமான கோவிலைக் கட்ட எண்ணுகிறான்?'' என்றார்.
"அகத்தியர் கூறியதைக் கேட்டீர்களா? நீங்கள் கட்ட விரும்புவது எந்த வகைக் கோவில்?'' என்றேன்.
ஆன்மிக ஆலயமா ஆஸ்திக ஆலயமா என்று எனக்குக் கூறத் தெரியவில்லை. ஆனால் நான் கட்டும் ஆலயத்தில் வந்து வணங்குபவர்களின் குறைகள் நீங்கி நன்மையடைய வேண்டும். எந்தவிதமான கோவிலைக் கட்டுமாறு அகத்தியர் கூறுகிறாரோ, அந்த கோவிலைக் கட்டுகிறேன்'' என்றார்.
"இவன் கடவுளுக்குக் கோவில் கட்டவேண்டாம். பல தலைமுறைக்கு முன்பு இவன் வம்சத்தில் பிறந்த முன்னோர்களில் ஒருவன், தன் உயிரைத் தியாகம் செய்து, ஏராளமான உயிர்கள் இறக்காமல் காப்பாற்றினான். அந்த ஆன்மநேயனுக்கு, ஒரு ஆன்மிக கோவிலைக்கட்டி, அந்த முன்னோரை தெய்வமாக கவனங்கச் சொல்.
அரசர்கள் ஆட்சிசெய்த காலமது! இவன் முன்னோர்கள் வாழ்ந்த ஊரில் ஒரு மிகப்பெரிய ஏரி இருந்தது. அந்நாட்டு மன்னன் அந்த ஏரியின் காவல் பணியைச் செய்யும்படி உத்தரவு தந்து, அதற்குரிய மானியத்தையும் தந்தான். அவர்களும் பொறுப்புடன் ஏரிக்காவல் பணியைச் செய்து வந்தார்கள்.
ஒருநாள், அந்தப் பகுதியில் வானம் பிளந்து பெருமழை பெய்தது. எங்கும் நீர்ப்பிரளயமாக இருந்தது. அந்தப் பகுதியில் பெய்யும் மழை நீர் அனைத்தும் இவர்கள் காவலில் இருந்த ஏரிக்குத்தான் வந்துசேரும். மழைநீரால் ஏரிக்கரையின் மேல்பகுதி வரை நீர் நிரம்பி ததும்பியது. ஏரியிலிருந்து நீர் வெளியேறும் கடைக்கால் மதகு, குப்பைக் கூளங்களால் அடைத்துக்கொண்டு, நீர் வெளியேறுவதைத் தடுத்துவிட்டது. ஏரி உடைந்தால் அதன் கீழ்ப்பகுதி ஊர்களில் வசிக்கும் மக்களும், மற்ற உயிரினங் களும் அழிந்து, பெரும் பாதிப்பை அடையும்.
இவன் முன்னோர்களில் ஆதன் என்பவன் அன்று காவல் பணியில் இருந்தான். நீர் வெளியேறும் மதகுகள் அடைத்துக்கொண்டிருப்பதை அறிந்து, தன் உயிரைப்பற்றிக் கவலைப்படாமல் ஏரியில் குதித்து, மதகுகளில் அடைத்திருந்த குப்பைக் கூளங்களை நீண்ட நேரம் போராடி அகற்றினான். அதன்பிறகு மதகுகள் வழியாக, நீர் வேகமாக வெளியேறியது.
அடைப்பை நீக்கியதில் களைத்துப் போனான். மதகு வழியே நீர்ச் சுழன்று, சுழற்கு வெளியேறியது. அந்த நீர் சுழலை எதிர்த்து நீந்தி வெளியேற முடியாமல், அதன் சுழலில் இறந்தான். உயிரற்ற அவன் உடல் மதகின் வழியாக வெளியே வந்தது. காலப்போக்கில் அவன் தியாகம் மறக்கப்பட்டது.
இவன் வசிக்கும் ஊரிலுள்ள ஏரி, நதி போன்ற நீர் நிலையின் அருகில் வம்ச முன்னோரான ஆதனுக்கு, அவன் ஆன்மாவிற்கு, ஆன்மிகக் கோவில் கட்டச் சொல். அவனை வணங்குபவர்களின் நியாயமான வேண்டுதல், பிரார்த்தனைகளை அவன் ஆன்மா நிறைவேற்றும்.''
"ஒவ்வொரு கடவுளின் உருவச் சிலையும் எப்படி, என்ன ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும் என்று புராண நூல்களில் கூறப் பட்டுள்ளது. ஆதனின் உருவச்சிலையை எப்படி அமைக்கவேண்டும் என்று அகத்தியர் தான் கூறவேண்டும்'' என்றார்.
"ஆதன் ஆறு அடிக்குமேல் உயரமானவன். பருத்த தேகம் உடையவன். எனவே ஆறடி உயரத்தில், பருத்த தேகத்துடன் சிலை செய்து, வலக்கையில் ஒரு மண்வெட்டியும், இடதுக்கையில் வேல்கம்பும், இடுப்புக் கச்சையில் குத்துவாளும் வைத்து, மார்பில் சல்லடம், வரிந்து கட்டிய வேட்டி, தலைப்பாகையுடன் சிலை செய்யச்சொல்.
ஆறடி நீளம், ஆறடி அகலத்தில் கோவில் கட்டி, அவன் ஓய்வெடுத்த புங்கை மரத்தை கோவிலின் பின்புறத்தில் வைத்து வளர்த்து வரச் சொல்'' என்று கூறிவிட்டு அகத்தியர் ஓலையிலிருந்து மறைந்தார்.
அகத்தியரை வணங்கிவிட்டு, "அவர் கூறியபடியே எனது முன்னோருக்கு ஆன்மிக ஆலயம் கட்டுகிறேன்'' என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-08/agathiyar-t.jpg)