சுமார் 30 வயதுடைய பெண் ஒருவர் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன காரியமாகப் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.

அந்தப் பெண் தயங்கியபடியே பேச ஆரம்பித்தார். "என் வாழ்க்கையின் எதிர்கால, விதி என்னவென்று அறிந்துகொள்ளவே வந்தேன். எனக்கு திருமணமாகி நான்கு வருடமாகின்றது. ஆனால் ஆறு மாதத்தில் அந்த வாழ்க்கை முடிந்து, கணவனை விட்டுப் பிரிந்துவந்து, என் பெற்றோருடன் வசித்துவருகிறேன். என் வருங்கால வாழ்க்கையைப் பற்றி, என் உறவுப் பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, அவர்தான், ஜீவநாடியில் பலன் கேட்டுப்பார். அகத்தியர் சரியான வழி கூறுவார். அதைத் தெரிந்து உன் வாழ்க்கையை அமைத்துக்கொள் என்று கூறி, உங்களது போன் நம்பரைக் கொடுத்தார். என் வருங்கால வாழ்க்கைக்கு, அகத்தியர்தான் வழிகாட்டவேண்டும்'' என்றார்.

agathiyar

இந்தப் பெண், கல்வி பயிலும்போதே, இவள் ஊருக்கு அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த, ஒருவனை விரும்பிப் பழகிவந்தாள். அவன் இவள் சாதியைச் சேர்ந்தவன் இல்லை. வேறு சாதியைச் சேர்ந்தவன். இவர்களின் பழக்கத்தை அறிந்த இவள் பெற்றோர், இவள் சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு, இவள் விருப்பமின்றி, நிர்பந்த திருமணம் செய்துவைத்தார்கள். அவன் ஒரு குடிகாரன். எப்போதும் மதுபோதையிலேயே இருப்பான். அவன் குடிகாரன் என்பது தெரிந்தே, இவன் குடும்பத்தினர், இவள் வேறு சாதிக்காரனுடன் வாழ்வதைவிட, குடிகாரனாக இருந்தாலும் தன் சாதிக்காரனுடன் வாழட்டும் என்று திருமணம் செய்துவைத்தார்கள்.

இவள் திருமணம் முடிந்து, ஆறு மாதகாலம்கூட அவனுடன் நிம்மதியாக வாழவில்லை. அவன் குடித்துவிட்டு வந்து, வீட்டில் தினமும் பிரச்சினை செய்வான். இவள் பெற்றோர், அவளின் உறவுகள், ஊர்ப் பெரியவர்களை வைத்துப் பஞ்சாயத்துப் பேசி, அவனிடம் இருந்து விலக்குப்பெற்று, இவளைத் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார்கள். இப்போது இவள் தன் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி அறிய என்னிடம் வந்துள்ளார்.

இவள் இல்லற வாழ்க்கை சிதைந்து போக, விதியோ, கிரகமோ முற்பிறவி பாவ- சாபமோ காரணமில்லை. இந்த சமுதாயத்தில் சிலர் உருவாக்கி வைத்துள்ள, சாதி, சம்பிரதாயம்தான் காரணம். தங்கள் சாதியைவிட்டு, வேறு சாதியில் திருமணம் செய்தால், தங்கள் குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் என்ற இவள் பெற்றோரின், எண்ணம்தான் காரணம். பெற்றவர்கள் தங்கள் மகளின் நல்வாழ்வை எண்ணிப் பாராமல், முக்கியத்துவம் தராமல், தங்கள் சாதிக்கு முன்னுரிமை கொடுத்து, இவள் விருப்பத்தையும் புறந்தள்ளி, அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்ததால்தான் இன்று மகள் வாழ்க்கை, மண்மூடிய மேடாகிவிட்டது.

இவள் விரும்பி பழகியவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவன் சாதிதான் வேறே தவிர, இவர்கள் குடும்பத்தைவிட, கௌரவம், அந்தஸ்து, பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பம். இப்போது அவன் ஒரு நல்ல உத்தியோகத்திலும் இருக்கின்றான். இவள் கணவனைவிட்டு வந்தவுடன், இவளுடன் தொடர்புகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் இவள்தான், அவனுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்த்துவிட்டாள். இதற்கு காரணம், அவனுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டோம், கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்ற எண்ணம்தான்.

இவளுடன் பழகியவன்தான் இனி இவளுக்கு வாழ்வு தரும் கணவன். அவனை தொடர்புகொண்டு பேசச் சொல். அவன் இவள் உடலிற்கு முக்கியத்துவம் தரவில்லை. மனதை விரும்பினான். அவன் இவளை ஏற்றுக்கொள்வான். கடந்த நான்கு வருடமாக, தங்கள் மகள் வாழ்க்கை இல்லாமல், தனித்து தங்களுடன் வாழ்வதையும், வாழவேண்டிய மகளின் வாழ்க்கையை பெற்றவர்களாகிய நாமே, சாதியின் பெயரால் கெடுத்துவிட்டோமே. இன்று சாதியோ, சாதிக்காரர்களோ, மகளின் வாழ்க்கைக்கு வழி கூறவில்லையே என்று வெளியில் சொல்லாமல், மனதினுள்ளே நினைத்து வருந்திக்கொண்டு இருக்கின்றார்கள். சாதியும், சமுதாயமும் மகள் வாழ்க்கையை கெடுத்துவிட்டது என்ற உண்மையைப் புரிந்துகொண்டார்கள். இவள் எடுக்கும் முயற்சிக்கு அவர்கள் தடை செய்யமாட்டார்கள்.

இவள் விரும்பியவன்தான் வருங்கால வாழ்க்கையில் கணவனாக அமைவான். அவனின் பெற்றோர்களே, மகனின் ஆசைப்படி இவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பார்கள். திருமணம் முடிந்த சில காலத்தில் இவளுக்கு ஒரு உத்தியோகம் கிடைக்கும். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும். பிறகு, சாதி, மதம் பேதம் அழியும். இரண்டு குடும்ப உறவும் ஒற்றுமையாகும். இவள் வாழ்க்கையைப் பற்றி இவளே தீர்மானித்து, அவனிடம் தொடர்புகொள்ளச் சொல். இனிமையான இல்லற வாழ்க்கை அமையும். அகத்தியரின் ஆசிகள் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியர் கூறியபடியே செயல்பட்டு, என் வாழ்க்கையை நானே தீர்மானித்து, அமைத்து கொள்கின்றேன் என்று கூறி, அகத்தியரை வணங்கி விட்டு, என்னிடம் விடைபெற்றுச் சென்றாள்.

இன்றையநாளிலும், சாதிவெறி கொண்டவர்களால், பலரின் வாழ்க்கை சரிந்து போகின்றது. ஆதிகாலத்தில் சாதி என்பது, தாங்கள் செய்யும் தொழில்களால் பிரிக்கப்பட்டது. தாங்கள் செய்யும் தொழிலுக்கு உதவியாக இருப்பார்கள் என்று, ஒரே தொழிலை செய்பவர்கள், தங்கள் தொழில் செய்பவர்களையே ஆண்- பெண் திருமணம் செய்துகொண்டார்கள். இதனை குலத்தொழில் என்று கூறிக்கொண்டார்கள். இன்று எல்லாத் தொழிலையும், பாகுபாடின்றி எல்லா சாதியினரும் செய்கின்றார்கள். குலத்தொழிலை யாரும் செய்வது இல்லை. குலத்தொழில் என்று எதுவுமில்லை. மறைந்துவிட்டது.

எனது அனுபவத்தில், கிராமங்களில் கல்வி அறிவில் குறைந்தவர்களில் சிலர், சாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து திருமணம் செய்கின்றார்கள். நகரத்தில் பெரிய உத்தியோகத்தில் பதவியில் இருப்பவர்கள், சாதிக்கு முக்கியத்துவம் தருவது இல்லை. தங்கள் குழந்தைகளுக்கு, அவர்களின் படிப்பு, வேலை, தகுதி பார்த்து மாற்று சாதியில் அதிகம் திருமணம் செய்துவிடுகின்றார்கள். தங்கள் குழந்தைகளின் நல்வாழ்விற்கு முக்கியத்துவம் தருகின்றார்கள்.

திருமணகால சமயத்தில், பெற்றவர்கள், சாதி, சாஸ்திரம், சமுதாய சம்பிரதாயங்களைப் புறந்தள்ளி, கணவன்- மனைவி ஒற்றுமை, நல்ல குணம், குடும்ப பொறுப்பு, குடும்ப பெரியவர்களை மதித்து பாதுகாக்கும் எண்ணம் உள்ளவர்களை தீய குணம், செயல்கள், இல்லாதவர்களை திருமணம் செய்துவைத்தால், அவர்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும் என்பதை நானும் புரிந்துகொண்டேன். சாதி வெறியில் தீயை வைப்போம்; நமது சந்ததியினர் வாழ்வில் சந்தோஷத்தைத் தருவோம்.

செல்: 99441 13267